திரைக்கதிர்

அந்தக் காலத்தில் வெளியான "கர்ணன்', "வசந்தமாளிகை', "ஆயிரத்தில் ஒருவன்', "நினைத்தாலே இனிக்கும்'
திரைக்கதிர்
Updated on
3 min read

அந்தக் காலத்தில் வெளியான "கர்ணன்', "வசந்தமாளிகை', "ஆயிரத்தில் ஒருவன்', "நினைத்தாலே இனிக்கும்' உள்ளிட்ட படங்கள் மீண்டும் டிஜிட்டல் வடிவத்தில் வெளியாகின. "வீரபாண்டிய கட்டபொம்மன்' விரைவில் வெளியாகவுள்ளது. இதே பாணி தற்போது டோலிவுட்டிலும் பரவி வருகிறது. என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் நடித்த பழைய படங்களை டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் 1980-களில் பிரம்மாண்டமாக உருவான "பிரதிபிம்பலு' மறைந்த நாகேஸ்வரராவ் நடித்த படம். இப்படம் வெளியாகும் நேரத்தில் பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டது. இதனால் கடந்த 30 ஆண்டுகளாகப் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருந்த இப்படம் தற்போது வெளியாக உள்ளது. இப்படத்தின் இயக்குநர் கே.எஸ்.பிரகாஷ்ராவ். இசையமைப்பாளர் சக்ரவர்த்தி, பாடலாசிரியர் வெட்டூரி. இப்படத்தில் பணியாற்றிய பெரும்பாலான கலைஞர்கள் இப்போது உயிரோடு இல்லை.

நிஜ வாழ்வின் சம்பவங்களைக் கருவாகக் கொண்டு ஒவ்வொரு படத்தையும் உருவாக்கி வருபவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். ராஜீவ் காந்தியின் கொலைப் பின்னணியைக் களமாகக் கொண்டு "குப்பி' படத்தை இயக்கினார். அடுத்து இயக்கிய "வனயுத்தம்' சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டு உருவாகியது. தற்போது அவர் இயக்கும் படத்துக்கு "ஒரு மெல்லிய கோடு' என பெயரிடப்பட்டுள்ளது. அர்ஜுன், ஷாம் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். புதுமுகம் அக்ஷா பட் கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரம் ஏற்று சிறிய இடைவெளிக்குப் பின் தமிழுக்கு வருகிறார் மனிஷா கொய்ராலா. 50 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் கதைக் களம் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. "குப்பி', "வனயுத்தம்' போன்று இதுவும் தனிப்பட்ட நபர் ஒருவரின் பின்புலத்தை மையமாகக் கொண்ட திரைக்கதை என பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த ஒருவரின் மரணத்தில் இருக்கும் ரகசியங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெரும்பாலான படங்களில் கதாநாயகிகள் அழகுப் பதுமைகளாக மட்டுமே காட்டப்படுகின்றனர். கே.பாலசந்தர், பாலுமகேந்திரா, பாலா உள்ளிட்ட ஒரு சில இயக்குநர்களின் படங்களிலே அவர்கள் எதார்த்த கதாபாத்திரங்களாக வலம் வருகின்றனர். இந்த கமர்ஷியல் சினிமாக்களுக்கிடையே தன் கதாநாயகிகளைச் சாதாரணப் பெண்ணாகவே உலவ விடுவது இயக்குநர் திரிவிக்ரமின் தனிச்சிறப்பு. தற்போது அவர் இயக்கி வரும் படத்தில் சமந்தா நீரிழிவு நோயாளியாக நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு சினிமாக்களில் கனவு ஹீரோயினாக வர்ணிக்கப்படும் சமந்தாவை நீரிழிவு நோயாளியாகக் காட்டுவதால் அவரின் கமர்ஷியல் சினிமா இமேஜ் பாதிக்கப்படும் என அவரது ரசிகர்கள் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்குப் பதிலளித்துள்ள திரி விக்ரம், ""கதாநாயகிகள் வானத்தில் இருந்து குதித்து வந்த தேவதைகள் அல்ல. எல்லா மனிதர்களுக்கும் போலவே அவர்களுக்கும் பிரச்னைகள் உள்ளன. கதைக்காக மட்டுமே அவரை நீரிழிவு நோயாளியாக சித்திரித்திருக்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

தன்னுடைய தமிழ், தெலுங்கு சினிமா வாய்ப்புகளைப் பறித்தவர் ஸ்ருதிதான் என்பதில் உறுதியாக இருந்த தமன்னா, தன்னுடைய கோபத்தைப் பல வடிவங்களில் வெளிக்காட்டி வந்தார். ஸ்ருதியின் செயல்கள் தமன்னாவின் சுதந்திரத்தைப் பாதிக்கும் அளவுக்கு இருக்கவே  இந்த மோதல் வலுத்துக் கொண்டே வந்தது. ஒருவர் படம் தோல்வி அடைந்தால் மற்றொருவர் தனது நெருங்கிய நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடும் அளவுக்கு நிலைமை சென்றது. இந்நிலையில் இருவரும் ஒரு விழாவில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டு, சிரித்து பேசி விடைபெற்றனர். இருவருக்குமான பிரச்னைகள் முடிந்து விட்டன என எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக கார்த்தி பட விவகாரம் அமைந்து விட்டது. கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் தமிழ், தெலுங்கு படத்துக்காக ஒப்பந்தமானார் ஸ்ருதி. திடீரென்று படத்திலிருந்து விலகினார். பிரச்னை எழுந்ததும் கால்ஷீட் தேதிகளை பிரித்துத் தருகிறேன் என்றார் ஸ்ருதி. இந்நிலையில் தற்போது இந்த இடத்துக்கு வந்திருப்பவர் தமன்னா. ஸ்ருதி ஏற்க மறுத்த வாய்ப்பைத் தானே முன் வந்து ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் தமன்னா கலந்து கொண்டு நடித்து வருகிறார். பேச்சுவார்த்தையில் இருக்கும் படத்தில் சத்தமில்லாமல் காய் நகர்த்தி தனது வாய்ப்பை பறித்த தமன்னாவை எண்ணி உள்ளுக்குள் புலம்பி வருகிறார் ஸ்ருதி.

"மாஸ்' படத்துக்குப் பின் சூர்யா நடிக்கும் படத்துக்கு "24' என பெயரிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில்,  24 என்ற தலைப்புக்கு உரிமை கோரி குரல் எழுப்பி இருக்கிறார் பாலிவுட் நடிகர் அனில்கபூர். அவரது தயாரிப்பில் உருவான "24' படத்தின் லோகோவும், சூர்யா படத் தலைப்பும் ஒன்று போல் உள்ளது; எனவே அதை மாற்ற வேண்டும் என சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் அனில் கபூர். இது குறித்து தனது இணையதள பக்கத்தில் மிக கோபமான கருத்தை வெளியிட்டுள்ளார். ""நானும்

சூர்யாவும் ஒரே துறையைச் சேர்ந்தவர்கள். நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பாக அவருடன் பேசினேன். படக்குழுவுடன் கலந்து பேசி பதில் தருவதாக கூறினார். நான் உரிமை வாங்கி வைத்திருக்கும் "24' டைட்டில் போலவே, சூர்யா பட டைட்டிலும் இருந்ததால்தான் இந்த நடவடிக்கை. முடிந்த வரை என் டைட்டிலைப் பாதுகாக்க முயற்சிப்பேன். சுமூகமான முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பிராண்டையும், பெயரையும் காப்பாற்றுவதற்காக எந்த வித ஆக்ஷனையும் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது'' என தெரிவித்துள்ளார் அனில்கபூர்.

சில வாரங்களுக்கு முன்பு பிந்து மாதவி ஹைதராபாத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இணைய தளப் பக்கங்களில் தகவல்கள் பரவியது. அவர் விரைவில் குணம் அடைய வேண்டும் என அதில் குறிப்படப்பட்டிருந்தது. சிறிது நேரங்களில் வாட்ஸ் ஆப், பேஸ் புக் பக்கங்களில் பரவிய தகவலில் பிந்து மாதவி தற்கொலை செய்து கொண்டதாகச் செய்திகள் வெளியாகின. பிந்து மாதவியை உடனடியாக தொடர்பு கொள்ள முடியாததால் இந்த செய்தியில் சந்தேகம் ஏற்பட்டது. பின்பு, விசாரித்ததில் அவர் மாதவி என்ற பழைய தெலுங்கு சினிமா துணை நடிகை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இது குறித்து அறிந்த பிந்து மாதவி, ""நான் சென்னையில் நடக்கவுள்ள படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் என்னைப் பற்றி இப்படியொரு வதந்தி பரவியிருக்கிறது. இது பற்றி நான் கவலை கொள்ளப் போவதில்லை. நடிகையான பின் இதெல்லாம் பழகி விட்டது. என்னைப் பிடிக்காதவர்கள் பரப்புகிற வதந்திகள் ஒரு போதும் உண்மையாகது. நான் இன்னும் சாதிக்க வேண்டியுள்ளது. அதற்குள் என்னைக் கொன்று விடாதீர்கள்'' என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com