நெடுங்கதை: அப்பாவைத் தேடி...

முதல் வீட்டில் குடித்தனம் இருப்பதற்கடையாளமாய் வாசல் அரைவட்டமாய்க் கூட்டி, கோலம் போட்டு சுத்தமாக இருந்தது. அதை ஒட்டி உள்ள சேமிப்பு
நெடுங்கதை: அப்பாவைத் தேடி...

4

முதல் வீட்டில் குடித்தனம் இருப்பதற்கடையாளமாய் வாசல் அரைவட்டமாய்க் கூட்டி, கோலம் போட்டு சுத்தமாக இருந்தது. அதை ஒட்டி உள்ள சேமிப்பு கிடங்கு வீடு எப்போதும் போல் பூட்டி இருந்தது.

அடுத்திருந்த இவன் பூர்வீக வீட்டைப் பார்க்க அதிர்ச்சி. வாசலும் திண்ணையும் மட்டுமிருக்க... பின்கட்டு முழுதும் இடிந்து விழுந்து குட்டிச் சுவர்.

அடுத்த சின்னப் பண்ணை, மரைக்காயர் பண்ணை வீடுகள் இருந்த இடம் தெரியவில்லை. காடுகள் மண்டி கட்டாந்தரைகளாக இருந்தன.

பிள்ளையார் கோயில் மட்டும் தற்போது கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வந்தது போல் சின்னக் கோபுரக் கோயிலாக உருமாறி இருந்தது. அதன் தென் புறத்தில் அறுவடைக்காலக் களம் வெறிச்.

நிர்மல் இருந்து விட்டுப் போன இடம் இப்படி இடியாய்த் தாக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஏதோ கொஞ்சம் மாறிப் போயிருக்கும் என்று எதிர்பார்த்து வந்தவனுக்கு இப்படி உருக்குலைந்து போயிருக்கும் என்பதை ஜீரணிக்க முடியவில்லை.

மெதுவாய் நடந்து முதல் வீட்டு வாசலில் நின்றான். வாசல் வராண்டா. அதைத் தாண்டி திண்ணை.  உள்ளே ஜன்னல் கதவு திறந்து வாசல் கதவு சாத்தி இருந்தது.

""சார்ர்ர்....'' அழைத்தான்.

யாரும் எட்டிப் பார்க்கவில்லை, குரல் கொடுக்கவில்லை. மறுபடியும் அழைக்க....

""ஏன்னா வாசலில் யாரோ நிக்கறா?''  எலுமிச்சை நிறத்தில் அழகான பெண்ணின் முகம் ஜன்னலில் தெரிந்து மறைந்தது.

""யாரு டீ?''   ஆண் குரல்.

""நேக்கென்னத் தெரியும்? பாருங்கோ''

அடுத்த நிமிடம் ஐம்பது வயது ஆள் எட்டிப் பார்த்தார். பின் அவரே வாசல் கதவைத் திறந்து வெளியே வந்து, ""யார் நீங்க?''   கேட்டார்.

""நா....நான் பக்கத்து வீடு, பெரிய பண்ணை அங்கே ஆளே இல்லையே.....''

""நீங்க எங்கிருந்து வர்றேள்?''

கிராமத்திற்கு அறிமுகமில்லாத இவனை மேலும் கீழுமாகப் பார்த்தார்.

""நான் பெங்களூர். சாப்ட்வேர் என்ஜினீயர். பெரிய நிறுவனத்தில்''

""உள்ளே வாங்கோ''

மனிதனுக்கு இல்லாத மதிப்பு, மரியாதை பணத்திற்கும் பதவிக்கும் உடன் வந்தது.

""பரவாயில்லே''

""நான்  இந்த ஊர் பூர்வீகக் குடி இல்லே. வந்து நாலு வருசம் ஆச்சு. பக்கத்துல சுவாமிமலையில தாசில்தாரா இருக்கேன். இது என் ஒண்ணு விட்ட மாமா பையன் வீடு. அவன்  இந்த வீட்டையும் கொஞ்ச நிலத்தையும் மட்டும் எனக்கு வித்துட்டு பாக்கி எல்லாத்தையும் வித்து சுருட்டிட்டு சென்னையோட போய்ட்டான். அவன் செய்ஞ்சது ரொம்ப நல்ல காரியம். இப்போ தண்ணி, கூலி ஆள் பஞ்சம், விலையேற்றம்ன்னு விவசாயமே பாழ். நீங்க யார்னு சொன்னேள்'' 

""நான் பெரிய பண்ணை ஆத்துப் பேரன்''

""பிராமணாளா?'' 

""இல்லே. உங்க பேச்சுல நேக்கும் அப்படி வந்துடுச்சு. தவிர்க்க முடியலே. மன்னிக்கனும். எதிரி பேசினா பேசுவாளையும் உடன் பிடிச்சு விடும் தொத்து வியாதி. நான் இந்த ஊரை விட்டுப் போய் நாப்பது வருசமாயிடுச்சு. தேடி வந்திருக்கேன்''

அவருக்கு இவன் மீது வந்த நல்லெண்ணமும் சட்டென்று விலக....

""காசிநாதா''  வழியில் சென்ற இளைஞனைக் கூவி அழைத்தார்.

""சாமி''  அவன் சட்டென்று பவ்வியமாகி இவர்கள் அருகில் வந்தான்.

""இவர் பெரிய பண்ணைக்குச் சொந்தமாம். உன் பாட்டன் கிட்ட கொண்டு விடு. விசாரிச்சுக்கிடட்டும்''.

சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார்.

நிர்மல் காசிநாதனுடன் சென்றான்.

குடிசைக்குப் பின்புறம் கயிற்றுக் கட்டிலில் தொன்னூறு தொன்னூற்றைந்தைத் தொடும் அந்த வயதானவர் நீண்டு மெலிந்து நாரும் தோலுமாய்ப் படுத்திருந்தார்.

நிர்மலுக்கு இவரை எங்கோ பார்த்தது போல் தோன்றியது. மூளையைக் கசக்கினான்.. தாத்தாவின் நண்பர். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

""தாத்தா உங்களைப் பார்க்க வந்திருக்கார். ஐயர் விட்டார். பேசுங்க''

முதுமை காது கேட்காது போல. அவரிடம் கொஞ்சம் உரக்கக் கத்தினான் காசிநாதன்.

""நான் பெரிய பண்ணை பேரன் நிர்மல்'' இவனும் உரக்கக் கூவினான்.

அவர் விழிக்க..... மீண்டும் இரைந்தான்.

""புரியலை''  என்பது போல் அவர் கையை மட்டும் அப்படி இப்படி அசைத்தார் தாத்தா  ""இவர் பெரிய பண்ணை பேரன்'' -  காசிநாதன் அதிக சத்தத்தில் அவர் காதில் கூவினான்.

""அன்பரசன் பையனா?''   அவருக்கு இப்போது காது கேட்டது.

""ஆமாம் தாத்தா''  நிர்மல் சத்தமாக சொல்ல தொண்டை வலித்தது.

காசிநாதன், தாத்தா அருகில் அமர்ந்து பேசுவதற்காக ஒரு மர ஸ்டூல் கொண்டு வந்து கட்டிலருகில் போட்டான்.  நிர்மல் அமர்ந்தான்.

""அம்மா எப்படி இருக்கா?'' 

""இல்லே'' மேலே கைகாட்டி, ""எங்கே என் தாத்தா, பாட்டி, அப்பா....''  சைகை காட்டி கேட்டான்.

""யாரும் இல்லே. அந்த நல்லவங்களெல்லாம் போன பிறகு ஊரும் சிதைஞ்சு போச்சு''

""புரியலே....'' இப்போதும் அப்படியே சைகையும் குரலும் கலந்த கலவை.

""விவாகரத்தாகி அம்மாவும் நீயும் போன பிறகு அப்பா கலியாணமே வேணாம்ன்னு இருந்தார். ஆனா... பக்கத்து வீட்டுப் பிராமணப் பெண் சாவித்திரி கேட்கலை. பக்கத்துப் பக்கத்து வீடு. சிறு வயசிலேர்ந்து ஒண்ணா விளையாடி பழகினதால, எப்போதும் போல் அப்பா திருமணத்துக்குப் பிறகும் அவுங்க அப்படிப் பழகினாங்க. உன் அம்மா இதைத் தப்பாப் புரிஞ்சு ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்குன்னு புருசனோட தினமும் சண்டை. அவனை நிம்மதியாய் இருக்க விடாமல் தொந்தரவு. ஒரு கட்டத்துக்கு மேல உங்க அம்மாவாலேயே தாங்க முடியாமல், இதைக் காரணம் காட்டி விவாகரத்து வாங்கிப் பிரிஞ்சாள். இந்த விவரம் தெரிஞ்ச அந்த சாவித்திரி, "என்னால உன் வாழ்க்கை கெடக் கூடாது. நானே கலியாணம் பண்ணிக்கிறேன்'னு ஒத்தக் கால்ல நின்னாள். யார் புத்தி சொல்லியும் கேட்கலை. கடைசியாய் அவளே உன் அப்பன் வீட்டுக்குள் புகுந்து உட்கார்ந்து, "நான்தான் இந்த வீட்டு மருமகள். நான் அன்பரசனோட வாழ்வேன் இல்லே சாவேன்'னு அடம்பண்ணினாள். வழி இல்லாமல் பெத்தவங்களே....உன் அப்பாவுக்கு அவளைத்  திருமணம் செய்து முடிச்சுட்டு...வீடும் கொஞ்சம் நிலமும் மட்டும் விட்டுட்டு மத்ததெல்லாம் வித்து சென்னையில போய் செட்டிலாகிட்டாங்க. அதுக்கப்புறம் உன் அப்பாவுக்கு திருச்சிக்கு மாற்றல் வந்து போனார். உன் தாத்தா, பாட்டி சாகிற வரை அப்பப்போ தான் மட்டும் வந்து தலைகாட்டிப் போனார். அவுங்களும் போன பிறகு சொத்தெல்லாம் பொண்ணுங்களுக்குக் கொடுத்துட்டுப் போனார். அப்புறம் திரும்பலை. உன் அப்பாவுக்கு ரெண்டு ஆம்பளைப் புள்ள. ஒரு பொட்டப் புள்ள இருக்கிறதா கேள்வி. நான் பார்க்கலை. இங்கேயும் வந்து யார் கண்ணிலேயும் காட்டலை'' முடித்து மூச்சு வாங்கினார்.

இவனுக்குப் பார்க்கப் பாவமாக இருந்தது.

""திருச்சின்னா அங்கே எங்கே தாத்தா?''   தன் தொண்டை வலியைப் பொறுத்துக் கொண்டு கேட்டான்.

""அதுவா..... திருக்காட்டுப்பள்ளி''

""விலாசம்?'' 

""அதெல்லாம் தெரியாது. அரசாங்க பள்ளிக்கூடம்தானே. அங்கே போய் எதுன்னு கேட்டு விசாரிச்சா விவரம் தெரியும்''

""அவரைக் கடைசியாய் எப்போ பார்த்தீங்க?'' 

""ஞாபகமில்லே. பத்து பதினைஞ்சு வருசமிருக்கும்''

""ஆள் உயிரோடு இருப்பாரா தாத்தா?'' 

""அவன் அப்பன் வயசுல உள்ள நான் இருக்கும் போது உன் அப்பன் இருப்பான். ஆனாலும் விதி எதுன்னு சொல்ல முடியாது''

நிர்மலுக்கு முகம் தொங்கியது.

""கவலைப்படாதே. ஆள்  இருக்கான்னு நெனைச்சே தேடு. எல்லாம் நல்லபடியாய் நடக்கும்'' 

""வர்றேன் தாத்தா''  விடைபெற்று எழுந்து  பைக்குள் கைவிட்டு இரு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து கிழவர் கைக்குள் திணித்தான்.

""வேணாம்''  அவர் தலையை இப்படியும் அப்படியும் அசைத்தார்.

""பரவாயில்லே தாத்தா. உங்களைப் பார்த்ததுக்கு இது மரியாதை'' சொல்லி நகர்ந்தான்.

""பெரிய பண்ணைக்கே உள்ள தயாள குணம் வாரிசுகிட்ட அப்படியே இருக்கு. உன் அப்பனைக் கண்டா நான் விசாரிச்சதா சொல்லு'' என்றார்.

""சரி தாத்தா'' தலையாட்டிய நிர்மல், காசிநாதனிடம் விடை பெற்று நடந்து கடைசியாய் அந்த ஊரை ஒரு பார்வை பார்த்துவிட்டு பேருந்து ஏறினான்.

"திருக்காட்டுப்பள்ளியில் அப்பா கிடைப்பாரா?'   மனசுக்குள் ஓட..... கைபேசி அலறியது.

எடுத்தான். நித்யா.

""சொல்லும்மா'' 

""எங்கே இருக்கீங்க?''

""கும்பகோணம்''

""மாமா இருக்காரா?'' 

""கெடைக்கலை. திருக்காட்டுப்பள்ளியில் தேடணும்''

""வெயில்ல ரொம்ப அலைச்சல் வேணாம்''

""உன் கரிசனத்துக்கு நன்றி. பசங்க எப்படி இருக்காங்க?''

""நல்லா இருக்காங்க''

""பள்ளிக்கூடம்?'' 

""கவலைப்படாதீங்க. அதெல்லாம் தவறாமப் போறாங்க''

""வீட்டுக்கு ஏதாவது செய்தி வந்திச்சா? யாராவது போன் பண்ணினாங்களா?''

""இல்லே. மதியம் கூட தபால் பெட்டியைப் பார்த்தேன். வெறுமையாய் இருந்துது. வந்தா சேதி சொல்றேன். வைச்சுடுறேன்'' வைத்தாள்.

5

திருக்காட்டுப்பள்ளி  காவிரியை ஒட்டிய ஊர். அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளி பிரமாண்டமாக இருந்தது. நடுவே பெரிய விளையாட்டுத் திடல். சுற்றிலும் வகுப்பறைக் கட்டடங்கள். கடைசியில் ஒரு ஓரம் ஒதுக்குப்புறமாய் ஆழ் குழாய் குடிநீர்த் தேக்கத் தொட்டி, கழிப்பறைகள், சுற்றுச் சுவர் என்று எல்லாமே சரியாக இருந்தது.

இது போல் அனைத்து வசதிகளுடன் எத்தனை பள்ளிகள் தமிழ்நாட்டில் இப்படி இருக்கும். வகுப்பறைகளே இல்லாமல் எத்தனையோ பள்ளி மாணவ மாணவிகள் மரத்தடி மண் தரைகளில் அமர்ந்து, ஒரு கரும்பலகை ஆசிரியருமாய் இயங்குகின்றதை தொலைக்காட்சி செய்திகளில் காட்டுகிறார்கள். கல்விக்கென்று ஒரே துறை, ஒரே மந்திரி. பிறகு எப்படி இந்த ஏற்றத்தாழ்வு, வித்தியாசம்? வாய் உள்ளவன் பிழைத்துக் கொள்வான். பலம் உள்ளவன் வெல்வான்  என்கிற பாகுபாடா?  - இப்படித்தான் நிர்மல் மனதில் ஓடியது. 

சைக்கிள்கள், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள் எல்லாம் நிறைந்திருந்தன. ஒரே அளவு, வண்ணத்திலிருந்தே மாணவ மாணவிகள் சைக்கிள்கள் அரசாங்க இலவசம் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

கர்ம வீரர் காமராசர், பிள்ளைகள் வயிற்றுச் சோற்றுக்காக உழைத்து கல்வியை இழக்கக் கூடாது என்பதற்காக மதிய உணவுத்  திட்டத்தை செயல்படுத்தி பிள்ளைகளைப் பள்ளிக்கு வரவழைத்தார்.

இன்று அதுவே விரிந்து...சத்துணவு, சீருடை,காலணி, நோட்டு புத்தகங்கள், சைக்கிள், லேப்டாப், கல்வி ஊக்கத்தொகை, உதவித்தொகை, உயர்படிப்பிற்கென்று வங்கிக் கடன் என்று எத்தனை விரிவாக்கம்! - நிர்மலுக்கு வியப்பாக இருந்தது.

பள்ளிக்கூட முகப்பு நுழைவிலேயே இடது பக்கம் தகவல் பலகையும் அதில், ஒழுங்காகப் படி! என்ற வாக்கியமும், வலப்புறத்தில் தலைமை ஆசிரியர் அறையும் இருந்தது.

உள்ளே ஐம்பத்தைந்தை நெருங்கிய ஒல்லி, ஒடிசலான நெடிய உருவம். சோடாப் புட்டிக் கண்ணாடி, கையில் பேனாவுடன் மேசை மீது எதையோ மேய்ந்து கொண்டிருந்தது.

தலைமை ஆசிரியர் அறையை ஒட்டிய வாசல் பெஞ்சில் நாற்பத்தைந்து வயது விதவைப் பெண் கடைநிலை ஊழியை வெற்றிலை வாயுடன் இருந்தாள்.

""சாரைப் பார்க்கணும்'' நிர்மல் அவளிடம் தகவல் தெரிவித்தான்.

அவள் எழாமல் உடலை வளைத்து அறையை எட்டிப் பார்த்தாள். யாருமில்லை, போகலாம் என்பதை உறுதி செய்து கொண்ட பின் உள்ளே சென்று சேதி சொன்னாள்.

அவரிடமிருந்து வாய் வார்த்தையாய்ப் பதில் வரவில்லை. தலையசைத்தார்.

அவள் வெளியே வந்து, ""போங்க..'' மெல்ல சொல்லி தன் இருக்கையில் அமர்ந்தாள்.

உள்ளே நுழைந்து எதிரில் நின்ற நிர்மலை தலைமை ஆசிரியர் நிமிர்ந்து  பார்க்காமலேயே  கையிலுள்ள பேனாவை விலக்காமல் எதிர் நாற்காலியில் அவனை அமரச் சொல்லி கையைக்  காட்டினார். நடு நாற்காலியில் அமர்ந்தான்.

""சொல்லுங்க''   அவர் இப்போதும் நிமிரவில்லை.

""சார்  நான் அன்பரசன். தலைமை ஆசிரியர் மகன் நிர்மல். பெங்களுர். அவர் விலாசம் வேணும்'' தான் வந்த விஷயத்தைச் சொன்னான். 

""அப்படியா?''  என்று கேட்டு வேலையிலிருந்து விலகி சுதாரிப்புக்கு வந்து நிமிர்ந்த தலைமை ஆசிரியர், ""அன்பரசன்?  அப்படிப்பட்ட பேரையே நான் கேள்விப்பட்டதில்லையே'' என்று ரொம்ப சர்வசாதாரணமாக சொன்னார்.

நிர்மல் திடுக்கிட்டான்.

""சார் அவர் கும்பகோணம் திருப்புறம்பியத்திலேர்ந்து இங்கே மாற்றலாகி வந்தவர்'' விவரம் சொன்னான்.

""எப்போ?''   அவரின் அடுத்த கேள்வி.

ஆண்டு, தேதி தெரியாமல் விநாடி விழித்து, ""பதினைஞ்சு வருசத்துக்கு முன் சார்''  குத்துமதிப்பாக சொன்னான்.

அவருக்கு இப்போதும் ஆள் தெரியவில்லை. அழைப்பு மணி அழுத்தினார்

கடைநிலை ஊழியை தலைகாட்டினாள்.

""கடைசி அறையில் உடற்பயிற்சி ஆசிரியர் வேதாச்சலம் இருப்பார். வரச் சொல்'' 

அவள் அகன்று மறைந்த சிறிது நேரத்திற்கெல்லாம் பெரிய தொந்தி, ஏற்றி சீவிய நெற்றி, உப்பலான கன்னம், குட்டி யானையாக அவர் உள்ளே நுழைந்தார்.

இவரா உடற்கல்வி ஆசிரியர்?  நிர்மலுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

இவரெப்படி மாணவ மாணவிகளுக்கு உடற்பயிற்சி அளிப்பார், செய்வார். வரிசையாக அவர்களை எதிரே நிறுத்தி, காலை இப்படித் தூக்கு, கையை அப்படித் தூக்கு, குதி, குந்து, விளையாடு... என்று சொல்வாரோ  என நினைத்தான்.

""சார் உங்க பிரச்னையை இவர்கிட்ட சொல்லுங்க. சார், இங்கே இருபதாண்டு காலமா வேலை செய்றார்'' தலைமை ஆசிரியர் தன் மீது விழுந்த பாரத்தை வந்தவர் மீது நகர்த்தினார்.

""என்ன சார்?''   அவர் இவன் அருகில் அமர்ந்தார்.

""ச...சார்  அன்பரசன் தலைமை ஆசிரியர்.....'' முழுதும் முடிக்காமல் இழுத்தான்.

""ஆமா. அவருக்கென்ன?'' 

அப்பாடி ஆளைத் தெரிந்து கொண்டார்.  நிர்மலுக்கு உயிர் வந்தது.

""அ....அவரைப் பத்தின தகவல்.....''

""ஏன்?'' 

""நான் அவர் பையன்'' 

""மகனா  சந்தோசம். சார், ரொம்ப கறார், கண்டிப்பு. அதனால் சில பிரச்னை, கஷ்டங்களைச் சந்திச்சார். விளைவு.... நிர்வாகமே அவருக்கு சேலத்துக்கு மாற்றல் கொடுத்து அனுப்பிச்சு''

தேதி, வருசம்   தற்போது விழித்ததன் விளைவு...எச்சரிக்கையானான்.

வெங்கடாசலம், தலைமை ஆசிரியர் பின்புறச் சுவரைப் பார்த்தார். காந்தி, பாரதியார் படத்திற்குக் கீழ் பணி செய்து சென்ற தலைமை ஆசிரியர்கள் பெயர் பட்டியல் தேதி, வருடங்களுடன் இருந்தது.

நிர்மலும் அதைக் கவனித்தான். யாரையும் கேட்காமலேயே...தன் சட்டைப் பையிலிருந்து பாக்கெட் டைரி எடுத்து குறித்தான்.

""நன்றி. வர்றேன் சார்''  எழுந்தான்.

ஒரு நிமிஷம்  அவனை அமர்த்திய வெங்கடாசலம் பையிலிருந்து தன் கைபேசியை எடுத்தார்.

""ஹலோ..'' யாருடனோ தொடர்பு கொண்டார்.

""..................................''

""ராமநாதன் நான் வெங்கடாசலம் பேசறேன்''

"".......................''

""அன்பரசன் தலைமை ஆசிரியர் உங்க பள்ளியிலேர்ந்துதானே ஓய்வானார்'' 

""........................''

""எனக்கு அவர் விலாசம் வேணும்''

"".......................''

""என் நண்பர் ஒருத்தர் பெங்களுர்லேர்ந்து அவரைத் தேடி வந்திருக்கார். உதவணும்''

எப்படி இப்படி கேட்காமலேயே உதவும் மனிதர்கள் நிர்மலுக்கு அவர் மேல் மதிப்பு மரியாதை வந்தது.

""தலைமை ஆசிரியர் விடுப்பில் இருக்கார். பைல் பார்த்துச் சொல்ல முடியாதா? எப்படியாவது உதவணும். ரொம்ப நெருங்கிய நண்பர்''

""..........................''

""அவர் ஓய்வூதியம் பெறும் கருவூல அலுவலகத்தில் போய்க் கேட்டால் சரியான முகவரி கிடைக்கும்ங்குறது சரி. அதுக்கு அவர் ஓய்வூதிய எண் வேணுமே''

""........................''

சட்டையிலிருந்து பேனா எடுத்து அருகிலிருக்கும் வெள்ளைத் தாளை நகர்த்தி, ""சரி. சொல்லு''   சொல்லச் சொல்ல எழுதி முடித்து, ""உன் உதவிக்கு நன்றி. நண்பரை அனுப்பிட்டு அப்புறம் பேசறேன்'' அணைத்து, நிர்மல் பக்கம் திரும்பி, ""சார் இது அன்பரசன் சார் ஓய்வு பெற்ற தேதி, வருஷம். நீங்க இதை எடுத்துப் போய் சேலம் கருவூலத்துல காட்டி விவரம் சேகரிச்சுக்கோங்க'' என்று கொடுத்தார்.

""வாங்கிப் பார்த்த நிர்மல், சார் ஓய்வூதிய எண்?''   என்றான்.

""தேவை இல்லே. தைரியமா போங்க. எங்களைப் போல் உதவி செய்ய ஆளிருப்பாங்க.

சேலத்துல கருவூல அலுவலகம் எங்கிருக்குத் தெரியுமா?''  - தலைமை ஆசிரியர் தன் பங்கு உதவிக்குக் கேட்டார்.

""தெரியாது சார்''

""நகர மத்தியில் இருக்கு'' இருப்பிடம் சொன்னார்.

""சரி சார்''  நிர்மல் திருப்தியாய் எழுந்து விடை பெற்றான்.

அங்கே இவர்களைப் போல் நல்லவர்கள் இல்லையென்றாலும் காசு பணம் லஞ்சம்  கொடுத்தாவது அப்பா விலாசம் பெற வேண்டும். முடிவோடு நடந்தவனுக்குள் வேறொரு வழி உதித்தது. உடன் திரும்பி வந்து, ""சார் அங்கே உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?''   இருவரையும் பார்த்துக் கேட்டான்.

தலைமை ஆசிரியர் வெங்கடாசலத்தைப் பார்த்தார்.

அவர், ""எனக்கு யாரையும் தெரியாது. என் நண்பனுக்குத் தெரியலாம். கேட்டுச் சொல்றேன். உட்காருங்க'' கைகாட்டி கைபேசி எடுத்தார்.

நிர்மல் அமர்ந்தான்.

""ராமநாதா கருவூலத்தில் உனக்குத் தெரிஞ்ச ஆட்கள் இருக்காங்களா?''

"".................................''

""நண்பன் பேர் சொல்லு'' 

""............................''

""பேர், முத்துவேல் முதுநிலை எழுத்தர். சரி. ஆள் இருந்தாலும் இல்லாட்டிப் போனாலும் அங்கே வேலை செய்யும் ஒரு ஆள் பேர் தெரிஞ்சா போதும் சமாளிச்சுக்கலாமாம். யாரும் தெரியாம போய் நின்னாதான் முகம் தெரியாத ஆள்ன்னு அங்கே யாரும் உதவ முன் வரமாட்டாங்க. பேர் சொன்னால் ஆள் இருந்தாலும் லாபம், இல்லாது போனாலும் நஷ்டமில்லே. அடுத்து  இருப்பவன் அவர் நண்பர்ன்னு நினைச்சு உதவுவான்'' சொன்னார்.

""நன்றி சார்''  நிர்மல் அவர்களுக்கு மனதார சொல்லிவிட்டு வெளியே வந்தான்.

6

சேலம் கருவூல அலுவலகம் மூன்றடுக்கு கட்டடமாக இருந்தது. மேலே அரசாங்க கணக்கு வழக்கு அலுவலகம். கீழே கருவூலம் இருந்தது.

வாசலில் தொங்கிய கரும்பலகையில், ஓய்வூதியர்கள் கவனத்திற்கு...வழக்கம் போல் இந்த மாதம் 30ஆம் தேதியிலிருந்து தங்கள் ஓய்வூதியத் தொகையை வங்கி மூலம் பெற்றுக் கொள்ளலாம். பயனாளிகள் அதிகாரியைச் சந்திக்கும் நேரம் காலை 10.00 - 1.00  எழுதி இருந்தது.

நிர்மல் அலுவலகத்திற்குள் நுழைந்தான்.

தெற்கு வடக்கு திசைகளில் எதிரும் புதிருமாய் பத்து நாற்காலி மேசைகளில் ஊழியர்கள் அமர்ந்து பணியில் மூழ்கி இருந்தார்கள்.

அவர்களை மேற்பார்வை பார்த்து கவனிக்கும் கண்காணிப்பு அதிகாரி இரு பிரிவிற்கும் நடுவில் உள்ள மேசை நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் மூழ்கிருந்தார். கணினி உயிர்ப்பித்திருந்தது.

முத்துவேல் முகம் தெரியாத நிர்மல், யாரிடம், எப்படி விசாரிப்பது என்ற யோசனையில் ஊழியர்களைப் பார்த்தான். யாரும் நிமிரவில்லை. நேராய் அதிகாரியின் முன் சென்று, ""சார் முத்துவேல்...'' இழுத்தான்.

""என்ன விஷயமா அவரைத் தேடுறீங்க?''   நிமிர்ந்தார்.

""அ.... அலுவலக வேலையாய்''

"" நான் பெங்களூர், இம்போசிஸ்ல வேலை''

""உட்காருங்க'' மறுபடியும் வேலைக்கும் இடத்திற்கும் மரியாதை.

அமர்ந்தான்.

""முத்துவேல் இப்போ இங்கே இல்லே. சென்ற வாரம் இங்கிருந்து மாற்றலாகி கன்னியாகுமாரி பொதுப்பணித்துறையில் பணி. இப்போ உங்களுக்கு என்ன உதவி தேவை? கேளுங்க''

""சார் இந்த தேதியில் ஓய்வான தலைமை ஆசிரியர் அன்பரசன் விலாசம் வேணும்'' தான் கொண்டு வந்திருந்த தாளை நீட்டினான்.

""வாங்கிப் பார்த்த அவர், ஓய்வூதிய எண் இல்லே. இருந்தால் சுலபமா கண்டுபிடிக்கலாம்''

"" எதுக்கு உங்களுக்கு அவர் விலாசம்?''   இவனை ஏறிட்டார்.

""சார். நான் அவரோட முதல் தாரத்து மகன்'' என்று ஆரம்பித்து எல்லா விஷயத்தையும் விலாவாரியாக எடுத்துச் சொன்னான்.

அதிகாரி அவனை ஆழமாகப் பார்த்தார்.

""சார் நான் சொல்றது சத்தியபூர்வமான உண்மை. எனக்கு அப்பாவைச் சந்திக்கிறதைத் தவிர வேற எந்த நோக்கமுமில்லே. பத்திரிகைகள்ல விளம்பரம் கொடுத்து பதில் இல்லாம புறப்பட்டு வந்திருக்கேன்'' சொல்லி தன் தோல் பையிலிருந்த தினசரிகளை எடுத்து அவரிடம் நீட்டி ஆதாரங்கள் காட்டினான்.

அதிகாரி பத்திரிகைகளை வாங்கி  விளம்பரங்களைக் கவனமாக மேய்ந்தார்.

""சார்  அவர் இருந்த இடமெல்லாம் தேடி விசாரிச்சு கடைசியாய் இங்கே வந்திருக்கேன். அவர் உயிரோடு இருந்தாலே சந்தோசம். பார்த்தால் போதும்''  பரவசப்பட்டான்.

அதிகாரிக்குள் மனம் இறங்கியது.

""அன்பரசன் அப்பா பேர் என்ன?'' 

""தாமோதரன் சார்'' தன் தாத்தா பெயரைச் சொன்னான்.

அவர் கணினியைத் தட்டி த. அன்பரசனை ஆராய்ந்தார். ஐந்து விநாடிகளுக்குப் பிறகு...""பயப்படாதீங்க அவர் இந்த மாசம் வரை ஓய்வூதியம் எடுத்திருக்கார்'' நிமிர்ந்தார்.

நிர்மல் வயிற்றில் ஜிலீரென்று பனிக்கட்டி உணர்வு.

""ரொம்ப சந்தோசம் சார்'' உணர்ச்சிப் பெருக்கில் கை கூப்பினான்.

அதிகாரி அதை சட்டை செய்யாமல், ""ஆனா....ஆள் உயிரோடு இருக்காரா இல்லையான்னு உத்திரவாதம் சொல்ல முடியாது''- குண்டைத் தூக்கிப் போட்டார்.

 ""என்ன சார் சொல்றீங்க?'' அதிர்ந்தான். சடக்கென்று முகம் வேர்த்தது.

""பதற்றப்படாதீங்க. இப்போ சம்பளம், ஓய்வூதியம், அரசாங்க பணப் பட்டுவாடாக்கள் எல்லாம் வங்கி மூலம்தான் பரிவர்த்தனை. அந்த வகையில்  ஏ.டி.எம் கார்டு யார் கையில் இருந்தாலும் பணம் எடுக்கலாம். அப்படி அவர் பணம் இந்த மாதம் வரை பட்டுவாடா ஆகி இருக்கு. வருஷத்துக்கு ஒரு முறை மே மாதம் மட்டும்  பயனாளிகள் அலுவலகத்துக்கு நேரில் வந்து இங்கே கோப்புகளில் கையெழுத்துப் போட்டு தான் உயிரோட இருக்கிறதை உறுதி செய்வாங்க. அந்த வகையில் அன்பரசன் சென்ற ஏப்ரல் மாதம் இங்கே வந்து கையெழுத்துப் போட்டிருக்கார். இப்போ ஏப்ரல் தாண்டி ஆகஸ்டு. இந்த இடைவெளியில் ஆள் இருக்கலாம். இல்லாமல் போகலாம். அடுத்த மே மாதத்தில் தான் ஆள் எப்படி என்று தெரியும். அதனால் அப்படிச் சொன்னேன்'' விளக்கமளித்தார்

நிர்மலுக்கு அவர் சொல்வது ஏற்றுக்கொள்வதாய் இருந்தாலும் வயிற்றைக் கலக்கியது.

"" என் மனசுல பட்டதைச் சொன்னேன். அதுக்காக வருத்தம் வேணாம். நம்பிக்கைதான் வாழ்க்கை. உங்க அப்பா அன்பரசன் நிச்சயம் இருப்பார். கண்டிப்பாய்க் கிடைப்பார். அப்படியே கிடைக்கலைன்னாலும்  வருத்தப்படுவதால் இழந்தது எதுவும் வந்துவிடாது. தேடினோம். இருக்கிறார், இல்லே நிம்மதி. சரியா?''   கேட்டு எதிரில் இருந்த நிர்மலை உற்றுப் நோக்கினார்.

""சரி சார்'' இவன் தலையசைத்து கவிழ்ந்தான்.

""நான் உங்களை ரொம்ப கலவரப்படுத்திட்டேன்னு நெனைக்கிறேன். அவர் இப்போ அந்த இடத்திலே இருக்காரோ இல்லையோ....எங்ககிட்ட இருக்கிற அவர் விலாசம் சொல்றேன். எழுதிக்கோங்க''

நிர்மலுக்கு அவரின் இந்த பேச்சிலும் உதை விழுந்து வலி வந்தது.

""எண் 10. ஐந்தாவது குறுக்குத் தெரு. காந்தி நகர் விரிவாக்கம். சேலம்'' 

எழுதி நிமிர்ந்தான்.

""சார் அவர் கை பேசி, தொலைபேசி எண்?''   கேட்டான்.

""தொலைபேசி, கைபேசி எண் ரெண்டும் இருக்கு. எது கிடைச்சாலும் பயன்படுத்திக்கோங்க''

எண்களைச் சொன்னார்.

நிர்மல் அவற்றைக் கைபேசியில் பதிவு செய்து அந்த எண்களைத் தொடர்பு கொண்டான். தொலைபேசி எண்களில் உயிர் இல்லை. கைபேசி எண்கள்.....

"தாங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் உபயோகத்தில் இல்லை'.  பதில். அதிலும் உயிர் இல்லை.

""நீங்க சொன்னது ரொம்ப சரி சார். இந்த காந்தி நகர் இங்கே எங்கிருக்குனு சொன்னால் நான் நேரடியாய்ப் போறேன்''  என்றான்.

""ஏற்காடு போற வழியில மலையடிவாரம். பழங்காலத்து மாடர்ன் ஸ்டுடியோ நேர் எதிர்க்கப் போகணும். நீங்க ஆட்டோ பிடிச்சுப் போங்க. சரியாய்க் கொண்டு விடுவாங்க'' சொன்னார்.

""சரி சார்'' எழுந்து கை குலுக்கிவிட்டு வெளியே வந்தான். சிறிது தூரம் நடந்து ஆட்டோ பிடித்து விலாசம் சொல்லி ஏறி அமர்ந்தான்.

அரைமணி நேரத்தில் அது அந்த விலாசத்தில் இறக்கி விட்டு விட்டுச் சென்றது.

சாவித்திரி பவனம். ஒற்றை மாடி வீடாய் எந்தவித அலங்காரமுமில்லாமல் ரொம்ப அமைதியாய் இருந்தது. நகருக்குப் பின் பச்சைப் பசேல் மலை.  அப்பா இயற்கைப் பிரியர்.  வயல்வெளிகளுக்குச் சென்றால் உடன் வர மாட்டார். ரசிப்பார். பசுமை என்றால் அவருக்கு உயிர். அந்த வகையில் இந்த இடம் தேர்வு. நிர்மலுக்குத் தெளிவாகியது.

இது அவர் விருப்பமில்லாமல் குடும்ப உறுப்பினர்கள் மனைவி மகன்கள் விருப்பமாகக் கூட இருக்கலாம். 

வாசல் கதவு சாத்தி இருந்தது. அழைப்பு மணியை அழுத்தினான்.

அப்பா திறக்கப் போகிறார். பார்க்கப் போகிறோம் .....மனம் "திக் திக்' அடித்தது.

கதவு திறக்க.....வேறு ஆள் வேட்டி பனியனில் வெளியே வந்தார்.

""யார் சார் நீங்க?''   கேட்டார்.

""இது அன்பரசன் வீடுதானே?'' 

""ஆமாம்''

""அவரைப் பார்க்கணும்''

""அவரில்லே''

""எங்கே?''  

""அவர் வீட்டை வாடகைக்கு விட்டுட்டு ஏற்காட்டுல ஒரு முதியோர் இல்லத்துல இருக்கார்''

எதிர்பார்க்கவில்லை. துணுக்குற்றான். முதியோர் இல்லம்  குழப்பமாக இருந்தது.

""அவர் மனைவி, மகன்கள், மகளெல்லாம் வெளிநாட்டுல இருக்காங்க. இவர் மட்டும் இங்கே தனிச்சு இருக்கார். பேச்சுத் துணைக்கு ஆளில்லாமல் அவருக்கு இவ்வளவு பெரிய வீட்டில் தனியா இருக்கப் பிடிக்காமல் முதியோர் இல்லத்தில் இருக்கார்''

குழப்பத்திற்கு விடை கிடைத்து மனம் நிம்மதி அடைந்தது.

""அவர் இங்கே எப்போ வருவார்?'' 

""வர்றதில்லே.  வீட்டு வாடகையை நாங்க அதை மாசாமாசம் அவர் வங்கிக் கணக்கில் சேர்த்திடுவோம்''

""அவர் கை பேசி எண் இருக்கா?'' 

""இருக்கு. ஆனா.... எவருக்கும் கொடுக்கக் கூடாதுன்னு கண்டிப்பு. ஏன் நாங்களே அதில் பேசினதில்லே''

""முதியோர் இல்லம் விலாசம்?''  

""அது சொல்லலாம். ஏற்காட்டில் இறங்கி அன்னை அபிராமி முதியோர் இல்லம்ன்னு கேட்டால் எல்லாரும் வழி காட்டுவாங்க. ஆட்டோவுல ஏறினால் அஞ்சு நிமிசத்தில் கொண்டு விடுவான்''

நன்றி சொல்லி  திரும்பினான். மனைவியுடன் தொடர்பு கொண்டு பேசி முடித்து. ஆட்டோ ஏறி பேருந்தில் அமர்ந்தான்.

(அடுத்த இதழில்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com