திரைக்கதிர்

தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் நாகார்ஜுனா, கார்த்தி இருவரும் முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர்.
திரைக்கதிர்
Updated on
3 min read

தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் நாகார்ஜுனா, கார்த்தி இருவரும் முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். வம்சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் தேர்வானார். நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயினைத் தேடி வந்தனர். இதற்கிடையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னை, ஹைதராபாத்தில் தனித்தனியாக நடந்தது. ஸ்ருதி ஏற்கெனவே விஜய்யுடன் "புலி' மற்றும் மகேஷ்பாபு படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தியில் உருவாகியுள்ள "ரமணா' படத்தின் ரீமேக்கான "கப்பர்' படத்தின் விளம்பரங்களிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் கார்த்தியுடன் நடிக்க ஒப்புக் கொண்ட படத்திலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளார். இப்படத்தில் நடிப்பதாக இருந்தால் தான் ஏற்கெனவே ஒப்புக் கொண்ட படங்களில் கால்ஷீட் பிரச்னை எழும் என்பதுதான் இதற்குக் காரணம். இது பற்றி தனது கால்ஷீட் மேனேஜருடன் ஆலோசித்த ஸ்ருதி, கார்த்தி படத்திலிருந்து வெளியேற முடிவு செய்தார். இத்தகவல் இயக்குநர் வம்சிக்குத் தெரிவிக்கப்பட்டது. படப்பிடிப்புக்கு தடங்கல் இருக்கும் சூழலைப் புரிந்து கொண்ட அவரும் ஸ்ருதியின் விலகலுக்கு ஒப்புதல் தெரிவித்து விட்டார். தற்போது கார்த்தி ஜோடியாக நடிக்கவுள்ள ஹீரோயினுக்கான தேடல் மும்முரமாக நடந்து வருகிறது.

வெங்கட்பிரபுவின் "மாஸ்' படத்தில் நடித்து வந்த எமி ஜாக்சன், தனக்கான காட்சிகளைக் குறைத்ததற்காக நடிக்க மறுத்தார். தற்போது அவரது இடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். தமிழ் மொழியில் அதிக கவனம் செலுத்தினாலும் அவ்வப்போது மலையாளத்தில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.  "நீநா' படத்தில் நடிக்க ஆண்ட்ரியாவிடம் கால்ஷீட் கேட்டார் இயக்குநர் லால் ஜோஷ். கதையும் பிடித்திருந்ததால் ஆண்ட்ரியா நடிப்பதற்கான சூழல் நிலவியது. இந்நிலையில் திடீரென்று நடிக்க மறுத்து ஒதுங்கினார். அவருக்குப் பதிலாக தீப்தி சேத்தியை ஒப்பந்தம் செய்தார் லால். இயக்குநருடன் ஆண்ட்ரியாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே ஆண்ட்ரியாவின் விலகலுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. நீநா என்பது நீனா, நளினி என்ற இரு தோழிகளைப் பற்றிய கதை. நீநா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த ஆண்ட்ரியாவிடம் கதாபாத்திர மாற்றத்துக்காக நீண்ட கூந்தலை கட் செய்து குட்டையாக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு ஆண்ட்ரியா மறுப்பு தெரிவிக்கவே அவருக்குப் பதிலாக தீப்தி சேத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அனுஷ்கா, நயன்தாரா, காஜல் அகர்வால், ஹன்சிகா, ஸ்ருதி உள்ளிட்ட ஹீரோயின்களின் சம்பளத்தைப் பொறுத்தே படங்களின் பட்ஜெட் நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் போட்டி போட்டு தங்களது சம்பளத்தை உயர்த்தி வருகின்றனர். குறைந்த பட்ஜெட்டில் மலையாளப் படங்கள் உருவாவதால் ஹீரோயின்களின் சம்பளம் சில லட்சங்களைத் தாண்டுவதில்லை. தற்போது அவர்களுக்கும் சம்பள ஆசை வந்துவிட்டது. சமீபத்தில் சித்திக் இயக்கத்தில் நடிக்க ஒரு கோடிக்கும் அதிகமான தொகையைச் சம்பளமாகக் கேட்டார் நயன்தாரா. நயன்தாரா வைத்த ஒரு சில கோரிக்கைகள் ஏற்கப்படவே அதிலிருந்து சற்று இறங்கி வந்து நடித்து வருகிறார். மலையாளத்தில் ஹீரோயின்களுக்கு இவ்வளவு பெரிய சம்பளமா? என அங்குள்ள ஹீரோயின்கள் வியப்பில் ஆழ்ந்தனர். இதனால் அவர்கள் கால்ஷீட் விஷயத்தில் கறார் காட்டத் தொடங்கி உள்ளனர். "ராணி பத்மினி' என்ற மலையாளப் படத்தில் நடிக்க

மஞ்சுவாரியரிடம் ஒப்புதல் வாங்கி இருந்தார் ஆஷிக் அபு. இதில் மற்றொரு ஹீரோயினாக ரீமா கல்லிங்கல் நடிக்கிறார். பேசப்பட்ட சம்பளத்தை விட இரு மடங்கு திடீரென்று  உயர்த்திக் கேட்டார் மஞ்சு. இதில் சமரசம் ஏற்படாததையடுத்து படத்திலிருந்து வெளியேறுவதாகக் கூறினார். பின்னர்,   உடன்பாடு ஏற்பட்டு நடித்து வருகிறார். இதைக் கவனித்து வந்த மற்ற மலையாள ஹீரோயின்களும் சம்பளத்தை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகின்றனர்.

சொந்தப் பிரச்னைகளால் தமிழ் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அஞ்சலி, தற்போது மீண்டும் கோலிவுட்  திரும்பியிருக்கிறார். "அப்பா டக்கர்', "மாப்ளே சிங்கம்' என 2 படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் "தீர ரானா விக்ராமா' என்ற கன்னடப் படத்தில் நடிக்கிறார். இப்படம் வெளியானால் தனக்கென தனியொரு இடம் கன்னட சினிமாவில் கிடைக்கும் என்று நம்புகிறார். இதனால் அப்படத்துக்குத் தனது சொந்தக் குரலில் டப்பிங் பேச முடிவு செய்திருக்கிறார். கன்னடத்தைச் சரி வர பேசத் தெரியவில்லை என்ற போதிலும், விடா முயற்சியில் டப்பிங் பேசி விட நினைக்கிறார்.  இப்படம் தேசிய விருது மேடைக்கு செல்லும் அம்சங்களைப் பெற்றிருப்பதுதான் இதற்குக் காரணம். ""மொழியே தெரியாமல் பேச முடிவு செய்திருப்பது விபரீத முயற்சி. இப்போதைக்கு இந்த எண்ணத்தைக் கை விட்டு மொழியை நன்றாக கற்றுக் கொண்டு அடுத்தடுத்த படங்களில் டப்பிங் பேசு'' என நல விரும்பிகள் சிலர் அஞ்சலிக்கு யோசனை தெரிவித்துள்ளனர். ஆனால், அதை அவர் காதில் போட்டுக் கொள்ளாமல் ஒரு தடவை சொல்லிக் கொடுத்தால் பயற்சி எடுத்துக் கொண்டு பேசும் உறுதியில் இருக்கிறாராம்.

"நண்பேன்டா' படத்தைத் தொடர்ந்து "கெத்து', "இதயம் முரளி' என அடுத்தடுத்த படங்களில் பரபரப்பாக இயங்கி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். காதல், காமெடி என கமர்ஷியல் கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து வந்த உதயநிதி "கெத்து' படத்தின் மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார். இப்படத்தை "மான் காரத்தே' திருக்குமரன் இயக்குகிறார். தொடர்ந்து சந்தானத்தை பயன்படுத்தி வந்த உதயநிதி, இப்படத்தில் கருணாகரனுடன் இணைகிறார். எமி ஜாக்சன் ஜோடியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். "வாமனன்' அஹமது "இதயம் முரளி' படத்தை இயக்குகிறார். அனிரூத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. "ஆண்பாவம்' ரீமேக்கில் நடிக்கும் ஆர்வத்தில் அப்பட உரிமையை பெற்ற உதயநிதி, திடீரென்று அத்திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார். அதன் மையக்கருவை வைத்து புதிய திரைக்கதை அமைக்கும் திட்டத்தில் உள்ளார்.

ரஜினி பேசிய வசனங்கள் மற்றும் படத் தலைப்புகளுக்கு தொடர்ந்து மவுசு கூடி வருகிறது. "என் வழி தனி வழி', "போடா ஆண்டவனே நம்ம பக்கம்', "ஒரு தடவை சொன்னா' உள்ளிட்ட அவரின் பிரபல வசனங்கள் படங்களுக்குத் தலைப்பாகி வருகின்றன. இதே போல் அவரின் படத் தலைப்புகளை உரிமம் பெறவும் பலத்த போட்டி நடக்கிறது. கடந்த ஆண்டு விஷால் நடித்த படத்துக்கு "நான் சிகப்பு மனிதன்' எனப் பெயரிடப்பட்டது. பல்வேறு தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், ஒரு பெரிய தொகைக்கு அப்படத் தலைப்பு வாங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்துக்கும் ரஜினியின் சம்பந்தப்பட்ட வார்த்தையை தலைப்பாக்க வேண்டும் என விஷால் விரும்பினார். "சந்திரமுகி' படத்தில் வரும் வேட்டையன் என்ற பெயர் தேர்வானது. இத்தலைப்பை இயக்குநர் பி.வாசு விட்டு தர முன் வரவில்லை. இதையடுத்து தற்போது "பாயும் புலி' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 1983-ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரஜினியின் வெற்றி பட பட்டியலில் முக்கியமானது. இத்தலைப்பு உரிமை பல லட்சங்களுக்கு வாங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com