

எனக்கு ஜீரணசக்தி மிகவும் குறைவாக உள்ளது. இதனால் அளவான உணவு உட்கொண்டாலே மேலே வருவது போல் இருக்கிறது. அல்சர் பிரச்னையும் இருக்கிறது. இவற்றிற்கு ஆயுர்வேதமுறைப்படி தீர்வு இருக்கிறதா?
பிரபா - கோவை, ராஜேஸ்வரி - பல்லடம்.
உணவை ஏற்றுக்கொள்வதற்கு முன்னும், ஏற்றுக்கொள்ளும்போதும், பின்னரும் மன ஓய்வும், உடல் ஓய்வும் அவசியம். இந்தச் சமயங்களில் ஏற்படும் உடல், மனப் பரபரப்பு நோயில் கொண்டு விடும். பசியை உணர்ந்து அதற்கான முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உடல், மனஅமைதிக்கு இடம் கொடுக்கும்போது, மற்ற இடத்திலுள்ள இரத்த ஓட்டம் சற்று குறைந்து இரைப்பையைச் சுற்றி இரத்த ஓட்டமும் மற்ற இயக்கங்களும் அதிகமாவதற்கு இடமேற்படுகிறது. இதன் மூலம் ஜீரணம் நல்லமுறையில் ஏற்படுகிறது. உணவிற்குப் பின் உடல், மனஅமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் வேலைகளில் ஈடுபடும்போது மற்ற உழைக்கும் பகுதிகளுக்கும் இரத்தத்தை அனுப்ப மூளை மறுக்கிறது. அதனால் களைப்பு ஏற்படுகிறது. நிர்பந்தத்தால் மூளை மற்ற இடங்களுக்கு இரத்தத்தை அனுப்பினால் ஜீரணத்திற்குத் தேவையான இரத்த ஓட்டமும், அதனால் ஏற்படும் கதகதப்பும் குறைந்து ஜீரணம் தாமதமாக நிறைவேறுகிறது.
ஜீரணம் ஆரம்பிக்கும் முதல் நிலையில் கபமும், இரண்டாம் நிலையில் பித்தமும் அதிகமாக வேண்டும். பல ருசிகளுடன் பல நிலைகளில் உள்ள உணவு உள்ளே செல்கிறது. அதைக் கூழாகக் கரைத்து ஒரே சீராகச் செய்யும் பணியே இரைப்பையில் நடக்கிறது. கூழாகச் செய்வதில் கபம் உதவுகிறது. உண்ட பின் சிறிது ஓய்வெடுப்பதால் கபம் தன் பணியை ஆற்ற முடிகிறது. உடன் உடலுழைப்பிற்கு இடம் கொடுத்தால் கபம் சுரப்பது குறைவதோடு மட்டுமின்றி, உடனே பித்தமும் அதிகமாகச் சுரக்கிறது. அதனால் உணவு குழைவு படாமல் விதை விதையாக நிற்பது போன்ற உணர்ச்சி, கப பூச்சு இல்லாமல் சூடான பித்தம் ஏற்படுவதால் இரைப்பையில் காந்தல், புளித்த எதுக்களிப்பு போன்ற ஜீரணத் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. இந்நிலை நீடித்தால் புளிப்பு நிலைத்து புண் வரை ஏற்பட ஏதுவாகிறது. ஆகவே நீங்கள் உண்டதும் ஓய்வு எடுத்து உணவை செரிப்பதற்கான கால அவகாசத்தை ஏற்படுத்தித் தர வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. இந்த ஓய்வை நீங்கள் நல்ல தூக்கத்திற்கு பயன்படுத்திவிடக் கூடாது. இதுவும் ஜீரணம் தாமதமாகக் காரணமாகும். உடல் கனம், அசதி, சோம்பல் இவற்றை உண்டாக்கும். 15 - 20 நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்வதுதான் உசிதமே தவிர நீண்டநேர ஓய்வும் நல்லதல்ல.
இரவிலும் உண்டவுடன் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு 1-2 மணிநேரம் சென்ற பிறகே தூங்குவதுதான் அதிகம் நல்லது. இரவில் நேரம் கழித்து உண்பதும், உண்டவுடன் தூங்குவதும் காலப்போக்கில் ஜீரண உறுப்புகளின் அசதிக்கும், அஜீரணத்திற்கும் காரணமாகலாம்.
இஞ்சி, சுவையில் காரம் மிக்கது. ஜீரணமாகும்பொழுது இரைப்பையில் இனிப்பாக மாறும். சூடு, வறட்சி தரும். உமிழ்நீரைப் பெருக்கி, சுவையைத் தூண்டும். இரைப்பையைத் தூண்டிப் பசியைப் பெருக்கும். எந்த கடின உணவையும் செரிக்கச் செய்யும். இஞ்சியைத் துண்டுகளாக்கி எலுமிச்சம் பழச்சாறு, இந்துப்புச் சேர்த்துச் சாப்பிட்டால் நீங்கள் குறிப்பிட்ட அஜீரணம், அல்சர் போன்ற உபாதைகள் நீங்கிவிடும். வேறொரு சிறு கை வைத்தியமுறையும் இருக்கிறது. துண்டாக நறுக்கிய இஞ்சி 500 கிராம். சீரகம் 250 கிராம். கொத்தமல்லி விதை 250 கிராம். இந்துப்பு 125 கிராம். இவற்றுடன் எலுமிச்சம் பழச்சாறு அரை லிட்டர் ஊற்றி ஊற வைத்து வெயிலில் வைத்து உலர்த்தித் தூளாக்கிக் கொள்ளவும். பீங்கான் அல்லது மாக்கல் சட்டியில் ஊற வைப்பது நல்லது. 1-2 ஸ்பூன் அளவு வாயில் உமிழ்நீருடன் கரைத்துச் சாப்பிட ருசியின்மை, உமிழ்நீர் சுரப்பு, அஜீரணம், வாய்க் கசப்பு நீங்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சாப்பிட்டவுடன் மலக்கழிவிற்கு ஓடுவதும் நிற்கும்.
100 கிராம் ஓமத்துடன் இந்துப்பு 10 கிராம் சேர்த்து தூளாக்கி பீங்கான் பாத்திரத்திலிட்டு ஆடாதொடை இலைச்சாறு, இஞ்சிச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு, புதினாச்சாறு இவற்றில் வரிசையாக ஒவ்வொன்றாக 50 மில்லி லிட்டர் சேர்த்து ஊற வைத்து உலர வைக்கவும். நன்கு உலர்ந்ததும் அதை அரை கிராம் அளவு சாப்பிட்டு வர அஜீரணம் நீங்கும், அல்சர் உபாதை குறையும்.
ஆயுர்வேத மருந்துகளாகிய குடூச்யாதி கஷாயம், அவிபத்தி சூரணம், அஷ்டசூரணம், தாடிமாதி க்ருதம், வில்வாதி லேஹ்யம், ஜீரகவில்வாதி லேஹ்யம் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொண்டு வர அஜீரணம் மற்றும் அல்சர் உபாதைகளுக்கு விரைவில் தீர்வு காணலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.