ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரையைக் கட்டுப்படுத்த நாவல்பழம் ஏற்றதா?

நாவல்பழத்தில் கருநாவல், வெண்ணாவல், குழிநாவல், ஆற்றுநாவல், கொடிநாவல் என பலவகைகள் உண்டு. வெண்ணாவலும்,
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரையைக் கட்டுப்படுத்த நாவல்பழம் ஏற்றதா?
Updated on
2 min read

எனக்கு வயது 49. எனக்கு சிறுநீரில் சர்க்கரை வெளியாகிறது. அதற்கு நாவல்கொட்டை கஷாயம் அல்லது தூள் சாப்பிடலாம் என்கிறார்கள். அதை எப்படி சாப்பிட்டால் குணம் கிடைக்கும்? மேலும், நாவல்பழத்தின் மருத்துவகுணங்கள் எவை?

-கணேஷ், திருத்துறைப்பூண்டி.

நாவல்பழத்தில் கருநாவல், வெண்ணாவல், குழிநாவல், ஆற்றுநாவல், கொடிநாவல் என பலவகைகள் உண்டு. வெண்ணாவலும், கருநாவலும் தான் அதிகம் பயன்படுபவை. கருநாவல் அதிகம் கிடைக்கும். வெண்ணாவல் கிடைப்பதரிது.

நாவல்மரத்தின் பட்டை, இலைத்துளிர், பழம், உள்பருப்பு போன்ற பாகங்கள் மருத்துவகுணம் நிறைந்தவை. எல்லாவித நாவல்மரங்களுக்கும் குணங்கள் அநேகமாய் ஒரேவிதம்தான். அவற்றில் கருநாவலும், வெண்ணாவலும் தான் அதிகமாய் பயன்படுத்தப்படுகின்றன.

நாவல்பழம் கபத்தின் கோளாறுகளையும், பித்தத்தின் கோளாறுகளையும் சமனம் செய்யும். ஆனால் அதிகமாய் வாயுதோஷத்தை வளர்க்கும். பித்தக்கொதிப்பினால் ஏற்படும் உள்காந்தல், வறட்சி, எரிச்சல், தாகம், வெப்பம் முதலியன நாவல்பழம் சாப்பிட்டால் குறையும். இருப்பினும் அதை அதிகம் மற்ற பழங்களைப்போல சாப்பிட்டால் பசிமந்தம், வயிற்றுப்பொருமல், கை, கால் கீல்களில் வலி முதலிய தொந்தரவுகள் ஏற்படும். இதுபோன்ற கெடுதல்களைப்போக்க பச்சை நெல்லிக்காய் அல்லது நெல்லிவற்றலை மென்று தின்று குளிர்ந்த நீர் பருகினால் அந்த கெடுதல்கள் அனைத்தும் உடனே நீங்கும். நாவல்பழத்தின் சாற்றைப் பிழிந்து கண்ணாடி பாட்டிலில் ஒரு மாதம் வைத்திருந்து பின்பு பருகலாம். நாட்பட்ட சர்க்கரை உபாதைக்கு நல்ல பலன் தரும். வறட்சி, எரிச்சல் குறையும்.

நாவல்பழத்தின் கொட்டையை வெயிலில் உலர்த்தி மேல்தோலை நீக்கி உள்பருப்பை மட்டும் சூரணம் செய்து காலை, மாலை வேளைகளில் இரண்டு கிராம் இடைவிடாமல் சாப்பிட்டுவந்தால் சிறுநீரில் வெளியாகும் சர்க்கரையின் அளவு நாளடைவில் மிகவும் குறையும். ஆனால் இது மலத்தைக் கட்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு மலக்கட்டு சகஜமாய் இருக்கும் என்பதால் இந்த நாவல் பருப்புடன் இரண்டு கிராம் நெல்லிமுள்ளி சூரணத்தையும் கலந்து சாப்பிட மலக்கட்டு பிரச்சனை ஏற்படாது.

நீரிழிவுநோயாளிகள் சிலர் நாவற்பருப்பை வறுத்து இடித்து காபி கஷாயம் போல தினமும் காபிக்கு பதிலாக குடிக்கின்றனர். கொட்டையை கருகும்படி வறுத்து கஷாயம் செய்தால் காபி டிகாக்ஷன் போல் கலர் வரலாம். ஆனால் அதைச் சாப்பிடுவதால் குணம் ஒன்றுமே கிடையாது. பச்சையாக கஷாயம் போடுவதே நல்லது. அதிலும் கஷாயம் போடுவதை விட நாவல்கொட்டையை சூரணம் செய்து சாப்பிடுவதே சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. பழம் கிடைக்கும் நாட்களில் ஒரு வருஷத்திற்கு வேண்டிய பருப்பை சேகரித்து வைத்துக் கொள்வது நல்லது.

நாவல்கொழுந்தை ஆட்டுப்பாலில் அரைத்து கலக்கிச் சாப்பிடுவது மிகவும் நல்லது. சீதபேதி, இரத்தபேதி, அஜீர்ணபேதி, வாந்தி இவற்றைத் தடுக்கும். நாவல்கொழுந்து, மாந்துளிர் இரண்டையும் சேர்த்து அரைத்து சாறுபிழிந்து அதை 15 மில்லி லிட்டர் எடுத்துக்கொண்டு பிஞ்சு கடுக்காயின் சூரணத்தைக் கொஞ்சம் சேர்த்து சாப்பிட்டால் பேதி, கடுப்பு, நாட்பட்ட சீதபேதி போன்றவை குணமாகும்.

நாவல்பட்டையை பச்சையாக வெட்டி வெயிலில் உலர்த்திப் பொடித்து துணியில் சலித்து உபயோகிக்கலாம். பச்சைப்பட்டையை அல்லது உலர்ந்த பட்டையை இடித்து கஷாயமாக உள்ளுக்குச் சாப்பிடலாம். தொண்டைப்புண், இருமல், சளி, மூச்சுமுட்டல், மூலஉபாதை, கழிச்சல், பெண்களின் அதிக உதிரப்போக்கு, சர்க்கரை உபாதை, இரத்தபேதி போன்றவை நிவர்த்தியாகும். கஷாயத்தை வாயில் ஊற்றிக்கொப்பளித்தால் வாய்ப்புண் ஆறிவிடும். உடலில் ஏற்பட்டுள்ள புண்களைக் கழுவவும் பயன்படுத்தலாம். நாவல்மரத்தின் பட்டை, நாவல் கொட்டை, மஞ்சள், நெல்லிவற்றல், நன்னாரி வேர், மருதம்பட்டை, ஆவாரை, கொத்தமல்லி விதை இந்த எட்டு சரக்குகளையும் சரிசமமான அளவில் சேர்த்து சுமாராக இடித்து வைத்துக்கொண்டு கஷாயம் செய்து காலை, மாலை சாப்பிட்டுக்கொண்டு வந்தால் சர்க்கரை உபாதை உள்ளவர்களுக்கு பெரிய உபகாரம் அளிக்கும். தினந்தோறும் இன்சுலின் ஊசி போடும்படியாக இருப்பவருக்கு ஒரு மாதம் கஷாயம் சாப்பிட்டபிறகு வாரம் ஒருமுறை இன்சுலின் ஊசி போட்டால் போதுமென்றாகி பிறகு உணவில் பத்தியமிருந்தால் போதும். இன்சுலின் தொடராமல் இருக்கும்படி ஆகும். சர்க்கரை உபாதை கட்டுப்படும். மேலும் இந்த கஷாயத்தில் கோமூத்ரசிலாஜது எனும் மருந்தை கலக்கிச் சாப்பிட்டால் சர்க்கரை வியாதியில் இருந்து நிரந்தரமாக நல்ல குணம் ஏற்படும். அயஸ்ஸிந்தூரம் எனும் பஸ்மத்தை தயாரிக்க நாவல் பட்டையும், நாவற்பழமும் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன.

-தொடரும்

தொடர்புக்கு..

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)

செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com