திரைக்கதிர்

தமிழகத்தின் வட மாவட்டங்களைத் "தானே' புயல் தாக்கிய போது தன் சேமிப்பு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு அளித்தார் நயன்தாரா. அந்த வகையில் 20-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை
திரைக்கதிர்
Updated on
3 min read

தமிழகத்தின் வட மாவட்டங்களைத் "தானே' புயல் தாக்கிய போது தன் சேமிப்பு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு அளித்தார் நயன்தாரா. அந்த வகையில் 20-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்து கல்வி, உணவு, உடை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பாதுகாப்பகத்தை நடத்தி வருகிறார். தெரு நாய்களைக் காப்பாற்றும் நோக்கில் அவற்றுக்கு உணவும், மருத்துவ சிகிச்சையும் அளித்து வருகிறார் த்ரிஷா. அதோடு தெரு நாய்கள் கொல்லப்படுவதைத் தடுக்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சாலையோரப் பயணங்களின் போது தென்படும் தெரு நாய்களை பாதுகாப்பகத்துக்கு அழைத்துச் சென்று விடுவதை த்ரிஷா வழக்கமாக வைத்துள்ளார். சமந்தா தன்னுடைய "பிரத்யூஷா' அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற குழந்தைகள், பெண்களுக்கு உதவி செய்து வருகிறார். அவரது இந்த சேவைக்கு உதவிடும் வகையில் அவருடன் நட்பில் இருக்கும் ஹீரோக்கள் உதவி செய்து வருகிறார்கள். நடிகர் ராம்சரண் சமீபத்தில் இந்த அறக்கட்டளைக்காக ரூ.3 லட்சம் உதவி செய்துள்ளார்.

ரஜினி ரசிகர்களின் மனதில் எப்போதும் நீங்கா இடம் பெற்றுள்ள படம் "பாட்ஷா.' இது போல் ஒரு படம் மீண்டும் எப்போது வரும் என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், "பாட்ஷா' படத்தின் 2-ஆம் பாகத்தில் அவர் நடிப்பதாக கடந்த சில வருடங்களாகவே பரவலாகப் பேச்சு இருந்து வருகிறது. கடந்த வருட இறுதியில் அதற்கான திரைக்கதையுடன் ரஜினியை சந்தித்தார் சுரேஷ்கிருஷ்ணா. ஆனால் ரஜினி தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை. ""ஒரே ஒரு பாட்ஷாதான்; இன்னொரு பாட்ஷா கிடையாது...'' என்பது போல் கூறி ரஜினி அக்கதையை ஏற்க மறுத்து விட்டாராம். இந்நிலையில் "பாட்ஷா' படத்தின் இரண்டாம் பாகத்தில் அஜித் நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சமீபத்தில் அஜித்தை சந்தித்த சுரேஷ் கிருஷ்ணா, அவரிடம் "பாட்ஷா 2' படத்துக்கான கதையைச் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே ரஜினி நடித்த "பில்லா' படத்தின் ரீமேக்கில் நடித்தவர் அஜித். அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியையடுத்து "பில்லா 2' படத்திலும் நடித்தார். தற்போது "பாட்ஷா' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும்படி அவரிடம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், அமைதி காக்கிறார் அஜித். தற்போது கையில் இருக்கும் படங்களை முடித்த பின்னர் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அஜித் வெளியிடலாம் என்கிறார்கள்.

ஹீரோவுக்கு நிகரான சம்பளம் பெறுவதுதான் இப்போதைய காமெடி நடிகர்களின் வழக்கமாக உள்ளது. தங்களது மார்க்கெட் நிலவரத்தை சரியாக கணித்துக் கொண்ட காமெடி நடிகர்கள் ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பதைத் தவிர்த்து தங்களை முன் நிறுத்தும் படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகின்றனர். இந்த வகையில் வெளிவந்த படங்களுக்கு ரசிகர்களிடம் எழுந்த பரவலான வரவேற்புகளையடுத்து அடுத்தடுத்த கதைத் தேர்வுகளிலும் கவனம் பதிக்கிறார்கள். இதனால் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்க கால்ஷீட் கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். அவ்வாறு தேடி வரும் வாய்ப்புகளை ஏற்க பெருமளவு தொகையை சம்பளமாக கேட்கின்றனர். 20 நாள்கள் ஒருங்கிணைந்த கால்ஷீட்டுக்கு சந்தானம் கேட்கும் தொகை சில கோடிகளைத் தாண்டுகிறது. வடிவேலு தின சம்பளமாக சில லட்சங்களைக் கேட்கிறார். கோலிவுட் காமெடி நடிகர்களைப் பார்த்து டோலிவுட் காமெடி நடிகர் பிரமானந்தமும் தன் சம்பளத்தை உயர்த்தி விட்டார். என்.டி.பாலகிருஷ்ணாவின் 99-வது படமாக உருவாகும் "டிக்டேட்டர்' படத்தில் நடிப்பதற்காக 30 நாள்கள் கால்ஷீட்டுக்கு சந்தானம் பாணியில் சில கோடிகளை கேட்டு தயாரிப்பு தரப்பை அதிர்ச்சி அடையச் செய்துள்ளார் பிரமானந்தம்.  

"ஓ காதல் கண்மணி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த  பட பணிகளில் தீவிரமாக இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். துல்கர் சல்மான், கார்த்தி இருவரும் ஹீரோக்களாக நடிக்க உள்ளனர். இதில் முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக இருந்தது. அவரின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த நிலையில், ஐஸ்வர்யா ராயின் கால்ஷீட் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஹிந்தியில் ரீ எண்ட்ரி ஆகும் படத்தில் பிஸியாக இருப்பதால் இன்னும் தன் கால்ஷீட்டை உறுதி செய்யாமல் இருக்கிறார். ஸ்ருதிஹாசனை ஹீரோயினாக மனதில் வைத்திருந்த மணிரத்னம் அம்முடிவில் இருந்து பின் வாங்கினார். இந்நிலையில் நயன்தாராவை சந்தித்து மணிரத்னம் பேசியிருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் நயன்தாரா நடிப்பது உறுதியானது. தற்போது இந்த இரண்டும் பேரும் இல்லாமல் அந்த வாய்ப்பு இப்போது கீர்த்தி சுரேஷூக்கு சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழில் சிவகார்த்திகேயனுடன் "ரஜினி முருகன்' உள்பட 5-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். மணிரத்னம் படத்தில் நடிக்க மூன்று ஹீரோயின்களுமே ஆர்வமாக உள்ளனர். ஆனால் கீர்த்தி சுரேஷூக்குத்தான் அதிக வாய்ப்பு இருப்பதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முழுக்க முழுக்க தமிழ்ப் பெயர்களை முன்னிலைப்படுத்தும் தலைப்புகளில் வெளிவரும் படங்களுக்கு மட்டுமே வரி விலக்கு என்ற விதி அமலில் இருந்தாலும், ஆங்கில தலைப்புகளில் வெளிவரும் படங்கள் அதிகரித்துள்ளன. "பீட்சா', "வில்லா', "ஜிகர்தண்டா' உள்ளிட்ட ஏராளமான படங்கள் ஆங்கில தலைப்புகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன.  இந்த வகையில் தமிழில் முழுக்க முழுக்க ஆங்கில தலைப்புடன் வெளிவரும் படம் "எப் பி ஸ்டேட்டஸ் போடு சாட் பண்ணு.'  விஞ்ஞான வளர்ச்சி மற்றும் நாகரிக மோகம் வளர வளர சர்ச்சைகளும், பிரச்னைகளும் அதிகரிக்கின்றன. இந்த பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகமாக பகிரப்பட்டு வரும் ஃபேஸ்புக் இணைய தளம் இக்கதையின் முக்கிய கதாபாத்திரம் வகிக்கிறது. ஃபேஸ்புக்கில் இடம் பெற்றிருக்கும் ஹீரோ தனது ஸ்டேட்டûஸ வெளிப்படுத்தாததால் ஏற்படும் பாதிப்புகளும், அவ்வப்போது  அவர் போடும் ஸ்டேட்டஸ்களால் அவருக்கு என்ன நிகழ்கிறது என்பதும்தான் கதை. சுரேஷ் சர்மா, ஆதி ஆச்சார்யா, ஸ்ருதி, தேவிகா, அதிதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரகுராம் முக்கிய வேடம் ஏற்று நடிக்கிறார்.

படிப்பு, நடிப்பு இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார் லெட்சுமிமேனன். சமீபத்தில் பள்ளிப் படிப்பை முடித்துள்ள லெட்சுமிமேனன், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ.ஆங்கில படிப்பை தேர்வு செய்து படித்து வருகிறார்.  இதற்கிடையில் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது "சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து வருகிறார் லெட்சுமிமேனன்.   முன்பு போல் இல்லாமல் தனக்குப் பிடித்தமான கதைகளில் மட்டுமே நடிக்கும் முடிவை தற்போது எடுத்துள்ளார். இதே பாணியில் இன்னொருவர் நிவேதா தாமஸ். "பாபநாசம்' படத்தில் கமலின் மூத்த மகளாக நடித்தவர். இவரும் சென்னை கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். தமிழில் ஒரு படமும், தெலுங்கில் ஒரு படமும் நடித்து வரும் இவர், படிப்பை விட்டுத் தராமல் தொடர்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com