கனிந்த மனிதர்கள்

இப்பதான் இது காந்தி நகர், அந்த காலத்தில் இது வெறும் சோளக்காடுதான். இரண்டு ஆள் உயரத்திற்கு உயர்ந்து நிற்கும்.
கனிந்த மனிதர்கள்

இப்பதான் இது காந்தி நகர், அந்த காலத்தில் இது வெறும் சோளக்காடுதான். இரண்டு ஆள் உயரத்திற்கு உயர்ந்து நிற்கும். சோளக்கதிரை எட்டிப் பறித்து, நிமிட்டி, கொங்கு ஊதி மணி மணியாக ஜொலிக்கிற பால் சோளம் தின்ன தின்ன இனிக்கும். சோளம் பேட்டை எனும் இந்த ஊரைத்தான் வெள்ளைக்காரன் ஜோலார்பேட்டை என்று மாற்றி விட்டதாகக் கதை உண்டு. இன்னைக்கு ஞாபகத்துக்கோ, அடையாளத்துக்கோ ஒரு சோளச்செடி இல்லை. சோளம் விளைந்த மண்ணில் வீடுகள் விளைந்து கொண்டிருக்கிறது. போட்டி போட்டு உயர உயரமாய் விளைகிறது.

கொஞ்சம் பொழுது சாய்ந்தாலே மனித நடமாட்டம் இருக்காது, அந்த மூல பாட்டையில் சுண்ணாம்புச் சூளைதான் இருந்தது. அங்கே சுற்றிலும் தாழம் புதரும், மூங்கில் புதரும் காடாய் இருந்தது. அதை அழித்து சினிமா தியேட்டர் கட்டினதும், சுற்றிலும் அங்கேயும் வீடுகள். தினமும் திருவிழா மாதிரி தியேட்டருக்கு கூட்டம் அப்பியது. அதுவும் மாறி வீட்டுக்கு வீடு டி.வி வந்ததும், தியேட்டர் கல்யாண மண்டபமாகி விட்டது.

இரயில்வே ஜங்ஷன் எதிரில் ஓலை வேய்ந்து, நாள்பட்ட கறுத்த டீக் கடை ஒன்றும் ஒரு பெட்டிக்கடையும் இருந்ததாக ஞாபகம். இப்போது நூற்று கணக்கில் கடைகள், ஓட்டல்கள், லாட்ஜ்கள், ரீ சார்ஜ் கடைகள், இன்டர்நெட் சென்டர்கள்.

 ஜங்ஷன் எதிரில் ஒரே ஒரு கை ரிக்ஷாதான் இருக்கும். ரெட்டியூர் ஜமீன்தார், பொன்னேரி

ஜமீன்தார், வெளியேறாமல் இங்கேயே குடியாகி விட்ட வெள்ளைக்காரர்கள், இவர்கள்தான் கை ரிக்ஷாவில் போவார்கள்.

இப்போது எத்தனை டாக்ஸிகள், எத்தனை ஆட்டோக்கள், அதையும் தாண்டி எல்லோர் வீட்டிலும் டூ வீலர்களை வைத்திருக்கிறார்கள். வாகனங்களை நிறுத்துவதற்கென்றே இரயில்வே தனியாக இடம் ஒதுக்கி   டெண்டர் விட்டிருக்கிறது. லட்சம் லட்சமாய் அதில் லாபமாம். இரயில்வேயுடையது மட்டுமின்றி, தனியார்களின் வாகன நிறுத்துமிடங்களும் நான்கு உள்ளது.

ஆனாலும் சாமிநாத தாத்தாவின் கை ரிக்ஷாவும் ஜங்ஷனுக்கு எதிரே இன்னும் நின்று கொண்டுதான் இருக்கிறது. அவருக்கு வயது எழுபது தாண்டி விட்டது. தோல் சுருங்கி விட்டது. பார்வையும் கொஞ்சம் தளர்ந்துவிட்டது. கால்களும் கொஞ்சம் பின்னுகிறது. வயசாலிகள் ஊன்றுகோல் வைத்திருக்கிற மாதிரி சாமிநாத தாத்தா கை ரிக்ஷா வைத்திருக்கிறார். ஆட்கள் ஏறுவதில்லை, உதவாத சரக்குகள் ஏறும்.

அவருக்கு வீடு, வாசல், உறவு, சொந்தம், பந்தம், சொத்து எல்லாமே அந்த கை ரிக்ஷா தான், அது கூட அவரை விட மோசமாக தளர்ந்து, மங்கி, தட தட ஒலியுடன்தான் உள்ளது. அந்த காலத்து தேகம் என்பதால் தாங்குகிறது.

தாத்தாவும் ஜங்ஷன் முன்னாடி கை ரிக்ஷாவை நிறுத்திக் கொண்டு, இரயில் இறங்கி வரும் சீமாந்தர்களை எதிர்கொள்வார். ஒருத்தரும் கை ரிக்ஷாவுக்கு வர மாட்டார்கள். என்னவோ எக்மோர் மியூசிய சங்கதி இங்கே நிற்கிறது என்பதாய் பார்வையைத் தள்ளி விட்டுப் போவார்கள். அவர்களை ஆட்டோக்களும், டாக்ஸிகளும் ஈர்த்தன.

 பெங்களூர் பாசேஞ்சர் வந்தால், பச்சூரிலிருந்து ஏற்றி வந்த சீத்தாப்பழ கூடைகளைத்தான் கை ரிக்ஷாவில் எற்றுவார்கள். அதைக் கூட ஆட்டோ வாசிகள் விட மாட்டார்கள்தான், பாவம் பார்த்தோ, புண்ணியம் பார்த்தோ விட்டார்கள்.

ஒரு முறை அன்னலட்சுமி சீத்தாப்பழ கூடைக்குள் சாராயப் பாக்கெட்டுகள் மறைத்து கடத்தி வந்து தாத்தாவின் கை ரிக்ஷாவில் ஏற்றி விட்டாள். போலிஸ் பிடித்து ஒரு நாளெல்லாம் ஸ்டேஷனில் உட்கார வைத்திருந்தது. ஒண்ணாங்கிளாஸ் பையன் மாதிரி அழுதார். அதுவே போலீஸ்காரர்களுக்கு சிரிப்பாய் இருந்தது. அன்ன லட்சுமியே மாமூல் கட்டி வெளியே அழைத்து வந்தாள்.  போலீஸ்காரர்கள், ஒரு செட் பூரி வாங்கி சாப்பிடக் கொடுத்தார்கள். சாப்பிட முடியாது என்று குழந்தை மாதிரி அழுது அடம் பிடிக்க, இன்ஸ்பெக்டர் லட்டியை வீசினபடி மிரட்டி மிரட்டி சாப்பிட வைத்தார். ஸ்டேஷனில் இன்னும் கூட சிரிக்கிறார்கள். இந்த காலத்தில் இப்படி ஒரு மனுஷனா என்று.

அதன் பிறகு அன்னலட்சுமி வெறும் சீத்தாப் பழ கூடையைக் கொண்டு வந்தால் கூட பெரியவர் ஏற்றுவதில்லை. பெரிய நடுக்கத்துடன் கும்பிடு போடுவார். போலீஸ்காரர்களோடு அன்னலட்சுமி சகஜமாக பேசி உறவு வைத்திருப்பதும். டீ சாப்பிடுவதும்தான் அவருக்கு விடுபடாத புதிர்.

 சாமிநாத தாத்தாவுக்கு ஒரே ஒரு ஆசை நெஞ்சில் அது பேராசையாக கூட இருக்கலாம். ஆனால் அது சின்னஞ்சிறு ஆசைதான் அவருடைய கை ரிக்ஷாவில் யாராவது சவாரி வர வேண்டும் என்பதே அது. இந்த நகரமாகிவிட்ட ஊரில் பழமையின் சின்னமாக இருப்பது அவரின் கை ரிக்ஷாதான். ஆனால் ஒரு பழமைவாதி கூட சவாரி வருவதில்லை. அவரை விட வயதில் மூத்தவர்கள் கூட மறுத்து விட்டு காரை நோக்கிப் போகிறார்கள்.

ஒரு முறை மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் அறிவித்தார்கள். கார், பஸ், ஆட்டோ எதுவும் ஓடாது என்று சொன்னார்கள். இரயில் மட்டும் மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமானது அது ஓடும் என்றார்கள். சாமிநாத தாத்தாவிற்கு சந்தோஷமோ சந்தோஷம். "வாங்கடி  இன்னிக்கு உங்களுக்கு நாந்தானே காரு, ஆட்டோ எல்லாம்' என்று மிடுக்கோடு காத்திருந்தார். அப்போது கூட ஒரு பயணியும் சவாரி வரவில்லை. நொந்து போனார்.

"என்னடா ஜனங்க மாறிட்டாங்க.  இந்த கட்ட எத்தன ஜனத்த ஏத்தினு போயிருக்கு.

அந்த காலத்தல ரிக்ஷா சவாரின்னா அது பணக்காரங்க சவாரி. இந்த காலத்தல பிச்சைக்காரசவாரியா மாறிப் போச்சு' என்று புலம்பிக்கொண்டே இருந்தார்.

திருப்பத்தூர் சந்தனக்கட்டை எரிந்த போது, அந்த செய்திக்காக வந்த ஒரு பத்திரிகைப்  ஃபோட்டோ கிராபருக்கு சாமிநாத தாத்தாவும், ரிக்ஷாவும் ஒரு ஈர்ப்பைக் கொடுக்க வரிசையாக நின்றுக் கொண்டிருந்த வாடகைக் கார்களுடன் கை ரிக்ஷாவையும், அவரையும் நிற்க வைத்து க்ளிக்கிக் கொண்டு போனார். மாறாத அவலம் எனும் தலைப்பிட்டு பத்திரிகையில் கட்டுரையும் படமும் போட்டிருந்தார்கள். ஆட்டோ ரவிதான் பேப்பரில் வந்த படத்தைக் காட்டினான். கூடவே திட்டினான். அவன் திட்டும்போது ஏழெட்டு பேர் சேர்ந்து கொண்டார்கள்.

""கெழம். ஜங்ஷனோட மானத்த வாங்கறதுக்கு நீ ஒருத்தன் போதும்யா''

""இது வேலூர் பேப்பர். அதனால நம்ம மாவட்டத்துக்கு மட்டுந்தான் தெரியும். சென்னை பேப்பரா இருந்தா ஸ்டேட் பூரா நாறி இருக்கும். எவனா வெளிநாட்டு ரிப்போர்ட்டர் வந்தான்னா வோர்ல்டு ஃபுல்லா இந்த ஓல்டு மேட்ரைப் போட்டுட்டு இந்தியா ஏழை நாடு, பிச்சைக்கார நாடுன்னு முத்திரைக்குத்த போறாங்க''

""பெரிசு அந்த கை ரிக்ஷாவை காயிலானுக்கு போட்ரு. இல்லேன்னா அனேரி காட்ல பெரிசா குழி வெட்டி உன்னையும் கை ரிக்ஷாவையும்  சேர்த்தே புதைச்சிடுவோம்'' என்று ஆள் ஆளுக்கு மிரட்டித் தள்ளினார்கள்.

""வாயில பேசாதீங்கடா. எப்போ செஞ்சாலும் இப்போ சொன்னா மாதிரி செய்ங்கடா. என் கை ரிக்ஷாவையும் என்னோட சேத்து புதைங்கடா'' என்றார் கண்ணீர் சொட்ட.

அதன் பிறகு நிறைய இரவுகள் தூங்காமல் தவித்தார்.

மன வருத்தத்துடன்  பிள்ளையார் கோயிலுக்கு எதிரே கை ரிக்ஷாவை நிறுத்தி  படியில் உட்கார்ந்த போது கண்ணீர் பெருகிற்று. எத்தனையோ சோகங்களைத் தாண்டிதான் வாழ்ந்து வந்திருக்கிறார். விநாயகரையே உற்றுப் பார்த்தார். சக்தி வாய்ந்த, அருள் வள்ளலாய், பக்தர்களுக்கு கஷ்டங்கள் நீக்குகிற ஆனைமுகத்தான்.

"" நீ கூட இந்த கை ரிக்ஷாலதான சாமி வந்தே இந்த ஊர்லயே நீதான பெரிய ஆளு. ஊர்ல என்ன, உலகத்துக்கே நீதான முதல் சாமி. உன்னையே இந்த கை ரிக்ஷாலதான ஏத்தினு வந்தேன்'' என்று சொல்லும் போது தொண்டை அடைத்தது.

மைசூர் மாகாணத்திலிருந்து விநாயகப் பெருமானைக் கொண்டு வந்து ஊரே கூடி ஜங்ஷனில் மங்கள வாத்தியத்தோடு இறக்கும்போது சாமிநாதன் கை ரிக்ஷாவை ஸ்டேஷனுக்குள்ளேயே கொண்டு போய் இரயில் பெட்டிக்கு எதிரே நிறுத்தினான். கை ரிக்ஷாவுக்குதான் என்னவொரு புஷ்ப அலங்காரம். ஊரே கூடிக்கொண்டு தேரைத் தள்ளுவது போன்று கை ரிக்ஷாவைத் தள்ளினார்கள். பிரதிஷ்டை செய்வதற்கு முன்பாக கை ரிக்ஷாவில்தான்  ஊர்வலம் வந்தார் பிள்ளையார்.

சாமிநாத தாத்தா யாரிடம் போய் குறைகளைச் சொல்வார்? எல்லாரின் குறைகளைக் கேட்கும் பிள்ளையாரிடம்தானே இவரும் சொல்லிக்க முடியும், நீண்ட நேரம் அமர்ந்து புலம்பி விட்டு, கை ரிக்ஷாவை இழுத்து கொண்டு ஜங்கஷனுக்கு வந்தார்.

 மினுமினுக்கும் ஒரு ஸ்விப்ட் காரொன்று கை ரிக்ஷா  அருகே வந்து நின்றது.

 காரிலிருந்து ஒரு பெண்மணி இறங்கினாள்.

""தாத்தா என்னை ஞாபகம் இருக்கா?'' என்றாள்.

சாமிநாத தாத்தா கண்களைச் சுருக்கி கூர்ந்து பார்த்து புரியாமல்  தலையைக் கோதினார்.

 ""ஞாபகமில்லையா ரெட்டியூர் மிராசோட பொண்ணு வைதேகி''

      தாத்தாவின் முகம் மலர்ந்தது. ""அம்மா, நீங்களா நல்லா இருக்கீங்களா? ட்ரெயினுக்கு வந்தீங்களா? நீங்க டாக்டராத்தானே இருக்கீங்க''

""ஆமா தாத்தா. நான் முதன் முதலா கான்வென்ட் போகும் போது உங்க கை ரிக்ஷாலதான் அழைச்சுட்டு  போனீங்க ஞாபகத்துக்கு வருதா நான், வரதராஜன், சம்பத், அன்வர், நாலு பேருமே உங்க கை ரிக்ஷாலத்தான் போவோம். இன்னைக்கு நாலு பேருமே படிச்சி டாக்டர், என்ஜீனியர், ஜட்ஜ்ன்னு உசந்துட்டோம். நாளைக்கு என் மகளை கான்வென்ட் அனுப்பறேன், நான் படிச்ச அதே கான்வென்ட்ல என் மகளும் படிக்க போறா நாங்கள்லாம் படிச்சி ஒரு லெவலுக்கு வந்த மாதிரி என் மகளும் வரணும். முதன் முதலா கான்வென்ட்  போகும் போது உங்க கை ரிக்ஷாலத்தான் அனுப்பி வைக்கணும்னு சென்டிமெண்டா என் மனசுக்கு பட்டது. நாளைக்கு காலையில் வந்துட முடியுமா தாத்தா?''

 சாமிநாத தாத்தாவிற்கு  சந்தோஷம்  தாளவில்லை பாதத்திலிருந்து உச்சி வரைக்கும் ஒரு வித அமுதம் பரவிற்று. ""நல்லதும்மா நல்லது, நான் வந்துடறேன்'' என்றார்.

 ""தாங்க்ஸ் தாத்தா'' வைதேகி ஸ்விப்ட்டில் ஏறி புறப்பட்டாள்.

சாமிநாத தாத்தாவிற்கு முப்பது வயது குறைந்த மாதிரி ஆயிற்று. கண்களைச் சுழற்றி சுற்றுபுறத்தை பார்த்தார். மாளிகைகள், விடுதிகள், கடைகள், கார்கள், ஆட்டோக்கள் எல்லாம் மறைந்து முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த பயிர்களும், சோளக்காடும் மரங்களும், எங்கும் பசுமையாய் காட்சியளிப்பதாய் ஒரு பழம் நினைப்பு.  தான் ஒண்டி மட்டும் கை ரிக்ஷாவோடு கம்பீரமாய் நிற்பதாய் எண்ணம்.

 திமிரோடு மீசையை நீவிக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com