திரைக்கதிர்

ஒரே கல்லூரியில் படித்திருந்தாலும் சத்யராஜ் - மணிவண்ணன் இடையே பெரிய அளவில் பழக்கம் இல்லை. சினிமாவில் நடிகனாகத்
திரைக்கதிர்
Updated on
2 min read

ஒரே கல்லூரியில் படித்திருந்தாலும் சத்யராஜ் - மணிவண்ணன் இடையே பெரிய அளவில் பழக்கம் இல்லை. சினிமாவில் நடிகனாகத் தோற்று போய், பெருங்குழப்பத்தில் ஐஸ்கீரிம் பார்லர், விதை விற்பனை, இரும்பு வியாபாரம் என ஏதேதோ தொழில் செய்து அதிலும் தோற்று விரக்தியின் விளிம்பில் நிற்கும் போதுதான் மணிவண்ணனுக்கு அறிமுகமாகியிருக்கிறார் சத்யராஜ். மாடி வீட்டு ஏழையாக, கார் இருந்தும் பெட்ரோல் போட வசதி இல்லாமல், தோற்றுப் போன நடிகனாக வேறு வழியில்லாமல் ஆர்.சுந்தர்ராஜனிடம் உதவி இயக்குநராக இருந்தார் சத்யராஜ். பிரிதொரு சந்திப்பில் மணிவண்ணனிடம் ஒரு கதையைச் சொல்லி ""நான் இந்தக் கதையைத்தான் இயக்கப் போகிறேன்'' என்று சத்யராஜ் சொல்ல, ""விதவிதமாக நடித்து விட்டு, சான்ஸ் இல்லாமல் டைரக்டர் ஆகிவிடக்கூடாது'' என்ற அறிவுரையுடன் "நூறாவது நாள்' படத்துக்கு சத்யராஜை வில்லனாக்கினார் மணிவண்ணன். ""அதுதான் இப்போது இருக்கிற இந்த சத்யராஜூக்கு வாழ்க்கை கொடுத்தது. மணிவண்ணன் இல்லாமல் நடிகர் சத்யராஜ் இல்லை. அவர் இல்லையென்றாலும் ஒவ்வொரு நாளும் அவரின் ஞாபகங்கள் என்னுடன் இருக்கின்றன'' மணிவண்ணன் குறித்து பேசும் போதெல்லாம் இப்படி நெகிழ்ந்து விடுகிறார் சத்யராஜ்.     

முக அழகை கூட்டுவதற்காக நடிகைகள் மருத்துவ சிகிச்சைகளில் ஈடுபடுவது வழக்கம். இந்த வரிசையில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்து வருகிறார் சமந்தா. "மாஸ்கோவின் காவேரி', "பாணா காத்தாடி' உள்ளிட்ட படங்களை விட, "நான் ஈ' படத்தில் நடித்த போது சமந்தாவின் முகத் தோற்றத்தில் மாற்றங்கள் தெரிந்தன. அதன் பின் வெளிவந்த விளம்பரப் படங்களில் இன்னும் வித்தியாசம் தெரிந்தது. முக அழகை மேலும் கூட்டுவதற்கான மூக்கு ஆபரேஷனின் முதற் கட்ட சிகிச்சையில் அவர் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்த ஆபரேஷனுக்கான தொடர் சிகிச்சையின் இறுதி கட்டத்துக்காக லண்டனுக்குச் செல்ல சமந்தா முடிவு செய்திருக்கிறார். இதற்கான பயணத்தை விரைவில் மேற்கொள்ள இருக்கிறார். மூக்கு ஆபரேஷன் முடிந்ததும் அங்கேயே சிறிது நாள்கள் ஓய்வில் இருக்கிறார். கடைசியாக நடக்கும் இந்த சிகிச்சையில் மூக்கின் அழகு கச்சிதமாக மாற்றப்பட்டு வசீகர முகத் தோற்றத்துக்கு மாறி விடும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆபரேஷனின் முதற் கட்ட சிகிச்சையில் இருந்ததால்தான் ஷங்கரின் "ஐ', மணிரத்னத்தின் "கடல்' ஆகிய படங்களை அவர் தவிர்த்ததாக இப்போது செய்திகள் வெளியாகி உள்ளன.

"ஆயிரத்தில் ஒருவன்', "இரண்டாம் உலகம்' என பெரும் பட்ஜெட்டில் உருவான படங்கள் செல்வராகவனுக்கு கைக் கொடுக்கவில்லை. இதனால் சற்று அமைதி காத்தவர் தனுஷ் நடிக்கும் "இது மாலை நேரத்து மயக்கம்' என்ற படத்தை இயக்க முடிவு செய்தார். அதற்கான வேலைகளும் தொடங்கிய வேகத்திலேயே நின்று போனது. இந்நிலையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றார். ஆனால் இதை செல்வராகவன் மறுத்தார். "நான் இயக்கவிருந்த படத்தை அவர் இயக்கவில்லை. அவர் இயக்குவது வேறு கதை' என்றார் செல்வராகவன். இதற்கிடையில் படம் இயக்குவதை தள்ளி வைத்து விட்டு, தனது பிள்ளைகளுடன் நேரம் செலவழித்தார் செல்வராகவன். ஆனால் தற்போது இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவுடன் மீண்டும் இணைந்து படத்தை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறார். முந்தைய படங்களின் தோல்வியால் தயாரிப்பாளர்களின் நம்பகமான இடத்தில் செல்வராகவன் இல்லாததால், இப்படத்தை தனுஷ் தயாரிக்க முடிவு செய்துள்ளார். 

"வண்ண வண்ண பூக்கள்', "சேது' உள்ளிட்ட திருப்புமுனை படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகள் கை நழுவி விட, இன்னமும் திருப்பத்துக்காக காத்திருக்கிறார் நடிகர் விக்னேஷ்.  அந்த விதத்தில் தற்போதைய முயற்சி "அவன் அவள்.' காயன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் மீண்டும் ஒரு கனம் பொருந்திய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இப்படத்தின் கதாநாயகியாக தேவிகா நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக சந்திரிகா நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ராம்கிரீஷ் மிரிணாளி இப்படத்தை எழுதி, இயக்குகிறார்.

பொண்ணு பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "அந்த குயில் நீ தானா.' இப்படத்தின் மூலம் சாகர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கீர்த்தி கிருஷ்ணா கதாநாயகியாக நடிக்கிறார். புதுமுகங்கள் பலர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். ஸ்டான்லிஜோஸ் இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

வசூல் ரீதியாக அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கும் பட ஹீரோயின்களை முன்னணி ஹீரோயின்கள் என்றழைக்கிறது கோலிவுட் வியாபாரம். நயன்தாரா முதல் நஸ்ரியா வரை இந்த பட்டியலில் இடம் பிடிக்க, அழகு, நளினம், திறமை இருந்தும் ரம்யா நம்பீசனால் இந்த பட்டியலுக்குள் வர முடியவில்லை. 2005-ஆம் ஆண்டு "ஒரு நாள் ஒரு கனவு' படத்தில் நடித்தவர், மூன்று வருட இடைவேளைக்குப் பின் "ராமன் தேடிய சீதை' படத்தில் தலைகாட்டினார். தொடக்க கால படங்கள் கைக் கொடுக்காமல் போனதால் ராசியில்லாத நடிகை என்ற பட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டது. எதிர்பாராத வகையில் "குள்ளநரிக்கூட்டம்' ஹிட்டானது. ஆனால் அடுத்தடுத்த வாய்ப்புகளை மலையாள சினிமாக்களில் தேடினார். இதனால் தமிழ் சினிமா வாய்ப்புகள் கை நழுவின. பிறகு "பீட்சா' மற்றொரு வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின் தமிழில் வாய்ப்புகள் வந்தாலும், மலையாள படங்களுக்கு கொடுத்த கால்ஷீட் பிரச்னையில் சிக்கிக் கொண்டார். வந்த வாய்ப்புகளைக் கோட்டை விட்டதாலும், மீண்டும் ஹிட் படம் அமையாததால் வாய்ப்புகள் அவருக்கு மந்தமாகின. இப்போது தமிழில் வாய்ப்புகளே இல்லாததால் மலையாள சினிமா வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார் ரம்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com