

நான், ஓய்வு பெற்ற ஓர் அரசுப் பள்ளி நூலகர். என் வயது 82. எனக்குக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்க்கரை நோய் உள்ளது. இரண்டு கண்களும் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளன. கண்ணாடி இல்லாமல் நன்கு படிக்கிறேன். தினமும் யோகாசனமும், மூச்சுப் பயிற்சியும் செய்கிறேன். தினமும் இரண்டு மூன்று நூல்களையாவது படிப்பது என் வழக்கம். தற்போது என் கண்கள் அதிகம் பொங்குகின்றன, கண்களில் தொடர்ந்து நீர் வடிகிறது. அவ்வப்போது மன அழுத்தமும் ஏற்படுகிறது. இதற்கு ஏற்ற மருந்து, மருத்துவம் என்ன என்பதைக் கேட்டால் எல்லாரும் கண்ணுக்கு ஓய்வு தேவை, நீங்கள் அதிகம் படிக்கிறீர்கள் என்று கூறுகிறார்கள். ஆயுர்வேதமுறைப்படி இதற்கு தீர்வு உள்ளதா?
எஸ்.வேப்பம்மாள், இடைமருதூர்.
உறுப்புகளில் புலன்களும், புலன்களில் கண்களும் முக்கியத்துவம் பெற்றவை. கண்களின் பார்வை குன்றாமல் எளிதில் அயர்வு அடையாமல் இருக்க உபாயங்களை இதோ ஒரு பாட்டு சுருங்கச்சொல்லி விளங்கவைக்கிறது.
தின்னார் பண்ணைச் சிறுகீரை தின்ன மறந்தோர் சீர்கேடாய்
பொன்னாங்காணிக் கறிகூட்டார் பூசார்பாதம் நெய்யுண்ணார்
பண்ணார் மதியந் தனைப் பாரார் பால்வார்த்துண்ணார் பல்தேயார்
கண்ணோ வதனால் கவல்வரதை யாமும் சொல்லக் கடவோமே.
பண்ணைக்கீரை சிறுகீரை இவற்றைத் தினமும் சாப்பிடுதல், பொன்னாங்கண்ணிக் கீரையைப் புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடுதல், இரவு நேரங்களில் இரு உள்ளங்கால்களிலும் பசுவின் நெய்யைத் தேய்த்துக் கொள்ளுதல், இதை தளமிடுதல் என்பர். உணவில் நெய் சேர்த்துக்கொள்ளுதல், பெளர்ணமியன்று இரவில் சந்திரனை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருத்தல், இரவு நேரத்தில் பால் கலந்த அன்னத்தைச் சாப்பிடுதல், பற்களை முறைப்படி துலக்குதல் இம்முறையைப் பின்பற்றுபவர்களுக்கு கண் நோய்கள் வராது. அவ்விதம் நடக்காதவர்களுக்கு கண் நோய்கள் தாமே வந்தடையும் என்கிறது இந்த பாட்டு.
Epiphora என்றால் கண்ணீர் வடிதல் என்று பொருள். கண்ணீர் உருவாகும் Lacrimal glands பகுதியில் உருவாகும் கண்ணீரானது கண்களுக்கு வந்து சேரும் பாதையில் அடைப்பு ஏற்பட்டால் இந்தப் பிரச்னை உருவாகும். கண் பொங்கும். கண்ணுக்கு எண்ணெய்ப் பசையைக் கொடுத்து ஊட்டச்சத்தையும் ஏற்படுத்தி தூசி மற்றும் துகள்களில் இருந்து கண்ணைப் பாதுகாப்பதே கண்ணீருடைய முக்கிய செயலாகும். எட்டு வினாடிகளுக்கு ஒருமுறை சராசரியாக மனிதன் கண்ணை மூடித் திறக்கிறான். அதுசமயம் கண்ணீரானது கண் முழுவதும் பரவி கண் பாதுகாக்கப்படுகிறது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ உணர்ச்சிகளின் கொந்தளிப்பினாலோ கண்ணீர் அதிகமாகச் சுரக்கும். இதுபோன்ற உபாதையில் ஆஸ்சோதனம் எனும் கண்ணுக்கு சொட்டு மருந்துவிடும் சிகிச்சைமுறையையும், அஞ்ஜனம் எனும் கண்ணுக்கு மையெழுதும் சிகிச்சையையும் ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது.
ஆஸ்சோதனம் எனும் சிகிச்சைமுறையில் கண் உபாதைவுள்ளவரைப் படுக்க வைத்து பிறகு மூலிகைக் கஷாயங்களை நன்றாகக் குளிரச் செய்து கண்களைக் கழுவவேண்டும். இதற்கு த்ரிபலா கஷாயம், மர மஞ்சள் கஷாயம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. கண்ணில் ஏற்படும் அழுத்தத்தினால் கண்ணீர் பொங்கி வெளிவரும். Glaucoma எனும் உபாதை குறைப்பதற்கு முருங்கைஇலைச் சாற்றை கண்ணில் விடுவதற்காகப் பயன்படுத்தலாம்.
கப-பித்த-ரத்த உபாதைகளால் கண் கெடும்
பொழுது மை இடுவதன் மூலம் கண் தெளிவு
பெறுகிறது. பார்வைத் திறன் அதிகரிக்கிறது. கண்களைக் கழுவிய பிறகு கண்ணுக்கு மை இடுதல் சிகிச்சை சிறந்ததாகும். கரிசிலாங்கண்ணியின் இலைகளை நன்றாகக் கழுவி சாறு பிழிந்து, அதில் ஒரு சிறுவெள்ளைத் துணியை முக்கி நிழலில் உலர்த்த வேண்டும். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை இவ்வாறு செய்து துணியை நன்றாகச் சுருட்டி பசு நெய்யில் முக்கி எடுத்து விளக்கில் பற்ற வைத்து எரித்து கரியாக்க வேண்டும். அதில் நெய் சேர்த்துக் குழைத்து ஒரு கிண்ணத்தில் பத்திரப்படுத்தி அதைக் கண் மையாகப் பயன்படுத்தலாம். இதுபோலவே தான்றிக்காய் சூரணத்தையும் மஞ்சளையும் கரியாக்கி தயாரிப்பதும் உண்டு. சில மூலிகை மருந்துகளை விழுதுபோல் அரைத்து கண்ணைமூடி, கண்ணைச் சுற்றி வைத்து கண் இமைகளில் படாமல் கட்டுவதற்கு பிடாலகம் என்று பெயர். அதனால் உங்களுக்கு இந்த ஆஸ்சோதனம், அஞ்ஜனம், பிடாலகம் போன்ற கண் சிகிச்சை முறைகள் நல்ல பலனைத் தரக்கூடும். ஆயுர்வேத மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைமுறைகளை நன்றாகச் செய்கிறார்கள். த்ரிபலா சூரணத்தை சுமார் அரை ஸ்பூன் எடுத்து ஒன்றரை ஸ்பூன் பசு நெய் குழைத்து நான்கு சொட்டு தேனுடன் கலந்து இரவில் படுக்கும் முன் சாப்பிடுவதன் மூலமாக கண்ணில் ஏற்படும் அதிகக் கண்ணீர் ஒழுகுதல், கண் பொங்குதல் போன்ற பிரச்னைகள் நன்றாகக் குறையும்.
(தொடரும்)
எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.