

45 வயதான எனக்கு கடந்த ஒரு மாதங்களாக மாலை வேளையில் கை, கால் மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் ஆங்காங்கே தோல் தடித்து அரிப்பு ஏற்படுகிறது. பிறகு ஒரு மணி நேரம் கழித்து தடித்த தோல் பகுதி பழைய நிலைக்கு வந்துவிடுகிறது. சில சமயம் மட்டும் இரவு, பகல் வேளையில் தடித்து, அரிப்பு ஏற்பட்டு தானாகவே சரியாகிவிடுகிறது. இதை நிவர்த்தி செய்ய என்ன உணவுகளை உட்கொள்ளலாம், ஆயுர்வேத மருந்துகள் ஏதேனும் உள்ளதா?
ச.சிவசுப்ரமணியம், புதுராமகிருஷ்ணாபுரம், திருப்பூர்.
விஷ ஜந்துக்கள் கடிப்பதால் இவ்விதம் தடிப்பு ஏற்படலாம். விஷ ஜந்துக்களில் எது, எப்போது தீண்டியது என்று அறிய முடியாதிருந்தால் அது காணாத ஒரு விஷத் தீண்டலால் ஏற்பட்டதென்பதைக் குறிக்கக் "காணாக்கடி' என்று இதைக் கூறுவர். இதற்கு மந்திரிப்பவர்கள் பெரும்பாலும் மிளகு மந்திரித்து 5, 7, 9 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் ஒரு வாரம் அல்லது 15 நாட்கள் கிரமமாக ஏற்றி அதே கிரமத்தில் இறக்கி தினமும் இரண்டு வேளையும் சாப்பிடச் சொல்வர். விபூதி மந்திரித்து மேல் பூசச் சொல்வர். முல்லை இலையை அரைத்து மேல் பூசிக் குளிக்கச் சொல்வர். மூன்றும் மருத்துவரீதியாக நல்ல குணம் தருபவையே. நவீன வைத்தியமுறையில் இதை அலர்ஜி என்று குறிப்பிடுவார்கள்.
இந்த உபாதையில் உடலின் உள்ளே உண்டாகியோ, அல்லது வெளியிலிருந்து உட்புகுந்தோ சில பொருட்கள் ஒரு தனிப்பட்ட அலர்ஜியை உண்டாக்குகின்றன. இந்தப் பொருட்களின் தன்மை இன்னமும் நன்கு அறியப்படவில்லை. இவை சிலரின் உடலிலேயே இவ்வித மாறுதல்களை உண்டாக்குகின்றன. உடலின் உட்புறத்தில் உண்டான அல்லது வெளியிலிருந்து உள்சேர்ந்த ஒரு தனிப்பட்ட பொருளை வெளியாக்கும் பொருட்டு உடலிலுள்ள சில தாதுப் பொருட்கள் விசேஷ முயற்சியைச் செய்கின்றன என்பதையே இது வெளிக்காட்டும். இதை உண்டாக்கும் கெட்ட பொருள் உடலில் பரவும்போதும் அல்லது வெளியிலிருந்து உடலில் படும்போதும், தோலிலுள்ள மெல்லிய இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. தடிப்புடன் கோடுகள் காணும். இயக்க நரம்புகளுடன் இதற்குத் தொடர்பில்லை. உணர்ச்சி நரம்புகள் நெருக்கமாக உள்ள இடங்களில் இதனால் அரிப்பு அதிகமாக ஏற்படுகின்றது. சிலருக்கு முட்டை, பால், மீன் முதலிய உணவுகளால் அதிலுள்ள புரதப்பொருளை சகிக்கும் சக்தி இல்லாததால் தோலில் நீங்கள் குறிப்பிடும் தடிப்பும், அரிப்பும் ஏற்படுவதுண்டு. இதை ஆராய்ந்து விளக்காவிடில் அடிக்கடி இந்த உபாதை வரக்கூடும். புரதமில்லாத வேறு சில உணவுகளும் சகிப்புத் தன்மை குறைவு காரணமாக அரிப்பையும், தடிப்பையும் ஏற்படுத்தலாம். குடலில் எப்பொழுதும் உண்டாகிக் கொண்டேயிருக்கும் ஹிஸ்டமின் (Histamine)அளவு கூடும் நிலையில் தோலில் தடிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த ஹிஸ்டமினை எதிர்ப்பதற்காக அதிவ்ருக்க க்ரந்தி (Adrenal
gland) யிலிருந்து கிடைக்கும் திரவம். மற்றொன்று ஹிஸ்டமினை பக்குவம் செய்து மாற்றும் ஹிஸ்டமினேஸ் என்ற ஓர் என்ûஸம் குறைவாக இருக்கும்பட்சத்தில் இந்தக் காணாக்கடி ஏற்படக்கூடும். இரவில் சுதந்திர நரம்புக் கூட்டத்தின் சக்தியும் Adrenalu சுரப்பும் இயற்கையாகவே குறைவதாலும் பிராணதநாடீ (Vagus nerve)களின் கட்டுப்பாட்டில் இவை அடங்கிவிடுவதாலும் இந்த அலர்ஜியின் வேகம் அதிகம் காணப்படும்.
ஆயுர்வேதம் இந்த உபாதையை சீதபித்தம், உதர்த்தம், கோடம், உத்கோடம் என்ற நான்கு வகையாகக் குறிப்பிடுகிறது. கபமும் வாயுவும் அதனதன் காரணங்களால் கேடடைந்து அதிகமாகி, குளிர்ச்சியான காற்று தோல் மேல் பட்டவுடன் சீற்றமடைந்து பித்தத்துடன் சேர்ந்து தோலில் தடிப்பையும் அரிப்பையும் ஏற்படுத்துகின்றன. இதில் வாயுவின் ஆதிக்கம் அதிகமிருந்தால் அது சீத பித்தமென்றும், கபம் அதிகம் இருந்தால் அது உதர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
பித்தமும், கபமும் வயிற்றில் புளித்த அன்னமும் வாந்தியாக வெளி வரும் உந்துதலை வலுக்கட்டாயமாக அடக்குவதால், பித்தம் உட்புறங்களில் பரவி அரிப்பு, தடிப்பு போன்றவற்றை ஏற்படுத்தி விரைவில் தானாகவே மறைந்தால் அதற்கு கோடம் என்றும், நீண்ட நேரம் இருந்தால் அதற்கு உத்கோடம் என்றும் பெயர். இந்த நான்கு வகை உபாதைகளிலும் சீற்றமடைந்த பித்தம்தான் முக்கிய காரணமாகிறது. ஆனால் அதனுடைய எந்த அம்சம் அதிகரித்துள்ளது. எது குறைந்துள்ளது என்பதை நன்கு ஆராய்ந்து அதன் பிறகு சிகிச்சை செய்வது நல்லது.
பூங்காவி, மிளகு இவ்விரண்டையும் ஒரு கிராம் வீதம் அளவு தூள் செய்து தினம் இரண்டு மூன்று வேளை கற்கண்டுடன் சேர்த்துக் கொடுப்பது நல்லது. பூங்காவியை தனியாக உள்ளுக்கும், வெளியில் பூசவும் செய்வதுண்டு. அதற்குக் காரணம் இரத்தத்தையும், பித்தத்தையும் சுத்தப்படுத்தும் குணம் பூங்காவிக்கு விசேஷமாக இருக்கிறது. கால்சியம் சத்து நிறைந்த பவழம், முத்துச் சிப்பி போன்றவற்றையும் மருந்தாகப் பயன்படுத்தலாம். ஓமத்தையும், வெல்லத்தையும் இடித்து வைத்துக் கொண்டு சாப்பிட்டு வர படிப்படியாக தடிப்பு குறைவதுண்டு. த்ரிபலை எனப்படும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், கடுகு ரோஹிணி, சரக்கொன்றைப் புளி இவற்றின் சூரணம் அல்லது கஷாயம் கொடுக்க கபமும் பித்தமும் இளகி வெளியாகிவிடும். நாட்பட்டுவிட்டால் வேப்பம்பட்டையையும், பெரும் புடலையையும் கஷாயமாக்கி வயிறு முட்டச் சாப்பிட்டு வாந்தி எடுக்க வைப்பதும், பேதிக்குக் கொடுப்பதும் உண்டு. இவை அனைத்தையும் முறையாக ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையில் செய்வதே நலம்.
ப்ருஹன் மஞ்சிஷ்டாதி பானகம், மஹாதிக்த கிருதம், ஹரித்ரா கண்டம், இவை காணாக்கடியை குணப்படுத்துவதில் சிறந்த ஆயுர்வேத மருந்துகளாகும். உணவில் பித்த இரத்தங்களில் பரவியுள்ள சூட்டைத் தணிக்கும். கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடைய காய்கறிகள், கீரைகள், கருங்காலிக்கட்டையை வேக வைத்த தண்ணீர் ஆகியவற்றை உட்கொள்வதும், பிசுபிசுப்பைத் தரும் தயிர், இனிப்புப் பண்டங்கள், புலால் வகைகளைத் தவிர்ப்பதும் நல்லது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.