ஓவியங்கள்!

ஆந்திர மாநிலத்தின் அபூர்வக் கலைகளில் ஒன்று "செரியால்' பகுதி ஓவியங்கள். 16-ஆம் நூற்றாண்டில் ககதியா மன்னர்கள் இந்தக்
ஓவியங்கள்!
Published on
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்தின் அபூர்வக் கலைகளில் ஒன்று "செரியால்' பகுதி ஓவியங்கள். 16-ஆம் நூற்றாண்டில் ககதியா மன்னர்கள் இந்தக் கலையைப் பெரிதும் ஆதரித்தனர். இன்று இது "தெலங்கானா மாநில ஓவியம்' எனவும் கூறிக் கொள்ளலாம்.

செரியால் ஓவியர்களை  "நகாசு' வேலை செய்பவர்கள் என அழைப்பது உண்டு. வாராங்கல்லைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் சுருள் போன்ற காகிதத்தில் அல்லது சுருள் தோல்களில் வரைபவர்கள் இவர்கள்.

இத்துடன் முகமூடி, பொம்மைகள் மற்றும் சுருள் ஓவியங்களையும் வரைந்து விற்பதே  இவர்களது வாழ்க்கை. இவர்களுடைய சுருள் ஓவியங்களில் முக்கிய இடம்பிடிப்பது புராணக் காட்சிகளே!

வாராங்கல்லிலிருந்து 85ஆவது கிலோமீட்டரில் ஜனகாவுன் பகுதியில் செரியால் என்ற கிராமம் உள்ளது. ஒட்டுமொத்த கிராமமே இக்கலைக் குடும்பத்தினர்தான். ஹைதராபாத் நிஜாம்களும் இவர்களை ஆதரித்தனர்.

ஒரு கதையையே, காகிதச் சுருளில் தத்ரூபமாய், படச்சுருள்போல் வரைந்து, ஒவ்வொரு காட்சியாக விளக்கிக் கதையைச் சொல்வது சில சொற்பொழிவாளர்களின் வழக்கம். இந்த ஓவியமும் அவ்வகையைச் சேர்ந்ததுதான். இந்த ஓவியச் சுருளின் நீளம் 10 மீட்டர் முதல் 25 மீட்டர் வரையாவது இருக்கும். இவற்றில் குறைந்தது 50 துண்டுகளாவது இருக்கும். இவற்றைச் சுவரில் மாட்டி அல்லது கையில் பிடித்து வைத்துக்கொண்டு கதை சொல்வார்கள்.

குட்டிப் பலகை... துணி ஓவியங்களும் சுவரில்  மாட்டுவதுபோல வரைவார்கள். படுக்கைவசத்தில், நடுநடுவே, ""பூ'' எல்லைகள் மூலம் அவற்றைப் பிரித்து அழகாக ஓவியம் தீட்டுவார்கள். பொதுவாக இந்த ஓவியங்களை 5 கட்டங்களில் முடிப்பார்கள்!

முதலில் இதற்குத் தேவையான காக்கித் துணியை வாங்கி, மஞ்சள் பொடியைத் தண்ணீருடன் கலந்து பூசி தயாரிப்பார்கள். இது எதற்கு? கரையான் அரிக்காமல் இருப்பதற்காக! பிறகு இதன்மீது வெள்ளைப் பவுடர் பசையை பூசி மென்மையாக்குவார்கள். பிறகு கையினால், படம் வரைந்துகொண்டு பிறகு மஞ்சள் அல்லது சிவப்பு பின்னணியில் மற்ற வண்ணங்களையும் பூசி, பிறகு மென்மையாக அதில் வழவழப்பு ஏற்றுவார்கள். பின்னர் சித்திரங்களை வரைவார்கள்.

இன்று செரியால் பகுதியில் இவற்றை வரைய 15 பேர்தான் உள்ளனர். இந்தச் சுருள் அடுக்கு சித்திரக்கதைப் படங்கள் 150 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்கின்றன. விலை, அவற்றின் நீளத்தையும் எடுத்துக்கொண்ட "தீம்'மையும் பொறுத்தது!

மோகினி ஆட்டத்தை அழகான செரியால் ஓவியங்களாகத் தீட்டுவார்கள்! மேஜை விரிப்பு, துப்பட்டாக்களிலும் ஓவியங்களை வரைந்து தருவார்கள். இந்த ஓவியங்களை, வாங்கவென்றே அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் தூரகிழக்கு நாடுகளிலிருந்து ஏராளமானோர் வருகின்றனர். வாராங்கல்லில் எங்கு பார்த்தாலும் செரியால் ஓவியங்களை சகஜமாகக் காணலாம். மேலும் ஹைதராபாத் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள ஆந்திர மாநில கைவினைப் பொருள் விற்பனை அங்காடிகளில் இந்த செரியால் ஓவியங்களைக் காணலாம்!

இந்த பாரம்பரியக் கலைக்கு சமீபத்தில்  ""எ1'' (ஜி-1) அந்தஸ்து கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com