எனக்கு வயது 29. இன்னும் 4 மாதங்களில் திருமணம் நடக்க இருக்கிறது. உடலில் கடுமையான வறட்சி, முகத்தில் மங்கு, பித்த சூடு, இரத்தசோகை, மூலவியாதி போன்ற உபாதைகள் உள்ளன. இவைகளால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இந்த உபாதைகள் தீர ஆயுர்வேதமருந்துகள் உள்ளனவா?
(பெயர் குறிப்பிடவில்லை), சிதம்பரம்.
தங்களுடைய நீண்டதொரு கடிதத்தில் தேங்காய் எண்ணெய்யை எவ்வளவு தடவினாலும் வறட்சி நீங்கவே இல்லை என்றும், வாயில் உமிழ்நீர் அதிகமாகச் சுரப்பதாகவும், தினமும் 6 லிட்டர் தண்ணீர் குடித்தும் உடல் சூடு நீங்கவே இல்லை என்றும், முகம், கை, கால் முழுவதும் சுருக்கங்கள் அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். உடலில் வாதம் மற்றும் பித்ததோஷத்தின் இயற்கை குணங்களாகிய வறட்சி மற்றும் சூடு போன்றவை அதிகமாக இருக்கும் தறுவாயில் நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் காணப்படும். இதனால் நீங்கள் வாதம் மற்றும் பித்ததோஷத்தின் ஆதிக்கத்தினால் உடல் வறட்சி, பித்தச்சூடு, இரத்தசோகை போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுவது இயற்கையே. தங்கத்தை உருக்குவதற்காகப் பொற்கொல்லர் ஒரு பையினுள் நிரம்பியுள்ள வாயுவை வேகமாக கைகளால் அடிப்பதையும், அதன் மூலமாக நெருப்பு கொழுந்து விட்டு எரிவதையும், அந்த நெருப்பில் தங்கத்தை உருக்கி அதனுடைய வடிவத்தை மாற்றுவதையும் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அதுபோல மனிதர்களுடைய பெருங்குடல் பகுதியிலுள்ள வாயுவின் மேலெழும் சீற்றத்தினால் அதன் மேற்பரப்பிலுள்ள பித்தம் கிளறிவிடப்பட்டு தன் இடத்தைவிட்டு நெகிழ்ந்து வெளியேறும் தறுவாயில் கடுமையான உடற்சூடு, இரத்தசோகை, முகத்தில் மங்கு போன்றவை ஏற்படக்கூடும். வாயுவின் வறட்சியும் பித்தத்தினூடே கலந்துவிடும் தறுவாயில் அவை இரண்டும் சேர்ந்து உடலெங்கும் பரவும்போது கடும் வறட்சியையும், தோலில் சுருக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
பித்த வாயுக்களை அடக்குவதில் நெய் சிறந்த மருந்தாகப் பயன்படும். சுமார் 15 மி.லி. பசுநெய்யைச் சூடான அரை கிளாஸ் பசும்பாலுடன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குடல் பகுதிக்கு தேவையான அளவு நெய்ப்பு எனும் குணம் விரைவில் கிடைப்பதால் உங்களுடைய பல உபாதைகளும் நீங்குவதற்கு நல்ல வாய்ப்பிருக்கிறது. ஒரு சில மூலிகை நெய் மருந்துகளும் உங்களுக்கு நல்ல பலனைத் தரலாம். தாடிமாதி க்ருதம் எனும் நெய் மருந்தை சுமார் 15 மி.லி. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை, மூல வியாதி உபாதை, பித்தவாயுக்களால் ஏற்படும் கணச்சூடு, உடல் வறட்சி போன்றவை நீங்குவதோடு கல்லீரல் செயல்பாடு மேம்படவும் பெரிதும் உதவும். இதன் மூலமாக தோல் சுருக்கம், மங்கு போன்ற உபாதைகளும் குணமாகும். சுமார் 48 நாட்கள் வரை இதை சாப்பிடலாம். விதார்யாதி க்ருதம் எனும் மூலிகை நெய் மருந்தை சுமார் 15 மி.லி. மாலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீங்கள் குறிப்பிடும் பல உபாதைகளும் குணமாகக் கூடும்.
உணவில் கடும் வறட்சி தரும் எண்ணெய் சேர்க்காத உணவுப் பொருட்களையும், உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் காரம், புளி மற்றும் உப்பு போன்ற சுவைகளை அதிகம் சேர்க்காதிருப்பதே நலம். வாரம் இருமுறை தலைக்கு தேங்காய் பாலையும் மற்றும் உடலெங்கும் நல்லெண்ணெயையும் தேய்த்துக் குளிக்கவும்.
முகத்தில் மங்கு வருவதற்கு இரத்தத்தின் செயல்பாடுகளில் ஏற்படும் கோளாறே முக்கிய காரணம் என்று ஆயுர்வேதம் கண்டறிந்துள்ளது. அதனால் இரத்தத்தை வெளிப்புறமாகச் சுத்தம் செய்து கொள்ளும் சிகிச்சை முறைகளாலும் நீங்கள் பயன்பெறலாம். அந்த வகையில் வெண்சந்தனம், மஞ்சட்டி, நன்னாரி வேர் ஆகியவற்றை நன்றாகப் பொடி செய்து துணியால் சலித்து அந்தச் சூரணத்தை பன்னீரில் குழைத்து முகத்தில் மங்கு ஏற்பட்டுள்ள பகுதியில் காலை நேரத்தில் பூசி சுமார் 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து முகத்தை நன்றாகக் கழுவி வரவும். முகத்தை முடிந்த வரை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு அடிக்கடி முகத்தைக் குளிர்ந்த நீரினால் கழுவி வரவும்.
பித்தம் மற்றும் வாத சீற்றத்தை ஏற்படுத்தும் காரமான சுவையுள்ள உணவுப் பொருட்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். மனதில் ஏற்படும் கோப தாபங்களாலும், பித்தவாயு ரஜஸ் எனும் மனோதோஷத்துடன் சீற்றமடையும் என்பதால் நீங்கள் அவற்றிற்கு இடம் தராமல் முடிந்த வரை மன அமைதியுடனும், தங்களுக்கு அமையப்
போகிற இன்பமான மணவாழ்க்கையையும் நினைத்து மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகள்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


