திரைக்கதிர்

விசில்' உள்ளிட்ட படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்த செரீன், திடீரென்று வாய்ப்புகள் இல்லாமல் போனார். தெலுங்கு பட வாய்ப்புகளைத் தேடிப்
திரைக்கதிர்
Updated on
2 min read

"விசில்' உள்ளிட்ட படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்த செரீன், திடீரென்று வாய்ப்புகள் இல்லாமல் போனார். தெலுங்கு பட வாய்ப்புகளைத் தேடிப் பிடித்து நடித்து வந்தவர், "பீமா' படத்தில் விக்ரமுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடினார். "எவ்வித வாய்ப்புகள் வந்தாலும் ஏற்பேன்' என்று அறிவித்தும் தமிழில் வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில், தற்போது "திகில்' என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தின் கதாநாயகனாக அசோக் நடிக்கிறார். "கல்கி' ஸ்ருதி, விஜய் ஆனந்த், அரவிந்த் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். சந்தோஷ் கொடன்கேரி இப்படத்தை எழுதி, இயக்குகிறார். பட வாய்ப்பு குறித்து செரீன்.... ""வாய்ப்புகள் இல்லாமல் இருந்தேன் என்பது உண்மைதான். தமிழ் படங்களில் மட்டுமே வாய்ப்பு இல்லை. மற்றபடி நான் தெலுங்கில் பிஸியாகத்தான் இருந்தேன். தமிழில் பிரேக் கொடுக்கும் அளவுக்கு ஒரு படம் அமைய வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அறிமுகப்படமான "விசில்' த்ரில்லர் படமாகத்தான் அமைந்தது. இப்போது கிடைத்திருக்கும் "திகில்' படமும் அதே பாணிதான். அதனால் விட்ட இடம் கிடைக்கும்"" என்கிறார் செரீன்.

தங்களின் மனம் கவர்ந்த நட்சத்திரங்களின் பெயர்களை ரசிகர்கள் பச்சைக் குத்திக் கொள்வது போல, தங்களுக்கு பிடித்த சின்னம், காதலன் பெயர் ஆகியவற்றை நடிகர்கள் குத்திக் கொள்வது தற்போதைய பேஷன். த்ரிஷா, நயன்தாரா, குஷ்பூ,  டாப்ஸி, எமி ஜாக்ஸன் உள்ளிட்ட கோலிவுட் நட்சத்திரங்களும், பிரியங்கா சோப்ரா, அசின், தீபிகா படுகோனே போன்ற பாலிவுட் நட்சத்திரங்களும் உடலின் பல பாகங்களில் எதாவது ஓர் உருவத்தையோ, பெயரையோ பச்சைக் குத்தி வைத்திருக்கின்றனர். இந்த வரிசையில் நடிகை அல்லாத ஒருவர் இடம் பிடித்திருக்கிறார். "கோச்சடையான்' படத்தை இயக்கிய ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின்தான் அவர். தனது இடது முழங்கையில் லதா ரஜினி என தனது தாய் மற்றும் தந்தையின் பெயரை பச்சை குத்தி இருக்கிறார். சமீபத்தில் தனது இணைய தள பக்கத்தில் சௌந்தர்யா, ""எத்தனை காலங்கள் கடந்தாலும் எப்போதுமே என் பெற்றோர் மீது இருக்கும் அன்பு குறையாது.  என் வாழ்நாள் முழுவதும் என் கையில் இந்த அழியாத சின்னம் ( பச்சை குத்திய பெற்றோர் பெயர்) இருக்கும்'' எனக் குறிப்பிட்டுள்ளார். 

மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானைத் தொடர்ந்து அவரது தங்கை மகன் அஷ்காரும் தமிழ் திரையுலகில் கால் பதிக்கிறார். ஷ6டங பஞ 6அங' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் திரைக்கதை மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை ஒரே இரவில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. கதாநாயகியாக சூரியகிரண் நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக கௌரிகிருஷ்ணா நடிக்கிறார். அழகு மிகுந்த இரண்டு உயிர் தோழிகளுக்கு ஒரு காதலன் கிடைக்கிறான். இருவரின் இதயத்தையும் ஒருவனே கொள்ளை கொள்கிறான். இதனால் போட்டி, பொறாமை ஏற்படுகிறது. ஒரு பெண் மற்றொரு பெண்ணையும், அவன் காதலனையும் கொலை செய்து தன்னையும் அழித்து கொள்கிறாள். பல வருடங்களுக்கு பின் இறந்து போன காதலர்கள் வேறொரு ஊரில் பிறந்து காதலர்களாக இணைகிறார்கள். அவர்களை மறுபடியும் அழிப்பதற்கு போன ஜென்மத்தில் இறந்து போன அதே பெண் ஆவியாக பிறக்கிறாள். அதன் பின் வென்றது யார்? என்பதுதான் படத்தின் கதை. பி.கே.ஜேம்ஸ் அண்ட் திஸகேஸ்வரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஜெஸ்பால் ஷண்முகம் எழுதி, இயக்குகிறார்.

ஒருவர் மட்டுமே நடிக்கும் படம், இருவர் மட்டுமே நடிக்கும் படம் என எண்ணிக்கை குறைந்த நடிகர்களுடன் கதை களம் அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களைச் சுற்றி மட்டும் கதை நகர்வது போலவும் திரைக்கதைகள் உருவாகி வருகின்றன. இதிலிருந்து மாறுபட்டு 20 பேர் முக்கிய வேடங்களில் நடிக்கும் நட்சத்திர கூட்டம் மிகுந்த படமாக உருவாகிறது "வெத்து வேட்டு'. கதாபாத்திரங்களின் அமைப்பு குறித்து இயக்குநர் மணிபாரதி...""காதல் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. எப்படி இருந்தாலும் காதல், காதல்தான் என்பதை மையமாக கொண்டு கதை உருவாகியுள்ளது. விழா என்ற படத்தில் நடித்த மாளவிகா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோவாக ஹரீஷ் நடிக்கிறார்.  ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கதையில் முக்கிய இடம் பிடித்திருப்பதால், கை தேர்ந்த நடிகர்கள் மட்டுமே தேவைப்பட்டார்கள். அதற்காக பட்ஜெட் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்கு அறிமுகமான நடிகர்களை பயன்படுத்தியிருக்கிறேன். திருச்சி, பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது'' என்கிறார் மணிபாரதி.  

ஹீரோயின்களில் சற்று வித்தியாசமானவர் ஹன்சிகா. நைட் பார்ட்டி, ஷாப்பிங் என சுற்றாமல் ஓய்வு நேரங்களைப் பயனுள்ளதாக மாற்ற விரும்புவது அவரது வழக்கம். சிம்புவுடனான காதல் தோல்வி உள்ளிட்ட பல செய்திகளைத் தாண்டி தன் மன அமைதிக்காக பயனுள்ள பொழுதுபோக்குகளில் சமீபமாக அவர் ஈடுபட்டு வருகிறார். வருடா வருடம் தன் பிறந்த நாளின் போது ஆதரவற்ற குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருவதுடன் 40-க்கும் அதிகமான ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார். இந்நிலையில் ஓய்வு நேரங்களில் வீட்டில் அமர்ந்து ஓவியங்கள் வரைகிறார். கடவுள் படங்கள், காட்டு விலங்குகள் என பல்வேறு விதமான ஓவியங்கள் வரைந்து வீட்டில் அடுக்கி வைத்துள்ளார். திருமண நிகழ்ச்சிகள், நண்பர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில்  அந்த ஓவியங்களைப் பரிசாக அளிக்கிறார். ""நான் பார்ட்டிகளில் பங்கேற்பதில்லை. பிஸியான படப்பிடிப்பிலிருந்து எனது நேரத்தை வேறு வழியில் செலவிட ஓவியம் வரைகிறேன். பள்ளியில் தொடங்கிய இந்த ஆர்வத்தை படிப்படியாக வளர்த்துக் கொண்டேன். விதவிதமான விநாயகர் படங்களை வரைவது எனக்கு பிடித்தமானதாக உள்ளது'' என்கிறார் ஹன்சிகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com