

பருவைக் கிள்ளக் கூடாது!
கடந்த சில நாட்களாக முகத்தில் பருக்கள் அதிகமாக ஏற்படுகின்றன. முகம் சுரசுரப்புடன் இருக்கிறது. ஸ்நோ பூசிக்கொள்கிறேன். இருந்தும் பலனில்லை. இவை மாற வழி என்ன?
சுகந்தி, வாலாஜா.
ஆணுக்கும் பெண்ணுக்கும் யெüவனம் முதிரும் நாட்களில் உடலில் காணப்படும் சில இயற்கைக்
குறிகளில் இதுவும் ஒன்று. முகத்திற்கு மென்மையையும், வசீகரத்தையும் அளிக்க உதவும், கொழுப்புக் கோளங்களில் அழற்சி ஏற்பட்டு சிறிய சினப்புகள் லேசான தினவுடன் ஏற்படும் சிறுசிறு முகக்கட்டிகளே பருக்கள் எனப்படும். தினவைப் பொறுத்துக்கொண்டு சொறியாமலும், நகங்களால் நெருடாமலும் இருந்தால் முகம் விகாரம் அடையும் நிலை ஏற்படாது. பருக்களை நெருடுவதாலும், அழுத்தித் தேய்ப்பதாலும், பிதுக்குவதாலும் உள்ளே உள்ள வெண்மையான கொழுப்பு வெளியேறி அந்த இடம் வடுவாகி நிலைத்துவிடும். ஏதும் செய்யாமல் வெறுமனே விட்டுவிட்டால் அந்த கொழுப்பானது சமநிலை ஏற்று சரியாகிவிடும். அதனால் பருக்களை நெருடாதே என்று பெரியவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
முகத்தில் நெய்ப்பு மிக்க ஜீவந்த்யாதி க்ருதம், குங்குமாதிலேபம், சந்தனாதி தைலம், கிம்சுகாதி தைலம் முதலியவற்றைத் தடவிக் கொண்டே வர பருக்களின் கடுமை தானே குறைந்துவிடும். மேலும், முற்றிய தேங்காயிலிருந்து எடுக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் 120 மில்லி, அதில் புனுகு 5 டெஸி கிராம் அளவு அப்படியே எண்ணெய்யுடன் சேர்த்து ஒரு வாரம் வைத்திருந்து பின்னர் பரு உள்ள இடங்களில் காலை வேளைகளில் தடவி வர பருக்களின் வேதனை குறையும். சுமார் ஒன்றிரண்டு மணி நேரமாவது இதை முகத்தில் தடவி ஊற வைத்துக் கொள்வது நல்லது. பருவின் அழற்சி குறைந்ததும் முன் குறிப்பிட்ட நெய்ப்புக்கான நெய் மருந்தையோ, தைலத்தையோ முகத்தில் தடவி நகம் படாமல் விரலின் உட்பகுதியால் நன்கு தேய்த்து முகச் சதையைப் பிய்த்துவிடலாம். இதற்கு சந்தனாதி தைலம் மிகவும் சிறந்தது.
செஞ்சந்தனம், அதிமதுரம், விளாமிச்சை வேர், பதிமுகம், அல்லிக்கிழங்கு, ஆலம்விழுது, கொம்பரக்கு, மஞ்சிட்டி, தாமரைக்கேசரம், மருதாணி இலை, மஞ்சள், மரமஞ்சள், நன்னாரி வேர் போன்ற மூலிகை மருந்துகளைத் தனியாகவோ அல்லது அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தோ பன்னீர் விட்டு அரைத்து முகப்பருக்களின் மீது பூசிவர பருக்கள் விரைவில் வாடி அந்தப் பகுதி சமநிலை ஏற்றுவிடும்.
விபூதி பச்சிலை, சப்ஜா, தொண்ணூத்தி பச்சிலை, திருநீற்றுப்பச்சிலை இப்பெயர்களில் ஒரு செடி தோட்டமுள்ள வீடுகளில் வளரும். இதன் கதிர் நல்ல நறுமணம் தரக்கூடியது. இதன் இலையையோ கதிரையோ நன்கு கசக்கிச் சாற்றை பருக்களின் மேல் அடிக்கடித் தடவி வர பருக்களின் வேதனைகள் முற்றிலும் அகலும். சந்தன அத்தரும் இதேபோன்ற குணம் தரக்கூடியது தான். கட்டை சந்தனத்தை அரைத்து அரைத்த சூடு ஆறுவதற்கு முன்னரே உடனேயே பருக்களின் மேல் தடவிவிடுவது மிகவும் சிறந்தது. கடையில் விற்கும் சந்தனவில்லைகளின் மூலப்பொருள் சந்தனக்கட்டையாகத்தான் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. மேலும் அதன் மூலப்பொருள் என்னவென்று சரி வர புரியாததால் அதை முகத்தில் போடுவதும் நல்லதல்ல. கட்டை சந்தனம் தான் மிகவும் உயர்ந்தது.
முகத்தை வறண்டதாகச் செய்யுமளவிற்கு அடிக்கடி சோப்பு தேய்த்து முகம் கழுவுவது கூடாது. முகத்தில் பூசிய எண்ணெய்ப் பசையை அகற்ற ஒரு டம்ளர் பச்சைப்பயறு, அரை டம்ளர் காய்ந்த எலுமிச்சம் பழத்தோல், கால் டம்ளர் வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக மைய அரைத்து ஒரு பாட்டிலில் காற்று புகாதவாறு அடைத்து வைத்துக் கொள்ளவும். அதிலிருந்து சுமார் நான்கு அல்லது ஐந்து ஸ்பூன் எடுத்து அரிசி வடித்த கஞ்சியுடனோ தயிர்மேல் நிற்கும் தண்ணீருடனோ கலந்து முகத்தில் பூசி எண்ணெய்ப் பிசுக்கை அகற்றிக் கொள்வதனால் பருக்கள் மட்டும் மறைவது மட்டுமின்றி, முகத்தில் உள்ள நெய்ப்பானது நன்கு பாதுகாக்கப்படுவதால் பருக்கள் வராமலும் தடுக்கும். முகத்தின் வசீகரமும் கூடும். முகத்தை அடிக்கடி குளிர்ந்த நீர் விட்டுக் கழுவிவிடுவது நல்லது.
உடல் உட்புறச் சூட்டினாலும் முகப்பருக்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதற்கு திராட்சை, பிஞ்சு கடுக்காய், கருவேப்பிலை இவை மூன்றையும் சம அளவு சேர்த்துக் காய்ச்சிய கஷாயம் சாப்பிட்டு மாதம் ஒருமுறை பேதி செய்துகொள்வது நல்லது. திக்தகம், மஹாதிக்தகம், சோணிதாம்ருதம், நிம்பாதி, படோலகடுரோஹிண்யாதி போன்ற கஷாயமருந்துகள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடவேண்டிய நல்ல கஷாய மருந்துகளாகும்.
(தொடரும்)
எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.