மேகங்கள் கலைந்தபோது...

கேண்டினிலிருந்து வெளியே வந்தபோதுதான் நரசிம்மன் கணேசனை பார்த்தான்.  வழக்கத்திற்கு    விரோதமான அவன் வேகமும் தன்னைக் கண்டுபிடிப்பதில் காட்டிய
மேகங்கள் கலைந்தபோது...
Published on
Updated on
7 min read

கேண்டினிலிருந்து வெளியே வந்தபோதுதான் நரசிம்மன் கணேசனை பார்த்தான்.  வழக்கத்திற்கு    விரோதமான அவன் வேகமும் தன்னைக் கண்டுபிடிப்பதில் காட்டிய அவசரமும் அவன் சாதாரணமாக வரவில்லை என்பதை உணர்த்த நரசிம்மன் குழம்பினான்.  ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்த அப்பாவின் நினைவு வந்தது.  காலையில் பார்த்தபோதுகூட நன்றாகத்தானே பேசினார்.  இன்னும் இரண்டு நாளில் வீட்டிற்கு அழைத்து போகவில்லையென்றால் தானாகப் புறப்பட்டு வந்துவிடுவேன் என்றாரே... ஒருவேளை இரண்டு நாட்கள் கூட பொறுக்க முடியாத   அவசரத்தில் புறப்பட்டு வந்து ஏதாவது ஆகி இருக்குமோ?

என்ன? ஏது? என்பது தெரியாத நிலையில் ஏற்பட்ட பரபரப்பு அதிகரித்தாலும் கூட உண்மை புரியாமல் ஏன் குழப்பிக் கொள்கிறோம் என்று நினைத்தவன் அமைதியடைய முயன்று தோற்றான்.

நான்கைந்து பெண்கள்  டைப்பிஸ்ட் லதா, அக்கவுண்ட்  பாக்கியலட்சுமி, எம்.டியின் நேரடி உதவியாளர் மாலா, ஸ்டோர்கீப்பர் பவுனம்மாள்  கொண்ட கூட்டத்திற்கு வழிவிடுவதற்காக டேங்க் ஓரம் ஒதுங்கிய  போதுதான் கணேசன் இவனைப் பார்த்து கையை அசைத்தான்.  இவனும்  பதிலுக்குக் கையசைத்தான். அடுத்து சில விநாடிகளுக்குப் பின் சைக்கிள் ஸ்டாண்ட் அருகே இருவரும் சந்தித்துக்கொண்டனர்.

""என்ன கணேசா..?'' கேட்க நினைத்தவன் விபரீதமாக ஏதாவது சொல்லி விடுவானோ என்ற பயத்தில்  நிறுத்திக் கொண்டான்.  ஆனால் அவனோ இவனுக்கு நேர் விரோதமாக  இருந்தது அவன் பேச்சில் புரிந்தது.

""உங்களை எவ்வளவு நேரமா தேடறது.  சீக்கிரம் புறப்படுங்க''

இவனுக்குள் பதற்றம் கூடியது.  அப்பாவுக்கு பிரஷர் வந்தபோதும் இப்படித்தான்... இவன்தான்.

""என்னடா விஷயம்? அப்பாவுக்கு ஏதாச்சும்...?''

""மாமாவுக்கு என்ன அவரு நல்லாதான் இருக்கார்''

அப்பாடா.... மனதிற்குள் ஒரு நிம்மதி சுடர்விட்டது.  ஒரு கணம், ஒரேயொரு கணம்தான்.  அடுத்த கணம் அணைந்து போயிற்று.  அவன் சொன்ன செய்தி கேட்டு துடித்துப் போனான்.

""நீ நிஜமாவா சொல்றே?''

""பின்ன பொய் சொல்லவா இவ்வளவு தூரம் வந்தேன்?''

""இப்போ எப்படி இருக்கா?''

""டாக்டர்கிட்ட காட்டி கட்டு போட்டிருக்கு.  அடி பலமா பட்டிருக்கும் போலிருக்கு. வலி தாங்க  முடியாம கஷ்டப்படறா''

அவள் அனுபவிக்கும் வேதனை இவனை வதைத்தது.

""இப்ப அந்தப்  பய எங்கே?''

""அடிச்சுட்டு அங்கேயே உட்கார்ந்திருக்க அவன் என்ன முட்டாளா?  எங்க போனானோ?''

""எப்படி நடந்தது இது?''

""சாப்பாடு கேட்டிருக்கான் போட்டிருக்கா, புடிக்கலேன்னா எழுந்து போகவேண்டியதுதானே? என்ன சமையல் பண்ணியிருக்கே?ன்னு தட்டை தூக்கி மூஞ்சியிலே அடிச்சிட்டான்.  தலையிலேயும் புருவத்திலேயும் அடி இவன் கிழிக்கிற கிழிப்புக்கு வாய்க்கு ருசியா ஆக்கிப் போடணுமாக்கும். இன்னைக்கு அவனை ரெண்டிலே ஒண்ணு பண்ணிடறேன்''

உணர்ச்சிவசத்தில் கத்திப் பேச அக்கம் பக்கத்திலிருந்த தொழிலாளர்கள் திரும்பிப் பார்க்க, கணேசன் அமைதிப்படுத்தி ஆளரவமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றான்.  கணேசனின் அந்தச் செயலை ஒப்புக் கொள்ள முடியாமல் அவனிடமிருந்து கைகளை பிடுங்கிக் கொண்டான்.

""அவனை விசாரிக்கிற நேரமா இது,  வாங்க போய் பவானியை பார்ப்போம்''

 அடுத்த சில விநாடிக்களுக்குப் பின் ஸ்கூட்டர் பறந்தது.

காணாமல் போன பில் ஒன்றை தேடுவதற்காக மேஜை டிராயரைத் திறந்தபோது அந்தக் குப்பையில்   எப்படியோ தங்கிப் போன திருமண அழைப்பிதழ் ஒன்று கிடைத்தது.  அதைப் பார்த்தது முதல் பவானி நினைவுதான்.  டிசம்பர் வந்தால் அவளைக் கை பிடித்து பத்தாண்டுகள் முடியப் போகின்றது.  இத்தனை காலத்தில் அவள் தனக்கென்று எதையும் கேட்டதில்லை.

"" எனக்கு நீங்கபோதும் குடும்பத்துக்கு தேவையானதை வாங்கி கொடுங்க''       எப்பொழுது கேட்டாலும் எப்படி கேட்டாலும் எத்தனை தடவை கேட்டாலும் இதே பதில்தான்.  அப்படிப்பட்டவளையா?

""மச்சான்... நான் சொல்றேன்னு கோவிச்சுக்கக் கூடாது. படிச்ச பையன் செய்யற வேலையா இது?  எனக்கு  மட்டும் இப்படியொரு தம்பி இருந்திருந்தா நடக்கறதே வேற''.

கணேசனின் பேச்சில் பவானியின் ஒன்றுவிட்ட சகோதரன் என்ற உரிமை சற்று தூக்கலாகவே வெளிப்பட்டது.  என்னதான் கூடிவாழ்ந்தாலும் பிரிவினை காட்ட சின்ன காரணம் போதுமானதாகிவிடுகிறது.  தாக்குதலுக்குள்ளாகும்போது எதிர்ப்பு தெரிவிப்பதும் தாக்குபவர் எவராயிருந்தாலும் எதிர்த்து நிற்பதும் எல்லா ஜீவன்களுக்கும் பொதுவான இயல்பு என்கிறபோது கணேசன் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா? என்ன?               பாலுவின் செயல் எந்த விதத்திலும் சரியானதல்ல. பாலுவின்    மீதான கோபத்தில் பற்களை கடித்துக் கொண்டான்.

தாயில்லாப் பிள்ளை என்பதற்காக செல்லம் கொடுத்து வளர்த்தது முதல் தவறு.  அந்த தவறை மட்டும்   செய்யாதிருந்தால் பல தவறுகள் நிகழ்ந்திருக்காது.  படித்த காலத்தில் செய்த குற்றங்களாவது மன்னிக்கத் தக்கதாக   இருந்தது.  ஆனால் இன்றோ  அவனையும் இவனையும் பிடித்து மூன்று இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்து பார்த்தாகிவிட்டது. ஒன்றிலுமே நிலைத்து நின்றபாடில்லை. 

கடமையைக்  காரியமாக்கி முடித்துத் தர கையூட்டு கேட்ட பக்கத்து சீட்காரனை அடித்ததும், கணவனிடமிருந்து விவாகரத்து வாங்கிக் கொண்டு தனித்து வாழ்ந்தவளை வளைக்கப்போய் வம்பில் மாட்டிக் கொண்டதும், பொய் கணக்கு எழுதச் சொன்ன முதலாளியிடம் மறுத்து பேசியதுமாக மூன்று இடங்களிலிருந்தும் வெளியேற்றப்பட்ட பிறகு, சுய முயற்சியில் சின்ன சின்ன வேலைகளுக்குப் போனாலும் கூட எல்லாமும் ஓரிரு நாட்கள் ஆட்டமே.  இத்தனை அவசரத்திற்கும் எவருக்கும் வளைந்து கொடுக்காத தன்மைக்கும் வெளியார்களே பாதிக்கப்படும்போது வீட்டுக்குள் இருப்பவர்களின் நிலை பற்றி கேட்கவா வேண்டும்?  செலவுக்கு பணம் தரவில்லை   என்பதற்காக தன்னிடம் சண்டையிட்ட சூடு ஆறுவதற்குள், சொத்தை பிரித்துத் தரவில்லை என்பதற்காக  அப்பாவுடனான வாய்ப் பேச்சு முற்றி கையில் கிடைத்த ஸ்டூலை எடுத்து அவர் மீது விசிறி அடிக்க அது அவரது காலில்பட்டு மூட்டு நழுவி ஆறு மாதம் படாத பாடுபட்டார். அதிலிருந்து தேறி வந்தவுடன் மீண்டும் சண்டைபோட ரத்த கொதிப்புக்கு ஆளாகி திரும்பவும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக வேண்டியவரானார்.

அதை மறப்பதற்குள் அடுத்தது... ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து கடைசியாய் மனிதனிடம் வந்த   நரியின்  கதையாகிவிட்டது.  முதலில் நான், அடுத்தது அப்பா, இன்று பவானி, நாளை யார்?

""தோ பாருங்க, பேசாம அவனுக்கு வேண்டியதைப் பிரிச்சு கொடுத்துருங்க.  தனக்குன்னு வரும்போதுதான் பொறுப்புவரும்''

கணேசன் வார்த்தை அசரிரீ வாக்காய்ப்பட்டது.  ஆஸ்பத்திரியை அடைந்தபோது ஓடிவந்து சூழ்ந்து   கொண்டது உறவு கூட்டம். பவானி மீதான அனுதாபத்தில் பாலுவை பொருமித் தீர்த்தது.  ஒருசிலர் அதிக உரிமை எடுத்துக் கொண்டு பவானிக்காக கண்ணீர் வடிக்கவும் செய்தார்கள்.  அனைவரையும் கடந்து பவானி இருந்த   இடத்தை அடைந்தவன் தலையில் கட்டும், புருவத்தில் பாண்டேஜுமாக படுத்திருந்த மனைவியைப் பார்த்ததும்  அத்தனை நேரமாய் அடக்கி வைத்திருந்த துக்கம் பீறிட்டு வர சூழ்நிலை மறந்து கலங்கினான்.  கண்களிலிருந்து வெளிபட்ட கண்ணீர் பவானியின் முகத்தில் விழ அவள் விழித்துக் கொண்டாள்.  கணவனைப்பார்த்து முறுவலித்தாள்.

""என்னாச்சு பவானி?''

""லேசா அடி, வேறொண்ணுமில்லை.  எப்ப வந்தீங்க?  உங்களுக்கு யார் சொன்னது?      அண்ணன்  வேலையா?''

கேட்டுக் கொண்டே கணேசனை திரும்பிப் பார்த்தாள்.  அவனோ தாடியை தடவிக் கொண்டே சுவர்ப் பக்கம் திரும்பிக் கொண்டான்.

""நான் நல்லாதான் இருக்கேன்.  நீங்கதான்... ஒரு ஆம்பிளை இப்படியா அழறது. எனக்கு என்னாச்சுன்னு வேலையை போட்டுட்டு ஓடி வந்தீங்க? எனக்கு எதுவுமில்லேங்க?''

""இல்ல பவானி உனக்கு ஒண்ணுன்னா என்னாலே தாங்கிக்க முடியாது''

""இத்தனை அன்பு வெச்சிருக்கிறபோது எனக்கு என்னாயிடும்.  நீங்க சாப்பீட்டிங்களா?''

""சாப்பிட்டு வெளியே வரும்போதுதான் சேதி சொன்னான். ரொம்ப வலிக்குதா?''

""அடிபட்டபோது வலியில்ல.  தையல் போட்ட பிறகுதான் வலிக்குது''

""என்னாலேதானே உனக்கு இத்தனை கஷ்டம்?''

""என்ன பேச்சு ஒரு மாதிரியா போவுது? நான் மட்டும் யாரு?  நானும் உங்க குடும்பத்தில் ஒருத்திதானே?  உங்களைப் பங்கு போட வந்த நான் உங்க குடும்பத்தோட நல்லது கெட்டதிலே பங்குகெடுத்துக்கில்லேன்னா என்ன  அர்த்தம்? குடும்பம்னா கஷ்ட நஷ்டம் இருக்கவே செய்யும்''

அவள் பேச்சு ஏற்படுத்திய நெகிழ்ச்சியால் வெளிறிப்போன அவளது கைகளை பற்றி மடியில் வைத்துக் கொண்டான்.  சுற்றி நின்ற உறவு கூட்டத்தை பொருட்படுத்தாது அவன் செய்த செயலால் சங்கடப்பட்டவள்  வெட்கத்துடன் அவனிடமிருந்து கைகளை இழுத்துக் கொண்டாள்.

வெகுநேரம் வரை அவளுடன் இருந்து அவளின் தேவைகளைக் கவனித்தவன் செய்தியை கேள்விப்பட்டு நலம் விசாரிக்க வந்த நண்பர்களிடம் மாற்று காரணம் கூறி சமாளித்தான்.  ஒவ்வொரு விசாரணையின் போதும்  பாலு மீது ஏற்பட்ட கோபத்தைவிட இந்தச் செய்தி அப்பாவுக்குத் தெரிந்து விபரீதமாக ஏதாவது ஆகிவிடக்கூடாதே என்ற பயமே அதிகமாக இருந்தது.

மாலை பிள்ளைகள் பள்ளியிலிருந்து வரும் நேரத்தை மனைவி நினைவுபடுத்த வீட்டிற்கு வந்தவன் அப்பாவை எதிர்பார்த்திருக்கவில்லை.  குழந்தைகளுக்கு காபி கொடுத்துக் கொண்டிருந்த அப்பா அவனைப் பார்த்து  முகம் மலர்ந்தார்.  அப்பாவுக்கு எப்படி......  ஒருவேளை குழந்தைகள் அழைத்து வர சென்ற கணேசன் சொல்லியிருப்பானோ  சிலசமயங்களில் இப்படித்தான் முட்டாள்தனமாக ஏதாவது செய்துவிடுகிறான்.  தடுமாற்றத்தை  மறைத்துக் கொண்டு அப்பாவை  வரவேற்றான்.

""எப்பப்பா வந்தீங்க?''

""நீ சொல்லலேன்னா எனக்குத் தெரியாம போய்டுமா என்ன?  இப்போ எம்மருமக எப்படி இருக்கா?''

எது தெரியக் கூடாது என்று நினைத்திருந்தானோ அது தெரிந்து விட்ட பிறகு இனி என்ன ஆகுமோ என்ற பயம் ஆட்கொண்டது.

""பரவாயில்லே ரெண்டுநாள் ரெஸ்ட் எடுத்தா சரியாகப் போயிடும்னு டாக்டர் சொன்னார்''

""ரெண்டுநாள் என்ன நாலு நாள் அங்கேயே இருக்கட்டும். வீட்டுக்கு வந்தா சும்மா இருக்கமாட்டா''

""நீங்க ஏன் வந்தீங்க? டாக்டர் போகச் சொன்னாரா?''

""அவரு போகக் கூடாதுன்னுதான் சொன்னார்.  எனக்குதான் மனது கேட்கலே. உடம்பிலே    எதிர்ப்பு    சக்தி இல்லாதபோது எத்தனை மருந்து கொடுத்தாலும் நடக்கறது தானே நடக்கும். அதான் வந்துட்டேன் எழுபத்தேழு வயசு சாதாரணமா என்ன?  சரி நீ போய் குளிச்சுட்டுவா.  காபி போட்டுத் தரேன்''

 அதற்கு மேல் அவரிடம் பேசுவதில் பலன் இல்லை என்பதாய் நகர்ந்தான்.

குளித்து முடித்து மாற்றுடை அணிந்துகொண்டு வந்தபோது அப்பா சுடச்சுட காபி கொடுத்தார்.  அப்பாவுக்கு சமையல் நன்றாகத்தெரியும்.  இளம் வயதிலேயே மனைவியை இழந்ததால் கற்றுக் கொண்ட சமையலை இன்று பவானிக்கு சொல்லி தந்து கொண்டிருக்கிறார்.  சமைப்பதில் மட்டுமல்ல.  எந்த வேலையிலும் அப்பா   கெட்டிக்காரர்தான்.  அதுமட்டுமல்லாது, இன்ன வேலை    இன்னார் தான் செய்ய வேண்டும் என்ற வரையறையெல்லாம் அப்பாவுக்கு பிடிக்காது.  பவானிக்கு அரிசி களைந்து கொடுப்பதிலிருந்து, டாய்லெட்டைக் கிளீன் பண்ணுவது, தோட்டத்தைப் பராமரிப்பது, மாடுகளைப் பேணுவது எதற்கும் அப்பா பின் வாங்குவதில்லை.  எல்லாவற்றையும் விட குழந்தைகளைப் பராமரிப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.  பாலு விஷயத்தில் கற்றுக் கொண்ட பாடத்தை குழந்தைகள் விஷயத்தில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.  ஒருவன் முழுமையடைய வேண்டுமெனில் வாழ்க்கையைப் பற்றி உணர்ந்த ஒருவரின் வழிகாட்டுதல் அவசியம் வேண்டும்.  இளமையில் கற்பிக்கப்படும் கல்வி,   உரிய நேரத்தில் சம்பாதிக்கும் பணம், பருவத்தில் நடந்தேறும் திருமணம்,     இதமாக கூறப்படும் அறிவுரை    இவை யாவும் நல்ல பலனைத் தரும். ஆகவே வாழ்பவர்களுக்கு வாழ்ந்தவர்கள் வழிகாட்டியாக இருப்பதுடன்   காலத்திற்கேற்ப கற்றுத் தரும் பொறுமையையும் கைக்கொள்ள வேண்டும்.  அப்பாவுக்கு அது

நிறையவே இருக்கிறது.

""நான் ஒண்ணு சொல்வேன் கேப்பியா?''

""சொல்லுங்கப்பா''

""பேசாம அந்தத் தறுதலையை அறுத்துவிட்டுடுவோம்டா..''

கணேசன் சொன்னதுதான், ஆனால் அப்பாவா இப்படி  இரண்டு மகன்களையும் இரண்டு கண்களாக பாவிக்கும் இவர் இரண்டில் ஒன்றைப்பற்றி எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்?  பாலுவின் செயல்  அவனுக்குள்ளும் பிரிவினை உணர்வை உண்டாக்கி விட்டிருந்தாலும்கூட  அப்பா இதை விரும்பிச் சொல்லவில்லை என்பது புரிய வர பதில் சொல்லாமல் மௌனம் காத்தான்.

""உன் மௌனம் எனக்குப் புரியது.  ஆனா அனுசரிச்சு போற மாதிரி அவன் நடந்துக்கலியே.  பெத்த பாவத்துக்காக என்னையும்}கூட பிறந்த பாவத்துக்காக உன்னையும் எதுவேணும்னாலும் பண்ணட்டும்.  ஆனா  பவானியை இவன் எப்படித் தொடலாம்.  அந்தப் பொண்ணு மகாலட்சுமி.  அதுக்கு எந்த குறையும் வரக்கூடாது.  அது  கண்ணிலேருந்து ஒரு சொட்டு நீர் வந்தாலும் நாம நல்ல கதிக்குப் போகமாட்டோம்.  வெளியே யாரையும்  கூப்பிட வேணாம்.  உன் மாமனை கூப்பிடு போதும்.  அவன் கல்யாண செலவுக்கு ஒதுக்கினது போக மீதி உள்ளதை  சரி சமமா பிரிச்சிக் குடுத்தடறேன்''

அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைத்துவிட மனத்துயரை அடக்கமுடியாமல் சிரமப்பட்ட அப்பாவுக்காக வேதனைப்பட்டான்.

பந்தமும் பாசமும் ஏற்படுத்தும் வேதனையைவிட நெஞ்சை உருக்கும் வேதனை வேறு எதுவாக இருக்க முடியும்.

மூன்றாம்நாள் மாலை பவானி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள்.  தலையிலிருந்து கட்டு அவிழ்க்கப்பட்டு பேண்டேஜ் போடப்பட்டிருந்தது.  புருவத்திலே பேண்டேஜ் அகற்றப்பட்டு வெறும் மருந்து தடவப்பட்டிருந்தது.  மாமனாரைப் பார்த்ததும் சற்று தெம்பு கூடினார் போலிருந்தாலும் ஆஸ்பத்திரியிலிருந்து வந்து விட்டதற்காக  கோபித்துக் கொண்டாள்.  ஆனால் அவரோ அதை காதில் வாங்காதவர் போல அவளுக்கு படுக்கை     போடுவதில் மும்முரமாயிருந்தார்.  நரசிம்மன்   இரண்டுநாட்கள் லீவு எடுத்துவிட்டு மாமாவைப் பார்க்கவும்  ரிஜிஸ்டர் ஆபிஸþக்குமாய் சென்றுவந்தான்.  இதற்கு நடுவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் எப்படி பங்குபோடுவது என்பது பற்றி அப்பாவும் பிள்ளையும் கலந்து முடிவு செய்தனர்.  அன்று இரவு பவானி படுத்த பிறகு வழக்கம்போல் அப்பாவிடம் பேசிவிட்டு திரும்பி வந்தவன் பவானி விழித்திருப்பது புரிந்து அவளருகில் நெருங்கி   அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.

""மணி இரண்டாயிடுச்சு. இன்னும் தூங்கலியா?''

பவானி எந்த பதிலும் சொல்லாமல் அவனையே பார்த்தாள்.

""காயம் வலிக்குதா?  மாத்திரை போட்டுகிட்டியா?''

""வலிதான். ஆனா காயத்திலே இல்ல மனசில''

""என்னப்பா சொல்ற?''

""பாகப் பிரிவினை பேச்சு முடிஞ்சுடுச்சா.  ரெண்டுநாளா இந்தவீட்டிலேதான் இருக்கேன்.  ஒரு வார்த்தை சொல்லலியே, ஆமாம் சொத்தை பிரிச்சிகிட்டா மட்டும் பிரிஞ்சு இருந்திடுவீங்களா?''

உடனடியாக பதில் சொல்லாமல் அமைதி காத்தவன் பிறகு சொன்னான்,

""இருக்க பழகிக்க வேண்டியதுதான்''

""எனக்காகவா?''

எதிர்பாராத  அந்தக் கேள்வியால் புருவம் சுருக்கினான்.

""உனக்காகன்னு யார் சொன்னா?  உண்மையிலே ஒருநாள் பிரிய வேண்டியவங்கதானே?''

""அந்த நேரம் வரும்போது அது நடக்கட்டுமே.''

அவள் பேச்சு அவனுக்குள் கோபத்தை ஏற்படுத்தியது

""அதுவரைக்கும் அடிபட போறியா?''

""என்னை அடிக்கணும்னு அடிக்கலியே.  வாய்க்கு ருசியா சமைச்சு  போடலைன்னு கோபம்.  அந்த     ஆத்திரத்திலே தட்டை எடுத்து வீசிட்டார்.  அவ்வளவுதானே? இதுக்குப் போய் பிரிச்சுக்கணுமா  சொத்தை?  பிரிச்சிட்டா அவருக்குன்னு யாரு இருக்கா?''

""பட்டுப்பார்க்கட்டுமே.  அன்னைக்கு நான் அடிபட்டேன், நேத்தைக்கு அப்பா, இன்னைக்கு நீ, நாளைக்கு யாரு  பிள்ளைங்கதான் பாக்கி''

""பெத்த அப்பாவையே அடிச்சவருக்கு அண்ணன் புள்ளைங்க  எந்த மூலை?''

""நீ ஆயிரம் சொல்லு நான் ஒத்துக்க மாட்டேன்.  நாளைக்கு மாமா வரேன்னுட்டாரு முடிவு பண்ணிட  வேண்டியதுதான்''

""அவரு என்ன செஞ்சிட்டார்னு இப்படி பண்றீங்க, வாய்க்கு ருசியா சாப்பாடு இல்லையேன்னு அவருக்கு தெரிஞ்ச பாஷையிலே கேட்டாரு அவ்வளவுதானே. அவரு பண்ணினது தப்புதான்.  அதுக்காக வருத்தப்

பட மாட்டார்னு நினைக்கிறீங்களா? அவரு இப்படி முரடனா வளர்ந்ததுக்கு காரணம் அவரை மட்டும் குத்தம் சொல்ல முடியாதுங்க.  அம்மா வளர்க்காத பிள்ளை தறுதலைன்னு சும்மாவா சொல்றாங்க.  அதுமட்டுமில்லேங்க}தன்னை முன்னிறுத்தி யார் எந்தச் செயலை செஞ்சாலும் அதிலே  சுயநலம்தான் இருக்கச் செய்யும். செய்யற தப்பை உணரக் கூடிய பக்குவம் இன்னும் அவருக்கு வரலே}

""இன்னும் சொல்லப் போனா ஆளைப் பார்த்தா கம்பீரமாத் தெரியலாம். ஆனா கடைக்குட்டியா பிறந்துட்ட  நோஞ்சான் தன்மை  மனசளவில் இருக்கவே செய்யுது, தான் சொல்றதையும் செய்யறதையும் குடும்பத்திலே உள்ளவங்க  ஏத்துக்கணுங்கற எதிர்பார்ப்பும் இருக்குது.  அதை எப்படி சரி செய்யலாம்னு யோசிக்காம பாகப்பிரிவினை அப்படி இப்படின்னு பேசிக்கிட்டிருக்கீங்க''

""எந்த குடும்பத்திலேயும் இப்படி நடக்கலே''

""இல்லேங்க எல்லா குடும்பத்திலேயும் பிரச்னை இருக்குது. ஆனா வெவ்வேறு வடிவத்திலே இருக்கும். பிரச்னைகளை அதன் போக்கிலே எதிர் கொள்ளணும், மிக முக்கியமா அதை காரணமா வெச்சுகிட்டு தன்னை முன்னிறுத்தணும்னு நினைச்சா பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது.  புது பிரச்னைதான் உருவாகும்''

""அடிபட்டும் உனக்குப் புத்திவரலே'' 

""முட்டாளாகவே இருந்து இன்னும் அடிபட்டுட்டு போறேன்.  அவரு போய் நாளுநாள் ஆச்சு, எங்கே   போனார்? என்ன ஆனார்? எதுவும் தெரியலே.  ஒரு வேளை பட்டினி கிடக்க மாட்டார்.  அப்பாவும் பிள்ளையும் என்னைச் சுத்தி உட்கார்ந்திருக்கிறீங்களே யொழிய அவரை யாராவது போய் பார்த்தீங்களா?''

""எங்கே போவான் ப்ரண்ட்ஸ் வீட்டிலே உட்கார்ந்திருப்பான்.  ரெண்டு நாள் ஆனா தானா வந்துடுவான்''

""வராம ஏதாவது பண்ணிகிட்டா?''

""சனியன் ஒழிஞ்சுதுன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்''

""என்னாலே அப்படி நினைக்க முடியாதுங்க.  நிச்சயமா முடியாதுங்க. நான் இந்த வீட்டுக்கு வரப்போ    உங்கம்மா உயிரோட இல்லே, அவரை பார்த்தவுடனேயே  எனக்கு பாவமா இருந்திச்சு, அன்னைக்கே உங்க மூணுபேர்ல அதிகமா பாசம் காட்டவேண்டியது அவருகிட்டேதாங்கறதையும்,  எத்தனை கஷ்டம் வந்தாலும் அதை மாத்திக்கிறதில்லேன்னும் முடிவு பண்ணிட்டேன். இந்த மனநிலை எனக்குள்ள உருவானபிறகு அவரு செயல்லே குற்றம் கண்டுபிடிக்கவே  முடியலே.  அதுதான் இன்னைக்கு வரைக்கும் இருக்குது''

 இதை சொல்லும்போது பவானி கலங்க,  நரசிம்மன்  அவளை வித்தியாசமாகப் பார்த்தான்.

""உனக்கு பைத்தியம் புடிச்சிருக்கா?''

""ஆமாம் எனக்கு இப்பவே அவரைப் பார்க்கணும், விதவிதமா சமைச்சு வயிறு நிரம்ப போடணுங்கற பைத்தியம்தான் பிடிச்சிருக்கு. அவரு இந்த விட்டிலேயே பிறந்து வளர்ந்தவர், அவருக்குன்னு சில விருப்பு, வெறுப்புகள், எதிர்பார்ப்புகள் இருக்கலாம்.  அது சரியா தவறாங்கறதை அவருதான் அனுபவிச்சு உணரணுமேயொழிய, கொஞ்ச காலம் உங்களுக்கு மனைவியாகவும் இந்த வீட்டின் மூத்த மருமகளாகவும்  வாழ்ந்த உரிமையிலே நான் உணர்த்த  முற்படுவதோ அதுக்கு உடந்தையா இருக்கிறதோ  தப்புங்க. அப்படி செய்யறது என்னோட இருப்பைத் தவறா பயன்படுத்தற மாதிரி ஆகிவிடும்''

அவளது பேச்சுக்கு பதில் பேச முடியாமல் அவளையே பார்த்தவன்  வாசலில் நிழலாட         திரும்பிப் பார்த்தான். அப்பா நின்று கொண்டிருந்தார்.

""பாகப்பிரிவினை பண்ணலாமாங்கறதுக்கு ஆலோசனை தந்த எனக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கலாம்னு சொல்லத் தெரியாமப் போயிடுச்சேடா.  என்னதான் இருந்தாலும் பொம்பளைங்க இருந்து புள்ளைய வளர்க்கறதுக்கு இணையா  ஆம்பிளையாலே புள்ளைய வளர்க்க முடியாதுடா.  ரெண்டு பிள்ளைங்களையும் ரெண்டு கண்ணா பாவிச்ச எனக்குள்ளே எப்படிடா மாற்று மனப்பான்மை வந்தது.''

பேசி முடிப்பதற்குள் அவர் குரல் உடைய  பவானி அவரை அருகில் அழைத்து அவர் கைகளைப் பற்றிக்கொண்டாள்.    

இதற்குமேல் அங்கிருக்க முடியாமல் வெளியே வந்த நரசிம்மன்  தம்பியைத்  தேடிக் கண்டுபிடிக்க ஸ்கூட்டரைத் தள்ளினான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com