
வெயில் காலத்தில் ஈச்சம் பழம் சாப்பிடலாமா? எத்தனை வகை ஈச்சம் பழங்கள் உள்ளன? அவற்றில் மருத்துவகுணங்கள் ஏதேனும் உள்ளதா?
த.கீதா, கொரட்டூர், சென்னை.
ஈச்சம் பழம் மூன்று வகைப்படும்.
ஈச்சம் பழம்
நம் நாட்டினுடைய பண்படாத நிலப்பரப்புகளில் பூமியின் மட்டத்திலிருந்து புதர் போன்று மண்டி வளரும் இனத்தவை ஈச்சம்பழம் எனப்படும். இதற்கு Phoenix humilis என்று பெயர்.
சிற்றீச்சம் பழம்:
வளர்ந்த மரங்களில் உண்டானவையும், பழுப்பு நிறத்தவையுமான பழங்களை சிற்றீச்சம் பழம் என்பர். இதற்கு Phoenix sylvestris என்று பெயர்.
பேரீச்சம் பழம்:
சிந்து பிரதேசம், பஞ்சாப் பிரதேசம், எகிப்து, அரேபியா முதலியவற்றில் விளைந்து பதப்படுத்தப்பட்டவற்றை பேரீச்சம் பழம் என்பர். இவை வெளித் தோற்றத்தில் நெய்ப்பு இல்லாது உலர்ந்து சுருக்கங்களுடன் கூடியது ஒருவகை. தேனில் ஊற வைத்தது போன்று வழவழப்புடனும், நெய்ப்புத்தன்மையுடனும் கூடியது மற்றொரு வகை. இந்த இனத்தின் பெயர் பின்வருமாறு: Phoenix dactylifera.
இவை அனைத்தும் மருத்துவ குணங்கள் படைத்தவை. ஈச்சம் பழத்தை விட சிற்றீச்சம் பழமும், சிற்றீச்சம் பழத்தை விட பேரீச்சம் பழமும் தரத்தில் உயர்ந்தவை. இயற்கையாகவே இவற்றில் ஓர் கொழகொழப்பும் இனிப்பும் குளிர்ந்த தன்மையும் உண்டு. நெய்ப்புத்தன்மை வெளிப்படையாகத் தோன்றினாலும், தோன்றாவிட்டாலும் உள்ளுறுப்புகளுக்கு நெய்ப்புத் தன்மை செயலாற்ற வேண்டிய பணிகளை இவை சரி வரச் செய்கின்றன. இப்படி சூட்டிற்கு மாறான குணங்கள் பொருந்தியதால் சிறிது தாமதித்தே ஜீரணமாகக் கூடும். ஜீரணித்த நிலையிலும் தன் இயற்கையான கொழகொழப்பை இரத்தம் போன்ற பொருட்களுடன் கலக்கச் செய்து அவற்றையும் சிறிது தடிப்படையச் செய்கின்றது. எனவே இரத்ததை உருவாக்கும் கல்லீரல் மண்ணீரல் சிறிது அதிகமாகவே உழைத்துச் செயல்பட வேண்டியிருப்பதால் அவற்றிற்கு ஓரளவு சிரமம் ஏற்படும்.
அவயவங்களில் ஏற்படும் அழற்சி நிலைகளைப் போக்குவதற்கு இந்த குணங்கள் மிகவும் உதவுகின்றன. சக்திக்கு மீறிய சாகசச் செயல்களால் மார்பு பக்கத்தில் உள்ள அவயவங்களில் சிதைவு ஏற்பட்டோ மற்றவிதமாகவோ வலி, வறட்சி இவற்றுடன் கூட இருமல் தோன்றும்போது பேரீச்சம்பழத்தின் உபயோகம் அழற்சியைக் குறைத்து குணம் தருகிறது. சிறுநீர் நாள அழற்சியால் சிறுநீர் சீழ் கலந்தது போன்று வெளிப்படும் நிலையிலும் மேற்கூறியது போல பேரீச்சம் பழம் குணம் தருகிறது. உடலின் சூடு காரணமாக வாய், மூக்கு முதலியவற்றின் வழியே இரத்தம் பெருக்கிடும் இரத்தபித்தம் எனும் வியாதி, சீத இரத்தபேதி பித்தநீர் காரணமாக அவயவங்களில் எரிச்சல் மற்றும் தண்ணீர் வேட்கை, தலைசுற்றல், அரைகுறை உணர்வு உள்ள நிலை, மயக்கம், வாந்தி முதலியவை குறைகின்றன. நாக்கினுடைய ருசியற்ற தன்மையைப் போக்கி பொருட்களை சுவைக்க விருப்பம் உண்டாவதுடன் பலம், புஷ்டி இவற்றை அளிக்கிறது. நுரையீரல், மூச்சுக்குழாய் ஆகிய பகுதிகளில் கபத்தினால் ஏற்படும் அடைப்பைப் பேரீச்சம் பழத்தின் உபயோகத்தால் எளிதில் நீக்கி இருமல், இழுப்பு ஆகியவற்றைக் குறைக்கிறது. உடலில் ஏற்படும் அ, ஆ, இ என்ற ஜீவசத்துக்களின் பற்றாக்குறையை பேரீச்சம் பழம் போக்கி உடலுக்கு வலுவூட்டுவதுடன் புத்துணர்ச்சியையும், போஷணையையும் கொடுக்கிறது. மலச்சிக்கலை அகற்றுகிறது. பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலுடன் சேர்த்துக் காய்ச்சியோ சூடான பாலில் ஊற வைத்து கசக்கிப் பிழிந்தோ எடுத்து சிறுவரும், பெரியோர்களும் பருகுவதால் பெரிய வைசூரி மற்றும் காய்ச்சல் போன்றவற்றால் உடல் நலிந்த நிலை மாறி உடல் ஊட்டம் பெற்று புத்துணர்ச்சியுடன் மிளிர்கிறது. சாராயம் போன்ற வஸ்துக்களால் ஏற்பட்ட விஷத்தன்மையை நீக்க சுத்தமான தண்ணீரில் ஊற வைத்த பேரீச்சம்பழச் சாறு குடிக்க அந்த விஷசத்துக்கள் வெளியேறிவிடுகின்றன. பேரீச்சம்பழத்தில் உள்ள இரும்பு சத்தும், சுண்ணாம்பு சத்தும் எளிதில் உள்ளுறுப்புகளுடன் சேரும் அளவில் அடைந்திருப்பதால் நல்ல ரசாயன மருந்தாகப் பயன்படுகிறது.
(தொடரும்)
எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.