திரைக்கதிர்

இந்த முறையும்  பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடி இருக்கிறார் நயன்தாரா. பாலிவுட்டை போல
திரைக்கதிர்
Updated on
3 min read

இந்த முறையும்  பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடி இருக்கிறார் நயன்தாரா. பாலிவுட்டை போல கோலிவுட்டிலும் தங்களது பிறந்த நாளை நட்சத்திர ஹோட்டலில் விடிய விடிய ஆட்டம், பாட்டமுமாக கொண்டாடுவது நடிகர், நடிகைகளின் வழக்கமாகி விட்டது. இதனால் வீண் கிசுகிசுக்களிலும் சர்ச்சைகளிலும் சிக்கி கொள்வதும் அவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது.  கோலிவுட்டின் முன்னணி இடத்தைக் கடந்த பத்து வருடங்களாக தக்க வைத்துள்ள போதிலும், பிறந்த நாளில் எப்போதும் ஆடம்பரத்தை விரும்புவதில்லை நயன்தாரா. பிறந்த நாளில் அவர் எங்கிருக்கிறார்? என்பதையே மீடியாக்கள் தேடிப் பிடிக்கும் அளவுக்கு அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ரகசியமாக இருக்கும். தன் பிறந்த நாளான கடந்த நவம்பர் 18-ஆம் தேதி திடீரென்று மாலத்தீவு புறப்பட்டு சென்றார். அங்கு தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே விருந்தளித்து பிறந்த நாளைக் கொண்டாடினார். நெருங்கிய திரை நட்புகள் பலர் அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை கூறினார்கள். ""இது போல் சந்தோஷமான தருணங்கள் மீண்டும் மீண்டும் உங்களுக்கு வரட்டும். இந்த ஆண்டு உங்களுக்கு சிறந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். கடவுள் ஆசியும் கிடைக்கட்டும்'' இது நயனுக்கு டிவிட்டர் மூலம் சிம்பு அனுப்பிய வாழ்த்துச் செய்தி.

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கிறார் சூர்யா. தற்போது வெங்கட்பிரபு இயக்கும் "மாஸ்' படத்தில் நடித்து வரும் நிலையில், விக்ரம்குமார் இயக்கத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். காதல், ஆக்ஷன் என மாறி மாறி பயணித்துக் கொண்டிருந்த சூர்யாவுக்கு "மாஸ்' முதல் திகில் படமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் "யாவரும் நலம்' திகில் படத்தை இயக்கிய விக்ரம்குமார் சில மாதங்களுக்கு முன் சூர்யாவைச் சந்தித்து கதை சொன்னார். அந்த கதை சூர்யாவைக் கவர்ந்ததையடுத்து அதில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஏற்கெனவே வெங்கட்பிரபு இயக்கும் படம் முடியும் வரை காத்திருக்க சூர்யா கேட்டுக் கொண்டார். ஆனால் இந்த கதையில் உருவ மாற்றமோ, காட்சிகளுக்காக காத்திருக்க வேண்டிய கட்டாயமோ இல்லாத காரணத்தால், உடனடியாகத் தொடங்கி விடலாம் என்ற கருத்தை விக்ரம்குமார் முன் வைத்தார். இதை ஏற்றுக் கொண்ட சூர்யா,  படத்தையும் தானே தயாரிப்பதாக கூறினார். படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சு நடந்து வந்தது. ஆனால், ஹாலிவுட், பாலிவுட் என அவர் பிஸியாக இருப்பதால், இப்படத்துக்கான கால்ஷீட்டை இன்னும் உறுதி செய்யவில்லை.

சின்னஞ்சிறு வாய்ப்புகளில் தொடங்கி இன்று முன்னணி இடத்துக்கு வந்திருப்பவர் ஸ்ரீதிவ்யா. "வருத்தப்படாத வாலிபர் சங்கம்', "ஜீவா' என அடுத்தடுத்த படங்களால் அனைத்து விதமான ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த இவரது கையில், தற்போது 10-க்கும் மேற்ப்பட்ட படங்கள். சிவகார்த்திகேயனின் "காக்கி சட்டை', ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் "பென்சில்', விக்ரம் பிரபுவின் "வெள்ளைக்காரத்துரை' உள்ளிட்ட படங்கள் அவற்றில் சில. இந்த முன்னணி வெளிச்சத்துக்கு முன்பே "காட்டுமல்லி', "நகர்புறம்' ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு ஆயிரங்களில் மட்டுமே சம்பளம் பேசப்பட்டது. தற்போது அவரது சம்பளம் அரை கோடியை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. "காட்டுமல்லி', "நகர்புறம்' படங்களில் ஸ்ரீதிவ்யா நடிக்க வேண்டிய எஞ்சியுள்ள காட்சிகளுக்காக அவரிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. "தற்போது வாங்கும் சம்பளத்தை தந்தால்தான் நடிப்பேன்' என்று அவர் கூறி கால்ஷீட் தர மறுத்து விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ""என் மீதான புகாரில் உண்மையில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட படம் திடீரென்று நிறுத்தப்பட்டு விட்டது. அப்போது கொடுத்த கால்ஷீட்டை வீணடித்து விட்டு இப்போது கேட்பதில் என்ன நியாயம்?'' என தயாரிப்பாளர் சங்கத்துக்கு விளக்கம் அளித்துள்ளார் ஸ்ரீதிவ்யா.     

முன்னணி வரிசையில் இருந்த போதே, தமிழ்ப் படங்களைத் தவிர்த்து தெலுங்குப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் தமன்னா. நடிகர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணமாக கூறப்பட்டது. "சிறுத்தை', "வீரம்' படங்களுக்குப் பின் தமிழ்ப் பட வாய்ப்புகளை ஏற்க மறுத்த தமன்னா ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். இதற்கிடையில் சமந்தா, ஸ்ருதி, ஹன்சிகா ஆகியோர் தமிழ்ப் படங்களை ஆக்கிரமித்தனர். விஜய், சூர்யா படங்களில் நடிக்கும் அந்தஸ்தை இவர்கள் பெற்றுள்ளனர். ஏற்கெனவே தெலுங்கில் இதே நடிகைகள்தான் தமன்னாவுக்கு போட்டியாக உள்ளனர். தற்போது மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டும் தமன்னா தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இவர்களின் போட்டியைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆர்யாவின் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் தமன்னா. இப்படத்தை ராஜேஷ்.எம் எழுதி இயக்குகிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் தமன்னா தற்போது அடுத்தடுத்து பெரிய படங்களைக் கையில் வைத்திருக்கும் ஸ்ருதி, சமந்தா, ஹன்சிகா இவர்களுடனான போட்டியைச் சமாளிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அஜித்தும், நரேன் கார்த்திகேயனும் கார் ரேஸ் நண்பர்கள். படப்பிடிப்பு தவிர சென்னை இருங்காட்டுக் கோட்டையில் உள்ள கார் பந்தய மைதானத்தில் நரேனுடன் அஜித்தை பார்க்கலாம். தன்னை விட குறைந்த வயது கொண்டவராக இருந்தாலும், கார் ரேஸ்  சந்தேகங்கள் குறித்து நரேனுடன் மனம் விட்டு பேசுவார் அஜித். சினிமாவில் இடம் பெறும் சினிமா ரேஸ் காட்சி குறித்து தன்னிடம் கேட்கப்பட்ட யோசனைக்கு, இதற்கு தகுதியான ஆள் நரேன்தான் என்று சமீபத்தில் சிபாரிசு செய்திருக்கிறார் அஜித். விக்ரம் - சமந்தா நடிப்பில் உருவாகும் படம் "10 எண்ணறதுக்குள்ள.' இந்தப் படத்தில் இடம் பெறும் கார் ரேஸ் காட்சி குறித்து அஜித்திடம் யோசனை கேட்டார் இயக்குநர் விஜய் மில்டன். அப்போது "இது போன்ற விவரங்களை நானே நரேனிடம்தான் கேட்டு தெரிந்து கொள்வேன். இதற்கு தகுதியான ஆள் அவர்தான். அவரிடமே கேளுங்கள்' என்றார் அஜித்.  நரேனிடம் பேசிய இயக்குநர் அஜித் கூறியதை தெரிவித்தார். உடனே நரேனும் ஆலோசனைகள் கூற அந்தக் காட்சி படமாகியிருக்கிறது. ஆனால் இந்தக் காட்சியில் நரேன் நடிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com