

சூர்யாவின் "பேரழகன்' படத்தையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பின் சசிசங்கர் எழுதி இயக்கும் படம் "பகடை பகடை'. பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த திலீப்குமார் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக திவ்யாசிங் நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக திவ்யாசிங்கின் உடன் பிறந்த தங்கை ரிச்சு நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் படம் இயக்க வரும் சசிசங்கரிடம் பேசிய போது.... ""பேரழகன்' படத்தின் வெற்றி தமிழில் போதிய வரவேற்பைக் கொடுத்த போதிலும், மலையாளப் படவுலகில் தொடர் வாய்ப்புகள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் கையில் இருந்ததால் மலையாள உலகை விட்டு வர முடியவில்லை. பணம் எப்படியெல்லாம் ஒருவன் வாழ்க்கையில் விளையாட்டு காண்பிக்கிறது என்பதை காதல் மற்றும் ஆக்ஷன் கலந்து சொல்வதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை. பகடைக் காயாக மாறிப் போன வாழ்க்கையில் பணத்தின் பங்கு எந்த அளவுக்கு உள்ளது என்பது இதன் கரு'' என்றார்.
""என் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் குறித்து பலரும் கவலை கொள்கிறார்கள். நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் அவை எல்லாமே எதிர்காலத்தில் நடக்கப் போகும் ஏதோ ஒரு விஷயத்துக்குதான் என்பதை உணர்ந்திருக்கிறேன். அதனால்தான் என்னால் வாழ்க்கையை சகஜமாக வாழ முடிகிறது. இத்தனை வருட தமிழ் சினிமா அனுபவங்கள் இருந்த போதிலும், ஏன் டப்பிங் பேசுவதில்லை? என்று கேட்கிறார்கள். டப்பிங் பேசுவது குறித்து எந்த இயக்குநரும் என்னிடம் பேசியதில்லை. இனி வரும் படங்களில் டப்பிங் பேச முயற்சிப்பேன். தினமும் நிறைய பழங்கள் சாப்பிடுகிறேன். அடிக்கடி ஜூஸ் குடிக்கிறேன். இதுதான் என்னை அழகாக வைத்திருக்கிறது. ஹிந்திப் படங்களில் நடிப்பது குறித்து பலர் என்னிடம் கேட்டு வருகிறார்கள். தற்போது வரை அதைப் பற்றி எந்த முடிவுக்கும் வரவில்லை. தமிழில் நல்ல கதைகள் காத்திருக்கின்றன. என்னை நம்பும் இயக்குநர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். எங்கும் இல்லாத ரசிகர்களின் அன்பும் இங்கு நிறைய இருக்கிறது. தெரியாத, புரியாத இடத்தில் மீண்டும் போய் சிக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. நடக்கும் போது எல்லாம் நல்ல விதமாக நடக்கும்'' நீண்ட நாள்களுக்குப் பின் தன் டுவிட்டர் பக்கத்தில் இப்படி மனம் திறந்திருக்கிறார் நயன்தாரா.
ஐ ஸ்டூடியோ தயாரிக்கும் படம் "கப்பல்'. ஷங்கரின் உதவியாளர் கார்த்திக் ஜி.கிரிஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். ""காதலர்களுக்குள் சின்ன உரசல் வந்தாலும் அந்தக் காதல் முறிவுக்கு அதுவே காரணமாகி விடும். அதுபோல் நெருக்கமான நண்பர்களுக்குள் சின்ன உரசல் வந்தால் அதைவிட பயங்கர விளைவுகள் ஏற்படும். நட்பு என்பது நூல் இழை மாதிரி. எந்த நேரமும் அதைப் பக்குவமாகக் கையாள வேண்டும் என்பதைக் கருவாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. "மூழ்காத ஷிப் பிரண்ட்ஷிப்தான்' என்ற பிரபலமான பாடல் வரிகள் நட்புக்கு எடுத்துக்காட்டாக சமீபகாலம் வரை உள்ளது. நட்புக்குப் பிரபலமான இந்தப் பாடலை முன் நிறுத்தி "கப்பல்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கதாநாயகி சோனம், பஞ்சாபி படங்களில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். கதை பிடித்துப் போனதால் மட்டுமே இப்படத்தில் அவர் நடிக்கிறார். நட்பை முன் நிறுத்தி பல படங்கள் வந்திருந்தாலும் இதுவரை சொல்லாத ஒரு நட்பு இதில் உள்ளது'' என்கிறார் இயக்குநர்.
2 வருடங்களுக்கு முன்பு மலையாளத் தயாரிப்பாளர்களுடன் நித்யாமேனனுக்கு மோதல் ஏற்பட்டது. தன்னிடம் கால்ஷீட் பற்றிப் பேச வந்த சிலரை அவர் சந்திக்காமல் திருப்பி அனுப்பியதே இதற்குக் காரணம். இது சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து அவர் மீது 1 வருடம் ரகசிய தடையை மல்லுவுட் தயாரிப்பாளர்கள் அமல்படுத்தினார்கள். கடைசியாக மலையாளத்தில் அவர் நடித்த "பாப்பின்ஸ்' என்ற படம் கடந்த 2012-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதன்பின் மல்லுவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. இது பற்றி கவலை கொள்ளாமல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்களை ஒப்புக் கொள்ள தொடங்கினார். இருப்பினும், மலையாளத்தில் நித்யாமேனனுக்கு மார்க்கெட் குறையவில்லை. அவர் நடித்தால் படத்துக்கு வெற்றி என்கிற நிலை உருவானது. இதையடுத்து புதிய தயாரிப்பாளர்கள் பலர் அவரை அணுகி வந்தனர். சமீபத்தில் தயாரிப்பாளர்களின் ரகசியத் தடை உத்தரவு முடிந்துள்ளதால், முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் நித்யாமேனனின் கால்ஷீட்டைப் பெற முயற்சித்து வருகின்றனர். தற்போது "பெங்களூர் டேஸ்' என்ற மலையாளப் படத்துக்கு மட்டும் அவர் கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார்.
"ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தைப் பார்த்த இயக்குநர் பாலா, மிஷ்கினை மனம் திறந்து பாராட்டியதோடு தனது பி ஸ்டூடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் மிஷ்கினுக்கு வாய்ப்பு தந்தார். இந்தத் தயாரிப்புக்கான கதை உருவாக்கத்துக்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்ட மிஷ்கின், படப்பிடிப்பைத் தொடங்கி விட்டார். படத்துக்கு "பிசாசு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. "நந்தலாலா', "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' என யாரும் தொடாத கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து வந்த மிஷ்கின், இப்படத்தை அதே பாணியில் உருவாக்குகிறார். "வணிக நோக்கம் பற்றிக் கவலையில்லை; உங்களிடமிருந்து இன்னொரு நல்ல சினிமாவை எதிர்பார்க்கிறேன்' என பாலா வாக்கு அளித்து விட, அந்தச் சுதந்திரத்துக்கு ஏற்ப இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார். சமீபத்தில் திகில் படங்களுக்கு அதிக வரவேற்பு உருவாகி இருப்பதால் இப்படமும் அதே பாணியில் உருவாகிறது. நடிகர்கள் பற்றி அறிவிப்பு வராத நிலையில், மிஷ்கின் முக்கிய பாத்திரம் ஏற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14-ஆம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.