திரைக்கதிர்

கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கைச் சம்பவங்களை மையமாக கொண்டு "ராமானுஜன்' என்ற பெயரில் படத்தை
திரைக்கதிர்
Updated on
3 min read

கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கைச் சம்பவங்களை மையமாக கொண்டு "ராமானுஜன்' என்ற பெயரில் படத்தை உருவாக்கினார் இயக்குநர் ஞான.ராஜசேகரன். ஜெமினி - சாவித்ரியின் பேரன் அபிநய், பாமா, சுஹாசினி உளிட்டோர் நடிப்பில் வந்த இப்படம் ரசிகர்களின் பரவலான பாராட்டுக்களைப் பெற்றது.   தற்போது "தி மேன் ஹூ நியு இன்பினிடி' என்ற பெயரில் ராமானுஜத்தின் வாழ்க்கை சரித்திரம் ஹாலிவுட்டில் படமாகி வருகிறது. "ஸ்லம் டாக் மிலியனர்' படத்தில் நடித்த தேவ் படேல் ராமானுஜனாக நடிக்கிறார். அவரது மனைவியாக தேவிகா பிசே நடிக்கிறார். கும்பகோணத்தில் ராமானுஜம் பிறந்த இல்லத்தில் சமீபத்தில் படப்பிடிப்பு நடந்தது. புதுச்சேரியிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. சில நாள்கள் சென்னையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் வெளியாகும் அதே நாளில் இப்படத்தை தமிழிலும் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ரஜினியின் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் எழுதி இயக்கி வரும் படம் "லிங்கா.' அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்து விட்ட நிலையில், இரண்டு பாடல் காட்சிகளுக்காக மட்டும் ஐரோப்பிய கண்டம் பறக்க இருக்கிறது படக்குழு. ரஜினியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவ ஆலோசனைகள் பெற்ற பின்னரே ஐரோப்பாவுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பூரண உடல் சோதனைகளுக்கு பின்பு, மருத்துவ குழு ஒன்றும் ரஜினியுடன் செல்ல உள்ளது. இப்போது கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் "லிங்கா'வின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதில் இடம் பெறும் சண்டை காட்சியை ஹாலிவுட் ஆக்ஷன் இயக்குநர் லீ வொயிட்டேகர் அமைக்கிறார். இவர் "விஸ்வரூபம்', "ஆரம்பம்' ஆகிய படங்களுக்கு சண்டை காட்சிகளை அமைத்தவர். ரஜினிக்காக பிரத்யேக சண்டைக் காட்சிகளை உருவாக்கி வரும் லீ தமிழ் ஸ்டண்ட் நடிகர்களை பெருமளவில் இதற்காகப் பயன்படுத்தி உள்ளார். இந்த காட்சியோடு படம் முடிந்து விடும். அதன் பின் சிறிது ஓய்வெடுக்கவுள்ள ரஜினி பாடல் காட்சிகளுக்காக ஐரோப்பிய கண்டம் செல்கிறார்.

கடந்த காலங்களை மறந்து புதிய வாழ்க்கை வாழ்கிறேன் என்பது பிரபுதேவாவின் சமீப அப்டேட்ஸ். சென்னை வந்தாலும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை என்பதை வழக்கமாக வைத்திருந்த பிரபுதேவா. என்ன நினைத்தாரோ... திடீரென்று பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். ""தற்போது அஜய்தேவ்கான் நடிப்பில் "ஆக்ஷன் ஜாக்ஸன்' படத்தை இயக்குகிறேன். 10 சதவீத படப்பிடிப்பு மீதம் இருக்கிறது. இந்த மாத இறுதியில் படம் திரைக்கு வரும். ஹிந்தி படங்களின் முதலீடு 100 கோடிக்கு மேல் இருப்பதால் அவர்களுக்கு உண்மையாக உழைக்கிறேன். அதனால்தான் யாரையும் சந்திக்க நேரம் இல்லை. மகன்களைப் பார்க்க மட்டுமே சென்னைக்கு வந்து போகிறேன். தனியாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடந்த காலங்களை மறந்து புதிய வாழ்க்கை வாழ்கிறேன். என் மகன்களும், சினிமாவும்தான் எனக்கு கண்கள். தொடர்ந்து சினிமா இயக்கினாலும், நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். தமிழில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி திறமையாளர்களைக் கண்டுபிடிக்கும் எண்ணம் இருக்கிறது'' என்ற அறிவிப்போடு முடித்தார் பிரபுதேவா.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்த "சுயம்வரம்' 24 மணி நேர படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சாதனைப் படமாக உருவானது. இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரது முயற்சியால் இப்படம் உருவானது. பல யூனிட், பல இடங்களில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி இப்படத்தை எடுத்து முடித்திருந்தனர். தற்போது அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக உருவாகியுள்ள படம் "நடு இரவு.' இப்படத்துக்காக 12 மணி நேர படப்பிடிப்பில் முழு படத்தையும் முடித்துள்ளது படக்குழு. த்ரில்லர் கதை என்பதால், திட்டமிட்டப்படி படப்பிடிப்பை நடத்த முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஓரே வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள், குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை உள்ளடக்கிய கதை களம் என்பதால், மாலை 6 மணிக்கு படப்பிடிப்பை தொடங்கி மறுநாள் காலை 6 மணிக்கு முடித்தனர். ஜெயலெஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்களில் புதுமுகங்களே நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் மோனிகா என்ற சிறுமி நடித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார் புதுகை மாரிசா.

சென்னை வந்திருந்த அர்னால்டு கிடைத்த சிறிது நேரத்திலும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்த உடற்பயிற்சி கூடத்துக்கு செல்ல, அங்கு எதேச்சையாக சூர்யா. உடன் இருந்தவர்கள் அறிமுகம் செய்து வைக்க இனிதே நடந்தது இந்த சந்திப்பு. ""எனக்கு நீங்களும் ஒரு ரோல் மாடல். உங்கள் பாணிதான் என் உடற்பயிற்சி பாணி'' என பூரித்த சூர்யாவை அரவணைத்து ஆனந்தப்பட்டார் அர்னால்டு. அதோடு சூர்யா தன் வீட்டில் இருந்து எடுத்து வர சொன்ன "அர்னால்டு பாடி பில்டிங் ஃபார்மென்' என்ற புத்தகத்தை அர்னாலிடம் காட்டி, ""இது எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்'' என்று கூறி ஓர் ஆட்டோகிராப் வாங்கி கொண்டு விடைப் பெற்ற சூர்யாவுக்கு, உடற்பயிற்சிக்கான டிப்ஸ்களை கொடுத்து அனுப்பினாராம் அர்னால்டு. ""இந்திய பெற்றோர்கள், விளையாட்டில் ஈடுபடும் பிள்ளைகளை ஊக்குவிப்பதே இல்லை. விளையாட்டில் பிள்ளைகள் செய்யும் சாதனைகள் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவும். இந்திய விளையாட்டுத் துறையை மேம்படுத்தினால் இன்னும் பெருமை சேர்க்கும் அளவுக்கு பிள்ளைகள் உருவாகுவார்கள். இந்தியர்கள் திடமானவர்கள் என்ற கருத்து எங்கள் ஊரில் உண்டு. அதை மெய்ப்பிக்கிற வகையில் இங்கே பெற்றோர்கள் இருக்க வேண்டும்''-  அந்த உடற்பயிற்சி கூடத்தில் இருந்த இன்னும் சில பாடி பில்டர்களிடம் அர்னால்டு உரையாடி சென்ற வார்த்தைகள் இவை.

புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "இஞ்சி முறப்பா.' ஸ்ரீபாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சோனி கேறிஸ்தா நடிக்கிறார். நெல்லை சிவா, லொள்ளு மனோகர், கிருஷ்ணா, ரிஷிகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சிறிது இடைவெளிக்குப் பின் இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். திரைப்படக் கல்லூரி மாணவர் எஸ்.சகா இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். படம் குறித்து இயக்குநர்..."" உறவுகள் அத்தனை அற்புதமானது. அது மாதிரியான உறவுகளை இப்போது திரைக்கதை ஆக்கினால் அது நகைச்சுவையாக கூட தெரியலாம். ஏனென்றால் காலக் கட்டம் அப்படி. உறவுகளால் பின்னப்பட்ட கதையை காமெடியாக பார்க்கிற தலைமுறை இது. ஆனால் அதையும் மீறி ஓர் உன்னதமான அண்ணன் - தங்கை உறவை மையாக கொண்டு இந்த திரைக்கதையை அமைத்துள்ளேன். தன் தங்கையை இப்படியெல்லாம் வாழ வைப்பேன் என கனவு காணும் ஓர் அண்ணனின் கனவு பொய்யாகிப் போகிறது. அப்போது வருகிற பிரச்னைகள்தான் கதை. பாசம் ஒரு புறம், காதல் ஒரு புறம் இதுதான் கதையின் பயணம்'' என்கிறார் இயக்குநர் சகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com