

ஐயா, நான் தங்களின் ஆயுர்வேதக் குறிப்புகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளன. எனது வீட்டருகில் இரு இலுப்பை மரங்கள் உள்ளன. அதனைக் காணும்போதெல்லாம் அதன் பயனறிய விழைகிறேன். இலுப்பை எண்ணெயில் தீபமேற்றுவது நல்லது எனக் கேள்விப்பட்டுள்ளேன். இலுப்பை எண்ணெயை உடலில் தேய்த்துக் குளிக்கலாமா? இலுப்பை மிகச் சிறந்த மருத்துவ குணம் நிறைந்தது என சிலர் கூறுகின்றனர். ஆயுர்வேதத்தில் இலுப்பையின் மருத்துவ பங்கு உள்ளதா? என்பதை தெளிவுபடுத்துங்களேன்.
ல.கிருஷ்ணகுமார், திருச்செங்கோடு.
இலுப்பை மிகச் சிறந்த மருத்துவ குணமுடையது. ஆயுர்வேதத்திலும் பல வியாதிகளைக் குணமாக்கும் தன்மையுடையதாகக் கூறப்பட்டுள்ளது. இலுப்பை இனிப்புச் சுவை மிக்கதொரு தாவரம். முற்காலத்தில் சர்க்கரைக்குப் பதிலாக இலுப்பையைப் பயன்படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள். ஆகவேதான் இதற்கு மதுகம் என்றும் பெயருள்ளது. வாழை மரம் எப்படி அடி முதல் நுனி வரை நமக்கு பயனுள்ளதாக உள்ளதோ, அதுபோல இலுப்பையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு நோயைத் தீர்க்க வல்லது. இலுப்பையின் பட்டை இனிப்பு, கசப்பு, துவர்ப்பு சுவை உடையது. இதை நீரிலிட்டு காய்ச்சி குடித்து வர குடல் மிருதுவாகும், வீக்கம், சுளுக்கு, தோல் அரிப்பு நீங்கும். இலுப்பைப் பட்டையைக் காய்ச்சி கஷாயமிட்டுப் புண்களை அலம்ப சொறி சிரங்கு குணமாகும். இதன் வைரக்கட்டை (மரத்தின் உட்பகுதி) காக்காய் வலிப்பு (கைகால் வலிப்பு) நோய் குணமாகப் பயன்படுகிறது. வாதம் மற்றும் பித்தப் பிரச்னைகளைத் தீர்க்கவும் வல்லது.
இலுப்பை இலை அல்லது பூவை பிரசவித்த பெண்கள் மார்பில் கட்டிக் கொள்ள தாய்ப்பால் நன்கு சுரக்கும். இலுப்பைப் பூ இனிப்புச் சுவையுடையது. உடற்சூட்டை உண்டாக்கும். இதனை வதக்கி ஒத்தடம் கொடுத்து வந்தால் வீக்கம் குறையும். விரைவீக்கத்தை குணப்படுத்த ஏற்றது. இலுப்பை எண்ணெய்யைச் சூடாக்கித் தேய்த்துக் குளிக்க பித்தம் தெளியும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும். இடுப்புப் பிடிப்பு நீங்கும். இடுப்பிற்கு வலுவூட்டும்.
இடுப்பு வலியைப் போக்குவதில் இலுப்பையின் பங்கு மிக அதிகம். இடுப்பில் வலியுள்ள பகுதியில் உளுந்த மாவினால் வரம்பு கட்டி வெதுவெதுப்பாக இலுப்பை எண்ணெய்யை ஊற்றி அரை, முக்கால் மணிநேரம் ஊற வைத்து வர, இடுப்பிலுள்ள வலி குறைந்து அப்பகுதியிலுள்ள இடுப்பு எலும்பு மற்றும் வெளிப்புறம் பிதுங்கியுள்ள வில்லைப் பகுதி மறுபடியும் தன்னிடத்திற்குத் திரும்ப வாய்ப்பிருக்கிறது. இதனால் அதற்கான அறுவைச் சிகிச்சையைக் கூட நம்மால் தவிர்க்க இயலும். இலுப்பை எண்ணெய்யை மூலிகை இலைகளுடன் காய்ச்சி தண்டுவடத்தில் வெதுவெதுப்பாக ஒத்தடமிட்டுத் தேய்த்து வந்தோமேயானால் உடல் பாரத்தினால் ஏற்படும் எலும்புத் தேய்வு குறைந்து முதுகுவலி, தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகளும் தீருமென்கிறது ஓர் ஆயுர்வேதக் குறிப்பு.
இலுப்பை எண்ணெய்யைக் கொண்டு எண்ணெய்க் குளியல் செய்து வர நாடி நரம்புகள் வலுப்பெற்று உடல் ஆரோக்கியம் பெருகும், மேனி மிருதுவாகும். மனத்தெளிவும், சுறுசுறுப்பும் ஏற்படும். ஆனால் கரப்பான், சொறி, தலை முடி கொட்டுதல் இருப்பவர்களுக்கு ஏற்றதல்ல. சேற்றுப் புண்ணுக்குத் தடவினால் குணமடையும். இதன் எண்ணெய்யை உட்கொள்ளும்போது குடல் வறட்சி நீங்கி மிருதுவாகும். இதனால் ஜீரணக்கோளாறு, புளித்த ஏப்பம், வயிற்றெரிச்சல் போன்றவை கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும், இது மலத்தை இளக்கி வெளியேற்றும். இலுப்பை தாதுக்களை விருத்திபடுத்தும். காசநோய்க்கு நல்ல மருந்தாகவும் பயன்படும்.
இதைத் தவிர இதன் சக்கையை (புண்ணாக்கை) நெருப்பிலிட்டுப் புகைக்க புழு, பூச்சி, எலி உபத்திரவம் நீங்கும். ஊமத்தங்காய் போன்றவற்றைத் தின்று விஷத்தீண்டல் ஏற்பட்டால் இதன் புண்ணாக்கைத் தண்ணீரில் கரைத்துக் குடிக்க வாந்தி ஏற்பட்டு விஷம் முறிந்து வெளியேறும்.
மேலும், ஆயுர்வேதத்தின் மருத்துவ அகராதிகளில் ஒன்றாக விளங்கும் பாவபிரகாசமென்னும் நூலில், இலுப்பைப்பூ இனிப்புச் சுவையுடையது, குளிர்ச்சியானது, வாதம் மற்றும் பித்த சம்பந்த பிரச்னைகளைத் தீர்க்க வல்லது, பலத்தைக் கொடுக்கக் கூடியது. அதன் பழம் குளிர்ச்சியை அளிக்கக் கூடியது, இனிப்புச் சுவையுடையது, தாகத்தைத் தணிக்கக் கூடியது, இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், சுவாசக் கோளாறுகளை நீக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கையதேவர் எனும் முனிவர் கூறுகையில் இரத்தம், பித்தம், சம்பந்த பிரச்னைகளைப் போக்குவதில் இலுப்பைப்பூ பெரும் பங்காற்றுகிறது. இதன் பழம் மற்றும் எண்ணெய் உடலுக்கு பலத்தைக் கொடுக்கக் கூடியது. காசநோயைத் தீர்க்க வல்லது. வாதம் மற்றும் பித்த சம்பந்த பிரச்னைகளையும் நீக்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது மட்டுமின்றி, அதிகாலையில் குளித்து நெய்யுடன் கலந்த இலுப்பை எண்ணெய்யில் தீபமேற்றி வர சகல நன்மைகளும் கிட்டும், நோய்கள் தீண்டா. ஆகவே தான் உள்ளும், புறமும் நமக்கு மருத்துவப் பயனளிக்கும் இலுப்பை மரத்தை நம் முன்னோர்கள் சில கோவில்களில் தலவிருட்சமாகவும் வைத்துள்ளனர்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.