

கி.ராஜாநாராயணன்
றைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.
அவரைப் பார்த்தால் மிகவும் கர்வம் கொண்டவர் போல் தோன்றும். ஆனால் குழந்தை மனதுக்குச் சொந்தக்காரர். அவரது வெளித்தோற்றத்தைப் பார்த்தால் யாரிடமும் மிகவும் பழகமாட்டார் என்பது போல் இருக்கும்.
அவரைச் சுற்றிலும் 10 பேர் எப்போதும் இருப்பர். எழுத்தாளர்களுக்குச் சமூகத்தில் மதிப்பை பெற்றுத் தந்தவர் ஜெயகாந்தன். அவர் தனது தோற்றம் கம்பீரமாக இருப்பதற்காக சக்திக்கு மீறி செலவு செய்வார். அனைத்து பிரிவுகளிலும் தனது முத்திரையைப் பதித்தவர் அவர்.
கவிதை நடையில் எழுதுவதில் பாரதி சிறந்து விளங்கினார் என்றால் ஏட்டுநடையில் எழுதுவதில் ஜெயகாந்தன் சிறப்புற விளங்கினார்.
அவர் பேனா பிடித்து எழுதுவதையே நிறுத்தி விட்டு, தனது சிந்தனைகளை உரைநடையிலேயே தெரிவித்தார். அதை வெளிக்கொணருவதில் அவரது மகள் பேருதவியாகத் திகழ்ந்தார்.
எத்தனையோ பெரிய எழுத்தாளர்கள் காலமானாலும், அவர்களுக்கு கிடைக்காத மிகப் பெரிய கெளரவம் ஜெயகாந்தனுக்குக் கிடைத்துள்ளது. அவரைப் பாராட்டி, தினமணி நாளிதழில் தலையங்கப் பக்கத்தில் கட்டுரை வெளியிடப்பட்டது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
எனக்கு அவரை 45 ஆண்டுகளுக்கும் மேலாகத் தெரியும். மதுரையில் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் காலமான பின்னர் பெரிய மாநாடு நடந்தது. அதில் கவியரங்கம் போல் கதையரங்கம் நடந்தது. அதற்கு ஜெயகாந்தன் தான் தலைமை தாங்கினார்.
அதில் தான் கதை வாசித்தார்.
அப்போது அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் செல்லாமல் நாங்கள் மாடியில் தங்கி இருந்த சாதாரண அறைக்கு வந்து மூன்று நாள்கள் தங்கினார். அவ்வளவு எளிமை நிறைந்தவர்.
எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை ஓட்டேரியில் இருந்து தாம்பரம் சானிடோரியம் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி இருந்தது. எனது கையில் அவரது முகவரி இருந்தது. அவர் இருக்கிறாரா எனப் பார்க்க உதவியாளரை அனுப்பினேன்.
ஆனால் அவரே என்னைத் தேடி வந்து விட்டார். சொந்தமாகக் கார் வைத்திருந்த அவர் என்னை காரில் ஏற்றி தானே ஓட்டிச் சென்றார். எனக்குச் சாப்பாடு போட்டு நன்றாகக் கவனித்தார்.
இலக்கிய உலகில் அவரது படைப்புகள் ஒரு கல்மழை பெய்தது போல் இருந்தன. ஒரு கட்டத்துக்கு பின் அவர் எழுத்துவதையே நிறுத்தி விட்டார். இலக்கிய உலகில் தான் வந்த நோக்கம் நிறைவேறி விட்டது போல் அவர் எழுதுவதை நிறுத்தி விட்டார்.
மடம் அல்லது சத்திரம் என்ற இடத்தில் தான் அவரைச் சந்திக்க முடியும்.
வீட்டில் குறிப்பிட்ட சிலரை மட்டும் தான் அவர் சந்திப்பார்.
திரையுலகிலும், அரசியலிலும் நுழைந்து பார்த்தார். ஆனால் அவரால் வர்த்தக சினிமா என்ற பெரிய சக்தியை தாக்குப் பிடிக்க இயலவில்லை. தேர்தலிலும் நின்று தோல்வி அடைந்தார். அப்போது தான் எழுத்தாளனுக்கு கிடைக்கும் மரியாதையை அவர் உணர்ந்தார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் பெரிய எழுத்தாளர்கள், கவிஞர்கள் மறைந்துள்ளனர்.
அவர்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அதே போல் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் விட்டுச் சென்ற வெற்றிடத்தை எவராலும் நிரப்ப முடியாது.
ஜே.கே.என்ற ஒரு மானுடன்!
டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்
ஜெயகாந்தனின் படைப்புலகத்தைப் பற்றிய பாராட்டுகளும், விமர்சனங்களும் பதிவுகளும் ஏராளம். ஜே.கே. என்ற தனிமனித ஆளுமை அவரது இலக்கியப் படைப்புகளுக்கு இணையான உன்னதம். அவருடன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபித்த என் அரிய நட்பின் ஊடாக இதை நான் உணர்ந்திருக்கிறேன். அவரது படைப்பு வீரியத்தின் ஊற்றுக்கால்களை அவரது ஆளுமையில் தரிசித்திருக்கிறேன்.
ஜே.கே.யின் ஆளுமையின் வெளிப்பாடாக ஒரு சில தெறிப்புகள்:
பரிவு: ஒரு மாலை நேரம். ஜே.கே., இன்னொரு நண்பர், நான் மூவரும் ஒரு ரெஸ்டாரண்டில் காபி குடித்துவிட்டு, டிரைவரின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தோம்.
பேச்சுவாக்கில் எங்களுக்குத் தெரிந்த ஒரு பெண் நண்பரின் விவாகம் முறியும் தருவாயில் இருப்பதாக அந்த நண்பர் சொன்னார். அதைக் கேட்டு ஜே.கே.சொன்னார்:
""அய்யோ! இவர்களுடைய அறிவு இவர்களை வாழவே விடாதோ! வாழ்க்கையைப் பகுத்துப் பகுத்துப் பார்த்துக் கொண்டே வெறுப்பையும் விரக்தியையுமே அறுவடை செய்கிறார்களே இந்தக் குழந்தைகள். அடிப்படையில் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற விவேகத்தைப் பெற மாட்டார்களா?'' ஒரு தந்தையின் பரிவுடனும், கரிசனத்துடனும் வெளிவந்த சோகம் போர்த்திய சொற்கள்.
பெருந்தன்மை: ஜே.கே. பெற்ற ஞானபீட விருது குறித்து ஒருவர் தனது இதழில், ""ஜெயகாந்தன் இறந்து பல ஆண்டுகளாகிவிட்டன. இது அவரது சடலத்துக்குச் செய்யும் சடங்கு'' என்ற பாணியில் எழுதியிருந்தார். இது குறித்து "சபை'யில் ஜே.கே.யின் பதில்வினையில் பெருந்தன்மையும், ஆன்மிக லயத்தையும் பார்க்கலாம்:
""இறந்து வாழ்தல் ஒரு சுவாரஸ்யமான அனுபவம். எழுதிக் கொண்டே இருப்பதை விட எழுதுவதை நிறுத்தி, அதன் விகசிப்புகளையும் தாக்கங்களையும் கண்டு அசை போடுவதில் சுகம் இருக்கிறது. பேசிக் கொண்டிருப்பதைவிட பேசுவதை நிறுத்திவிட்டு, நமது சொற்களின், எண்ணங்களின் சலனங்களையும் எதிரலைகளையும் தரிசித்தல் அர்த்தமுள்ளது. இதை உணர்ந்துதான் விருது அளித்தார்களோ? இறந்து வாழ்வதற்கான விருதுதானோ இது?'' என்று அந்த வார்த்தை அத்துமீறலுக்கும் ஒரு மரியாதை கொடுத்தார்.
ஸ்தித ப்ரக்ஞை: ஜே.கே.யின் வீட்டுக்கு ஒரு நாள் சென்றிருந்தபோது அவர் அலுத்துக் கொண்டார்.
""என்ன கே.எஸ். இது? எந்த விருதுன்னாலும் ஜெயகாந்தன்தானா? இந்த விருதுப் பெருமைகளை வைத்துக் கொள்ள என் மனத்தில் இடமில்லை. இந்தச் சிலைகளையும் ஷீல்டுகளையும் வைக்க இந்த வீட்டிலும் இடம் இல்லை''
அடக்கம்: அவருடைய படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும்போது முதலில் அவரிடம்தான் வாசித்துக் காண்பிப்பேன். எனக்குத் தெளிவாக இல்லாத ஒரு சில பகுதிகளுக்கு அவரிடம் விளக்கம் கேட்பேன். என்னுடைய புரிதலையும் பகிர்ந்து கொள்வேன். அவருடைய பதில் என்னைப் பிரமிக்க வைக்கும். ""கே.எஸ்.உங்களுக்கு மட்டும்தானா புரியவில்லை. எனக்கும்தான். ஒங்க ரீடிங் சரியாத்தான் படுது. அப்படியே வெச்சுக்கலாம்''
ஆங்கிலமொழி நுண்ணறிவு: ஐந்தாம் வகுப்பு வரை பள்ளியில் பயின்ற ஜே.கே. தன் சொந்த முயற்சியாலும், கம்யூனிஸ்ட் கட்சி அறிவுஜீவிகளின் உதவியுடனும் ஆங்கில இலக்கியப் படைப்புகளைப் படித்துப் பயன்பெற்றவர். என் ஆங்கில மொழியாக்கப் பிரதிகளை அவருடன் பகிர்ந்து கொள்ளும்போது, பல நேரங்களில் தெளிவு தேவை உள்ள பகுதிகளைச் சுட்டிக் காட்டுவார். தெளிவுபடுத்துவார். அதில் மேதாவித்தனமோ, குற்றம் காணும் பாங்கோ இருக்காது. நட்புணர்வுள்ள பரிந்துரையாகத்தான் இருக்கும்.
ஒருமுறை ஆங்கிலப் பிரதியை நான் படித்துக் கொண்டிருந்தபோது, ஓர் இடத்தில் நிறுத்தினார்.
""எனக்கு ஒன்றும் பெரிய ஆங்கில அறிவு கிடையாது. அந்த இடத்தில் ஊதஉஉஈஞஙன்ற சொல்லுக்குப் பதிலா கஐஆஉதஅபஐஞச நல்லா இருக்குமா? யோசிச்சுப் பாருங்க'' என்றார். அவர் சொன்ன மாற்றுச் சொல்லின் பொருத்தம் அற்புதமாக இருந்தது.
இவை போன்ற எண்ணற்ற அனுபவங்கள், வெளிப்பாடுகள், சுயவிமரிசனப் பதிவுகள். எழுத்தில் பதிவு செய்யப்பட்டதற்கு இணையாக காற்றில் கலந்த ஓசையாக "சபை'யில் வெளியான சம்பாஷணைப் பொறிகள் பிரமிப்பூட்டுபவை.
இன்று ஜே.கே. அமரராகிவிட்டார். எனக்கு அழத் தோன்றவில்லை. கண்ணீர்த்துளிகள் அவரது நினைவைக் கறைபடுத்திவிடுமோ என்ற தயக்கம். இதோ ஜே.கே. "சபை'யில் பகிர்ந்து கொண்ட ஒரு கருத்து:
""சூரியன் தினமும் சாகிறானா? அது ஒரு மாயை. மனிதன் செத்துக் கொண்டே இருக்கிறானா? அதுவும் ஒரு மாயைதான். மனிதன் பிறந்து கொண்டேயும் இருக்கிறான்.
மனித குலம் வாழ்ந்து கொண்டே இருக்கிறது. அதுவே சத்தியம்.''
தமிழுக்கு விழுது!
ம.இராசேந்திரன்
நம்பமுடியாத செய்திகளுக்குக் கைகால் வைத்துக் கதைகட்டிவிடுவது அரசியல். மறைந்தவர்களின் வாழ்க்கையில் மந்திர தந்திர மாயங்களைச் சேர்ப்பது கட்சி வளர்க்கும் தந்திரம்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் கட்சி அரசியல் வளர்ப்பதற்குத் தன்னை விட்டுவிட்டுப் போகவில்லை.
வாழும் காலத்திலேயே நம்பமுடியாத செய்திகளைக் கதையாக்கிக் கொண்டு மக்கள் கொண்டாட இடம் விடுவது சித்தர்களின் வாழ்க்கை.
தானே நம்ப முடியாதபோதும் சுற்றியுள்ள நாலு பேரிடம் அதைச் சொல்வது மனதுக்குப் பிடிக்கும் போல.
ஆனால் நம்ப முடியாதவை நமது கண் முன்னேயே நடக்கிறபோது என்ன சொல்ல? எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களைச் சந்தித்த சில தருணங்கள் அப்படிப்பட்டவை..
மந்திரம் போலப் பாடல்களை உரக்கப் பாடுகிறபோதும்
மெளனத்தில் சபை இருக்கிற போதும்
ஞானத் திமிர் மெளனம் கலைக்கிற போதும்
மேடைகளில் பற்கடிப்புகளில் சொற்களில் தீ பற்றுகிற போதும்
ஆவேச உடல் குலுக்கலின்போதும்
தலையாட்டத்தில் வெளிப்படும் விஸ்வரூபத்தின் போதும்
நாற்காலியில் சம்மணம் போட்டுக் கொண்டு
நிமிர்ந்து உட்கார்ந்து சபை நடத்துகிறபோதும்
நான் அதை உணர்ந்திருக்கிறேன்.
அவர் சிரிப்பும் கோபமும்
வரமாகவோ சாபமாகவோ மாற்றிக் கொள்ள முடியாதவை.
ஒவ்வொரு சந்திப்பும் ஒருவித புதிய அனுபவமாக இருக்கும். அதே இடம், அதே நண்பர்கள், ஆனால் அவர் மட்டும் புதுசு புதுசாக வெளிப்படுவார்.
இன்றையச் சந்திப்பு இப்படித்தான் இருக்கும் என்ற முன்முடிவுகளை மாற்றிப் போட்டு விடுவார். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். அது சபையா? மேடையா? வீடா?வெளியா? என்றெல்லாம் பார்த்துப் பார்த்துப் பேச வேண்டிய கட்டாயத்தில் அவர் தன்னை இருத்திக் கொண்டதைப் பார்த்ததில்லை..
""வட இந்தியாவிலிருந்து ஒருவர் வந்திருக்கிறார். அவர் ஜெயகாந்தனைச் சந்திக்க விரும்புகிறார். பார்க்கலாமா?'' என்று மார்ச் 30, திங்கட் கிழமை மாலை மூன்று மணி இருக்கும் நண்பர் ஒருவர் தொலைபேசியில் கேட்கிறார். ""ஜெயகாந்தன் இப்போதெல்லாம் அதிகம் பேசுவதில்லை பெரும்பாலும் பேசுவதையே தவிர்ப்பதுபோல் இருக்கிறார்''
என்று சொன்னேன். ""பரவாயில்லை டெல்லியிலிருந்து வந்திருக்கிறார். பேசமுடியவில்லை என்றாலும் சென்னைக்கு வந்திருக்கிறார். பார்த்துவிட்டுப் போக ஆசைப்படுகிறார்'' என்று சொன்னார்.
இதையெல்லாம் அப்படியே டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் திருமதி கெளசல்யாவிடம் சொல்ல, அவர் ஜெயகாந்தனிடம் அப்படியே சொல்லியிருக்கிறார். கேட்ட ஜெயகாந்தன்,
""நான் என்ன அடையாறு ஆலமரமா? சென்னைக்கு வருகிறவர்கள் எல்லாம் பார்த்துவிட்டுப் போக'' என்றாராம்.
அவர் அடையாறு ஆலமரம் இல்லை...
தமிழுக்கு விழுது!
நவீனத் தமிழ் எனும் ஆலமரம்!
எழுதியதை நிறுத்தினாலும்...
USSR. நடராஜன்
எழுதிக் கொண்டிருக்கும்போதே சில எழுத்தாளர்களுக்குப் புகழ் கிடைப்பதில்லை. ஆனால் எழுதுவதை நிறுத்தி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் ஜே.கே.யின் புத்தகங்களின் வாசிப்பு கொஞ்சமும் குறையவில்லை. அவர் மீது மக்களுக்குள்ள நேசிப்பு பன்மடங்கு பெருகி வருவதை நான் பல இடங்களில் கண்கூடாகக் கண்டு வருகிறேன்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கூட நான் அவரை சென்னை வடபழனியில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்றபோது அங்கு முன்னமையே சிகிச்சைக்காக அமர்ந்திருந்த அகவை முதிர்ந்த மற்றும் நடுத்தர வயதுப் பெண்மணிகள் இவரையே கண்கொட்டாமல் பார்த்து எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர்.
என்னிடம் எழுத்தாளர் ஜெயகாந்தன்தானே இவர் என கண்களில் மகிழ்ச்சி ததும்ப கேட்டு அவரை வணங்கினர். இந்த மகத்தான மனிதரின் மாண்பை எண்ணி நான் வியந்து போனேன். ""இவரது அனைத்துப் படைப்புகளையும் படித்திருக்கிறோம். இவரின் பரம ரசிகைகள் நாங்கள்'' என இவரைக் கண்ட மகிழ்ச்சியில் தங்களைத் தாக்கிய நோயின் தாக்கம் கூட குறைந்துவிட்டதாகக் கூறி குதூகலித்தார்கள்.
தன் வீட்டுத் திருமணத்தில் கூட இவ்வளவு நேரம் மேடையில் நின்றிருப்பாரோ என எண்ணுகின்ற வகையிலே 2011 இல் சென்னையில் நடைபெற்ற எங்கள் மகன் ககாரின் - நிவேதா திருமண வரவேற்பில் தனது உடல் நலனைக் கூடப் பொருட்படுத்தாது, எங்கள் பால் உள்ள உண்மையான அன்பின் காரணமாக ஜெயகாந்தன் பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, அங்கவஸ்திரம் சகிதமாக வந்திருந்து, மேடையில் மணமக்களோடு சுமார் 4 மணி நேரம் கால் கடுக்க நின்று, வந்திருந்த விருந்தினர்கள் அனைவரையும் எங்கள் சார்பாக வரவேற்று மகிழ்ந்ததை திருமணத்துக்கு வந்திருந்த அத்துணை பெருமக்களும் ஆச்சரியத்தோடு பார்த்து அதிசயித்துச் சென்றனர்.
எனது நாற்பதாண்டு கால நண்பர் ஜெயகாந்தனை அருகிருந்து கடந்த எட்டு ஆண்டுகளாக உற்ற துணையாக, உடன் பிறவாத் தம்பியாக இருந்து அடிக்கடி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அருகிருந்து கவனித்துக் கொள்வேன். அத்தகைய தருணங்களில் எனது கைகளைப் பிடித்துக் கொண்டு ஜே.கே., ""மநநத நடராஜன் உங்களை நான் அடிக்கடி மிகுந்த தொந்தரவு செய்கிறேன். உங்களுக்குத்தான் எத்துணை சிரமம்? கூப்பிட்டபோதெல்லாம் ஓடோடி வந்து எனக்கு உறுதுணையாக இருந்து உதவி செய்து வருகிறீர்கள்'' என கண்ணீர் மல்கக் கூறியபோது நான், ""ஜே.கே. நீங்கள் அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. எனக்கு எந்தச் சிரமமும் இல்லை. இது எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பு; பாக்கியம். இதனை நான் தனிமனிதனாகச் செய்யவில்லை. தமிழ்ப் பேருலகத்தின் பிரதிநிதியாக நின்று அனைவருடைய சார்பாகவும்தான் செய்து வருகிறேன்'' என்று அவரை நான் சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. சிம்மத்தின் இதயத்திலிருந்து சின்னதோர் கசிவு... கனிவு!
எப்பிறப்பில் காண்பேன் இனி?
ராஜ்கண்ணன்
ஜெயகாந்தனோடு முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கம் எனக்கு. அவருடைய "ஸஹிருதயர்'களில் நானும் ஒருவன். அவருடைய "ஞானசபை'யில் மூத்த உறுப்பினன்.
அப்போதெல்லாம், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் நண்பர்களைச் சந்திப்பதற்காகவும் ஜேகே அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்ளுவார். அப்போது தனது நண்பர்கள் சிலரையும் உடன் அழைத்துச் செல்வார்.
செல்லும் ஊர்களுக்கும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ப நண்பர்கள் மாறுபடுவர். ஆனால் நண்பர்கள் இல்லாமல் அவர் வெளியூர் பயணம் மேற்கொண்டது மிகமிகக் குறைவே.
அவ்வாறு அவரோடு வெளியூர் செல்லும் வாய்ப்பு எனக்குப் பலமுறை கிட்டியிருக்கிறது. அநேகமாக தமிழகத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் அவரோடு நான் பயணித்திருக்கிறேன். அப்படி அவரோடு சென்ற ஒரு பயணம் என்னால் மறக்கவே முடியாதது. அது 2006 ஆம் ஆண்டு மார்ச் 29. அது கவிஞர் தமிழ் ஒளியின் நினைவுநாள் என்பதால் அன்று "சபை'யில் தமிழ் ஒளியைப் பற்றி நிறைய விஷயங்களைப் பேசினார் ஜே.கே. இரவு நெடுநேரம் ஆனபின் "சபை' முடிந்து நான் புறப்படும்போது ஜேகே.
""ஏப்ரல் ஒன்பதாம் தேதி காரைக்குடி கம்பன் விழாவில் நான் கலந்து கொள்ளுகிறேன். வருகிறீர்களா?'' என்று கேட்டார். உடனே மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டேன்.
நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் (ஏப்ரல் 8) இரவு ஜேகேயோடு அவரது புதல்வர் ஜெயசிம்மன், கவிதா சொக்கலிங்கம், நான் ஆகியோர் ரயிலில் திருச்சி சென்றோம். அங்கு மறுநாள் காலை எங்களோடு கவிஞர் அப்துல் ரகுமான், தமிழறிஞர் ஒளவை நடராசன் ஆகியோரும் (அவர்களும் கம்பன் விழா பங்கேற்பாளர்கள்) சேர்ந்து கொள்ள எல்லாரும் ஒரு வேனில் திருப்பத்தூர் சென்றோம்.
மாலையில் காரைக்குடியில் கம்பன் விழா. ஒளவை நடராசன், அப்துல் ரகுமானைத் தொடர்ந்து ஜெயகாந்தன் பேசினார். தமிழின் ஆழ அகலங்களை அறிந்த ஒருவரால்தான் அப்படிப் பேச முடியும். அருமையான பேச்சு.
நிகழ்ச்சி முடிந்து ஜேகேயுடன் ஜெயசிம்மனும் நானும் மட்டுமே காரில் கிளம்பினோம். ஏறத்தாழ நள்ளிரவில் திருச்சியை வந்தடைந்தோம்.
திருச்சியில் ஒரு நல்ல ஹோட்டலில் எங்களைத் தங்க வைத்தார் மோதி பிரசுர அதிபர் மோதி. பின்பு ஜேகேவோடு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் புறப்பட்டார் அவர். ஜெயசிம்மனும் மோதியோடு அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அறையில் நானும் ஜேகேவும் மட்டும்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த ஜேகே அன்று காலையில் கலந்து கொண்ட நூல்நிலைய நிகழ்ச்சி பற்றியும் மாலையில் கலந்து கொண்ட கம்பன் விழா பற்றியும் பேசிவிட்டு பின்னர் கம்பர் பற்றி பேச ஆரம்பித்தார். சத்தியமாக அதுவரை கம்பரைப் பற்றிய அத்தனை செய்திகளை நான் அறிந்திருக்கவில்லை. கம்பரைப் பற்றி மட்டுமல்ல, வால்மீகி ராமாயணம் தொடங்கி எழுத்தச்சன் ராமாயணம் வரை உள்ள பல்வேறு மொழியிலுள்ள ராமாயணங்கள், பல்வேறு கதைப் போக்குகளைக் கொண்ட ராமாயணங்கள் என்று எல்லாவற்றையும் விரிவாகக் கூறினார்.
ஜேகே பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்த நான் அவ்வப்போது தயங்கித் தயங்கி ஒரு சில வார்த்தைகளைப் பேசினேன். உதாரணமாக " கம்பர் தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலை பாட்டில் வைத்து நன்றி செலுத்தியிருப்பது போல மற்ற மொழிகளில் யாராவது செய்திருக்கிறார்களா?'' என்று கேட்டேன்.
"" அப்படி யாரும் செய்ததில்லை'' என்றார் ஜேகே.
"" கம்பர் சடையப்ப வள்ளலை நூறு பாடல்களுக்கு ஒருமுறை புகழ்ந்ததாகவும், சான்றோர் சிலர் மறுப்பு தெரிவித்ததால் ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறை என பத்து இடங்களில் கம்பர் சடையப்பரைப் புகழ்ந்திருப்பதாகவும் கூறுகிறார்களே'' என்று கேட்டேன்.
"" கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. இப்போதுள்ள பதிப்புகளில் பாயிரத்தில் ஒரு பாடல், பால காண்டத்தில் மூன்று பாடல்கள், யுத்த காண்ட முதல் பகுதியில் ஒரு பாடல், இடைப்பகுதியில் இரண்டு பாடல்கள், கடை அயற் படலத்தில் மூன்று பாடல்கள் என மொத்தம் பத்து பாடல்கள் குறிப்பிடப்படுகின்றன. இடையே உள்ள அயோத்யா, ஆரண்யா, கிஷ்கிந்தா, சுந்தர காண்டங்களில் சடையப்ப வள்ளல் பற்றி ஒரு வரி கூட இல்லை. இந்த பத்து பாடல்களிலும் பாட வேறுபாடு இல்லாத, வலிந்து பொருள் செய்ய வேண்டி இராத, இடைச்செருகல் இல்லாத பாடல்கள் ஆறு பாடல்கள்தான். இவை ஆயிரம் பாடல்களுக்கு ஒருமுறை என்ற முறையில் அமையவில்லை''
என்று விளக்கம் கூறிய ஜேகே அந்த குறிப்பிட்ட ஆறு பாடல்களையும் கம்பீரமாகப் பாடிக் காட்டியதோடு அதற்கான விளக்கத்தையும் பொறுமையோடு அளித்தார்.
பின்னர் காரைக்குடி கம்பனடிப்பொடி சா. கணேசன் பற்றி பேசினார். தோழர் ஜீவானந்தத்தின் கம்பராமாயண ஈடுபாடு பற்றியும், தோழர் எஸ். ராமகிருஷ்ணனின் (எஸ்.ஆர்.கே) " சிறியன சிந்தியாதான்' என்ற நூலைப் பற்றியும் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட பொழுது புலருகிற நேரத்தில் கட்டிலில் நான் படுப்பதற்காக கொஞ்சம் இடம் விட்டுவிட்டு அவர் படுத்துக் கொண்டார். அவர் உறங்கியபின் நான் அறையின் ஒரு மூலையில் இருந்த சோபாவில் சென்று படுத்துக் கொண்டேன்.
காலையில் ஜேகேவின் குரல் கேட்டு கண்விழித்தேன். பிளாஸ்கிலிருந்து காபியை இரண்டு கப்புகளில் ஊற்றிவிட்டு ஒன்றை என்னிடம் தந்துவிட்டு மற்றொன்றை அவர் குடிக்க ஆரம்பித்தார். அவருக்குப் பின்னால் மோதியும் ஜெயசிம்மனும் நின்றிருந்தார்கள். நான் ஒரு கணம் பதறிவிட்டேன்.
ஜேகே என்னிடம், "" ஏன் இங்கே படுத்தீர்கள்?'' கட்டில் என்பது இரண்டு பேர் படுப்பதற்குத்தானே இருக்கிறது?'' என்று கேட்டார். எனக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. சிரித்தேன்.
சற்று நேரத்தில் ஜேகேயுடன் நானும் ஜெயசிம்மனும் காரில் சென்னைக்குப் புறப்பட்டோம். அந்த 2006 ஏப்ரல் 9 ஆம் தேதி ஜேகேயோடு நான் இருந்த அனுபவத்தை என்னால் என்றுமே மறுக்க முடியாது.
அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி;
அகத்திலே அன்பினோர் வெள்ளம்!
என்ற பாரதியின் வரிகளுக்கோர் வடிவாய் வாழ்ந்த மகத்தான மனிதர் ஜெயகாந்தனை "எப்பிறப்பில் காண்பேன் இனி?'
படைப்பதனால் என் பேர் இறைவன்!
வே.சபாநாயகம்
எனது எழுத்தார்வத்துக்கு முதலில் தூண்டுதலாக இருந்தவர் அகிலன் என்றால், அதனைத் தீவிரப்படுத்தியவர் ஜெயகாந்தன். 1957இல்தான் அவரது படைப்பை நான் "சரஸ்வதி' இதழில் படித்தேன். பிறகு "ஆனந்தவிகடனி'ல் வந்த முத்திரைக் கதைகளும், குறுநாவல்களும், தொடர் நாவல்களும் என்னை அவரது தீவிர ரசிகனாக ஆக்கின.
அதற்குப் பிறகு புதுமைப்பித்தனைப் படிக்க நேர்ந்த போது, ஜெயகாந்தன் அவரது வாரிசாகவும், அவரது இடத்தை நிரப்புகிறவராகவும் எனக்குத் தெரிந்தார்.
1962இல் அரியலூரில் நடைபெற்ற கலை இலக்கியப் பெருமன்ற ஆண்டு விழாவில் ஜெயகாந்தன் பேச வந்தபோது, மன்றத்தின் அப்போதைய செயலாளரும், என் உறவினருமான ஏ.ஆர்.சீனிவாசன், நான் ஜெயகாந்தனின் ரசிகன் என்பதை அறிந்திருந்ததால், அவரை எனக்கு அறிமுகப்படுத்துவதற்காக என்னையும் அக்கூட்டத்திற்கு அழைத்திருந்தார். நானும் ஆர்வத்துடன் சென்றேன். சீனிவாசன் என்னை ஜெயகாந்தனுக்கு அறிமுகப்படுத்தியதோடல்லாமல் இன்னொரு அரிய வாய்ப்பினையும் எனக்கு நல்கினார். அன்றைய விழாவுக்குத் தலைமை தாங்க வேண்டியவர் வராத நிலையில், என்னைத் தலைமை தாங்கும்படி கேட்டுக் கொண்டார். ஜெயகாந்தனைப் பார்க்கவும், அவரது பேச்சைக் கேட்கவும் வந்த எனக்கு, அவரது கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் வாய்ப்புக் கிட்டுமென்று நான் கனவு கூடக் கண்டதில்லை. அதனால், அவரது பிரம்மாண்டம் கருதி அதை ஏற்கத் தயங்கினேன். பேராசிரியர் எம்.எஸ்.நாடாரும் அவ்விழாவுக்கு வந்திருந்தார். அப்போது நான் "ஆனந்தபோதினி', "பிரசண்டவிகடனை'த் தாண்டி, மெல்ல, ஆனந்தவிகடனில் எழுதும் வளர்ச்சி பெற்றிருந்தேன். அதனைச் சுட்டிக் காட்டி சீனிவாசன்,"" நீங்களும் எழுத்தாளர் - அதோடு அவரது தீவிர ரசிகர் என்பதால், நீங்கள் தலைமை ஏற்கத் தகுதியானவர்தாம். தயங்க வேண்டாம்'' என்று சொல்லி, தலைமை ஏற்க வைத்தார்.
மேடையில் பக்கத்தில் அமர்ந்திருந்தாலும் ஜெயகாந்தன் என் பக்கம் திரும்பிப் பார்க்கவோ சுமுகம் காட்டவோ இல்லை. அப்போதைய அவரது மனநிலையில் என்னைப் போன்ற கற்றுக்குட்டி எழுத்தாளர்களோ ரசிகர்களோ அவருக்கு ஒரு பொருட்டாகத் தெரியாமல் இருந்திருக்கலாம். நெருக்கமற்ற எவரிடமும் அவர் அலட்சியமாகவே நடந்து கொள்கிறார் என்ற பேச்சும் இருந்தது. எனவே அவரது உதாசீனத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரது கூட்டத்துக்குத் தலைமையேற்கும் வாய்ப்புக் கிடைத்த பூரிப்பில் அப்போது நான் இருந்தேன்.
எனது தலைமை உரையில், ""ஜெயகாந்தன் புதுமைப்பித்தனுக்குப் பிறகு நமக்குக் கிடைத்த அரிய எழுத்தாளர். புதுமைப்பித்தனைப் போலவே அற்புதமாக எழுதுகிறார்'' என்றேன்.
ஜெயகாந்தன் தனது உரையில், ""சபாநாயகம் நான் புதுமைப்பித்தனைப் போல எழுதுவதாகச் சொன்னார். இல்லை. நான் புதுமைப்பித்தனைவிடவும் மேலாக எழுதுகிறேன். புதுமைப்பித்தனைப் போல எழுதுவதற்கு இன்னொருவர் எதற்கு? நான் ஜெயகாந்தனாக எழுதுகிறேன்'' என்று வெட்டினார். அப்போது யார் என்ன பேசினாலும் வெட்டிப் பேசுவது அவரது பாணியாக இருந்தது.
கூட்டம் முடிந்து சீனிவான் வீட்டில் மதிய உணவுக்குப் பின் பேசிக் கொண்டிருந்தபோது, ""நீங்கள் என்ன புத்தகம் படிப்பீர்கள்?'' என்று ஒரு வாசகனின் அசட்டு ஆர்வத்தோடு கேட்டேன். ""நான் எதுவும் படிப்பதில்லை'' என்று மறுபடியும் என்னை வெட்டினார். மேலும் அவருடன் பேச்சைத் தொடர முடியாதபடி எனக்கு ஏமாற்றமாக இருந்தது.
பின்னாளில் அவருடன் நெருக்கமாகப் பழகும் நிலை ஏற்பட்டபோது, ஒருமுறை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் அவர் பல புத்தகங்களைக் குறிப்பிட்டார்.
உடனிருந்த நான், ""என்ன ஜே.கே உங்களை நான் முதன்முதல் சந்தித்தபோது, நான் எதுவுமே படிப்பதிலை என்றீர்களே?'' என்று கேட்டேன். ""அதுவா அப்போது நீங்கள் புதுசில்லையா? ஒரு மிரட்சிக்காக அப்படிச் சொல்லி வைத்தேன்'' என்று சிரித்தார். அப்போது அவருடன் ஒரு படமும் எடுத்துக் கொண்டேன்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அவருக்குப் பல நண்பர்கள் உண்டு. அவர்களில் எனது நண்பரான பி.ச.குப்புசாமி அவருக்கு மிகவும் அணுக்கமானவர். சென்னையில் அவருக்கு அலுப்பு ஏற்படும்போதெல்லாம் திருப்பத்தூருக்கு வந்து விடுவார். அப்படி அவர் வரும் போதெல்லாம் குப்புசாமி எனக்கு எழுதி அங்கு என்னையும் அழைத்துக் கொள்ளுவார். இரண்டு மூன்று நாட்கள் இலக்கிய போதையோடு நண்பர் குழாம் மெய்மறந்து நிற்கும்.
அப்படி ஒரு முறை, திருப்பத்தூருக்கு அருகில் உள்ள ஜம்னாமரத்தூர் என்கிற மலைகிராமத்தில் அங்குள்ள பயணியர் மாளிகையில் குப்புசாமியின் ஏற்பாட்டின்படி நண்பர்கள் புடைசூழ ஜெயகாந்தனுடன் கழித்த மூன்று நாட்கள் மறக்கவியலாதவை. கூடத்தின் நடுவே, அக்கிராசனர் போல் கட்டிலில் அவர் சம்மணமிட்டு, நடராஜரின் சடாமுடி போல தலைமுடி விரிந்து பிடரியில் தொங்க, மீசையை முறுக்கியபடி, ஒரு சிம்மம் போல் அமர்ந்திருக்க, நாங்கள் கட்டிலைச் சுற்றி அமர்ந்திருப்போம். திரையுலக நண்பர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள மற்றும் அந்த மலைப் பிரதேசத்துப் பிரஜைகள் சிலரும் அதில் அடக்கம். பாரதியை தனது குருவாகக் கொண்ட அவரது பேச்சில், பாரதியின் கவிதை வரிகள் உணர்ச்சி பொங்க, வெள்ளமாய்க் கொட்டும். கர்நாடக சங்கீதத்தில் அவருக்கு நல்ல பயிற்சி இருந்ததால், "தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த....' போன்ற பாடல்களை இடையிடையே அவர் பாடும் போது, கேட்கச் சிலிர்ப்பாக இருக்கும். "கள்ளால் மயங்குவது போலே, கண்மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம்' என்கிற பாரதியின் வரிகளைத்தான், அவரது பேச்சிலும் பாட்டிலும் கிறங்கி நின்ற எங்கள் நிலைக்குச் சொல்ல முடியும். ஒரு மேதையின் சந்நிதானத்தில் நிற்கிற ஒருவித பரவசத்தை நான் அப்போது அனுபவித்தேன்.
திடீரென்று எழுந்து திறந்தவெளிக்கு வந்து, அவரது "ஆலமரம் ஆலமரம், பாலூத்தும் ஆலமரம்...' என்கிற அற்புதமான பாடலைத் தனி ராகத்தில் பாடுவார். எல்லோரும் வெளியில் வந்து அதை ரசிப்போம். சிலரை அழைத்து அதைப் பாடச் செய்வார். உடனே காட்சி மாறும். அவரது "ஒருமனிதன், ஒரு வீடு ஒரு உலகம்' நாவலில் ஹென்றி பாடுவதாக வரும், "சோப்பெங்கப்பா....... சோப்பெங்கப்பா...... சொல்லி விட்டு, குனிந்து நிமிர்ந்து சோப்பெங்கப்பா....... சோப்பெங்கப்பா......' என்று சுற்றிச் சுற்றி வந்து நடனமிடுவார். அது முன்பே பரிச்சயமான குப்புசாமி போன்றவர்களும் உடன் அப்படியே பாடி ஆடியபடி, சுற்றி வருவர். தீராத விளையாட்டுப் பிள்ளையாய் அப்போது அவர் தோன்றுவார்.
பிறகு உள்ளே சபை மறுபடியும் கூடும். கேள்வி நேரம் தொடங்கும். பலரும் பல்வித வினாக்களைத் தொடுப்பர். அவரும் அவருக்கே உரித்ததான சமத்காரத்துடன் பதில் அளிப்பார். அப்போது அங்கிருந்த திருப்பத்தூர் கல்லூரி மாணவர்களில் ஒருவர், ""ஐயா, உங்களது சிறுகதைத் தலைப்புக்களைத் திருடி, தம் படங்களுக்கு, - உதாரணமாக "புதிய வார்ப்புகள்' போன்று பெயரிடுகிறார்களே......என்று இழுத்தார். அதற்கு ஜே.கே சற்று அதட்டலாக, ""ஏம்பா அந்தக் கதையை நீ எழுதினியா'' என்று கேட்டார். மாணவர் மிரட்சியுடன் ""இல்லை ஐயா, நீங்கதான் எழுதுனீங்க'' என்றார். ""கதையை எழுதின நானே கவலைப்படலே, உனக்கென்ன? நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் எவரும் எடுத்தாளுவர். போ'' என்றார். அதுதான் ஜெயகாந்தன்.
70களில் நான் உளுந்தூர்பேட்டைக்கு அருகில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஆசனூர் என்னும் ஊரில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நெடுஞ்சாலையை ஒட்டிய ஒரு வீட்டின் மாடியில் குடி இருந்தேன்.
ஒரு நாள் மாலை பொழுது சாயும் நேரத்தில், என் பகுதிக்கு வரும் மாடிப்படியில் "சாமியே சரணம் ஐயப்பா' என்று சத்தம் கேட்டது. அது எனக்குச் சம்பந்தமற்றதும் அந்த நேரத்துக்குப் பொருத்தமற்றதுமாக இருந்ததால், நான் அதிர்ந்து எழுந்து படிகளை நோக்கிப் போனேன். கருப்பு உடையில் கழுத்தில் துளசிமணி மாலைகளுடன் நண்பர் பி.ச.குப்புசாமி படியேறி வந்து கொண்டிருந்தார். எனக்கு வியப்பு அதிகமாயிற்று. இந்த நேரத்தில் இவர் எப்படி என்று நான் புருவம் உயர்த்தியதும், அவர் மறுபடியும் "சாமியே சரணம் ஐயப்பா' என்று ராகம் இழுத்தபடி, ""என்ன சபா தெரியலியா'' என்றார். ""அய்ய இது என்ன வேஷம் குப்புசாமி?'' என்று கேட்டேன். ""சபரிமலைக்குப் போறோம் கீழே ஜே.கே காரில் இருக்கிறார்'' என்றார். ""அப்படியா?'' என்று பரபரத்தபடி கீழே ஓடினேன்.
வீட்டு வாசலில் அவரது வெள்ளைக் கார் நின்றிருந்தது. ஓட்டுநர் இருக்கையில் இருந்த ஜே.கே என்னைக் கண்டதும், ""சாமியே.... சரணம்'' என்றார். காரின் உள்ளிருந்து இரண்டு மூன்று குரல்கள் அதே சரணத்தை வழி மொழிந்தன. அவர்கள் - திருப்பத்தூர் வையவன், தண்டபாணி, வெள்ளக்குட்டை ஆறுமுகம் ஆகியோர். எல்லோரும் ஜே.கே. உட்பட கறுப்பு உடையில் கழுத்தில் துளசிமணி மாலைகளுடன் இருந்தனர். ""வாங்க ஜே.கே மேலே போகலாம்'' என்று அழைத்தேன். ""நாங்க விரதத்தத்துலே இருக்கோம்.
மலைக்குப் போய்த் திரும்பும் வரைக்கும் இல்லம் எல்லாம் விலக்கம். உங்க பள்ளிக் கூடம் எங்கே இருக்கு? அங்கே போகலாம்'' என்றார். ""போகலாம், கொஞ்சம் இருங்க.
ராத்திரி ஆகாரத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டு வரேன்'' என்றேன். ""அதெல்லாம் வேணாம் எல்லாம் கொண்டு வந்திருக்கோம். பாலுக்கு மட்டும் சொல்லுங்க. ஏறுங்க போவோம்'' என்றார். நான் மேலே ஓடி என் மனைவியிடம் பால் காய்ச்சி அனைவருக்கும் அனுப்பச் சொல்லிவிட்டு வந்து காரில் ஏறிக் கொண்டேன்.
பள்ளிக்கூடம் கூப்பிடு தொலைவில்தான் இருந்தது. விளையாட்டு மைதானத்தை ஒட்டிய திறந்த காற்றோட்டமான அறையில், கார் டிக்கியிலிருந்து அவர்களது மூட்டை முடிச்சுகள் - உணவுப்பண்டங்கள் அடங்கியவை - இறக்கப்பட்டன. வகுப்பு சாய்வு மேஜைகளை ஓர் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, வட்டமாக உட்கார சிமிண்ட் தரை விஸ்தாரமாக்கபட்டது. சற்று உட்கார்ந்து ஓய்வெடுத்த பின் பள்ளிக் கிணற்றில் அனைவரும் குளித்து, சந்தனப் பூச்சணிந்து அறைக்குத் திரும்பி, அய்யப்பப் பாடல்கள் ஒலிக்கப் பூஜை நடத்தினார்கள். பிறகு மூட்டைகளைப் பிரித்து, கொண்டு வந்திருந்த கடலை, பொரி உருண்டைகள், அதிரசம், பழங்களை உண்டு பாலருந்தினார்கள். என்னையும் சாப்பிட வைத்தார்கள்.
பிறகு ஆரம்பித்தது சபை. வழக்கம் போல ஜே.கே. சபை நடுவில் சம்மணமிட்டு அமர, நாங்கள் அனைவரும் சுற்றிலும் உட்கார்ந்ததும் பாரதி பாடம் ஆரம்பமாயிற்று. பின்னர் அவரது இனிய கர்நாடக இசைப்பாடலில் கிறங்கி நின்றோம். அப்போது நடுநிசியாகி இருந்தது. ""வாங்க நிலவொளிக்குப் போகலாம்'' என்று ஜே.கே எழுந்ததும் நாங்களும் தொடர்ந்தோம். எதிரே இருந்த மைதானத்தில் வட்டமாகக் கூடினோம்.
நிலவு பளிச்சென்று பரவி இருந்தது. எல்லோரும் கறுப்பு உடையில், நான் மட்டும் வெள்ளை உடையில். திடீரென்று ஜே.கே, "சிலும்பிப் போடடா.....' என்றபடி கைகளை உயர்த்தி எம்பிக் குதித்தார். உடனே எல்லோரும் அவரைப் பின்பற்றி, "சிலும்பிப் போடடா.... சிலும்பிப் போடடா.....' என்று கூவியபடி, வானத்துக்கும் பூமிக்குமாய் எம்பிக் குதித்துச் சுற்றி வந்தார்கள். எனக்கு அந்த விளயாட்டு பரிச்சயமில்லாததால் வட்டத்துக்கு நடுவில் நழுவினேன். நிலவு வெளிச்சப் பின்னணியில், கறுப்பு உடையில் என்னைச்சுற்றிச் சுற்றி வந்து நடனமாடினர்கள். இந்த விளையாட்டு முடிந்ததும், ""சோப்பெங்கப்பா போடுங்கப்பா'' என்று ஜே.கே சொல்லி அவரே ஆட ஆரம்பித்ததும்,
என்னைத் தவிர எல்லோரும் ""சோப்பெங்கப்பா...சோப்பெங்கப்பா......'' நடனம் ஆடினார்கள். எனக்குக் கூச்சமாக இருந்ததுடன், அந்த ஊரில் தலைமை ஆசிரியராக இருக்கும் நான் அப்படிக் கூத்தாடுவதை ஊர்க்காரர்கள் யாராவது பார்த்துவிடப் போகிறார்களே என்ற பயமும் காரணமாய் நடுவில் நின்றபடி அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
இப்படி பாட்டும் கூத்தும் பிரசங்கமுமாய் பொழுது புலர்ந்தது. கையெழுத்து புலனாகும் முன்பாக ஜே.கேயும் நண்பர்களும் ""சாமியே சரணம் ஐயப்பா'' என்று விளித்தபடி காரில் ஏறி விடை பெற்றார்கள். அந்த அற்புதமான அனுபவம் - 45 ஆண்டுகள் கடந்தும் அந்த இனிய அனுபவம் - இன்னும் நெஞ்சில் பசுமையாக நிலைத்திருக்கின்றது.
கடந்த 4 ஆண்டுகளாக முதுமை காரணமாக தொலைதூரப் பயணம் முடியாமையால் சென்னை சென்று அவரைப் பார்க்க முடியவில்லை. கடைசியாக நெய்வேலி புத்தக்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக 4 ஆண்டுகளுக்கு முன் வந்தபோது போய்ச் சந்தித்ததுதான். இப்படி எத்தனையோ சந்திப்புகள் அவருடன் இந்த 50 ஆண்டுகளில் அவர் எவ்வளவு நெருக்கமாக நம்மோடு பழகினாலும், அவரோடு சரிசமமாக வைத்து எண்ண முடியவில்லை. இந்த நூற்றாண்டின் மகத்தான இலக்கிய மேதையின் முன்னிலையில் உள்ளோம் என்பதும் அவரது நட்பு என்பது பெரும்பேறு என்பதுமே நினைவில் நிற்கிறது.
இறப்பு என்கிற நிதர்சனத்தை மறுக்க முடியாது என்றாலும் என்னைப் பொறுத்தவரை மனதளவில் அவர் இறக்கவில்லை. அவரே சொன்னபடி, ""வாழ்வதன் முன்னால் நான் செத்திருந்தேன், செத்ததின் பின்னாலும் வாழ்ந்திருப்பேன்'' என்றபடி அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஜெயகாந்தன் ஒரு செம்மாந்த தமிழன்!
முனைவர். கா. செல்லப்பன்.
நேர் கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு, கம்பீரமான குரல், வளமான, புதுமையான வாழ்க்கை சித்திரிப்புகள் - இவைதாம் ஜெயகாந்தன் என்ற செம்மாந்த தமிழனின் சிறப்பான அடையாளங்கள் "படிக்காத மேதை' என்று குறிப்பிடப்படும் அவர், முறையாகக் கல்லூரிகளில் படிக்கவில்லையே தவிர, தமிழ், இந்திய இலக்கியங்களை மட்டுமின்றி, சோவியத் பிரெஞ்சு இலக்கியங்களைத் தானே படித்து உணர்ந்தது மட்டுமின்றி, வாழ்க்கையையும் ஆழமாகப் படித்தவர். பிறகு அவற்றை வார்த்தைகளில், அழுகுறப் படைத்தவர்.
"பலபேர் எழுத்துக்களை நேராகப் படித்து தலைகீழாகப் புரிந்து கொள்வார்கள், நான் எழுத்துக்களை தலைகீழாகப் படித்து நேராகப் புரிந்து கொண்டேன்' என்று அவர் பத்திரிகைகளில் கம்போசிடர் பணியாற்றியதைப் பற்றிக் கூறுவார். அவரது எழுத்துக்களைப்பற்றி "ரிஷிமூலம்' நாவலின் முன்னுரையில் இப்படிக் கூறினார். ""நான் கண்டதை, அதாவது எனக்குக் காட்டப்பட்டதை, நான் உலகத்துக்குத் திரும்பவும் காட்டுகிறேன், அதையே திரும்பவும் உங்களிடம் சொல்கிறேன்.''
"சிறுகதை மன்னன்' என்று கூறுமளவிற்கு தமிழில் நிறைய, புதிய பாணியில் சிறுகதைகளைப் படைத்தவர் ஜெயகாந்தன், தடுமாறி, துன்புற்ற மனிதர்களைப் பற்றி, எதார்த்தமும் மனிதநேயமும் இணைந்த பாணியில் கதைகளாக உருவாக்கினார்.
விமர்சகர் தோதாத்ரி, "சரஸ்வதி, தாமரை ஆகிய இதழ்களில் எழுதிய கதைகளில் எழ்மைக்குரிய காரண, காரியத் தொடர்பை ஆராய்வதால், ஒரு சிறப்பு நிலை எழுத்தாளராக இருப்பதாக'க் கூறுகிறார்.
அவற்றில் சிலவற்றில் ஆபாசமிருப்பாதாகவும் கூறுவார். ஆனால், "இருளைத் தேடி' என்ற கதையில் நிர்வாணமாக நிற்பவள், அது ஒரு தொழில் என்று கருதாமல், கலைப் பணியாகக் கருதுகிறாள். அவள் கூறுவதை ஜெயகாந்தனின் கருத்தாகவே கொள்ளலாம். இங்கே அழகே ஓர் ஆடை. கலைஞனின் கடமை அதன் மீது ஆசைப்படுவதில்லை.
அந்தப் பொய்யிலிருந்து மெய்யைப் படைக்க வேண்டியது அவன் கடமை. அப்போது பாலுணர்ச்சி அற்றுப் போகிறது. குழந்தை நிர்வாணமாய்த்தானிருக்கும்; அது ஆபாசமில்லை! ஜெயகாந்தனின் சிறுகதைகள் அடிநாதம், மனித நேயமும், அவலங்களுக்குள் அழுந்திக்கிடக்கும் அழகினைப் படம் பிடிக்கும் இயற்கையியமும் தான்.
அவரை முழுமையாகத் தமிழுலகுக்கு அறிமுகப்படுத்திய "அக்கினிப் பிரவேசம்' என்ற சிறுகதைதான், "சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் "கங்கை எங்கே போகிறாள்' என்ற புதினங்களாகத் தொடர்ந்து வளர்ந்தது. ஓர் இளம்பெண் கணநேரத்தில் கற்பை இழக்க நேரிட்டபோது, அவளது தாயும் சமூகமும் வெவ்வேறு வகைகளில் அவளைப் பார்க்கும் போது, அவள் எதிர்கொண்ட சமூகப் பிரச்னைகளைப் படம் பிடிக்கின்றன. இப்படைப்புகள். ஜெயகாந்தனின் கதைகளில் பாலுணர்வுப் பிரச்னைகள், சமூகப் பிரச்னைகளாகவே பார்க்கப்படுகின்றன. டால்ஸ்டாயின் "புத்துயிர்ப்பு' என்ற நாவலின் தாக்கம் இருக்கிறது. கங்கா, பிரபுவுக்குப் புத்துயிர்ப்பளிக்க முயன்று, தானும் புத்துயிர்ப்படைகிறாள். கண்ணுக்குத் தெரியும் அசுத்தமும், கண்ணுக்குத் தெரியாத தூய்மையும்தான் கங்கை என்ற புனித நதி. அந்தப் புனிதநதி போன்றவள்தான் கங்கா எனக் காட்ட முயல்கிறார் கதாசிரியர்.
தொடக்கத்திலிருந்தே மார்க்ஸீயமும் இந்தியத் தத்துவமரபும் அவரிடம் இணைந்திருக்கிறது. ஆனால் முற்பகுதியில் மார்க்ஸீயத்தின் தாக்கம் மிகுதி. பின்பாதியில் அது இந்திய மரபோடு இரண்டறக் கலக்கிறது. மார்க்ஸிய வேதாந்தி என்று அவர் தன்னை வருணித்தார். "ஜய ஜய சங்கர'வில் ஆதி என்ற தலித்தும் சங்கரரும் இணைவதை ஆதிசங்கரருக்கு அவரது சமூக விளக்கமாகக் கொள்ளலாம். இன்னொரு கதையில், உடல் ஊனமுற்ற ஒருவனின் சக்கர நாற்காலி, விஷ்ணுவின் சக்கரத்தோடு இணைக்கப்படுகிறது. இரண்டு கதைகளிலும் மானுட ஆற்றலும் சமத்துவமும் ஆன்மிகத்தோடு இணைக்கப்படுகின்றன. விஷ்ணுவின் சக்கரத்துக்கு இணையாக, உடல் ஊனமுற்றவனின் வாழ்க்கைச் சக்கரத்தைக் காண்கிறார்.
அவரது "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' ஆன்மிக இலட்சிய வாதம் மேலோங்கியிருக்கிறது. இதிலும் வர்க்கப் போராட்டம், ஆண்-பெண் மோதலாகவே காட்டப்பட்டுள்ளது.
நாயகன் ரங்காவின் ஆழ்மன ஆணின் ஆதிக்க உணர்வு கல்யாணியையும் உடைமையாகக் கருதுவதால் அவர்கள் உறவிலே விரிசல் ஏற்படுகிறது. பொருளாதாரக் கட்டமைப்பு, அன்பையே பொருளாதாரமாக்கி விடுகிறது. ஆனால் நடிகையான கல்யாணி, நடிப்பிலும் வாழ்க்கையிலும் தன்னை இழந்து, தன்னை உணர்கிறாள். ரங்காவுக்கு அவளது வாழ்க்கையே நடிப்பாகத் தோன்றுகிறது. அவளுக்கு நடிப்பே உண்மையாக மாறிவிடுகிறது. கல்யாணியை " ஓர் இலட்சியக் கற்பனை', தமது இலட்சிய மனைவி, என்று குறிப்பிட்டு உடனே, அவளும் மற்ற எல்லாப் பாத்திரங்களும் நானே; நான் போட்டுக் கொள்ளுகிற - வாழ்க்கையிலே நான் சந்தித்த பிறர் மாதிரியான வேஷங்களே?'
என்று ஆசிரியர் குறிப்பிடும்போது அவரது அத்வைதமும், இலக்கியக் கொள்கையும் தெளிவாகின்றன. ஆனால் கடைசியில் கல்யாணியை முடமாக்கி அவளது வாழ்க்கை நாடகத்தை அவள் பார்த்து ரசிப்பதாக முடிக்கும்போது, கதையின் காலையும் ஒடித்துவிட்டாரோ என்ற ஐயம் எழுகிறது. ஆனால், உயர்ந்த இலக்கியங்கள், முடிவுகளைத் தீர்வுகளாகத் தருவதில்லை. ஆசிரியரின் சொற்களிலே சொன்னால், ""கதையின் முடிவு, ஒரு வகை ஓய்ச்சலே, ஏனென்றால், கதைகள் முடிகின்றன, ஆனால் வாழ்க்கை முடிவதில்லை''.
அவருடைய "சுந்தர காண்ட'த்திலும் , இன்றைய சமூக அநீதியால் அல்லற்படும் சீதாவின் துயரத்துக்கு மாற்றாக ஒருவகை சோஷலிசக் கனவைக் காட்டுகிறார். அதற்கு இராமகதை அடித்தளமாக அமைகிறது அவள் கணவன் சுகுமாறனும் தந்தையும் இராவணனாகக் காட்டுகிறார். அதேபோல இராமனுக்கும் புதியவரையறையைத் தருகிறார்.
வில்லை முறித்து சீதையைப் பெற்றவன் இராமனல்ல, சீதைக்கு சிறை மீட்சி தருபவனே இராமன் என்று பழைய தொன்மத்துக்குப் புதிய அர்த்தத்தைத் தருகிறார்.
இராமத்துவம் ஒரு புதிய சகோதர சமத்துவமாக மாறுகிறது. நவீன சீதையின் தோழியாக சோவியத் பெண் பேசப்படுகிறாள். கார்க்கியின் அன்னையின் தமிழ்வடிவமாக "பாவம் இவள் ஒரு பாப்பாத்தி'யிலும், பரந்தாமனின் அம்மாவை கார்க்கியின் நிலாவ்னாவுடன் இணைக்கிறார். கார்க்கியாக அன்னையின் வீரக்கனல், இந்தியத்தாயிடம் உணர்வதை உணர்த்துகிறாள்.
இப்படி, ஜெயகாந்தனின் படைப்புகள், மார்க்ஸீயத்தையும் இந்தியத்தத்துவச் சிந்தனைகளையும் இணைத்து, புத்துலக கனவுகளாக, ஆனால் அழியாத உண்மைகளாக உருவாக்கப்பட்டுள்ளன. அவர் எந்தத் தத்துவத்துக்கும் அடிமையாகவில்லை. ஏனென்றால் உண்மையான படைப்பாளிக்கு வாழ்க்கையைப் பற்றிய தத்துவங்களை விட வாழ்க்கைதான் முக்கியமானது. புனிதமானது. வாழ்க்கைக்குப் பாடிய வாழ்த்துப் பாடல்கள்தாம், ஜெயகாந்தனின் உரைநடைக் காப்பியங்கள்.
மறக்க முடியாத அனுபவம்!
தேவபாரதி
1964 இல் நண்பர்களின் கூட்டு முயற்சியால் "ஆசிய ஜோதி பிலிம்ஸ்' என்ற நிறுவனத்தின் மூலம் "உன்னைப் போல் ஒருவன்' படம் தயாரிக்கப்பட்டது.
அந்தப் படத்துக்குத் தேசிய விருது கிடைத்தது. டெல்லியில் அந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்ட நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். எங்களிடம் பிரிண்ட் கிடையாது. அதற்காக ஸ்டுடியோடிவில் புது பிரிண்ட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆசிய ஜோதி பிலிம்ஸ்க்கு நான்தான் நிர்வாகி.
அதனால் பிரிண்டுக்கான பணத்தைச் செலுத்தி பிரிண்ட் எடுத்து டெல்லிக்கு அனுப்புமாறு சொல்லிவிட்டு ஜே.கே., டெல்லிக்குப் போய்விட்டார். அவர் போன பிறகுதான் தெரிந்தது வங்கியில் இருந்து பணத்தை எடுக்க காசோலையில் அவரின் கையெழுத்தை வாங்கவில்லை என்று. என்ன செய்வது? என்று எனக்குத் தெரியவில்லை.
நானும் அவரும் வேடிக்கையாகச் சில விளையாட்டுகளைச் செய்வோம். ஒரு சமயம் என் கையெழுத்தை அவரும், அவர் கையெழுத்தை நானும் போட்டுப் பார்த்தோம்.
நாங்கள் சிலர் மாதிரி சிக்கலாக இல்லாமல் தெளிவாக கையெழுத்துப் போடுவோம். ஆகவே யார் வேண்டுமானாலும் கொஞ்சம் முயற்சி செய்தால் எங்கள் கையெழுத்தைப் போட்டுவிடலாம்.
நாளை டெல்லிக்குப் பிரிண்ட் அனுப்பியாக வேண்டும். ஜெயகாந்தனோ டெல்லிக்குப் போய்விட்டார். கொஞ்சமும் யோசிப்பதற்கு இடமில்லை. காசோலை ஒன்றை எடுத்து பத்தாயிரம் ரூபாய்க்கு எழுதி நானே கையெழுத்துப் போட்டு வங்கியிலிருந்து பணத்தை எடுத்து ஸ்டுடியோவுக்குப் போய் பிரிண்ட் எடுத்து டெல்லிக்கு அனுப்பிவிட்டேன்.
டெல்லியில் படக்காட்சி நடந்தது. ஜெயகாந்தன் பேசியது பத்திரிகைகளில் வந்தது.
இந்த நெருக்கடி குறித்து ஜேகேயிடம் தெரிவித்தபோது, ""சொன்ன வேலை முடிஞ்சுட்டுதுல்லே - ஆளை விடுங்க'' என்று சிரித்தார்.
இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள். எழுதிக் கொண்டே போகலாம். அதை ஒரு நூல் வடிவில் கொண்டு வரலாம்.
"ஜேகே' வண்ணப்படங்கள் "யோகா'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.