ஒன்ஸ்மோர்

பண்டைக்காலத்தில் ஊர்களில் எங்கே ஆலமரம் இருக்கிறதோ, அதனடியில்தான் சந்தைகள் கூடும். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும்
ஒன்ஸ்மோர்
Updated on
2 min read

பண்டைக்காலத்தில் ஊர்களில் எங்கே ஆலமரம் இருக்கிறதோ, அதனடியில்தான் சந்தைகள் கூடும். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் மொழி இன வேற்றுமைக்கு அப்பால் ஆலமரத்தடியில்தான் வியாபாரங்கள் நிகழ்ந்து வந்தன. இங்கிலாந்து மன்னரான ஜேம்ஸ் காலத்தில் இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் வர்த்தகர்கள் ஆலமரத்தடியில் சந்தைகள் கூடுவதையும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பனியாக்கள் (வியாபாரிகள்) ஒன்றுகூடிப் பணப் பரிமாற்றம் செய்து கொள்வதையும் பார்த்தனர். ஆலமரம் வாக்கின் அடையாளமாம். மேலும் பேசும்போது ஆலமரத்தின்கீழ் ஒப்புக் கொள்ளப்பட்ட பணம் எப்படியும் வந்துவிடுமாம்! வர்த்தகர் கூட்டத்தைக் குறிக்கும் "பனியாவே' - ஆங்கிலத்தில் மரத்தின் பெயராய் "பானியன் ட்ரீ' என்று ஆகியது!

கருமேகங்களைச் சுண்டியிழுக்கும் மழைக்கவர்ச்சி மரங்களில் முதலிடம் ஆலமரத்திற்குத்தான். இந்தியாவில் அதிகம் மழை பெய்யும் வங்காளம், அசாம் மாநிலங்களில் இதை அடர்ந்த காடாகக் காணலாம். கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்குரிய சுரபாலர் விருட்ச ஆயுர்வேத நூலில் ஒரு நுட்பமான குறிப்பு உள்ளது. "சாத்திர முறைப்படி யார் இரண்டு ஆலமரங்கள் நடுகின்றாரோ அவருக்குக் கைலாயத்தில் ஓர் இடம் நிச்சயம். கூடவே, கந்தர்வக் கன்னியரின் கவனிப்பும் கிடைக்கும் (பாடல் 13) வீட்டின் கிழக்கில் ஆலமரம் நட்டால் வேண்டிய வரம் கிட்டும் (பாடல் 24.)

 ஆலம்பாலில் வயகரா உள்ளதா? என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வேதியர்களும் முனிவர்களும் ஆராய்ச்சி செய்துள்ளனர். ஆலம் பழம், விழுது, கொழுந்து சம அளவு அரைத்து எலுமிச்சம்பழம் அளவில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 120 நாட்களில் விந்து அணுக்கள் உற்பத்தி ஆகும். இது மன்மதராசா மட்டுமல்ல, பாலியல் நோய்களுக்கும் - அதாவது மேகப்புண், மதுமேகம் - இவற்றிற்கும் நிவாரணி. வாய்ப்புண், கரப்பான், சிரங்கு போன்ற நோய்களுக்குத் தாத்தா காலத்து நாட்டு மருத்துவர்கள் ஆலம்பாலில் விழுதுக் கொழுந்தைச் சேர்த்துக் களிம்பு தருவார்கள். அகத்தியர் குணபாடத்தைப் புரட்டினால் இதன் மன்மத குணம் புரியும்!

"வாழ்வு தரும் மரங்கள்' என்ற நூலில்

இயற்கை விஞ்ஞானி ஆர்.எஸ். நாராயணன்.

மணற்கொள்ளை பற்றி நினைக்கும்போது மணலால் நிறைந்திருக்கும் பாலைவனம் பற்றி நினைக்காமல் இருக்க முடிவதில்லை. ஒரு கோடி சதுர கி.மீ. பரப்புள்ள சகாரா, செங்கடலில் இருந்து அட்லாண்டிக் கடற்கரையோரம் வரை பரவிக் கிடக்கிறது. உலகின் மிக வெப்பமான இப்பகுதியில் ஒருகாலத்தில் விவசாயம் நடைபெற்றிருக்கிறது. சகாரா பாலைவனம் போல இந்தியாவின் பல பகுதிகள் விவசாயத்திலிருந்து நழுவி மணலாகிப் போகலாம், இந்த மணற்கொள்ளைத் தடுக்கப்படாமல் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால்.

மணலைத் தொடர்ந்து அள்ளிக் கொண்டிருக்கையில் ஆற்றின் போக்கே மாறும் வாய்ப்பு இருக்கிறது. ஆண்டுக்கு 10 செ.மீட்டர் மட்டுமே மணல் ஆற்றில் படியும். அதனால் மூன்று அடி ஆழம்தான் மணலை அள்ள வேண்டும். தொடர்ந்து மணலினை எடுப்பதால் நீர் ஆவியாதல் அதிகமாகி நீர் இழப்பு சுலபமாக ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. மணலை வெறும் கட்டடம் கட்டுவதற்கு உதவும் பொருளாகப் பார்க்காமல், இயற்கை நீரைச் சேமித்து வைக்க உருவாக்கிய கொடையாகத்தான் பார்க்க வேண்டும். நீரில் கலக்கும் கழிவுகளை மணல் வடிகட்டும். நீர்ப் பதத்தைப் பாதுகாக்கும். நீர் சுத்திகரிப்பில் மணல் முக்கியப் பங்கு வகிப்பதைப் பல பரிசோதனைகள் நிரூபித்துள்ளன. மணல் கொள்ளையால் நீரில் இருக்கும் கழிவுகள் வடிகட்டப்படாமல் நிலத்தில் இறங்கி மாசு விளைவிக்கிறது. மாசுபட்ட நீர் அதிக வியாதிகளை உருவாக்கும். எய்ட்ஸ், மலேரியா போன்ற பெரிய நோய்கள் பாதித்து இறந்தவர்களைவிட நல்ல சுத்தமான நீர் கிடைக்காமல் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம்தான்.

தாமிரபரணியில் ஓராண்டுக்கு ஒரு லட்சம் யூனிட் எடுக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டால் அதைவிடுத்து ஓராண்டில் பத்து லட்சம் யூனிட் மணல் எடுக்கப்படுகிறது. இதைத் தெரிவிக்கிற அரசு அதிகாரிகளும், செயல்பாட்டாளர்களில் பலரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நெல்லை மாவட்டத்தில் சதீஷ்குமார் என்ற இளைஞர் கொல்லப்பட்டார். உடுமலை அருகே 20 கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கும் கிணறுகளில் ரசாயனப் பொருள்களைக் கொட்டி நீரைப் பாழாக்கினர். அந்தக் கிராம மக்கள் மணல் கொள்ளையை எதிர்த்ததுதான் இதற்குக் காரணம். தங்களை எரித்துக்கொண்டு இறந்தவர்களும் உண்டு. இந்தப் பலிகளெல்லாம் மணற்கொள்ளையை நிறுத்திவிடவில்லை.

"குப்பை உலகம்' என்ற நூலில் சுப்ரபாரதிமணியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com