

என் வயது 72. நான் நடக்கும் பொழுதும், இடது பக்கம் சாய்ந்து படுத்துத் தூங்கும் போதும் வலி அதிகமாக இருந்ததால் டாக்டரின் பரிந்துரைப்படி MRI Scan எடுத்ததில் முதுகு தண்டுவடத்தில் 4 இடங்களில் ஈண்ள்ஸ்ரீ விலகி இருப்பதாகக் கூறினார். இதனால் தொடர்ந்து
நடக்க முடியாமல் 100 அல்லது 150 அடிக்கு ஒருமுறை சிறிது ஓய்வு எடுத்த பின் நடக்க முடிகிறது. இதற்கு ஆயுர்வேத்தின் தீர்வு என்ன? என்பதைத் தெரிவியுங்கள்.
V.நடராஜன், மாலையீடு, புதுக்கோட்டை.
வயோதிகத்தில் வாயுவின் சீற்றமானது உடலில் இயற்கையாகவே கூடுகிறது. அதனுடைய சஞ்சார விசேஷமானது எந்தவிதத் தடங்களுமில்லாமல் அமைவதும், அதற்குரிய உடல் பகுதிகளில் அடங்கி இருத்தலும் தன்னுடைய செயல்களில் தொய்வு ஏதும் ஏற்படாமல் சரி வர செய்து கொண்டிருத்தலும் நீண்ட ஆயுளுக்குக் காரணமாகிறது. பிராணன்-உதானன்-ஸமானன்-வ்யானன் மற்றும் அபானன் என்ற வகையில் ஐந்து வகையாக வாயுவானது நம் உடலின் உள்ளே பிரிந்து தனித்தனியாக செயல்களைச் செய்து ஆரோக்கியத்திற்கு குந்தகம் ஏதும் ஏற்படாமல் பாதுகாத்து வருகின்றன. வாயுவின் பொதுகுணங்களாகிய வறட்சி, லேசான தன்மை, குளிர்ச்சி, நுட்பமான தன்மை, நகரும் தன்மை போன்றவை வயோதிகத்தில் கூடுவதால் அவற்றின் தாக்கம் எலும்புகளில் உணரப்படுவதால், உங்களுக்கு முதுகுத் தண்டு வட எலும்புகளைத் தாங்கிப் பிடிக்கும் வில்லைகளில் வறட்சியை ஏற்படுத்தி அவற்றின் உயரம் குறைந்து மெலிந்து போய் வெளிப்புறமாக பிதுக்கிவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகிறது. இதனால் ஏற்படும் அழுத்தமானது நரம்புகளினூடே செல்லும்போது நீங்கள் நடக்கும்பொழுதும், சாய்ந்து படுத்துத் தூங்கும் போதும் வலி அதிகமாகத் தென்படக்கூடும். இந்த வில்லைகளை வலுப்படுத்த வேண்டும். எலும்புகளைத் தாக்கியிருக்கக் கூடிய வாயுவின் வறட்சி போன்ற குணங்களை மாற்றியமைக்கக் கூடிய உணவு, நடவடிக்கை மற்றும் மருந்துகள் ஆகியவற்றை நீங்கள் கடைபிடிக்கவேண்டும். வாயுவின் சீற்றம் மேலும் ஏற்படாதவாறு தகுந்த பாதுகாப்பான வழிகளைப் பின்பற்றவேண்டும். இவையனைத்தும் சீராவதற்குப் பசித் தீயானது நல்லமுறையில் செயலாற்ற வேண்டும். அதற்கான சில வழிமுறைகள்:
உணவு: இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளையும், மாமிச வகை உணவுகள் பொதுவாகவே உடலுக்கு ஊட்டம் தருபவையாகையால் அவற்றை மிதமாகச் சேர்க்கலாம். நெய்ப்பு தரும் நெய், எண்ணெய், எள்ளு, தேங்காய்ப் பால் போன்றவற்றை உணவில் சிறிது சேர்த்துக் கொள்வது வாயுவின் வறட்சியைக் குடலில் தவிர்த்திடச் செய்யும். உணவு வகைகளில் காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை கொண்டவற்றையும், குடலில் வாயுவின் சீற்றத்தை ஏற்படுத்தும் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, கொண்டைக் கடலை, வேர்க்கடலை, மொச்சைக் கொட்டை, பலாக்கொட்டை, காராமணி, கொத்தவரங்காய், அவரைக்காய், பீன்ஸ், உருளைக் கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றையும் தவிர்ப்பது நலம்.
செயல்கள்: வெதுவெதுப்பான வெந்நீரில் குளிப்பது நல்லது. அதுவும், வெறுமனே உடலில் வெந்நீரை ஊற்றுவது வறட்சியை ஏற்படுத்தும் என்பதால் உடலெங்கும் வெதுவெதுப்பான நல்லெண்ணெயை நீவித் தேய்த்து சிறிது
நேரம் ஊறிய பிறகு குளிப்பதே நலம் பயக்கும். எண்ணெய்ப் பசையை அகற்றுவதற்கு சோப்பிற்கு பதிலாக பச்சைப்பயறுத் தூளை வெந்நீரில் கரைத்து உபயோகிப்பது தோலில் வறட்சியை ஏற்படுத்தாது.
இரவில் பல மணி நேரம் குளிரூட்டப்பட்ட அறையில் படுத்துறங்குவது நல்லதல்ல. குளிர்ச்சி எனும் வாயுவின் ஒரு குணமானது இதன் மூலம் எலும்புகளைத் தாக்கக்கூடும். ஒரே இருக்கையில் பல மணிநேரம் அமர்ந்திருத்தல், கால் மேல் காலிட்டு அமர்தல், நேரே அமராமல் முதுகுத் தண்டுவடம் வளையும் வகையில் அமர்தல் ஆகியற்றைத் தவிர்த்திடல் வேண்டும். யோகப் பயிற்சிகளை நீங்கள் செய்பவராக இருந்தால் ஓர் ஆசானின் அறிவுரைப்படி மட்டுமே செய்யவேண்டும்.
சிகிச்சை: Disc விலகியுள்ள பகுதிகளின் மேலே வெளிப்புறத்தில் உளுந்து மாவினை வரம்பாகக் கட்டி அதனுள்ளே பஞ்சுவைத்து ராஸனாதிசூரணம் எனும் மருந்தைத் தூவி, அதன்மேல் ஒருசில மூலிகைத் தைலங்களை வெதுவெதுப்பாக ஊற்றி சுமார் அரை, முக்கால் மணிநேரம் வைத்திருந்து அதன் பிறகு தைலத்தை அகற்றி வரம்புகளையும் எடுத்துவிடும் சிகிச்சைமுறை, வில்லைகளை வலுப்படுத்தி எலும்புகளுக்குப் பாதுகாப்பை ஏற்படுத்தித் தரும். முதுகுத் தண்டுவட எலும்புகளை எளிதாக வளைந்து நிமிர்த்தும் வண்ணம் இந்தச் சிகிச்சைமுறை உதவுகிறது. மூலிகை வேர்களைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி அதிலிருந்து வெளிப்படும் நீராவியை ஈண்ள்ஸ்ரீ விலகியுள்ளப் பகுதிகளில் எண்ணெய்யை நீக்கியபிறகு காண்பிப்பதும் வில்லைகளை மிருதுவாக்கி தான் இருந்த அதே இடத்திற்கு திருப்பக்கூடிய ஒரு சிறந்த சிகிச்சை முறையாகும். ஆயுர்வேத மருத்துவமணைகளில் இந்தச் சிகிச்சை முறைகள் நன்றாக செய்யப்படுகின்றன.
ஆயுர்வேத மருந்துகளாகிய மஹாராஸ்னாதி கஷாயம், க்ஷீரபலா 101, பாலுடன் சேர்த்துச் சாப்பிடப்படும் யோகராஜகுக்குலு, முஸ்தாதி மர்ம கஷாயம், கந்த தைலம் போன்ற மருந்துகள் இதுபோன்ற Disc நழுவும் குறைபாடுகளை நீக்க தரமானவை. மருத்துவரின் ஆலோசனையின்பேரில் இவற்றை நீங்கள் சாப்பிட்டுப் பயனடையலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.