

கறுப்பு, வெள்ளை என்ற இந்த இரண்டு வண்ணங்களின் மீதும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுக்கு அப்படியொரு காதல். அன்றாடம் அணியும் ஆடைகளில் இருந்து பயணிக்கும் கார் வரை இந்த வண்ணங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்வார். பழங்கால கறுப்பு, வெள்ளை சினிமாக்களைப் போன்று முழுவதுமாக ஒரு சினிமா எடுத்து விட வேண்டும் என்பதும் அவரது சினிமா ஆசைகளில் ஒன்று. அதனால்தான் சில படங்களில் ஓரிரு இடங்களில் கறுப்பு, வெள்ளையை அதிகமாக பதிவு செய்திருக்கும் அவரது கேமிரா. ஆனால் அப்படியொரு முழு கதைக் களம் இதுவரை அமையவில்லை என்பதுதான் அவரது வருத்தம். நீண்ட நாள்களுக்கு பின் "யாவரும் நலம்' படத்துக்காக அதிகபட்ச காட்சிகளை கறுப்பு வெள்ளையில் பதிவு செய்திருப்பார். ""அனுமாஷ்ய விஷயங்களின் நிறம் கறுப்பு. தைரியத்தின் நிறம் வெள்ளை. இருட்டு என்றால் பயம் வந்து விடும். வெளிச்சம் வந்தால் பயம் போய் விடும். அதன் அடிப்படையில்தான் அந்த படத்தில் அப்படியொரு ஒளிப்பதிவு தேவைப்பட்டது'' என அதற்கு விளக்கம் கொடுத்திருந்தார் பி.சி.ஸ்ரீராம்.
எஸ்.பி.எம்.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் "நிராயுதம்.' கதாநாயகனாக சந்தோஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாரிகா நடிக்கிறார். புதுமுகம் ராஜதுரை இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். காதல், ஒழுக்கம், பண்பாடு இதில் எல்லாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் வருங்கால தலைமுறையினருக்கு பெரிய தேவையாக இருக்கப் போகிறது. அது வேண்டும், இது வேண்டும் வாழ்க்கை தேடலில் ஏதோ ஓர் இடத்தில் நாமெல்லாம் ஒரு நிமிடமாவது கலாசாரத்துக்கு எதிராக நடக்க வேண்டிய சூழல் இங்கு அதிகம். அப்படியொரு வாழ்வு சூழலுக்கு ஏற்ற வாழ்க்கையை வாழ முடியாதவர்களை காமெடியனாக்கிப் பார்ப்பது இந்த சமூகத்தின் வாடிக்கையாகி விட்டது. அமெரிக்காவிலிருப்பவர்களுக்கு இந்திய கலாசார, பண்பாட்டின் மீது காதல் இருப்பதைப் போல் இங்குள்ளவர்களுக்கு அமெரிக்க மோகம் இருப்பதும் தவிர்க்க முடியாதது. இப்படி இரண்டு வேறு குணங்களை கொண்ட ஆணும், பெண்ணும் சந்திப்பதுதான் இதன் திரைக்கதை. தாங்கள் பெரிதாக நினைத்த கலாசாரத்துக்கு எதிராக இருவரும் நடக்க வேண்டிய நிலை உருவாகும் போது எந்த முடிவை இருவரும் எடுக்கிறார்கள் என்பது படத்தின் கிளைமாக்ஸ்.
தமிழில் முன்னணி வரிசையில் இடம் காத்திருந்த போது பாலிவுட் மார்க்கெட்டை குறி வைத்தார் அசின். "கஜினி'யின் ஹிந்தி ரீமேக் மூலம் பாலிவுட் சென்றவர், தமிழ் ஹீரோக்களுடன் நடிக்க வந்த வாய்ப்புகளைத் தட்டி கழித்தார். ஆனால், சில ஆண்டுகளிலேயே பாலிவுட் கை விரிக்க வாய்ப்புகளைத் தேடி பிடிக்கும் நிலை அசினுக்கு உருவானது. சோனாக்ஷி சின்ஹா, கேத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா, ஆலியாபாட் போன்ற ஹீரோயின்களின் அதிரடி கவர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் அசின் திணறினார். இதையடுத்து தற்போது மீண்டும் தென்னிந்திய படங்களுக்கு திரும்ப முடிவு செய்திருக்கிறார். இதன் முதற்கட்டமாக தமிழ்ப் படம் ஒன்றில் நடிப்பது குறித்த பேச்சை அவரது தரப்பு தொடங்கி இருக்கிறது. கோலிவுட்டைப் பொறுத்தவரையில் முன்னணி ஹீரோக்களே வளர்ந்து வரும் இயக்குநர்களின் படங்களில் நடிப்பதை பெரிதும் விரும்புவதால், இந்த முறை முன்னணி இயக்குநர்களிடம் சென்று வாய்ப்புகளைக் கேட்காமல் சமீபத்தில் கவனம் ஈர்த்த இயக்குநர்களிடம் வாய்ப்புகளைப் பெறுவதில் அசின் விரும்புவதாக தெரிகிறது. கவர்ச்சி போட்டிகளை மீறி இந்த முறை கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் முடிவு செய்திருக்கிறாராம்.
திருட்டு வி.சி.டி.க்கு எதிராக ரஜினி, விஜய் ஆகியோர் களம் இறங்க வேண்டும் என கருத்து தெரிவித்திருக்கிறார் நடிகர் விஷால். தனது 37-வது பிறந்தநாளையொட்டி தன் தங்கை ஐஸ்வர்யாவை நிர்வாக பொறுப்பாளராக கொண்ட "வி மியூசிக்' நிறுவனத்தின் தொடக்க விழாவில் பேசிய விஷால்... ""சினிமாவில் மட்டும் அநியாயங்களை தட்டி கேட்கும் ஹீரோவாக இருக்கக் கூடாது. நிஜ வாழ்க்கையிலும் அப்படி இருந்தால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என என் அப்பா அடிக்கடி சொல்லுவார். அதைத்தான் நான் இப்போது பின்பற்றி வருகிறேன். இந்திய சட்டத்தில் ஒவ்வொரு குற்றத்துக்கும் ஒரு சட்டம் இருக்கிறது. திருட்டு வி.சி.டி.யிலும் அப்படியொரு சட்டம் இருக்கிறது. சட்டம் வெறும் சட்டமாகவே இருப்பதுதான் இங்கே பிரச்னை. திருட்டு வி.சி.டி. பிரச்னையில் அரசு இயந்திரம் வேடிக்கை பார்க்கிறது என்பதை ஒப்புக் கொள்ள மாட்டேன். எங்களுக்கு ஒரு பிரச்னை அதற்கு தீர்வு சொல்லுங்கள் என கேட்டல்தான் அரசு அதை தீர்த்து வைக்கும். உள்ளுக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தால் யாரும் கவனிக்க மாட்டார்கள். அதனால் நாம்தான் நம் துறையில் உள்ள பிரச்னைகளைப் பேச வேண்டும். வேறு யாரும் பேச மாட்டார்கள். இந்தப் பிரச்னையில் ரஜினியும், விஜய்யும் களம் இறங்க வேண்டும்'' என்றவர், ""நடிகர் சங்கத்துக்கு தனி கட்டிடம் வரும் வரை ஓய மாட்டேன்'' எனவும் ஆவேசப்பட்டார்.
"அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்'.... என வலுக்கட்டாயமாக சிலர் கொடிப் பிடிக்க... இளைய தளபதியாக இருக்க பிடிக்குமா? இல்லை அடுத்த சூப்பர் ஸ்டாராக இருக்க பிடிக்குமா? என சமீபத்தில் தன் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு தன்னிலை உணர்ந்தவராக பதிலளித்துள்ளார் விஜய்... ""எப்போதும் பழையவற்றை மறக்க கூடாது. நான் அதை மறக்கவும் மாட்டேன். என்னை விடத் தகுதியானவர்கள். அழகானவர்கள். நடிக்கிறவர்கள் இந்த சினிமாவில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த நிலையை அடைய ஒரு காலம் வரும். வாய்ப்புகளைத் தேடிப் போவதை விட, தேடிப் பயணிக்கிற இடங்களில் நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டால் பிரச்னை இல்லை. பந்தை உதைத்து கொண்டே போகிற ஒருவனுக்கு அந்தப் பந்தை லாகவமாக வலைக்குள் தள்ளுவதில்தான் குறி. அந்தப் பந்துதான் வலைக்குள் போக வேண்டுமே தவிர, அதற்கு மாறாக நாமே அந்த வலைக்குள் சென்று விடக் கூடாது. ஒரு படம் வெற்றியா? தோல்வியா? என்பதைத் தீர்மானிக்கும் செயல் ரசிகர்களுடையது. ஆனால் அதை சூழல்கள்தான் தீர்மானிக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல. அது மாறும் போதுதான் இங்கே பிரச்னை'' என சமீபத்தில் "கத்தி' படத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளையும் கவனத்தில் கொண்டு பேசி முடித்துள்ளார் விஜய்.
உடல் நலக்குறைவிலிருந்து தேறி வந்த ரஜினிகாந்த் தன் இளைய மகள் செüந்தர்யாவின் இயக்கத்தில் "கோச்சடையான்' படத்தில் நடித்தார். "அனிமேஷன் படமாக இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் படம் வேறு இடத்தில் இருந்திருக்கும்' என ரஜினி ரசிகர்கள் பேசுமளவுக்கு "கோச்சடையான்' படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. "கோச்சடையான்' படத்துக்குப் பின் புதிய படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் செளந்தர்யா. படத்துக்கான கதை முடிவான நிலையில் தனது உதவியாளர்களுடன் கதாபாத்திரங்கள் குறித்த விவாதங்களில் ஈடுபட்டுள்ளார். திரைக்கதை இன்னும் முழுமையடையாத நிலை உள்ளதால் இதுவும் அனிமேஷன் படமா? அல்லது நட்சத்திரங்களை நடிக்க வைக்கும் படமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.