

யுவன்ஷங்கர்ராஜா பாணியில் இஸ்லாம் மதத்தைத் தழுவியதுடன் சினிமாவுக்கும் "பை.. பை...' சொல்லி விட்டார் மோனிகா. ஏனாம்? ""குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான போது, பயங்கர கஷ்டம். தவறான பாதையில் இதுவரைக்கும் சென்று பணம் சேர்த்ததில்லை. வாய்ப்புகளுக்காக தரம் இறங்கியதும் இல்லை. இதுவரை 70 படங்கள் நடித்திருக்கிறேன். ரசிகர்கள் தந்த ஆதரவை மறக்க முடியாது. இப்போது ரசிகர்களையும், இந்த சினிமாவையும் விட்டுப் பிரிகிறேன். இப்போது பணத்துக்காகவோ, காதலுக்காகவோ நான் மதம் மாறவில்லை. நான் அப்படிப்பட்ட பெண் இல்லை. இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு பிடிக்கும். அதனால் மட்டுமே மதம் மாறினேன். இதற்கு குடும்பத்தில் பெரிய எதிர்ப்புகள் இருந்தன. இருந்தாலும் நான் சில வருடங்களாகவே இஸ்லாம் மத கொள்கைகளின்படி வாழ்ந்து வந்தேன். தற்போது வெளியுலகுக்கு என்னை இஸ்லாமிய பெண்ணாக காட்டிக் கொள்கிறேன். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். பெயர் மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் இனி என் பெயர் என்.ஜி.ரஹீமா. ரஹீமா என்றால் மென்மையானவள் என்று பொருள்'' என விளக்கம் அளித்திருக்கிறார். "அழகி', "சிலந்தி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மோனிகாவுக்கு திருப்பு முனை படங்கள் இதுவரை அமையாததும் அவர் சினிமாவை விட்டு விலக காரணமாக கருதப்படுகிறது.
மூன்று வருட இடைவெளிக்குப் பின் பூனம் பஜ்வா... "சேவல்', "தெனாவட்டு', "கச்சேரி ஆரம்பம்' என தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்த பூனம் பஜ்வா கடந்த 2011-ஆம் ஆண்டு "தம்பிக்கோட்டை' படத்தில் நடித்த பிறகு காணாமல் போனார். தற்போது மூன்று வருட இடைவெளிக்குப் பின் "ரோமியோ ஜூலியட்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகம் கண்டுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ஏற்கெனவே ஹன்சிகா நடித்து வருகிறார். இப்போது மற்றொரு ஹீரோயினாக பூனம் பஜ்வா இணைந்திருக்கிறார். இது குறித்து பட இயக்குநர் லஷ்மணிடம் பேசும் போது... ""முதல் காதல் எப்போதுமே மறக்காது. வாழ்வின் கடைசி நாள்களிலும் முதல் காதலின் உன்னத தருணங்கள் கண்கள் முன் நிழலாடும். அப்படியொரு காதல் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. ஜெயம் ரவி - ஹன்சிகா காதலுக்கு சரி. பூனம் பஜ்வா எப்படி? என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது. படத்தில் பூனம் பஜ்வாவுக்கு சரி பாதி பங்கு இருக்கிறது. காதலும், மோதலுமான இந்த கதையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு பூனம் பஜ்வாவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூனம் பஜ்வா நடிக்கும் காட்சிகள் தற்போது சென்னை புரசைவாக்கம் பகுதிகளில் செட் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வருகிறது'' என்றார் லஷ்மண்.
மாஜி காதல் ஜோடி சிம்பு - நயன்தாரா பிரிவுக்கு பின் தற்போது "இது நம்ம ஆளு' படத்தின் மூலம் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். இவர்கள் இணைந்து நடித்து வந்த காட்சிகளை இயக்குநர் பாண்டிராஜ் படமாக்கி வந்தார். இந்நிலையில் நயனின் சம்பள பிரச்னை, சிம்பு - நயன் இடையே மீண்டும் கருத்து வேறுபாடுகள் உள்ளிட்ட பிரச்னைகளால் படத்தின் ஷூட்டிங் தடைப்பட்டது. இந்நிலையில் சிறிது இடைவெளிக்குப் பின் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கும்பகோணத்தில் மீண்டும் தொடங்கி நடக்கிறது. கடந்த வாரம் முதல் சிம்பு - நயன் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நயன்தாராவுடன் நட்புடன் பழகும் சிம்பு, சமீபத்தில் நயன்தாராவின் அருகில் நெருக்கமாக நின்று தனது செல்போன் கேமிரா மூலம் போட்டோ எடுத்துக் கொண்டார். அப்படங்கள் தற்போது இணையதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த 3 மூன்று வாரங்களுக்கு முன் த்ரிஷாவின் பிறந்த நாள் விழாவில் சிம்பு, நயன்தாரா பங்கேற்றனர். அவர்களுக்கு த்ரிஷா விருந்தளித்தார். இந்நிலையில் தற்போது இருவரும் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் படங்கள் வெளியாகி இருப்பதால் சிம்பு - நயன் உறவில் மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இதை நயன் தரப்பு மறுத்து வருகிறது.
ஆந்திரம் தெலுங்கானா, சீமாந்திரா என இரண்டு மாநிலங்களாகப் பிரிந்ததையடுத்து சீமாந்திராவுக்கு புதிய தலைநகரம் நிறுவ மாநில அரசு மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இதனால் டோலிவுட் நட்சத்திரங்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சமந்தா, காஜல் அகர்வால் இருவரும் சீமாந்திரா பகுதிகளில் நிலங்களை வாங்கிப் போட முடிவு செய்துள்ளார்களாம். அப்பகுதி நில புரோக்கர்களை அழைத்து இது குறித்து பேசி வருவதுடன் அடுக்குமாடி குடியிருப்பில் நவீன வசதிகளுடன் கூடிய வீடு, ஏக்கர் கணக்கில் நிலம் என வாங்கி போடுவதில் இருவருக்கும் போட்டி எழுந்துள்ளது. மேலும் நடிகர்கள் சர்வானந்த், தருண், அல்லரி நரேஷ் உள்ளிட்ட நடிகர்கள் ஏற்கெனவே ஹைதராபாத்தில் ரெஸ்டாரன்ட், பார் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சீமாந்திரா பக்கம் இவர்களின் பார்வை திரும்பியிருக்கிறது. விசாகப்பட்டிணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்களது வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் வகையில் இவர்கள் செயல்பட்டு வருகிறார்களாம்.
ஹாலிவுட்டில் விலங்குகள், பொம்மைகள், வாகனங்கள், பழங்கள் மற்றும் வேற்று கிரகவாசிகள் என கற்பனை கதாபாத்திரங்களைச் சித்திரித்து அனிமேஷன் படங்கள் வெளிவருவது வழக்கம். நடிகர்கள் இல்லாமல் பொம்மைகளின் மூலம் கதாபாத்திரங்களை அமைத்து வெளிவரும் படங்களுக்கு ஹாலிவுட் ரசிகர்கள் என்றில்லாமல் அனைவரும் ரசிகர்கள். குறிப்பாக குழந்தைகளைக் கவரும் விதத்தில் இப்படங்களைத் தயாரிக்கின்றனர். இதுவரை ஹாலிவுட்டில் மட்டுமே தயாராகி வெளிவந்த படங்களுக்கு மத்தியில் தமிழில் ஓர் அனிமேஷன் படம். விலங்குகள், பொம்மைகள் என்பதிலிருந்து விலகி மாறுபட்ட அம்சமாக முதன் முறையாக எண்களை வைத்து "029' என்ற படத்தைத் தமிழில் உருவாக்கி வருகிறார்கள். 1 முதல் 10 எண்கள் வரை ஒவ்வொரு எண்ணும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பது போல் இக்கதை சித்திரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு குணம் என்கிற ரீதியில் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று. அனிமேஷன் படிப்பில் கை தேர்ந்த நிஷா என்பவர் இப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார். குழந்தைகளைக் கவரும் விதத்தில் இப்படம் இந்த மாதம் திரைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.