

சூடாமணி மாமி காலமானார். தகனம் நாளை காலை. எம் ஐ டி கேட். 11 மணி. என்று குறுஞ்செய்தி வந்தபோது நான் ஒரு நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் அமர்ந்திருந்தேன். உங்களுக்கு மிகவும் நெருக்கமான ஓர் இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது என்பதை நீங்கள் உணரும் அதிர்ச்சியை வெளிப்படுத்த இயலாத இடத்தில் ஒரு மரணச் செய்தியைக் கேட்க நேரும் சாபம் இனி யாருக்கும் நிகழாதிருக்கட்டும். மாமிக்கு என்ன வயது என்பதை நான் அறிந்து கொள்ள முற்படவில்லை. உயிர்க் கடிகாரம் நின்ற இடத்தில் அது காட்டும் காலத்தைப் பற்றி இனி என்ன கேள்வி, அது காலத்தைக் கடந்துவிட்டது இப்போது
பிரம்மனுக்கு மூன்று அல்லது மூன்றரை வயது இருக்கும்போது அவன் செய்த உருவமாயிருக்கவேண்டும் சூடாமணி மாமி. பாட்டிதான் சொல்லி இருக்கிறாள். சின்ன வயதில் அவள் சொல்லிக் கொடுத்த கதைகளில் பிரம்மா களிமண்ணில் செய்து உருட்டிப் போடும் பொம்மைகள்தான் குழந்தைகளாகப் பிறக்கும் என்பதும் ஒன்று...ஒடிசலான தேகம், மிகச் சின்னஞ்சிறு பறவைக் கண்கள், சிரித்த முகம், கனிவைத் தவிர வேறொன்றறியாத முகம். இன்சொல் அன்றி வேறு பேசத் தெரியாத உதடுகள்...
எட்டாம் வகுப்பு படிக்க காஞ்சிபுரம் சென்ற சமயம்தான் பாட்டி வீட்டில் நிறைய உறவினர்களை அடையாளம் கண்டு கொள்ளத் தொடங்கினேன். எத்தனை எத்தனை விதமான மனிதர்கள். மாத்தூர் கல்யாணம் மாமாவை எப்படி மறக்க முடியும்? குளித்து முடித்ததும் திருமண் பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு சிறு முகம் பார்க்கும் கண்ணாடி சகிதம் உட்கார்ந்தால் வல்லிசாக பதினைந்து நிமிடங்கள் எடுக்குமே, நெற்றியில் ஆரம்பித்து, இரண்டு தோள்பட்டைகள், கழுத்து, நடுவயிறு, முதுகில் மேல்பக்கமும், கீழ்பக்கமுமாக
பன்னிரண்டு நாமங்களும் போட்டு முடிக்க. அவரது மகன் கண்ணன் எங்களுக்கு சிரித்த சுபாவமாகக் கிடைத்த நல்ல நண்பர் போல. அப்படி கிண்டல் செய்தாலும் கோபப் படாமல் எங்களோடு சேர்ந்து சிரித்துக் கொண்டாடுவார்.
கருட சேவைக் காலங்களில் பாட்டி அகத்தில் வந்து நிறையும் மனிதர்கள் எண்ணிக்கை சொல்லி அடங்காது. பாட்டி கவலையே படமாட்டாள். எத்தனை பேர் வந்தால்தான் என்ன, அவள் போட்டுத் தருவது தான் காப்பி, அந்த நிறத்தில் காப்பி எந்த ஓட்டலிலும் கிடைக்காது. அதன் ருசி, நிறம், சூடா முக்கியம், பத்தாணி வாஞ்சையா போட்டுக் கொடுக்கிறாளே அதுதானே முக்கியம்?
சூடாமணி மாமி, அப்போது திருக்கச்சி நம்பித் தெருவில் இருந்தாள். எங்கள் சித்திக்கு ஓரகத்தி. வைஷ்ணவ பரிபாஷையில் ஓர்ப்படி. வைணவ மொழியில் தமிழ் இனிமை பொங்கும். அகம் என்பது வீடு. அகமுடையாள் என்பவள் மனைவி. அகமுடையான் கணவன். அதுதான் ஆம்படையான், ஆம்படையா என்று மருவிப் போயிற்று. ரசம் என்பது சமஸ்கிருதம். சாற்றமுது என்பது நல்ல தமிழ். சாறு தானே ரசம் அமுது என்பது உணவுக்கு பொதுவான பெயர். கறியமுது என்பது பொரியல். நெகிழ் கறியமுது என்பது மோர்க்குழம்பு. அக்காரம் என்பது சுவையானது என்ற பொருள் கொண்டதாக இருக்க வேண்டும். அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து... என்று பெரியாழ்வார் திருமொழி இடம் பெற்ற நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் இடம் பெற்றிருக்கிறது. அக்காரவடிசல் என்பது, உண்மையில், அக்கார அடிசில் அடிசில் என்றால் சோறு. பாலில் அரிசியை சிதறவைத்து சுவையாகப் படைக்கப்பட்டிருக்கும் உணவுதான் அக்காரவடிசில், அதைச் சர்க்கரைப் பொங்கல் என்று சொல்லிவிட முடியாது. அடிசில் அடிசில்தான்.
நரசிம்மன், சூடாமணி ஏகப் பொருத்தமான தம்பதியினர். இருவருமே என் பாட்டிக்கு அத்தனை தோஸ்து. சம்பந்தி மாமி என்று நரசிம்மன் அத்தனை முக சேஷ்டை, எள்ளல் தொனிக்க பாட்டியை எத்தனை கிண்டல் செய்தாலும் அசராமல் பதிலுக்கு பதில் சொல்லியவாறு பாட்டி அவர்களோடு அத்தனை அன்போடு பழகி வந்தாள். அப்போது சித்தியின் மாமனார் - சூடாமணி மாமிக்கும் மாமனார், அவர்கள் இல்லத்தில்தான் இருந்தார். அந்தத் தாத்தாவிடம் எனக்கு எப்போதுமே ஓர் அச்சம் கலந்த மதிப்பு இருந்துவந்தது.
சின்ன காஞ்சிபுரத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளிக்கு நான் திருக்கச்சி நம்பித் தெருவைக் கடந்துதான் அன்றாடம் நடந்து போய் நடந்து வந்து கொண்டிருந்தேன். எப்போதாவது பத்து பைசா கிடைத்தால் ஆடிசன் பேட்டை வரை டவுன் பஸ். அதிலும் ஙஈஈ 95 கிடைத்தால் தான் போவது. அத்தனை அழகாயிருக்கும். ஙநக 2022 கழுதை கண்றாவியாக ஆடியாடிப் போகும். அதில் பெரும்பாலும் ஏறுவது கிடையாது.
ஒன்பதாவது படிக்கையில் நான் செட்டித் தெருவில் ஙநக 2022ல் ஏறியிருக்கிறேன். பேருந்து ஆடிசன் பேட்டை தேரடி நிறுத்தத்தை நெருங்கிய நேரம், "அய்யோ அய்யோ' என்று கேட்ட பெரும் அலறல் சத்தங்கள் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பேருந்து ஆடித் திணறி கீழே உருளுமோ என்று பட்டது. பேருந்தைச் சுற்றிலும் ஒரே கூட்டம். பச்சை மிளகாய் மூட்டை ஒன்றின்மீது ஏற்றி அப்படியே ஓரமாக நின்று கொண்டிருந்த மூன்று ஆட்களையும் இடித்துக் கீழே தள்ளி மேலே ஏற்றி இறக்கி இருந்தார் ஓட்டுநர்.
பகீரென்று இருந்தது எனக்கு. அச்சத்தோடு பக்கவாட்டில் சன்னல்வழியாக எகிறி அத்தனை உயரத்தில் இருந்து பள்ளிப் பையோடு கீழே குதித்துத் திரும்பிப் பார்க்காது "விர்' என்று பள்ளிக்கூடத்திற்கு ஓடினேன். அன்றெல்லாம், அந்த வாரமெல்லாம் நாள்கணக்கில் அந்த விபத்து பற்றியே ஊர் பேசிக் கொண்டிருந்தது.
காலை பள்ளி போகும் அவசரத்தில் திருக்கச்சி நம்பித் தெருவில் இடது பக்க, வலது பக்கம் பார்க்க நேரம் கிடையாது. ஆனால் மாலை திரும்பும் நேரத்தில், கிட்டத் தட்ட நாள் தவறாது சூடாமணி மாமி வாசலில் நிற்கிறாளா? என்று பாராது நகர்ந்ததில்லை. என்னைப் பார்த்ததும், ""ரமேஷ் ரமேஷ்'' என்று கூப்பிட்டு நிறுத்துவாள் மாமி.
"" உள்ளே வா, டிபன் சாப்பிட்டுப் போ'' என்று அவள் சொல்லாதிருக்க மாட்டாள். அம்மா இல்லாத குழந்தை என்று, குழந்தைகள் இல்லாத மாமிக்கு என்மீது அத்தனை வாஞ்சை இருந்திருக்கிறது என்பது பிறகு பல காலம் பொறுத்துப் புரிந்தபோது இயல்பாகக் கண்கள் கலங்கும்.
உப்புமா, மோர்க்களி, முறுக்கு...ஏதோ பலகாரம். பையைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து விடுவேன். முக்கியமாக படிக்க ஏதாவது செய்தித்தாள், புத்தகங்கள் அங்கே இருக்கும். நாங்கள் முநித்ரயம். நரசிம்மன் மாமா, மட சம்பிரதாயம். அழகிய சிங்கர் ஆசாரியன். எனவே "ந்ருஸிம்ஹப்ரியா' புத்தகம் மாதம் தவறாது எடுத்துப் படிப்பேன். பழைய புத்தகங்களும் மணி பிரவாள நடை என்று அழைக்கப்படும் சமஸ்கிருதமும் தமிழும் சரிபாதி கலந்த மொழி நடையில் விசிஷ்டாத்வைத விவாதங்கள் சுவாரசியமாக இருக்கும்.
தேவப்பெருமாள் (தேப்பெருமாள் ) வரதராஜன் உற்சவம் என்றால், நரசிம்மன் மாமா வீடும் ஏக அமர்க்களப் படும். அதற்காகவே, பின்னர் மாமா வீட்டை சன்னதித் தெருவுக்கு மாற்றிக் கொண்டார்.
வீடே ஒரு மினி கோயில் மாதிரிதான். உற்சவ காலங்களில் வீட்டில் கோயில் மடைப்பள்ளி மாதிரி எப்போதும் ஏதாவது தயாராகிக் கொண்டிருக்கும். அத்தனை உறவுக்காரர்களும் வந்து இறங்கி இருப்பார்கள். ஆறாம் நாள் ஸ்ரீ வேணுகோபாலன் சாத்துப்படி அன்று, இந்தக் குடும்பம் சிறப்பு ஏற்பாட்டோடு கலந்து கொள்ளும். பதினாறு கால் மண்டபம் சன்னதித் தெரு வீட்டுக்கு மிகப் பக்கம். அங்கேதானே அன்றாடம் உற்சவத்தின்போது வண்ணக் குடைகளை வாகனத்தில் ஏற்றுவதும், திரும்புகாலில் இறக்குவதும் நடக்கும்...மாமா வீடு எப்போதும் வாசல் திண்ணைகள் நிரம்பி குதூகல கொண்டாட்டத்தில் மூழ்கிக் கிடக்கும் உற்சவ காலங்களில்.
மாமி கோயிலுக்குப் போக நேரம் எப்போது கண்டுபிடிப்பாள் தெரியாது, ஆனால், சமையல் நிற்காது. பரிமாறல் நிற்காது. மாமனார் இருந்தவரை அவருக்கான சிசுருûக்ஷ குறைவுபடாது. நரசிம்மன் மாமா அலுவலகம் போய் வர ஏற்பாடுகள் எதிலும் சுருதி பிசகாது. ஒற்றை புகார் இல்லாத, கேவல் விசும்பல் அறியாத, குறைகளைச் சொல்லி அழுதிராத தாம்பத்தியம். வாழ்க்கை.
முதுமையின் புயல் சூடாமணி மாமியைத் தாக்கத் தொடங்கிய பிறகு, அவளை வெகு காலத்துக்குப் பின் டி. கே. சித்தப்பா வீட்டில் இரண்டொருமுறை பார்க்க நேர்ந்தது. அன்பின் அரவணைப்பில் உலகத்தைக் கொண்டாடிய மனுஷிக்கு எப்படி இப்படி கதி நேரலாம் என்று மனசு கிடந்தது அழுது அரற்றித் திண்டாடியது. மாமா, மாமி இருவரும் முதியோர் இல்லத்தில். இருவருக்குமே எலும்புகள் பலவீனமுற்று, உடல் நலிவுற்று, மூட்டுகள் தேய்ந்து, நிற்கவோ, நடக்கவோ, கொஞ்சம் போல உட்காரவோ கூட இயலாத நிலையில் காலம் அவர்களை நகர்த்திக் கொண்டுவந்தது சோதனை அன்றி வேறென்ன....முழுநேர கவனிப்பை அளிக்கும் ஓர் அன்பின் நிலையம் தேவைப்பட்டது அவர்களுக்கு.
எத்தனை குழந்தைகளைப் பரிவோடு கவனித்த கரிசனமிக்க வாழ்வு சூடாமணி மாமியுடையது. மைத்துனர்களையே குழந்தைபோல் பாவித்து வளர்த்த கைகள் அவளுடையவை. அவளது ரசனை மிக்க மொழியில் பாசாங்கு கோபம் ஒரு கவிதை போல ஒலிக்கும். தயக்கமற்ற பேச்சின் வேகம் புதிய மனிதர்களைக் கூட உறவுக்காரர் போல உணர வைத்துவிடும்.
தள்ளாமை ததும்பும் முதுமை, மாநகர ஓட்டத்தில் கரை ஒதுங்கி நின்று ஏங்க வைத்து விடுகிறது. பாதசாரிகளுக்கே வழிவிடாத நெரிசல் போக்குவரத்து போன்ற வாழ்க்கையில் நடக்கவே முடியாதவர்களுக்கு இடம் கிடைக்காது போய்விடுகிறது. முதியோர் இல்லத்தை அத்தனை எதார்த்தமாக ஏற்கும் பக்குவம் மாமியிடம் தோன்றியதாக பிச்சப்பா இப்போது எழுதி இருந்தான். குறைகளைப் பேசியறியாத இயல்பு அவரது.
ஒரு வாரம் போராடி இருக்கிறாள் சூடாமணி மாமி. போராட்டம் விடுதலைக்காக. அடர்ந்த காட்டில் எத்தனை தூரம் நடக்கலாம் என்ற கேள்விக்கு, பாதி தூரம் என்பதே பதில். அதற்குப் பிறகு நாம் காட்டின் அடுத்த முனை நோக்கி வெளியேறிக் கொண்டிருக்கிறோம் என்று பொருள். வாழ்வின் நுழைவாயில் அடுத்த நுனியில் வெளியேறுதலாக மாறிவிடுகிறது.
அந்த ஒரு வார போராட்டத்தில் எத்தனை கருட சேவைகள், ஆறாம் நாள் உற்சவங்கள், வசந்தோற்சவம், தீர்த்தவாரி, தெப்பங்கள் வந்து போயின? தெரியாது. விடியற்காலை எழுந்து தலைக்குக் குளித்து மடியோடு சமைத்த திவசங்கள் எத்தனை வந்து போயின? தெரியாது. பத்தாணி பாட்டியா, டி. கே. சித்தப்பாவா, நாத்தனார்கள் கோமளா, பாப்பா அல்லது தனது மாமனாரா, வேறு யாரெல்லாம் அவள் நினைவில் வந்து நின்றார், பேசினார்? தெரியாது. சன்னதித் தெருவில் வரதராஜ பெருமாள் திருவீதி உலா வருகையில் வாசலில் போய் சேவித்து எழுந்து புடவையை உதறித் தட்டிக் கொண்டு நின்ற நினைவு இருந்ததா? தெரியாது. என்னை அவள் நினைத்திருக்க முடியாது. எத்தனை ஆண்டு இடைவெளி விட்டிருந்தேன் பாவி, இடையே அவளை ஒருபோதும் போய்ப் பார்த்ததில்லை.
பத்தரை மணிக்கு எம். ஐ. டி. கேட் அருகே எரிவாயு தகன மேடை வாசலில் போய்நின்ற போது ஷட்டர் திறக்கவில்லை. மாமியின் உடல் வந்து சேரவில்லை. பம்மல் போயிருந்திருக்கலாம் என்று ஒரு மனது சொல்லியது. காத்திருக்கும் நேரத்தில் மாமியின் நினைவில் கலக்காது படித்துக் கொண்டிருந்தேன். அஞ்சல் அட்டைகள் எடுத்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தேன். இரண்டு பள்ளிக்கூடச் சிறுவர்களுக்கு - நாளிதழ் ஒன்றில் பார்த்த அவர்களது ஓவியங்களைப் பாராட்டி இடையே பேசிக் கொண்டிருந்தார் தகன காரியத்தை பிரத்தியேகமாக கவனிக்கும் புரோகித வாத்தியார்.
""அங்கே அகத்தில் வேறு ஒரு ஸ்மார்த்த வாத்தியாரை அவசரத்துக்கு அனுப்பி வச்சேன்...இங்கே நான்தான் மேற்கொண்டு பண்ணனும். இதைப் பண்ண மனுஷா வரமாட்டா...எட்டாயிரம் தகனம் பண்ணி வச்சிருக்கேன்'' என்றார். நான் ஒரு கணக்கு போட்டுப் பார்த்ததும், ""சரி ஐயாயிரம் இருக்குமே மாமா... யார் கிட்ட கணக்கு இருக்கு?'' என்றார்.
பதினொன்றரை மணி போல ஓசைப்படாது ஒரு வாகனம் வந்து நின்றது. மாமியின் சடலம் அதில் இருந்தது. சின்னஞ்சிறிய பறவையின் கண்களைப் போன்ற விழிகளைப் பார்த்தேன். ஒடிசலான அதே உடல். புகார் செய்யாது படுத்திருந்தாள் மாமி. ஸ்ரீதர் சித்தப்பா தாய்க்குத் தாயாய்த் தன்னைக் கவனித்துக் கொண்ட மன்னியின் இறுதி காரியத்திற்குத் தீச்சட்டியோடு வண்டியில் இருந்து இறங்கினார். எழுபது வயதின் அலுப்பு தெரியாத கண்களில் என்னைப் பரிச்சயமான பாசத்தோடு பார்த்தார்.
அடுத்த பத்து நிமிடங்களில் மந்திரங்கள், சடங்குகள் ஓய்ந்து தகன மேடையின் உள்ளே காத்திருந்த நெருப்பு ஜுவாலைக்குள் வேகமாகச் சென்று தன்னை ஒப்படைத்துக் கொண்டது அவளுடல்.
அங்கிருந்து வெளியேறி குரோம்பேட்டை ஸ்டேஷன் நோக்கி நடக்கத் தொடங்கினேன். மதிய நேரத்தை எட்டிய வயிறு பசிக்கவே, வழியில் தேநீர்க் கடை வாசலில் கொஞ்சம் நின்றேன்.
""டீயா சார்?'' என்று உள்ளிருந்து கேட்ட மாஸ்டரின் குரல், ""ஏதாவது சாப்பிடாது போகக் கூடாது, உள்ளே வந்து உட்காரு வா'' என்று அன்பின் கண்டிப்போடு கூப்பிடும் சூடாமணி மாமி குரல் போலவே ஒலித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.