நெடுங்கதை

ஏழைகளின் ஊட்டி ஏற்காடு. கண்களுக்கு குளிர்ச்சியாய் பசுமையும், உடலுக்கு இதமான குளிருமாய் இருந்தது.
நெடுங்கதை

7

ஏழைகளின் ஊட்டி ஏற்காடு. கண்களுக்கு குளிர்ச்சியாய் பசுமையும், உடலுக்கு இதமான குளிருமாய் இருந்தது.

ஏரி, பேருந்து நிலையம், பூங்கா எல்லாம் அருகருகிலேயே இருந்தது. சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தும் ஆரவாரமில்லாமல் மிதமான நடமாட்டத்தில் நகரம் இருந்தது. மக்கள் எல்லா இடங்களிலும் இருந்தார்கள். ஏரியில் படகு விட்டார்கள். பூங்காக்களில் பெண்கள் கூட்டம். குழந்தைகள் கும்மாளம்.

நிர்மல் வேடிக்கை பார்த்துக் கொண்டே வரிசையாய் நின்ற ஆட்டோவை நோக்கிச் சென்றான்.

""சார் ஆட்டோ'' -   அவர்களில் ஒருத்தன் இவனை நெருங்கி சவாரி பிடித்தான். 

""அன்னை அபிராமி முதியோர் இல்லம் போகணும்''

""வாங்க''

ஆட்டோ ஒரு சின்ன மேடு ஏறி இறங்கி அதன் வாசலில் நின்றது.

பெரிய வாசலில் அரை வட்ட வடிவில் அன்னை அபிராமி முதியோர் காப்பகம் என்று பெரிதாக எழுதப்பட்டு இருந்தது. கதவு அகலத் திறந்து வெளிர் நீல நிற சீருடையில் வாயில் காப்பாளி அமர்ந்திருந்தார்.  வாசல் கதவில் "இடம் காலி இல்லை' என்று அறிவிப்பு தொங்கியது.

வாசல் கதவைப் பார்த்தபடி பர்ண சாலை அமைப்பில் அலுவலகம். அதன் நடுவில் மேசை நாற்காலியில்   நாற்பத்தைந்து வயதில் ஒரு பொறுப்பாளர். அவர் முன் ஒரு கணினி. அருகில் ஓர் உதவியாளர். அவர் மேசை மீது சில கோப்புகள், கணினி. அலுவலகத்தைச் சுற்றிலும் தோட்டம். அழகாய் வெட்டிவிடப் பட்ட வண்ண வண்ணச் செடிகள், பூக்கள். அவற்றுக்கு இடையே அங்கங்கே ஓய்வெடுக்க சிமெண்ட் பெஞ்சுகள். அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஜோடியாகவும், தனித்தும் முதியோர்கள்.  பின்னால் ரொம்ப தாராளமாக இடைவெளி விட்டு முதியோர்கள் தங்குமிடங்கள்.

நிர்மல் வாசலை நெருங்க....

""சார் யாரைப் பார்க்கணும்''   காவலாளி தடுத்து விசாரித்தான்.

""அலுவலகம் போகணும்''

பேசாமல் வழி விட்டான்.

நிழல் தெரிய.... பொறுப்பாளர் நிமிர்ந்தார்.

நிர்மல் அவருக்கு வணக்கம் சொல்லி தான் வந்த விசயத்தைச் சொல்லி அமர்ந்தான்.

""குருஜி  அன்பரசன் இருக்காரா?''  பொறுப்பாளர் அருகில் இருந்தவரைக் கேட்டார்.

""இல்லே சார்''

""எங்கே?'' 

""நாகப்பட்டினம் போயிருக்கார் சார்''

""ஏன்?'' 

""தன் முதல் மனைவி பையனைத் தேடிப் போறேன்னு சொன்னார்''

இதைக் கேட்டு நிர்மல் துணுக்குற்றான்.

""மகன் அப்பாவைத் தேடி வந்திருக்கிறார். அப்பா பிள்ளையைத் தேடிப் போயிருக்கிறார். என்ன விசித்திரம்?'' வியந்த பொறுப்பாளர், ""எப்போ போனார்?'' கேட்டார்.

""போய் ஒரு வாரமாச்சு. அங்கே தன் முதல் மனைவி தோழியைப் பார்த்து தாய் புள்ளையைப் பத்தி விசாரிக்கணும்ன்னு போனார். பேர் மும்தாஜ்ன்னு சொன்னார்''

""மும்தாஜ் முகவரி தெரியுமா?'' 

""சொல்லலை சார். நானும் கேட்கலை''

""ஏன்?'' 

""அது அவர் சொந்த விசயம்ன்னு விட்டேன்''

""தப்பு. இப்போ அவரைக் காணோம்ன்னா எப்படித் தேட?  சரி, அவருக்குப் போனைப் போடுங்க. நீங்க தேடிப் போன மகன் இங்கே வந்திருக்கார்ன்னு சேதி சொல்லுங்க''

குருஜி தன் மேசை மேலிருந்த தொலைபேசியை எடுத்து அன்பரசனின் கைபேசி எண்களை அழுத்தி காதில் வைத்தார்.

"நீங்க தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொலைபேசி எண் சுவிட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது'  தகவல் சொல்லியது.

அதை குருஜி அப்படியே பொறுப்பாளரிடம் சொன்னார்.

பொறுப்பாளர் தன் கைபேசியை எடுத்து அதே எண்களுக்குத் தொடர்பு கொண்டு சோதனை செய்தார்.

அதே செய்தி இவருக்கும் ஒலித்தது.

அன்பரசன் இப்படியெல்லாம் அநாவசியமாக கைபேசியை அணைக்க மாட்டார். ஒருவேளை அதைப் பயணத்தின்போது  தொலைச்சிருப்பாரா?''   முணுமுணுத்து பொறுப்பாளர் நெற்றியில் கை வைத்து, குழப்பமாக குருஜியைப் பார்த்தார்.

""இருக்கலாம் சார்''

அன்பரசன் வைச்சிருக்கிறது அதி நவீன கைபேசி. அதிலேயே வெளிநாட்டில் இருக்கும் பையன் பேரன் பேத்திகளோடு 3ஜி அலைக்கற்றையில் முகம் பார்த்துப் பேசுவார். அவ்வளவு அஜாக்கிரதையாய் அதை தவற விட வாய்ப்பில்லே. திருடு போயிருக்குமா?   பொறுப்பாளார்  மூளையைக் கசக்கினார்.

நிர்மலுக்குக் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத ஏமாற்றம். நாகப்பட்டினத்தில் அம்மாவின் தோழி யார்?   யோசனையைத் திசை திருப்பினான்.

அம்மா பள்ளிக்கூடம் இவன் பள்ளிக்கூடமும் ஒரே ஊரில் அருகருகில் இருந்தாலும் நாலைந்து முறைதான் அம்மா பள்ளிக்குச் சென்றிருக்கிறான். மழலைப் பள்ளியில் சேர்த்த ஆரம்ப காலத்தில் எல்லாக் குழந்தைகளையும் போல் இவனுக்கும் அழுகை முறை. அழுதான். அழுகை அதிகமாகும் போது பள்ளி ஆயாவால் இவன் அவளிடம் அழைத்துச் செல்லப்பட்டான்.

அம்மா பள்ளி, பெரிய அரசாங்கப் பள்ளி. இவன் அங்கு ஆசிரியைகள் தங்கும் அறையில்தான் எப்போதும் தங்க வைக்கப்பட்டான்.

அங்கு அம்மாவுடன் வேலைப் பார்க்கும் அழகு அழகு ஆசிரியைகள், வருவார்கள், கூடுவார்கள், வகுப்பறைகளுக்குச் செல்வார்கள். அவர்கள், ""ஏய்  வள்ளிப் பையா அழகா இருக்கே? என்று வந்து கொஞ்சுவார்கள். தாவாங்கொட்டையைத் தடவி முத்தம் கொடுத்துச் செல்வார்கள்.

அம்மாவும் ஒரு முஸ்லீம் பெண்ணும் மட்டும் இணையாக வந்து செல்வார்கள். அந்த முஸ்லீம் பெண் கருப்பு நிற பர்தா போட்டு முகத்திரையைத் தூக்கி விட்டிருப்பாள். பள்ளிக்கூட வளாகத்திலெல்லாம் அவள் அப்படித்தான் வலம் வருவாள். அவளே பள்ளியை விட்டு வெளியே வந்தால் முகத்திரையை இழுத்து விட்டு முகத்தை மறைத்துச் செல்வாள். பொட்டில்லாமல் அவள் முகமும் அழகாய் இருக்கும். அவளும் வந்து இவனைக் கொஞ்சுவாள். எல்லாம் அந்த பள்ளியில் வேலை செய்த வரையில்தான். இவள் விவாகரத்துப் பெற்று பெங்களுர் வந்து குடியேறிய பிறகு தாய் யாருடனும் பேசியதாய் ஞாபகம் இல்லை.

வேலை, வீடு, தாய், மகன் என்று இப்படித்தான் அவள் எல்லா உறவு நட்புகளையும் துண்டித்துத் தனித் தீவாய் வாழ்ந்தாள். எங்கிருந்தும் கடிதம், தொலைபேசி, கைபேசி பேச்சு என்று எந்த ஒரு தொடர்பும் இல்லை. இவனுக்குப் பெண் தேடும் படலத்திலும் அலட்டலில்லை. கல்யாண மாலையில் தேடினாள். நெட்டில் வலைவீசினாள். நித்யா கிடைத்தாள். முடித்தாள்.

""என்ன சார் யோசனை?''   பொறுப்பாளர் நிர்மலைக் கலைத்தார். 

""ஒண்ணுமில்லே சார். அப்பா நாகப்பட்டினத்துக்குத் தேடிப் போன ஆளைத் தேடறேன்.  யார்ன்னு யோசனை. சின்ன வயசுல பார்த்தது. சரியா முகம் ஞாபகத்துக்கு வரலை''

பொறுப்பாளர் சிறிது நேரம் யோசனையிலிருந்தார். அடுத்து ஒரு முடிவிற்கு வந்தவராய்......

""குருஜி  அன்பரசன் அறை சாவி உங்களிடம் குடுத்துப் போனாரா?''   திடீரென்று கேட்டார்.

""குடுத்திருக்கார் சார்''

""எடுத்துக்கிட்டு கிளம்புங்க. அங்கே அவர் தேடிப்போன இடம் பத்தி தகவல் கிடைக்குமான்னு பார்க்கலாம்'' எழுந்தார்.

""ஆளில்லா சமயம் அவர் அறையைப் பரிசோதிக்கிறது தப்பில்லையா சார்?''  நிர்மல் வாய்வரை வந்ததைக் கேட்டான்.

""தப்புத்தான். வேறு வழி?  யாரும் அனாதை இல்லே நிர்மல். எந்த மனித உயிரும் அல்பம் கிடையாது. அதுக்காகத்தான் யார் எங்கே போனாலும் யார் வந்து அழைச்சுப் போனாலும் எங்கள் அனுமதி பெற்றுத்தான் போகணும். அறை சாவியை ஒப்படைச்சுட்டுப் போகணும் என்பது இங்கே சட்டம், கண்டிப்பு. இதுவரையில் தப்பில்லே. இப்போ சின்ன இடறல். இப்போ....உங்களுக்கே உங்க அப்பா எங்கே போயிருக்கார்ன்னு நாங்க பதில் சொல்லணும். யோசிச்சுப் பாருங்க'' என்றார்.

நிர்மலுக்கு அவர் யோசனை சரியாகப் பட்டது. எழுந்தான்.

மூவரும் சாவியுடன் நடந்தார்கள்.

""சார்  இது என் கனவு காப்பகம். இங்கே பணக்காரனும் பரம ஏழையும் கடைசி காலத்தில் பாதுகாப்பா தங்கணும். நல்ல முறையில் இருக்கணும் என்கிற எண்ணத்தோடு வடிவமைச்சு இயக்கி வர்றேன்'' பொறுப்பாளர் சொல்லி நடந்தார்.

""உங்க அப்பா தங்கி இருக்கிற இரண்டு மாடிக் கட்டிடங்கள் இரண்டிலும் முப்பது முப்பதாய் அறுபதாய் இரண்டு கட்டிடங்களிலும் மொத்தம் நூத்தி இருப்பது அறைகள் இருக்கு. அத்தனை அறைகளிலும் தனி கட்டில் மெத்தை, மேசை நாற்காலி, இணைப்பு கழிவறை குளியலறை. இது வசதியானவர்கள் தங்கும் இடம். அடுத்து, ரெண்டு கட்டிடங்கள் சாதாரண நடுத்தர மக்கள் தங்குமிடம். இதுவும் ரெண்டடுக்குதான் என்றாலும் பெரிய ஹால். அதில் மருத்துவமனைகள் போல் கட்டில் மெத்தை, தலைமாட்டில் அவர்கள் உடமைகள் வைத்துக் கொள்ள.... பெட்டிகள். இங்கே எல்லாரும் சுதந்திரமாகப் பழகலாம். தினம் ஒரு மணி நேரம் மருத்துவர் வர்றாப் போல ஒரு மருத்துவமனை. மூன்று ஷிப்ட்ல ஆறு செவிலிகள். அப்புறம் தரமான சாப்பாடு. நான் இங்கே மத்தவங்க பிறந்த நாள், இறந்த நாள், திருமண நாள் கொண்டாட்ட சாப்பாடு, சமையல், பலகாரங்களை அனுமதிக்கிறது இல்லே. அவுங்க, ஒரு நாள் கொண்டாட்டத்துக்காக கண்டதையெல்லாம் கொடுத்து முதியோர்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்துட்டுப் போவாங்க. பாவம் வயசான காலத்தில் இவுங்கதான் சிரமப்படுவாங்க. இதனால் நான் அதையெல்லாம் அனுமதிக்கிறதில்லே. மத்தப்படி இங்கே தோட்ட வேலைக்கென்று வேலைக்காரர்கள். முதியோர்களைக் கவனிக்க ஆயாக்கள்ன்னு ரொம்ப  அருமையாய்ப் பண்ணி இருக்கேன்'' சொல்லி முதல் மாடியில் 26 ஆம் எண்ணுள்ள அறை முன் நின்றார்.

குருஜி கதவில் சாவியை விட்டுத் திறந்தார். உள்ளே கட்டில் சுத்தமாக இருந்தது. போர்வைகள் மடித்து அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.  படுக்கை கன்னாபின்னாவென்று இருந்தால் அவருக்குப் பிடிக்காது. பார்த்தாலே படுக்க வேண்டும்போல் தோன்ற வேண்டும் அவருக்கு.

நிர்மல் அலமாரியைத் திறந்தான். அவர் ஆடை, சட்டை, வேட்டி, பேண்டுகள். அப்பா வாசனை அடித்தது. இவனுக்கு அப்பா வாசனைப் பிடிக்கும் அவரோடு இருந்தவரை அவரைக் கட்டிக்கொண்டுதான் படுத்தான்.

குருஜியும் பொறுப்பாளரும் ஆளாளுக்கு ஆராய்ந்தார்கள்.

நிர்மல் அலமாரியில் உள்ள இழுப்பறையை இழுத்தான். அதில் அப்பா டைரி இருந்தது. எடுத்தான். பிரித்தான். கருப்பு வெள்ளையில் அம்மாவும் அந்த முஸ்லீம் தோழியும் புகைப்படமாய்க் கீழே விழுந்தார்கள். எடுத்துத் திருப்பிப் பார்த்தான். "அ. மும்தாஜ், நீலா கிழக்கு வீதி, நாகப்பட்டினம்' விலாசம் இருந்தது.

8

இந்த விலாசத்தில் அம்மாவின் தோழி கிடைப்பாளா? இல்லை, அப்பாவைப் போன்று குடும்பம் இடம் மாறிப் போயிருக்குமா  இல்லை, வேலை செய்த திருப்புறம்பியத்திலேயே தங்கி குடி இருப்பாளா, அம்மா அப்பா ஓய்வு பெற்றதைப் போல் இவளும் ஓய்வு பெற்று எங்கு தங்கி இருப்பாள்?  அப்பா எந்த தைரியத்தில் இவளைத் தேடிப் போயிருக்கிறார்? தனக்கு இவளை அடையாளம் தெரியுமா  - பேருந்து பயணத்தில் நிர்மல் எண்ணங்கள் இப்படியெல்லாம் சுழன்றன.

அப்பா எந்த தைரியத்தில் நாகப்பட்டினம் போயிருக்கிறார்?  அப்பா அறையிலிருந்து எடுத்து வந்த அந்தப் புகைப்படத்தை  எடுத்துப் பார்த்தான் நிர்மல்.

மார்பளவில் இளம் வயதில் அம்மாவும் மும்தாஜும் புன்னகையுடன் இருந்தார்கள்.

அம்மா எதற்காக திருமணம் செய்து விவாகரத்துப் பெற்று, மகனைத் தவிர எல்லா உறவுகளையும் தள்ளி தனி மனுசியாய் வாழ்ந்து இறந்தாள். அவள் எதை எதிர்பார்த்தாள். அது கிடைக்காமல் இப்படி வாழ்ந்து இறந்தாள். அவளுக்கு வேண்டியது என்ன? குணம் எப்படி? அவள் ஒரு புழு பூச்சியைப் போல் வாழ்ந்தாள், இறந்தாளா? இல்லை, இது என் குணம். நான் இப்படி. என்னால் எதற்கும் வளைந்து நெளிந்து கொடுத்து வாழ முடியாது. நான் அக்கம் பக்கம் திரும்பாத நேர்க்கோட்டுப் பாதை. செத்தாளா? 

தன்னையும் இப்படித்தான் வளர்த்தாளா?  தனக்கு ஒரு துணை வேண்டிதான் அணைத்தாளா?  தாயன்பு, குழந்தைப் பாசத்தால்  தன்னைத் தேர்ந்தெடுக்கவில்லை, வளர்க்கவில்லையா? நான் பள்ளிக்கூடம் சென்றேன், படித்தேன், வேலைக்குச் சென்றேன், அம்மா பார்த்த பெண்ணை முடித்தேன், பிள்ளைகள் பெற்றேன். அம்மாவைத் தாண்டி நான் எதையும் செய்யவில்லை, மீறவில்லை. அம்மாவும் தன்னை அணைத்து அன்பு காட்டி, பாசம் காட்டி, நேசம் கொட்டி வளர்க்கவில்லை.    சிறுவயதில் அப்பாவை நினைக்காதே, கேட்காதே என்பதுதான் அம்மா கண்டிப்பு, கட்டுப்பாடு. அதைச் செய்யாதே இதைச் செய்யாதே, அவனோடு சேராதே, இவரோடு பேசாதே என்று மற்ற எதிலும் அவள் தலையீடு இல்லை. அம்மாவிற்கும் பிள்ளைக்கும் ஒட்டுமில்லாத உறவுமில்லாத வாழ்க்கை இவனுக்குப் புரிந்தது.

ஆனாலும் நான் அம்மாவைப் போல் யாரையும் ஒதுக்காமல் எல்லாரையும் வெறுக்காமல் வாழ்கிறேன். எப்படி?  இது யாரையும் காயம் படுத்தாமல் அனுசரித்துப் போகிற அப்பா குணம். இது தானாக வந்த வரம். அப்பாவினால் பெற்ற குணம். - நிர்மலுக்குள் இப்படி புரிதல் தோன்றியது.

அம்மா இன்றிருந்தால் 65 வயது. 60ல் ஓய்வு பெற்று, தனக்குத் திருமணம் முடித்து, மருமகள் பேரப் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாய் வாழ்ந்து, இறந்தாள். அப்படி என்றால் இந்த மும்தாஜுக்கும் வயசு 65 அல்லது எழுபது. இப்படி கணக்குப் போட்டு மும்தாஜை வயதான தோற்றத்தில் கற்பனை செய்தான். கண்டு பிடிக்க முடியுமா?  இருப்பாளா? இறந்திருப்பாளா?  மனசு குழப்பியது.

அப்பா எப்படி இவளைத் தேடிப் புறப்பட்டார். விவாகரத்திற்குப் பின் இவளிடமிருந்து தன் மனைவி, மகன் இருப்பிடம் சேதி அறிந்து கொண்டிருந்தாரா? அம்மா, தனக்குத் தெரியாமல் தோழியுடன் பேச்சு வார்த்தையில் இருந்தாளா? அப்பா இவளைத் தேடிப் போக இதைவிட எது சரியான காரணமாக இருக்க முடியும்? இல்லை, தன்னைப் போல்....பாசம் துணிந்து  புறப்பட்டாரா?

மும்தாஜின் வயதான தோற்றத்தைக் கற்பனையில் கொண்டு வந்து கண் மூடினான் நிர்மல். அப்படியே தூங்கியும் போனான். விழித்துப் பார்க்கும்போது பேருந்து நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் நின்று பயணிகள் எல்லோரும் இறங்கினார்கள்.

காலை கண் விழிப்பில் பேருந்து நிலையம் பளிச்சென்றிருந்தது. எல்லா கடை வாசல்களும் பெருக்கி,  ஈக்கள் மொய்க்காமலிருக்க மஞ்சள் நீர் தெளித்து, கடைகளிலிருந்தவர்களும் குளித்து, பளிச்சென்ற முகத்தோடு காணப்பட்டார்கள். இது எங்கும் காலை நேரத்திற்கே உள்ள களை. நேரம் செல்லச் செல்ல இந்த அமைப்பே மாறும். கடைக்காரர் முகங்களும் கருகும்.

நிர்மல் ஆட்டோ பிடித்து அந்த விலாசத்தில் இறங்கினான்.

மும்தாஜ் பவனம் வெள்ளை நிறத்தில் பெரிய மாளிகையாய் பழங்காலக் கட்டிடமாக இருந்தது. வாசல் கதவு சாத்தி இருந்தது.,

அழைப்பு மணி அழுத்தி காத்திருந்தான்.

தலையில் வெள்ளை நிற குல்லா, மல் பனியன், குறு வெண்தாடி, வெண் கைலியுடன் ஒரு வயோதிக முஸ்லீம் பெரியவர் திறப்பார் என்று எதிர்பார்த்தவனுக்குள் சின்ன ஏமாற்றம்.

ஐந்து வயதில் கால்சட்டை, மேல் சட்டை போட்ட பையன் திறந்தான். ஆளைப்  பார்த்து விட்டு, ""அம்மா  யாரோ வந்திருக்கா'' பிராமணர் பாஷையில் சொல்லி உள்ளே ஓடினான். 

பக்கத்து வீட்டு பிள்ளையா, தத்துப் பிள்ளையா, அப்பா அந்த இனம், பெண் இந்த இனமா  சட்டென்று நிர்மலுக்குள் குழப்பம்.  

பளிச்சென்று வெளிர் நிறத்தில் இளம் பெண்ணொருத்தி தலையில் முக்காட்டுடன் எட்டிப் பார்த்தாள். 

""யார் சார்?''   கேட்டாள்.

""மும்தாஜ் வீடு...'' 

""இதுதான்''

""அவுங்க இருக்காங்களா?'' 

""இருக்காக''

""பார்க்கணும்''

""நீங்க?'' 

""அவுங்க தோழி வள்ளி பையன். நீங்க?'' 

""மும்தாஜ் மகள். வாங்க'' அழைத்து உள்ளே சென்றாள்.

சுவரில்....கறுப்பு வெள்ளை, கலர் படங்களில் நிறையப் புகைப்படங்கள் மாட்டி இருந்தன. அதில் இவன் கையில் இருக்கும் புகைப்படமும் கண்ணாடி சட்டமிட்டு மாட்டி பழசாய் பழுப்பேறி இருந்தது.

தலையில் பூப்போட்ட மஞ்சள் துணி முக்காடிட்டு தடிமான வயதான முஸ்லீம் பெண் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். கண்ணில் தடி கண்ணாடி. முகம் மாறி அவள் மும்தாஜ் என்று நிர்மல் அவளை அடையாளம் கண்டு கொள்ள ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருந்தது.

""அத்தா உங்களை யாரோ பார்க்க வந்திருக்காக'' சொல்லி மகள் அகன்றாள். உள்ளிருந்து வந்த சிறுவனும் அவளுடன் சேர்ந்து மறைந்தான்.

""ஆரு?''   அவள் இவனை ஏறிட்டாள்.

சொன்னான்.

""வள்ளி பையனா நீ?''  

""ஆமா''

""அடையாளம் தெரியலை.... உன்னை நாலைஞ்சு வயசுல பார்த்தது. அந்த முகச்சாடை இப்போ கொஞ்சமா இருக்கு. உட்கார்''

""எனக்கும் உங்களைக் கண்டுபிடிக்க முடியலை'' அமர்ந்தான்.

""அம்மா எப்படி இருக்கா?'' 

""மேலே எப்படி இருக்காங்கன்னு தெரியலை'' 

""செத்துட்டாளா?'' 

""ஆமா. ஆயுசு கம்மி''

""என்னை வைச்சு சொல்றீயா?'' 

""இல்லே. பொதுவா''

""நீ?'' 

தன் படிப்பு, வேலை, மனைவி, மக்கள் எல்லாவற்றையும் சொன்னான்.

எல்லாவற்றையும் அமைதியாய்க் கேட்ட மும்தாஜ்,  ""உன் அம்மா ஒரு வித்தியாசமான மனுசி'' மெல்ல சொல்லி பெருமூச்சு விட்டாள்.

நிர்மல் வாயைத் திறக்காமல் அமைதியாய் இருந்தான். 

அவளுக்குத் தன்னைச் சார்ந்தவர்கள் எல்லாரும்  சரியான பாதையில நடக்கணும். மாறினால் மீறிப் போவாள். கோபம். பேசமாட்டாள், துண்டித்துக் கொள்வாள்''

இப்போதும் இவன் பேசவில்லை.

""நானும் வள்ளியும் கல்லூரிப் படிக்கும் காலத்திலிருந்தே உயிருக்குயிரான  தோழிங்க. அவளுக்குச் சொந்த ஊர் கும்பகோணம். எனக்கு நாகப்பட்டினம். நான் விடுதியில் தங்கி படிச்சேன். திரும்புறம்பியத்தில் ரெண்டு பேருக்கும் வேலை கிடைக்க ரொம்ப நெருக்கம். அப்போதான் உன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் திருமணம்.

நீ பொறந்து மூணு வருசம் வரை பொண்டாட்டி புருசன் சந்தோசமா இருந்தாங்க. அடுத்துதான் உன் அம்மாவுக்கு அப்பா மேல சந்தேகம். எப்பவும் உன் அப்பாவைப் பத்தி புகார் கூறுவாள், உம்முன்னு இருப்பாள். நானும் அப்பாவை விசாரிச்சேன். மனைவியின் வீண் சந்தேகத்தை விலாவாரியாய்ச் சொன்னார். எனக்குப் புரிஞ்சுது. நான் அவளுக்கு ரொம்ப புத்தி சொன்னேன். கேட்கலை. அவள் குணம்  வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுடுச்சு. கேட்காமல் விவாகரத்து வாங்கி பெங்களுர் கிளம்பிட்டாள். அடுத்து என் திருமணத்துக்குக் கூட அவ திரும்பலை''

""ஏன்?''  

""என் கணவர் பிராமிண். காதல் திருமணம். அவளுக்குப் பத்திரிக்கை அனுப்பினேன். வரலை. அதுக்கப்புறம் நான் ரெண்டு மூன்று தரம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். கெட்ட குணம். எடுத்தவுடன் பேசாமல் வைத்துவிடுவாள். என் மேல ரொம்ப கோபம். அவள் குணம் தெரிஞ்சு நானும் விட்டுட்டேன்''

முடித்து மூச்சுவிட்டாள். 

நிர்மலுக்கு இப்போது அம்மாவின் குணம் தெள்ளத் தெளிவாய்த் தெரிந்தது.

""அத்தே  உங்களை அப்பா தேடி வந்தாரா?'' கேட்டான்.

""அவருக்குப் பத்திரிகையைத் தபாலில் அனுப்பினேன். திருமணத்துக்கு வந்தார். அதன் பிறகு அவரும் மறந்தார். இப்போதான்.....எனக்கும் வள்ளிக்கும் தொடர்பு இருக்கும்ன்னு நெனைச்சு விவரம் விசாரிக்க என்னைத் தேடி வந்தார்''.

""எப்போ?'' 

""தேதி சரியா ஞாபகமில்லே. ஆனா ஒரு வாரத்துக்கு முன் தேடி வந்தார். எனக்கு என் மகனைப் பார்க்கணும், அவன் வேணும்... வள்ளி விலாசம் வேணும்ன்னு கேட்டார். நான் எங்கள் துண்டிப்பு சேதியைச் சொல்லி, என்கிட்ட அவள் பழைய விலாசமும் பழைய தொலை பேசி எண்ணும்தான் இருக்கு. வள்ளி இப்போ அந்த விலாசத்துல இருப்பாளா இல்லையா தெரியலை. இருக்க வாய்ப்பில்லே. அது வாடகை வீடு. இப்போ சொந்த வீடு கட்டி வேறு இடம் போயிருக்கலாம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அங்கே இருப்பாள். முயற்சி செய்ங்க சொல்லி விலாசத்தைக் கொடுத்தேன். புறப்பட்டுப் போனார்.  நீங்க எங்கே இருக்கீங்க?'' கேட்டு நிர்மலைப் பார்த்தாள். 

""அந்த வாடகை வீட்டையே விலைக்கு வாங்கி அங்கேயேதான் அத்தே இருக்கோம்''

""அப்போ உன் அப்பா அதிர்ஷ்டக்காரர். கண்டு பிடிச்சிருப்பார்'' என்றாள்.

""இல்லே. கண்டு பிடிக்கலை. அப்படி கண்டு பிடிச்சிருந்தால் இந்த நேரம் சேதி வந்திருக்கும்.  என் மனைவி தகவல் கொடுத்திருப்பாள். அவருக்காக நான் பத்திரிக்கை விளம்பரம், நெட் விளம்பரம் எல்லாம் செய்திருக்கேன்''  சொல்லி தினசரிகளைக் காட்டினான்.

""அப்படின்னா தேடுவார்?'' என்று பத்திரிகைகளைத் திருப்பினாள் மும்தாஜ்.

""இருக்கலாம்''  என்று யோசனையுடன் நகத்தைக் கடித்த நிர்மல், ""அப்பா கைபேசி எண் இருக்கா?''  கேட்டான்.

""தொலைஞ்ச உறவு. விடுவேனா....நானும் என் தொலைபேசி எண்ணைக் கொடுத்து அவரிடமும் வாங்கி வைச்சிருக்கேன். குறிச்சுக்கோ'' அவள் அருகிலிருந்த நோட்டை எடுத்து சொன்னாள்.

நிர்மல் அதை தன் கைபேசியில் பதிப்பித்து தொடர்பு கொண்டான்.

"நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது' -பதில் வந்தது. அடுத்தடுத்து  முயற்சிகளிலும் அதே பதில்.

அடுத்து தன் மனைவியோடு தொடர்பு கொண்டான்.

""அப்பா வந்தாரா?''   கேட்டான்.

""இல்லீயே...'' 

அணைத்தான். எங்கே போயிருப்பார்?   யோசனை.

""மறுபடியும் உங்களைப் பார்க்கிறேன் அத்தே'' எழுந்தான்.

""பார்க்கிறதோடு நிறுத்தாதே நிர்மல். நம் உறவு தொடரணும். அப்பாவைக் கண்டுபிடிச்சதும் சேதி சொல்லு'' சொன்னாள்.

விடை பெற்று வெளியே வந்தான்.

அப்பா பெங்களுரில் எங்கு எப்படி அலைகிறாரோ  கவலையில் பேருந்து நிலையம்  வந்து தாமதமில்லாமல் செல்ல கண்ணில் பட்ட திருச்சி பேருந்தில் ஏறினான்.

அது அம்மாபேட்டையில்.....

9

நிர்மல் கண்விழிக்கும்போது தலையில், காலில் கட்டு. விண் விண்ணென்ற வலி. தலையை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தான். வரிசையாய்க் கட்டில்கள், நோயாளிகள். நடமாடும் செவிலிகள்.

மருத்துவமனை துல்லியமாகத் தெரிந்தது.

எப்படி வந்தோம், என்ன நடந்தது,  இவனுக்குள் கேள்விகள் முளைக்க....கட்டிலுக்கு முன் தள்ளு வண்டியில் மருந்துகளுடன் நகரும் செவிலியை, ""நர்ஸ்''  அழைத்தான்.

அவள் திரும்பினாள். 

""என்ன வேணும்?''   பின்னால் ஒரு பெண் குரல் கேட்டது.

யார்?   திரும்பிப் பார்த்தான். தலைமாட்டில் கையில் ஊசியுடன் ஒரு செவிலி.

பக்கவாட்டில் வந்து, ""திரும்பிப் படுங்க. இடுப்புல ஊசி போடணும்''

திரும்பிப் படுத்தான். பூப் போல் விரல் வைத்து வலி தெரியாமல் அவள் ஊசிப் போட்டாள். ஒரு சிலருக்குத் தான் இப்படி நோயாளிக்கு வலி இல்லாமல் ஊசிப் போடத் தெரியும். அது  அவர்கள் கைவாகு. தொழில் நுணுக்கம். சிலர் ஊசியைக் குத்தினாலே போதும் சுருக்கென்று  வலி வரும். சிரஞ்சியை அழுத்தி மருந்து ஏற்றும்போது வலி இன்னும் அதிகமாகும். சிலர் போட்டால் போட்ட இடம் வீங்கி விடும். மேலும் சிலருக்கு மருந்து பரவி உடலில் கலக்காமல் அது கட்டியாகி அந்த இடத்தை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வரும்.

இவள் ஊசியைப் போட்டதுமில்லாமல், ""நல்லா தேய்ங்க'' என்று நோயாளிக்குக் கட்டளையிடாமல் நன்றாகத் தேய்த்தும் விட்டாள்.

""நன்றி சிஸ்டர்''   சொல்ல வேண்டும்போலிருந்தது சொன்னான்.

""பரவாயில்லே. எதுக்கு அழைச்சீங்க?'' 

""நா....நான் எப்படி  இங்கே வந்தேன்னு தெரியலை''

""சொல்றேன். நீங்க நாகப்பட்டினத்தில் ஏறி பயணம் செய்த திருச்சி பேருந்து அம்மாப்பேட்டையில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து. நிறைய பேருக்குப் பலத்த காயம், அடி. அதுல நீங்க ஒருத்தர். ஓட்டுநரும் நடத்துநரும் ஐ.சி.,யுல இருக்காங்க. உயிருக்கு ஆபத்தில்லே. அபாயக்கட்டத்தைத் தாண்டியாச்சு''

""இது என்னைக்கு நடந்துது?''   எச்சில் விழுங்கினான்

""முந்தா நேத்து''

""இது எந்த இடம்?'' 

""தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி''

""என் சூட்கேஸ், கைபேசி...?''

""சூட்கேஸ் நீங்க படுத்திருக்கிற கட்டிலுக்கு அடியில் இருக்கு. உங்க கைபேசி,  பாக்கெட்ல வைச்சிருந்த அலுவலக அடையாள அட்டை, பர்ஸ் தலையணைக்குக் கீழே இருக்கு''

""எ.....என் வீட்டுக்கு சேதி....''

""சொல்லலை. வீட்ல அதிர்ச்சியைத் தாங்க முடியாதவர்கள் யாராவது இருக்கலாம்ன்னுதான் யார் வீட்டிலும் தகவல் தெரிவிக்கலை. நோயாளிகளைக் கேட்ட பிறகு தெரிவிக்கலாம்ன்னு பெரிய டாக்டர் உத்தரவு. ஓட்டுநர் நடந்துநர் மட்டும் அபாயக்கட்டத்துல இருக்கிறதால தகவல் தெரிவிச்சு உறவினர்கள் வந்திருக்காங்க. நீங்க இன்னைக்குத்தான் கண்விழிச்சிருக்கீங்க. எனக்குத் தெரிஞ்சது இவ்வளவுதான்?''

""நா....நான் வீட்டுக்கு நான் தகவல் சொல்லிக்கலாமா?'' 

""அது உங்க விருப்பம். தாராளமா சொல்லிக்கலாம்'' அவள் நகர்ந்தாள். ஒரு வெள்ளுடை தேவதை வந்து தனக்கு மருத்துவம் பார்த்து சேதி சொல்லிவிட்டுச் செல்வது போலிருந்தது.

தலையணை அடியில் கைவிட்டு கைபேசி எடுத்தான். உயிர்ப்பித்தான் செத்துப் போயிருந்தது. சார்ஜ் போட வேண்டும்  சுற்றும் முற்றும் பார்த்தான். அதே தேவதை திரும்பி வந்தாள்.

""சார்ஜ் இல்லையா?''   கேட்டாள்.

""ஆமா. பெட்டியைத் திறந்து அதை எடுக்கணும்'' 

""அதுக்கான அவசியமில்லே. இதுக்கான சார்ஜர் என்கிட்ட இருக்கு. எடுத்து வர்றேன். உங்க தலைமாட்டிலேயே போட்டுத் தர்றேன்'' சொல்லிவிட்டுச் சென்றாள். ஐந்து நிமிடத்தில் வந்து செய்துவிட்டும் சென்றாள். இப்படி நோயாளி குறிப்பறிந்து நடப்பவர்கள் எத்தனை பேர்?   நெகிழ்ந்தான். 

சில நிகழ்வுகள் எதிர்பாராதது. மனிதனை மீறியவை. நடப்பவை யாவும் நல்லவை என்று நினைத்தால் எதுவும் கடந்து போகும்.

தலைமாட்டில் இருந்த கைபேசிக்கு உயிர் வந்ததும் ஒலித்தது.

அழைப்பது மனைவி நித்யா என்பதை அதன் அழைப்பு ஓசையிலேயே தெரிந்தது. இவனுக்கும் அவளுக்கும்  பிடித்தமான பாட்டு.

பாட்டு முடியுமுன் எடுத்தான்.

""என்ன ரெண்டு நாளா போனைக் காணோம்?''

""மன்னிக்கணும். வேலையாய் இருந்தேன். பேச முடியலை''

""எங்கே இருக்கீங்க?'' 

""தஞ்சாவூர்ல''

""தேடினது போதும். வாங்க''

""ஏன்?'' 

""உங்க அப்பா வந்தாச்சு?''

இவனுக்குள், ஆயிரம் தாமரை மொட்டுகளே ஆனந்த கும்மி பாடுங்களேன் பாடினார்கள்.

""எப்போ?''   தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான்.

""மூணு நாளாச்சு''

""நித்யா'' ஆனந்தம் உணர்ச்சிப் பெருக்கை அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் தழுதழுத்தான். 

""நிசம்தாங்க. நீங்க கொடுத்த விளம்பரத்தோடு எப்படியோ தட்டுத்தடுமாறி படியேறிட்டார்''

""என்னால நம்பவே முடியலைம்மா....''

""என்னாலேயும்தான். வந்த ரெண்டு நாள்ல பேரப் புள்ளைகளோடு ஒன்றி ரொம்ப உற்சாகமாய் இருக்கார். அவர் வந்ததிலிருந்து நான் உங்களுக்குப் போன் அடிச்சுப் பார்க்கிறேன். போன் சுவிட்ச் ஆஃப் சேதி வருது. சார்ஜ் போட மறந்திட்டீங்களா?'' 

""ஆமாம்''

""வேற உடம்புக்கு ஒண்ணுமில்லையே...''

""இல்லே''

""மாமா உங்களை தேடி ஒரு வாரத்துக்கு முன்னே புறப்பட்ருக்கார். அவர் வந்த பேருந்து  கிருஷ்ணகிரி பக்கம் எதிரில் வந்த பேருந்தோடு மோதி விபத்து. அதுல நாலு பேர் செத்திருக்காங்க. பலருக்குப் பலத்த அடி. இவருக்குக் கொஞ்சம். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்திருக்கார். அப்போ.. பக்கத்து கட்டிலுக்கு வந்த சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரிக்கும் போது கிடைச்ச பழைய தினசரியில்  நீங்க கொடுத்த விளம்பரம் கண்ணில் பட்டிருக்கு. படிச்சுப் பார்த்து பத்திரப்படுத்தி  வீட்டுக்குத் தகவல் கூட சொல்லாம ஆனந்த அதிர்ச்சி அளிக்கணும்ன்னு வந்து நிக்கிறார். எனக்கு ஆளைப் பார்த்த அதிர்ச்சி கையும் ஓடலை, காலும் ஓடலை. பசங்களும் ரெண்டு மணி நேரம் ஒட்டலை. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பேசி இப்போ ரொம்ப ஒட்டிட்டாங்க.

மாமா ரொம்ப நல்லவருங்க. லண்டன் அமெரிக்காவுல இருக்கிற தங்கள் மகன்கள்கிட்டக்கூட உங்களைத் தேடப் போறேன்னு சொல்லிப் புறப்பட்டிருக்கார். அவுங்களும் கண்டுபிடிச்சதும் தகவல் சொல்லுங்க. நாங்களும் வந்து கொண்டாடுறோம்ன்னு சந்தோசமா சொல்லி இருக்காங்க. மாமா கைபேசியில் என்னை அவுங்களோட பேச வைச்சார். நானும் பேசினேன். அண்ணன் வந்ததும் வர்றோம் சேதி சொல்லுங்கன்னு சொன்னாங்க. இன்டர்நெட்ல வெப் மூலமாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப் பேசினோம். அவுங்க வீடு, குடும்பம், குழந்தைகளையெல்லாம் காட்டினாங்க. மாமாவும் இங்கே என்னை நம்ம பிள்ளைகளையெல்லாம் அவுங்களுக்கு அறிமுகப்படுத்திக் காட்டினார். நீங்க உடனே கிளம்பி வாங்க'' மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள்.

""வர்றேன்''  நிர்மல் ரொம்ப சுருக்கமாய்ச் சொல்லி கைபேசியை அணைத்தான்.  கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.

முற்றும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com