

"காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, இரவில் கடுக்காய் மண்டலம் சாப்பிட கோலூன்றி நடந்தவன் கோலை வீசி நடப்பான் மிடுக்காய்' என்பதன் விளக்கம் என்ன? இவற்றை எந்த அளவு உட்கொள்ளலாம்? நேரடியாக உட்கொள்ளலாமா?
ஆ.வெங்கடராமன், சென்னை.
காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் சாப்பிட கோலூன்றி நடந்தவன் கோலை வீசி நடப்பான் மிடுக்காய் என்பது முன்னோர் கூற்று. அதற்கு காரணம் காலையில் இஞ்சி சாப்பிடுவதால் அது செரிமானத்திற்கு உதவுகிறது. இரத்தம் சுத்தமாகும். மதிய உணவிற்கான பசியை ஏற்படுத்துவதற்கு அது உதவி செய்கிறது. காலையில் இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. அதுபோல இஞ்சியை துண்டமாக்கி காலை உணவின் நடுவே சிறிது சிறிதாகச் சாப்பிடுவதும் ஆரோக்கியமானதே. இஞ்சி காரச் சுவை மிக்கது. ஜீரணமாகும்பொழுது இரைப்பையில் இனிப்பாக மாறும். சூடு, வறட்சி தரும். உமிழ்நீரைப் பெருக்கி, சுவையைத் தூண்டும். இரைப்பையைத் தூண்டிப் பசியைப் பெருக்கும். எந்த கடின உணவையும் செரிக்கச் செய்யும். காலையில் இஞ்சியைத் துண்டுகளாக்கி எலுமிச்சம் பழச்சாறு, இந்துப்புச் சேர்த்துச் சாப்பிட்டால் அஜீரணம், அல்சர் போன்ற உபாதைகள் நீங்கிவிடும். வேறொரு சிறு கை வைத்தியமுறையும் இருக்கிறது. துண்டாக நறுக்கிய இஞ்சி 500 கிராம். சீரகம் 250 கிராம். கொத்தமல்லி விதை 250 கிராம். இந்துப்பு 125 கிராம். இவற்றுடன் எலுமிச்சம் பழச்சாறு அரை லிட்டர் ஊற்றி ஊற வைத்து வெயிலில் வைத்து உலர்த்தித் தூளாக்கிக் கொண்டு பீங்கான் அல்லது மாக்கல் சட்டியில் ஊற வைப்பது நல்லது. காலையில் 1-2 ஸ்பூன் அளவு வாயில் உமிழ்நீருடன் கரைத்துச் சாப்பிட ருசியின்மை, உமிழ்நீர் சுரப்பு, அஜீரணம், வாய்க் கசப்பு நீங்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சாப்பிட்டவுடன் மலக்கழிச்சல் ஏற்படுவது நிற்கும். 100 கிராம் ஓமத்துடன் இந்துப்பு 10 கிராம் சேர்த்து தூளாக்கி பீங்கான் பாத்திரத்திலிட்டு ஆடாதொடை இலைச்சாறு, இஞ்சிச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு, புதினாச்சாறு இவற்றில் வரிசையாக ஒவ்வொன்றாக 50 மில்லி லிட்டர் சேர்த்து ஊற வைத்து உலர வைக்கவும். நன்கு உலர்ந்ததும் அதை அரை கிராம் அளவு காலையில் சாப்பிட்டு வர அஜீரணம், அல்சர் உபாதை குறையும்.
சுக்கு இஞ்சியை விட குறைவான வறட்சி உடையது. மேலும், உமிழ்நீரைப் பெருக்கி சுவையைத் தூண்டுகிறது. ஜீரணகாரிகளில் மிகச் சிறந்தது. மதியம் உண்ணும் உணவு பொதுவாகவே சற்று அதிகமாக இருப்பதால் சுக்கை மதிய வேளைகளில் சாப்பிடுவதால் அது உண்ட உணவை விரைவாக செரிக்க உதவுகிறது. அதற்குக் காரணம் அதனுடைய சூடான தன்மை இரைப்பையில் வேகமாகப் பரவி பசி எனும் தீக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது.
இரவில் கடுக்காய் தோலைப் பொடித்து சிறிது வெந்நீருடன் சாப்பிட மறுநாள் காலை மலம் நன்றாக இளகிப் போகும். வயிற்றில் காற்றழுத்தம், பழைய மலத்தேக்கம் ஆகியவை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளும். மழைக் காலங்களில் கடுக்காய்தூள் 50 கிராம், இந்துப்பு 10 கிராம் சேர்த்த சூரணம் நல்லது. பனிக்காலங்களில் கடுக்காய் 100 கிராம், சுக்கு அல்லது திப்பிலி 25 கிராம் சர்க்கரை 75 கிராம் சேர்த்துச் சாப்பிடலாம். கோடைக் காலத்தில் வெல்லம் 100 கிராம், தேன் 50 கிராம், கடுக்காய் 100 கிராம் சேர்த்து இழைத்து வைத்துக் கொண்டு உபயோகிக்கலாம். அந்தந்த பருவத்து நோய்கள் அணுகமாட்டா. 100 கிராம் கடுக்காய் தூள், 10 கிராம் இந்துப்பு, 100 மி.லி. எலுமிச்சம்பழச் சாற்றில் ஊற வைத்து உலர்த்தி, தூளாக்கி இரவு உணவிற்குப் பின் சாப்பிட கடின உணவும் செரிக்கும். வாயு கொள்ளா. மேற்கண்ட வகையில் நீங்கள் பயன்படுத்தி நலம் பெறலாம். மேற்குறிப்பிட்ட இந்த மூன்றுவகை துணைப்பொருட்களும் குடல், இரைப்பை, மண்ணீரல், கல்லீரல் போன்ற பகுதிகளை சுறுசுறுப்பாக்குவதுடன் நல்ல ஜீரண காரியாகவும் இருப்பதால் உடலில் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதும், உணவின் சத்தான பகுதியை ஜீரணத்தின்பொழுது பிரித்து தாதுக்களில் விரைவாகக் கொண்டு சேர்ப்பதாலும் மனித உடல் ஆரோக்கியம் பெறுகிறது.
தாதுக்களின் சீரான செயல்பாடு இவற்றின் மூலம் மேம்படுவதால் மூப்பைத் தள்ளிப் போடுகிறது. அதனாலேயே "கோலூன்றி நடந்தவன் கோலைவீசி நடப்பான்' என்று நம் முன்னோர் கண்டறிந்து குறிப்பிட்டுள்ளனர். நீங்களும் இவற்றையெல்லாம் பயன்படுத்திப் பலகாலம் பிணியின்றி வாழலாம். மேற்குறிப்பிட்ட காலநிலைகளுக்கேற்ப அவற்றைச் சாப்பிட வேண்டுமே தவிர இவை எல்லாவற்றையும் ஒரு சேரச் சாப்பிடுவது தவறு. அதை அதிக அளவில் சாப்பிடுவதும் தவறாகும். அதனால் இவற்றை கவனத்துடன் சாப்பிட ஆரோக்கியம் மேம்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
(தொடரும்)
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.