

என் வயது 34. மார்கெட்டிங் தொழிலில் இருக்கிறேன். அடிக்கடி வெளியே சென்று ஹோட்டலில் சாப்பிட வேண்டிய நிர்பந்தம். அதனால் கண் எரிச்சல், வாய்ப் புண், உடல்சூடு, சிறுநீரக எரிச்சல், அதிக வியர்வை, உடல் துர்நாற்றம், போதிய தூக்கமின்மை போன்ற உபாதைகளால் கஷ்டப்படுகிறேன். இவை ஏற்படக் காரணம் என்ன? இவை குணமாக ஆயுர்வேத சிகிச்சைகள் உள்ளனவா?
என்.ராமகோபால், சேலம்.
உங்களுக்கு உடலில் பித்தம் எனும் தோஷம் அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. உணவில் காரம், புளி, உப்பு, எண்ணெய் போன்றவை, நல்லெண்ணெய், கொள்ளு, கடுகு, புளித்த மோர், புளிப்பான பழங்கள், மிளகு, தயிர், உளுந்து, மீன், ஆட்டு மாமிசம் போன்றவற்றின் அதிக சேர்க்கை இந்தப் பித்தத்தை அதிகப்படுத்தலாம். சக்திக்கு மீறிய சாகசங்கள் செய்தல், அதிகமாக வெயிலில் அலைந்து திரிதல், புகை அதிகம் உள்ள பகுதிகளில் வசித்தல், வலுக்கட்டாயமாக பசியைக் கட்டுப்படுத்துதல், தண்ணீர் தாகத்தை வலுக்கட்டாயமாக அடக்குதல், பித்தங்களின் குணங்களாகிய சூடு, ஊடுருவும் தன்மை, திரவம் போன்ற குணங்களைக் கொண்ட உணவுகளை உண்ணுதல் போன்ற செயல்பாடுகளினால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் பகுதிகளிலிருந்து பித்தத்தினுடைய சீற்றமானது அதிகரிக்கக்கூடும். மேலும், மனதைச் சார்ந்த கோபம், பயம், ஆசை, பொறாமை போன்றவற்றினாலும் பித்தம் குடல் பகுதியில் அதிகரிக்கக்கூடும். சரத்காலம் எனப்படும் இலையுதிர்காலம் மழைக்காலத்தின் பின்பகுதி ஆகியவற்றிலும் பித்தத்தின் சீற்றமானது இயற்கையாகவே மனிதர்களுக்கு உடலில் அதிகரிக்கக்கூடும். வெளிக்காரணங்களாக சூடான காற்று, வெயில், மது அருந்துதல் மூலமாகவும், பித்தம் சீற்றம் பெறக்கூடும்.
பித்தத்தை இருவகையில் சிகிச்சை செய்து மாற்றலாம். அவை சோதனம் அதாவது வெளியேற்றுதல் அல்லது சமனம் அதாவது அடக்குதல் என்று இருவகைப்படும். நல்ல உடல் வலு இருந்து பித்த உபாதையின் தாக்கமும், அதிகரித்திருக்கக் கூடிய நபர்களுக்கு சோதனம் எனும் குடல் சுத்தி முறை சிகிச்சை சிறந்தது. ஏனென்றால் ஒருமுறை பித்ததோஷத்தை உடலில் இருந்து வெளியேற்றினால் அது மறுபடியும் சீற்றம் பெறுவதற்கான வாய்ப்பை தவிர்க்க முடியும். உடல் வலு குறைந்தவர் மற்றும் பித்த சீற்றத்தின் அறிகுறிகள் சிறிய அளவிலேயே தென்படுதல் போன்ற நிலை உள்ளவருக்கு அடக்குதல் எனும் சிகிச்சை முறையே போதுமானதாகும். இதில் நீங்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பது அறியப்படவேண்டிய விஷயமாகும்.
நல்ல வலு மற்றும் பித்த சீற்றம் அதிகமுள்ளவராக நீங்கள் இருந்தால் ஆயுர்வேத மருந்துகளாகிய த்ரிவ்ருத் லேஹ்யம், அவிபத்தி சூரணம், கல்யாணகுலம், த்ரிபலா சூரணம் போன்றவற்றில் ஒன்றை உங்களுடைய குடல் தன்மைக்கேற்ப கொடுத்து பேதியை ஏற்படுத்தி பித்தத்தை வெளியேற்றலாம். வலுவும் பித்தமும் குறைந்தநிலையில் இருந்தால் வாசாகுடூச்யாதி கஷாயம், த்ராஷாதிகஷாயம், குடூச்யாதிகஷாயம், சங்க பற்பம், அப்ரக பற்பம், விதார்யாதி க்ருதம் போன்ற மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிட்டு குணம் பெறலாம்.
எந்த நிலையிலும் பித்த சீற்றத்தை அடக்குவதற்கு துவர்ப்பு, கசப்பு மற்றும் இனிப்புச்சுவை கொண்ட உணவுவகைகள் உதவிடக் கூடியவை. மனதை லேசாக்கிக் கொள்தல், கோபதாபங்களுக்கு தக்க போக்கிடம் காட்டி வாழக்கூடிய திறமையை வளர்த்துக் கொள்ளுதல், நல்ல நண்பர்களுடன் மகிழ்ச்சியோடு பழகுதல், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் தூய சந்தனத்தை நெற்றியில் இடுதல், காலையில் குளிப்பதற்கு அரைமணி முன் ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய ஹிமசாகரம், சந்தனாதி, அம்ருதாதி, சந்தனபலாலாஷி, பலாதாத்ர்யாதி போன்றவற்றில் ஒன்றை தலையில் ஊறவைத்து அதன்பிறகு குளிர்ந்த நீரில் குளித்தல், மனதிற்கு இன்பத்தைத் தரும் இசையை இரவில் படுக்கும் முன் கேட்பது போன்றவை பித்தத்தை மட்டுப்படுத்தும் ஒருசில சிகிச்சைமுறைகளாகும்.
(தொடரும்)
எஸ். சுவாமிநாதன்,
டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.