திரைக்கதிர்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அதி வேகத்தால் கோலிவுட்டின் பெரும்பாலான ஃபிலிம் பிராசஸிங் லேப்கள் மூடு விழாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
திரைக்கதிர்
Updated on
2 min read

* டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அதி வேகத்தால் கோலிவுட்டின் பெரும்பாலான ஃபிலிம் பிராசஸிங் லேப்கள் மூடு விழாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கோடாக் ஃபிலிம் ரோல்களில் உருவாகும் படம் "தகவல்'. மோஷன் கிராப்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜித்து ஜோஸ் தயாரிக்கிறார். தேஜா, டிம்பிள், ரிஷி, ஜூபில் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மலையாள இயக்குநர் கே.சசீந்திரா இப்படத்தை எழுதி, இயக்குகிறார்.  பெரும் பணம் ஈட்டத் துடிக்கும் நண்பர்களுக்கிடையே பணம் பற்றிய ஒரு தகவலால் நட்பு முறிகிறது. அவர்களுக்குள் தனித்தனிக் காதல் கதைகளும் இருக்கின்றன. நண்பர்கள், அவர்களுக்குக் கிடைத்த தகவல், காதல் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அது என்ன என்பதுதான் கதை.

* "இரண்டாம் உலகம்' படத்துக்குப் பின் செல்வராகவன் இயக்கும் படத்தில் சிம்பு கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ரேடியன்ஸ் மீடியா சார்பில் வருண் மணியன் தயாரிக்கிறார். சிறிது கால இடைவெளிக்குப் பின் செல்வராகவனுடன் இப்படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. சிம்பு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளார். "அலை', "விண்ணைத்தாண்டி வருவாயா' படங்களுக்குப் பின் இருவரும் இப்படத்தில் இணைகிறார்கள். "புதுப்பேட்டை', "மயக்கம் என்ன' ஆகிய படங்களில் இதற்கு முன் த்ரிஷாவே நடிக்க வேண்டும் என விரும்பினார் செல்வராகவன். கால்ஷீட் பிரச்னையால் த்ரிஷா நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் செல்வராகவன் தெலுங்கில் இயக்கிய "ஆட வாரி மாட்லாகு அர்த்தலே வேறுலே' என்ற படத்தில் த்ரிஷா நடித்திருந்தார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக படத்தின் அனைத்துப் பாடல்களையும் முழுமையாக உருவாக்க செல்வராகவன் திட்டமிட்டுள்ளார். இதன் முதற்கட்டமாக யுவன்ஷங்கர் ராஜாவுடன் வெளிநாடு செல்கிறார் செல்வராகவன்.

* வெள்ளச்சி சினி கிரியேஷன்ஸ் சார்பில் கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இணைந்து தயாரிக்கும் படம் "தும்பிக்கை இது தெய்வம்'. ராமச்சந்திரன், குமார், ரவிக்குமார், சத்யசீலன், அபிராமி உள்ளிட்ட பல புதுமுகங்கள் இதில் நடிக்கின்றனர். இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் தமிழ்.ஜெ. படம் குறித்து இயக்குநர்... ""காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம், விளை நிலங்கள் நாசம், ஒரு வாரத்துக்கும் மேலாக ஊருக்குள் யானைகள் முகாம் என்பதெல்லாம் செய்திகள் மட்டும் அல்ல.  மனிதர்களின் உயிருக்கும், உடமைக்கும் சேதம் விளைவிக்கும் சம்பவங்கள். யானைகளின் திடீர் கோபத்துக்கு என்ன காரணம்? என்பதை ஆராய சில இளைஞர்கள் காட்டுக்குள் செல்கின்றனர். அங்கு அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், ஆராய்ச்சின் முடிவில் அவர்களுக்குக் கிடைத்த பாடங்கள் எவை? என்பதுதான் கதை'' என்கிறார் இயக்குநர்.

* சிவா இயக்கத்தில் "வீரம்' படத்தில் நடித்த அஜித் அடுத்து கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். "கிரீடம்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த அஜித், இப்படத்தில் சிஐடி வேடம் ஏற்கிறார். இப்படத்துக்கான திரைக்கதை அமைப்பதில் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத புது யுக்திகளைக் கையாள உள்ளார் கௌதம் வாசுதேவ்மேனன். பாலிவுட்டில் "தம் மாரோ தம்', "காக்கி', "பிளப் மாஸ்டர்' போன்ற படங்களுக்கும், வட இந்தியாவில் ஒளிபரப்பாகும் புலனாய்வு சீரியல்களுக்கும் திரைக்கதை அமைத்து கொடுத்த ஸ்ரீதர் ராகவனை அஜித் பட திரைக்கதை உருவாக்கத்துக்குப் பயன்படுத்த இருக்கிறார். ஏற்கெனவே கமலுடன் இணைந்து "வேட்டையாடு விளையாடு' படத்தை இதுவரை இல்லாத அளவுக்கு மாறுபட்ட கதையாகத் தந்த கௌதம் வாசுதேவ்மேனன், அஜித்துடன் இணைந்திருக்கும் இந்தப் படம் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. அதை நிறைவு செய்யும் விதத்தில் காட்சிகளை அமைக்கத் திட்டமிட்டு இருக்கிறார்.

* ஆர்.எஸ்.ஜி. பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கோபிகாந்தி தயாரித்து இயக்கும் படம் "முதல் மாணவன்'. இன்றைய கிராமப்புற மாணவர்களின் நிலை குறித்து உருவாகி வரும் இப்படத்தில் ஐஸ்வர்யா, தனு, ரம்யா உள்ளிட்ட புதுமுகங்கள் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். புதுமுகம் காந்தி இப்படத்தை எழுதி, இயக்குகிறார். "" கிராமப்புற அரசுப் பள்ளியில் பல்வித திறமைகளுடன் கல்வி கற்கும் மாணவனுக்கு இந்த சமூகத்தில் எந்த மாதிரியான இடம் கிடைக்கிறது என்பதை திரைக்கதையாக்கி இருக்கிறோம். பல உண்மை சம்பவங்களின் தொகுப்பாக இப்படம் இருக்கும்'' என்கிறார் இயக்குநர்.

* பிரபல நடிகை என்ற அந்தஸ்தில் இருந்த ஸ்ரேயா, வடிவேலுவின் படத்தில் குத்தாட்டம் ஆடினார். பத்மபிரியா அதுபோல ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகிறார். சதா, சார்மி ஆகியோர் தெலுங்கில் பல படங்களில் ஆடி வருகின்றனர். இப்போது அதற்கும் போட்டி வந்து விட்டதால் தங்களது மார்க்கெட் அடியோடு காலியாகி விடாமல் இருக்க அக்கா, அண்ணி உள்ளிட்ட வேடங்களில் நடிக்க விருப்பம் என்பது போல் பேட்டி அளிக்கின்றனர். ஸ்ரேயா சமீபத்தில் அளித்த பேட்டியில், ""கவர்ச்சி வேடங்களில் நடித்து அலுத்து விட்டது. முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், கதைக்கு பொருத்தமான வேடங்களில் நடிப்பேன்'' எனத் தெரிவித்துள்ளார். ""கடந்த 12 வருடங்களில் என் திரையுலக அனுபவம் த்ரில்லராகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. இனிமேல் இதுவரை நடிக்காத வேடங்களில் நடிப்பேன்'' என சார்மி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com