

50 வருட கலைப் பயணத்தில் இதுவரை 11 படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும், 16 தேசிய விருதுகள், பத்ம விருதுகள், தாதா சாஹேப் பால்கே விருது, பிரிட்டீஷ், பிரான்ஸ் எனக் கடல் கடந்தும் வந்து சேர்ந்த மிகப் பெரிய அங்கீகாரங்கள் அடூர் கோபால கிருஷ்ணனின் உன்னத அடையாளங்கள். சினிமா உலகம் கொண்டாடுகிற கலைஞன் என்றாலும் திருவனந்தபுரத்தின் நகரமும் கிராமும் கைக்குலுக்கும் ஸ்ரீகார்யத்தில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குக் கூடத் தெரியாமல் அமைதியாக வசிக்கிறார். ""விருதுகளையும் பாராட்டுகளையும் பெரிதும் மதிக்கிறேன். ஆனால், அந்த மேடைகளை விட்டு இறங்கும் போதே, அந்த விருதுகளையும் மறந்து விடுவேன். அதனால், அந்த விருதுகள் என்னிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. இதுவும் கூட என் தனிமைக்கும், அமைதிக்கும் காரணமாக இருக்கலாம்'' என்கிறார்.
நயன்தாரா நடித்த "ஸ்ரீராம ராஜ்யம்', "அனாமிகா' ஆகிய படங்கள் ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படங்களைப் பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் சமீபத்தில் பார்த்தார். நயன்தாராவின் நடிப்பு அவருக்கு பிடித்துப் போனது. இதையடுத்து ஹீரோயினை மையமாக கொண்டு தன் தயாரிப்பில் உருவாகவிருந்த படத்துக்கு நயன்தாராவின் கால்ஷீட் கேட்டார். அதை ஏற்க மறுத்ததுடன் கதையையும் கேட்க மறுத்து விட்டாராம் நயன்தாரா. தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கும் பிரபுதேவாவை ஹிந்திக்கு சென்றால் சந்திக்க நேரிடும் என்பதாலேயே பாலிவுட் வாய்ப்புகளை நயன் மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
படிப்பில் ஆர்வம் இல்லாத பள்ளி பருவத்து பிள்ளையாக இருந்தவர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். பத்தாம் வகுப்பு படிக்கிற வரை அநேக வருடங்களிலும் அவர் ஃபெயில் ஸ்டூடண்ட். ஒரு கட்டத்தில் ஒரு தனியார் பள்ளியில் இருந்து பி.சி.யை வெளியேற்றி விட, அந்த சம்பவம்தான் வேறு ஏதாவது செய்து சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தை கொடுத்து பி.சி.யை திரைப்படக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தது. அறிவுக்கு புத்தக வாசிப்பு அவசியம் என்பதை உணர்ந்த பி.சி. அப்போதுதான் நிறைய புத்தகங்கள் படித்து விட்ட காலத்தைப் பிடித்தாராம். சினிமாவை ஒப்பந்தம் செய்து கையெழுத்து போட்டு விட்டால், வேறு எந்த வேலைகளிலும் மனசை நுழைக்க மாட்டார். அதே வேளையில் ஒரு சினிமாவை முடித்து விட்டு, அடுத்த சினிமாவில் ஒப்பந்தம் ஆகிற வரையில் உள்ள பி.சி.யின் வெறுமையான நாள்களை புத்தகங்களும், டி.வி.டி.க்களுமே ஆக்கிரமித்துக் கொள்ளும். ""ஒரு மனுஷனா எல்லா வாழ்க்கையையும் வாழ்ந்திட முடியாது. புத்தகங்களும், டி.வி.டி.க்களும் புது வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க, அனுபவிக்க வாய்ப்பு கொடுக்கும். அந்த பலம்தான் ஒரு படத்துக்கும், அடுத்த படத்துக்கும் இடையில் இருக்கிற ஆறு மாசத்துக்கு என்னை எனர்ஜியாக வைத்திருக்கும்'' என்பது இதற்காக பி.சி.தரும் விளக்கம்.
பத்து வருடங்களாகியும் த்ரிஷாவின் மார்க்கெட் சரிந்தபாடில்லை. தமிழ், தெலுங்கில் முன்னணி இடம் வகித்து வரும் த்ரிஷா, "கட்டா மிட்டா' படத்தின் மூலம் ஹிந்திக்கு சென்றார். எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் போனதால், மீண்டும் தமிழ் சினிமாக்களிலேயே கவனம் செலுத்தத் தொடங்கினார். "பூலோகம்', "அப்பா டக்கர்', கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கும் அஜித்தின் படம், மணிமாறன் இயக்கும் படம் என த்ரிஷாவின் கால்ஷீட் இப்போதும் நிரம்பி வழிகிறது. தெலுங்கில் வெளியான "அதடு' கன்னடத்தில் "பவர்' என்ற பெயரில் ரீமேக் ஆனது. புனித் ராஜ்குமார் நடித்த இப்படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார் த்ரிஷா. இப்படத்தின் வெற்றியையடுத்து கன்னட வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இது கன்னட சினிமாவின் முன்னணி ஹீரோயின்களுக்கு கிலி ஏற்படுத்தி உள்ளது. பாவனா, ப்ரணிதா ஆகியோர் நடிக்க வேண்டிய படங்கள் தற்போது த்ரிஷாவின் வசம் வந்துள்ளதுதான் இதற்கு காரணம். தெலுங்கில் வெற்றி பெற்ற "அத்தரின்டிக்கி தாரெடி' கன்னட ரீமேக்கிலும் த்ரிஷாவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், கன்னடத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பல ஹீரோயின்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார் த்ரிஷா.
பாண்டிராஜ் இயக்கத்தில் புதுமையான கதை களத்துடன் வெளிவந்த "பசங்க' படம் தேசிய விருதுகளை சூடிக் கொண்டது. இந்தப் படத்தில் நடித்திருந்த ஸ்ரீராம், கிஷோர் ஆகிய இருவரும் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்காக பல விருதுகளைப் பெற்று கவனம் ஈர்த்தனர். அதன் பின், "பசங்க' படத்தில் நடித்த அதே கூட்டணி, "கோலி சோடா' படத்தில் இணைந்தது. கடந்த சில ஆண்டுகளில் வெளியான சிறு பட்ஜெட் படங்களில் அதிக வசூலை குவித்த படம் என்கிற சாதனையை இப்படம் பெற்றது. இப்போது அதே "பசங்க' கூட்டணி "வஜ்ரம்' என்ற படத்துக்காக இணைகிறது. ஸ்ரீராம், கிஷோர், குட்டி மணி, பாண்டி ஆகிய நால்வரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். கதாநாயகியாக பவானி ரெட்டி நடிக்கிறார். தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். "உளவுத்துறை', "ஜனனம்' படத்துக்குப் பின் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ்.டி.ரமேஷ்செல்வன். இந்திய கல்வியின் தற்கால சூழல்தான் கதை களம்.
"லிங்கா' படப்பிடிப்புக்காக ஆந்திரத்தின் கோதாவரி ஆற்றங்கரைக்குச் சென்ற ரஜினிகாந்த், பல மலரும் நினைவுகளைப் படக்குழுவினரிடம் பேசி நெகிழ்ந்துள்ளார். திரை பிரவேச காலக் கட்டங்களில் தமிழ் தவிர தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார் ரஜினிகாந்த். 1977-ஆம் ஆண்டு "சிலக்கம்மா செப்பிந்தி' என்ற படத்தில் அவர் நடித்தார். ஸ்ரீபிரியா ஹீரோயின். சர்மா இயக்கினார். இதன் படப்பிடிப்பு ஆந்திரத்தின் மேற்கு கோதாவரி ஆற்றின் கரையோரம் நடந்தது. குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து விட்ட ரஜினிக்கு மாலை வரை காட்சிகள் ஒதுக்கப்படவில்லை. ரஜினி தவிர்த்து மற்றவர்கள் நடித்த காட்சிகளையே படமாக்கி கொண்டிருந்தனர். இதற்கிடையில் உணவு இடைவேளை வந்தது. ஆற்றங்கரை பகுதியில் விற்ற மக்காசோள கதிர் ஒன்றை 5 பைசா கொடுத்து வாங்கி அதை சாப்பிட்ட ரஜினி மீண்டும் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தப்படி காத்திருந்தார். அந்தி சாயும் பொழுதில் ரஜினியை அழைத்த இயக்குநர் ஒன்றிரண்டு காட்சிகளை படமாக்கினார். அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து ஒரு நிமிடம் கூட நிற்க நேரமில்லாத நடிகராகி சூப்பர் ஸ்டார் ஆகி விட்டார். 35 ஆண்டுகளுக்குப் பின் இந்த சம்பவத்தை ரஜினிகாந்த் பேசி நெகிழ, அமைதியில் உறைந்திருக்கிறது படக்குழு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.