திரைக்கதிர்

"வாகை சூட வா', "மௌன குரு', "அம்மாவின் கைப்பேசி' என ஆரம்பத்தில் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தந்த இனியா,
திரைக்கதிர்
Updated on
3 min read

"வாகை சூட வா', "மௌன குரு', "அம்மாவின் கைப்பேசி' என ஆரம்பத்தில் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தந்த இனியா, சமீபமாக கவர்ச்சியில் கிறங்கடிக்கிறார். கதாநாயகி என்பதைத் தாண்டி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் கவர்ச்சியாக நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார். இந்த மாற்றத்துக்கு இனியா சொல்லும் காரணம் என்ன...?

""வாகை சூட வா' படத்தில் தொடங்கி "நான் சிகப்பு மனிதன்' வரை நான் நடித்த எல்லாப் படங்களும் நல்ல படங்கள். பண ஆசை இருந்திருந்தால், ஆரம்பத்தில் இருந்தே இது மாதிரியான படங்களில் நடித்திருக்க மாட்டேன். தொடர்ந்து ஒரே மாதிரியான பாத்திரங்கள் எனக்கே பிடிக்கவில்லை. அதை மாற்றுவதற்குத்தான் நடிப்புக்கு ஸ்கோப் உள்ள பாத்திரங்களாகத் தேடிப் பிடித்து நடிக்கிறேன். அதற்காக சின்ன சின்ன கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என முடிவெடுத்துவிட வேண்டாம். எனக்கு எல்லாமே முக்கியத்துவம் வாய்ந்த படங்கள்தான். இனி அடுத்த ரவுண்ட் நிச்சயமாக தனி ஹீரோயினாகத்தான் நடிப்பேன். காமெடி, ஆக்ஷன், ரொமாண்டிக் இதுவெல்லாம் சேர்ந்தால்தான் அது கமர்ஷியல் சினிமா. அதில் துளி ஆபாசத்தை மட்டும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தனிப்பட்ட வாழ்க்கையும், சினிமாவும் வெவ்வேறு அல்ல'' என்று விளக்கம் கொடுக்கிறார் இனியா.  

"தெய்வத்திருமகள்', "தலைவா' ஆகிய படங்களில் நடித்தபோது இயக்குநர் விஜய் - அமலாபால் இடையே காதல் மலர்ந்தது. சமீபத்தில் இருவரும் காதலை உறுதி செய்ததுடன் திருமணத் தேதியையும் அறிவித்தனர். இதை பத்திரிகைகளில் பார்த்துத் தெரிந்துகொண்ட "வாஸ்தா நீ வேணுகா' என்ற தெலுங்கு படத் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெரும் பட்ஜெட்டில் உருவாகவிருந்த இப்படத்தின் நாயகியாக அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பட புரமோஷன் உள்ளிட்ட பல விஷயங்களில் அமலாபாலின் திருமணம் எதிர்விசையை உண்டாக்கும் என்பதால் அவரை நீக்க இயக்குநர் ரமேஷ் வர்மா முடிவு செய்துள்ளார். படத்துக்காக அமலாபால் வாங்கிய முன்தொகையைத் திருப்பி தரவும் கேட்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனுஷ்கா உள்ளிட்ட பல நடிகைகளின் கால்ஷீட் இப்படத்துக்காகக் கேட்கப்பட்டுள்ளது. இதேபோல் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகவிருந்த படத்திலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். 25 வயது கேரக்டர், 45 வயது கேரக்டர் என இருவித வேடங்களில் அமலாபால் நடிக்கவிருந்த இப்படத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சு நடக்கிறது.

மலையாளத்தில் நித்யாமேனன் நடிப்பில் வெளிவரும் படங்கள் தொடர் வெற்றி பெறுவதால், அவரின் கால்ஷீட் பெற முன்னணி இயக்குநர்களே காத்திருக்கின்றனர். "பெங்களூர் டேஸ்' படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் அஞ்சலிமேனன் நித்யாமேனனை அணுகினார். தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் கால்ஷீட் இல்லை என மறுத்துவிட்டார். நித்யாமேனனுக்குப் பதிலாக தற்போது பார்வதிமேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் மிகுந்ததாக கதை இருப்பதால், மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நித்யாமேனனை சிறப்பு வேடத்திலாவது நடிக்க வைக்க வேண்டும் என எண்ணினார் அஞ்சலிமேனன். வற்புறுத்தல்களையடுத்து சிறப்பு தோற்றத்தில் நடிக்க நித்யாமேனன் ஒப்புக் கொண்டார். சமீபத்தில் நித்யா நடித்த காட்சிகள் பெங்களூரில் படமாக்கப்பட்டது. மேக் அப் போடாமல் நித்யாமேனன் நடித்தார். ஏற்கெனவே நஸ்ரீயா நஸிம், பார்வதிமேனன் என இரு ஹீரோயின்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

விண் எரி கல் விழுந்து 8 நாள்களில் உலகம் அழியப்போகிறது என்று பத்திரிகையில் வந்த செய்தியைப் பார்த்த ஒரு கிராமத்து மக்கள், வாழப்போகும் 8 நாள்களில் எல்லாவற்றையும் அனுபவித்துவிட எண்ணி, இருப்பதையெல்லாம் செலவழித்து மகிழ்கிறார்கள். ஆனால் எதிர்பார்த்ததுபோல் உலகம் அழியவில்லை. அதன் பின் என்ன நடந்தது? என்பதுதான் "அப்புச்சி கிராமம்' படத்தின் கதை. பிரவீன்குமார், சுஜா, அனுஷா, சுவாதி நடிக்கின்றனர். புதுமுகம் ஆனந்த் இப்படத்தின் திரைக்கதை எழுதி இயக்குகிறார். ""திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தினோம். இந்த முழுப் படமும் ரசிகர்களுக்குப் புது அனுபவமாக இருக்கும். இப்படத்துக்காக 23 அடி உயரத்துக்கு விண்கல் தயாரிக்கப்பட்டது. சமீபத்தில் தமிழ் சினிமாவில் விஞ்ஞான கதைகள் எதுவும் வரவில்லை. அது எனக்கு பலமாக இருந்தது. இதில் விஞ்ஞானத்துடன் மக்கள் வாழ்வோடு சேர்ந்த குறிப்பிட்ட சில இயல்புகளைப் பற்றியும் சொல்லியிருப்பதால் இந்தப் படம் ரசிகர்களுக்குப் பிடிக்கும்'' என்றார் இயக்குநர் ஆனந்த்.

தனுஷ் ஜோடியாக நடிக்க ஹீரோயின் தேடி வருகிறார் வெற்றிமாறன். இதற்கான பட்டியல் தயாராகி உள்ளது. ரஜினியின் ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடிப்பதால் அவரிடம் கால்ஷீட்டை பெற படக்குழு முயல்கிறது. சிம்பு நடிப்பில் "வட சென்னை' என்ற பெயரில் வெற்றிமாறன் இயக்கவிருந்த படம் அப்படியே நின்று போனது. இந்நிலையில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் வெற்றிமாறன். இவர்கள் இணையும் 3-ஆவது படம் இது. "ராஞ்சனா' படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ், தற்போது அமிதாப்பச்சனுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். கமலின் 2-ஆவது மகள் அக்ஷராஹாசன் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹிந்தியில் தனுஷுக்கான மார்க்கெட் உயர்ந்திருப்பதால், கதாநாயகிகள் பட்டியலில் பாலிவுட் நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஹிந்தியில் இப்படத்தை டப் செய்து வெளியிட அது உதவும் என படக்குழு நினைக்கிறது. இந்தப் பட்டியலில் சோனாக்ஷி சின்ஹாவுக்கு முதல் இடம் தரப்பட்டுள்ளது.

ப்ரைட் பியூச்சர் பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படம் "என்ன பிடிச்சிருக்கா'. நடிகை அனுராதாவின் மகன் கெவின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ப்ரீத்தி விஜ் அறிமுகமாகிறார். ரவிமரியா, ஸ்ரீதேவி அணில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். மணிவண்ணன், விக்ரமன் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுப்புராஜ் இப்படத்தை எழுதி, இயக்கி அறிமுகமாகிறார். படம் குறித்து இயக்குநர்... ""வம்சாவளிகள் தமிழர்கள் என்றாலும், வெளிநாட்டில் படித்து வளரும் தமிழ்ப் பெண் தன் தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற இங்கு வருகிறாள். ஆரம்பத்தில் கலாசாரம், பண்பாடு இவற்றில் நம்பிக்கை கொள்ளாமல், அவற்றை உதாசீனப்படுத்தும் பேத்தி, நாளடைவில் மனம் மாறி உலகத்திலேயே சிறந்த பண்பாடும், நாகரீகமும் தமிழர் வரலாற்றில்தான் உள்ளது என்பதாக உணர்கிறாள். இந்தச் சூழலில் சிலம்பாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளில் வீரனாக உள்ள ஒருவனை காதலிக்கிறாள். அதன் பின் ஏற்படும் பிரச்னைகளும், குழப்பங்களுமே கதை. புதுமுகங்கள் பலர் தேர்வில் இருந்த நிலையில் நடிகை அனுராதாவின் மகன் கெவின் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருந்தார்'' என்கிறார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com