நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்!

எல்லாமே கனவுபோல இருக்கிறது. கலாம் சாரைப் பார்த்தது, பேசியது, அவருடன் பழகியது, அறிவுரை கேட்டது என்று அனைத்துமே கனவில் நடந்ததுபோல இருக்கிறது.
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்!

எல்லாமே கனவுபோல இருக்கிறது. கலாம் சாரைப் பார்த்தது, பேசியது, அவருடன் பழகியது, அறிவுரை கேட்டது என்று அனைத்துமே கனவில் நடந்ததுபோல இருக்கிறது.

 புதுதில்லிக்குப் போய் இறங்கினால், முதல் வேளையாக கலாம் சாரின் உதவியாளர்கள் பிரசாத் அல்லது ஷெரீடனைத் தொடர்பு கொண்டு அவரைச் சந்திக்க நேரம் கேட்பது என்பது வழக்கமாகி விட்டிருந்தது. இவர்கள்போய் தகவல் சொன்னதும், அடுத்த நாளே வரச்சொல்லி விடுவார். எப்போதுமே அன்றைய

தினத்தின் கடைசிச் சந்திப்பு என்னுடனானதாகத்தான் இருக்கும். அப்போதுதான் அதிக நேரம் பேசிக் கொண்டிருக்கலாம்.

 ""என்ன சார், தில்லி "தினமணி' எப்படி சார் இருக்கு?'

என்கிற கேள்வியுடன்தான் வழக்கமாக எங்கள் சந்திப்பு தொடங்கும்.

 வரவேற்பரையிலேயே அமர்ந்தபடி பேசுவதும் உண்டு. அவரது ராஜாஜி மார்க் இல்லத்தைச் சுற்றி இருக்கும் புல்தரையில் காலார நடந்தபடி கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதும் உண்டு.

 நாட்டு நடப்பு, உலக நடப்பு, இலக்கியம், ஆன்மிகம், இசை என்று நாங்கள் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களே கிடையாது. என்னவெல்லாமோ பேசியிருக்கிறேன் அவரிடம். நான் கேட்டுத் தெரிந்து கொள்வது அதிகம் என்றாலும், அவர் என்னிடம் விசாரித்துத் தெரிந்து கொள்வதும் நிறையவே உண்டு.

 தமிழக அரசியல் பற்றியும், தேசிய அரசியல் பற்றியும் என்னிடம் ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார். அவருக்கு அரசியல் ஆர்வம் இருக்கவில்லை. ஆனால், அரசியலில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் நிறையவே இருந்தது. அதேநேரத்தில், ஒரு தடவைகூட அவர் அரசியல் தொடர்பான எந்தவொரு கருத்தையும் தவறிக்கூடப் பகிர்ந்து கொண்டதில்லை.

 தினமணியில் சங்கீத சீசனின்போது நான் எழுதும் இசை உலா விமர்சனங்களின் தீவிர ரசிகர் கலாம் சார். அதுமட்டுமல்ல, இளைய தலைமுறை இசைக்கலைஞர்கள் யார் யார், அவர்கள் யாருடைய சீடர்கள், எப்படிப் பாடுகிறார்கள் அல்லது இசைக்கருவிகளை வாசிக்கிறார்கள் என்பதை எல்லாம் விசாரித்துத் தெரிந்து கொள்வார். பண்கள், ராகங்கள் இவற்றிற்கு உள்ள தொடர்புகளையும், குறிப்பிட்ட கர்நாடக சங்கீத ராகம், எந்தப் பண்ணை ஒட்டி உருவானது என்பன போன்ற நுணுக்கங்களையும் அவர் தெரிந்து வைத்திருப்பார். அதை விவரித்துக் கூறுவதைக் கேட்டு நான் பிரமித்துப் போயிருக்கிறேன்.

 விஞ்ஞானியான அவருக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருந்ததுதான் அதைவிட ஆச்சர்யம். படிப்பார், நிறைய நிறையப் படிப்பார். சங்க இலக்கியங்களில் மிக அதிகமான ஆர்வம் அவருக்கு இருந்தது. திருக்குறள் அவருக்குத் தலைகீழ்ப் பாடம். திருக்குறள் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டால், தமிழறிஞர்களுக்கேகூடத் தெரியாத பல விளக்கங்களை அவர் தருவார். ஒவ்வொரு குறளையும், அவர் நுண்ணாடியை (மைக்ரோஸ்கோப்) வைத்து ஆய்வு செய்ததுபோல அலசி ஆராய்ந்திருப்பார்.

 திடீரென்று ஒருநாள் தொலைபேசியில் அழைத்தார். ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திருக்குறள், திருவாசகம் இரண்டும் கிடைத்தால் வாங்கி அனுப்புங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். ஜி.யு. போப்பின் "திருக்குறள்' என்னிடமே பிரதி இருந்தது. "திருவாசகம்' சென்னைப் பல்கலைக்கழகம் பதிப்பித்திருந்தது. ஆனால், அதன் பிரதி கிடைக்கவில்லை.

 முதுநிலை உதவியாசிரியர் இடைமருதூர்

கி. மஞ்சுளாவிடம் ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்த "திருவாசகம்' இருந்தது. அவர் தனது பிரதியை  கலாம் சார் கேட்டிருக்கிறார் என்றவுடன் தந்துவிட்டார். ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திருக்குறளையும், திருவாசகத்தையும் அவருக்கு அனுப்பிக் கொடுத்தேன்.

 ஐந்து, ஆறு மாதங்களுக்குப் பிறகு, இடைமருதூர்

கி. மஞ்சுளாவுக்கு நன்றிகூறிக் கடிதம் எழுதியிருந்ததுடன், அவரது திருவாசகம் பிரதியைத் திருப்பியும் அனுப்பி இருந்தார் கலாம் சார். அடுத்தவருடைய புத்தகத்தைப் படித்துவிட்டு அவர்களுக்கே திருப்பி அனுப்பிவிடும் கலாம் சாரின் பண்புக்கு இது ஓர் உதாரணம்.

 "தினமணி' நாளிதழில் வெளிவந்த எனது தலையங்கங்களின் தொகுப்பான "உண்மை தெரிந்தது சொல்வேன்' வெளியீட்டு விழாவுக்கு வந்து புத்தகங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். "தினமணி அழைக்கிறது. வராமல் இருப்பேனா?' என்று அவர் கேட்டபோது எனக்கு ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது.

 அடுத்தாற்போல, "தினமணி' நாளிதழின் தில்லிப் பதிப்பைத் தொடங்குவது என்கிற முடிவை எடுத்ததும், முதலில் போய் தகவல் சொன்னது கலாம் சாரிடம்தான். அவருக்குப் பெரு மகிழ்ச்சி. அரை மணி நேரத்திற்கும் மேலாக, யுத்த காலத்தில் ராமேஸ்வரத்திற்கு "தினமணி' வந்தது பற்றியும், அதில் ஏ.என். சிவராமனின் கட்டுரைகள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். தினமணியுடனான தனது தொடர்பை ஒவ்வொரு சந்திப்பின்போதும் நினைவு கூராமல் இருக்கவே மாட்டார்.

 ஒரு தடவை 10, ராஜாஜி மார்க் இல்லத்தில் சந்திக்கப் போனபோது, அவரது உதவியாளர் பிரசாத், "வைத்தியநாதன் சார் வந்திருக்கிறார்' என்று சொன்னதும் கோபம் வந்துவிட்டது. ""என்ன நீ அவரைப் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறாய்? எடிட்டர் சார் வந்திருக்கார்னு சொல்லணும். அவர் "தினமணி' எடிட்டர். அதனால் எனக்கு எடிட்டர்'' என்று அவர் சொன்னது இன்னும் காதில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது. தினமணி நாளிதழுடனான அவரது ஈடுபாடு அத்தகையது.

 தனுஷ்கோடி புயல் பற்றி அவர் விவரித்தது, அன்றைய ராணுவ அமைச்சராக இருந்த குடியரசின் முன்னாள் தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்திரா காந்தி அம்மையாரின் துணிச்சலும் தொலைநோக்குப் பார்வையும், பொக்ரான் அணுசோதனை நடத்தியதன் முக்கியத்துவம், இப்படி எத்தனை எத்தனையோ செய்திகளை அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பல்கலைக்கழகத்தில் பாடம் கேட்பதுபோல அதைக் கேட்டு எனது மனதில் பதிவு செய்து கொண்டேன்.

 டாக்டர் பொன்ராஜ் மீது அவருக்கிருந்த பாசம் அளப்பரியது. எங்களது சந்திப்பின்போதெல்லாம் பொன்ராஜைப் பற்றிப் பேசாமல் இருந்ததே இல்லை. நானே கலாம் சாரின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கிறேன். பொன்ராஜுக்கு யார் ஆறுதல் கூறுவது?

 தில்லிப் பதிப்பு அச்சானதும் முதல் பிரதியுடன் அவரது இல்லத்துக்குத்தான் சென்றோம். ஏதோ குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சுவது போல, அந்த முதல் நாள் இதழை அவர் புரட்டிப் பார்த்து ரசித்த காட்சி எனது கண்களைவிட்டு இன்னும் அகல மறுக்கிறது. பத்திரிகை வெளியீட்டு நிகழ்ச்சிகளில் அவர் பங்கு கொள்வது வழக்கமில்லை என்பதால், அவரிடம் முதல் பிரதியைக் கொடுத்த பிறகு தனியாக வெளியீட்டு விழா நடந்தது.

 தில்லி தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து தமிழ் இலக்கிய அமைப்புகளை எல்லாம் கூட்டித் தலைநகர் தில்லியில் "தினமணி' சார்பில் ஒரு மாநாடு நடத்தினோம். அதைத் தொடங்கி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டபோது, மறுபேச்சே இல்லாமல் ஏற்றுக் கொண்டு விட்டார்.

 அந்த நிகழ்ச்சியில் சிறந்த விருந்தினராகக் கவிஞர் வைரமுத்துவும் கலந்துகொள்ள இருந்தார். அப்போது அவர் "ஆனந்தவிகடன்' இதழில் "மூன்றாம் உலகப் போர்' தொடர்கதை எழுதிக் கொண்டிருந்த நேரம். நிகழ்ச்சிக்குக் காரில் வந்து இறங்கிய கலாம் சாரை நானும் வைரமுத்துவும், தமிழ்ச் சங்கச் செயலாளர் முகுந்தனும் வரவேற்றோம். கவிஞர் வைரமுத்துவைப் பார்த்ததும் கலாம் சார் சிரித்துக் கொண்டே சொன்னார் - ""மூன்றாம் உலகப் போர் வராது?''. எல்லாரும் சிரித்துவிட்டோம்.

 ஆனந்த விகடனில் வெளிவரும் தொடர்கதையைப் பற்றிக்கூடத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும் அவரது விசாலமான பார்வை எங்களை அசர அடித்தது. அதுதான் கலாம் சார்!

 கடந்த ஆண்டு ஜூன் 21, 22 தேதிகளில் நடந்த தினமணி தமிழ் இலக்கியத் திருவிழாவை முதலில் ஏப்ரல் 14-ஆம் தேதி நடத்துவதாகத்தான் தீர்மானித்திருந்தோம். தொடங்கி வைக்கக் கலாம் சாரை அழைப்பதற்காக தில்லி சென்றிருந்தேன். விவரம் சொன்னேன்.

 ""ஏப்ரல் மாதம் நான் ஐரோப்பா செல்கிறேன். அதனால் வரமுடியாது!'' என்று அவர் சொல்லவில்லை. என்ன சொன்னார் தெரியுமா?

 ""ஏப்ரல் மாதம்தான் ஐரோப்பா செல்கிறேன். அதனால், இலக்கியத் திருவிழா தேதியைத் தள்ளிப்போடுங்கள். நான்  வந்து தொடங்கி வைக்கிறேன்.''

 தினமணி நாளிதழிடம் அவருக்கு அவ்வளவு உரிமை. அவர் தந்த தேதி ஜூன் 21. அதனால்தான் அந்த தேதியில் தமிழ் இலக்கியத் திருவிழாவை நடத்தினோம். ஆண்டுதோறும் இந்த விழா நடத்தப்பட வேண்டும் என்று அதற்குப் பிறகு பல தடவை என்னிடம் கூறிவிட்டார். இந்த ஆண்டு ஆகஸ்ட் 22, 23 தேதிகளில் நடத்தப்பட இருக்கும் தமிழ் இலக்கியத் திருவிழாவின் நிறைவு விழாவுக்கு அவரை அழைப்பதாக இருந்தது. இனி அதற்கு வாய்ப்பில்லை.

 மறக்க முடியாத இன்னொரு சம்பவம். தில்லியில் அவரது இல்லத்திற்கு வாடகைக் காரில் சென்றிருந்தேன். அந்தக் காரின் டிரைவர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த வீர்பகதூர் சிங் என்கிற இளைஞர்.

 நானும் கலாம் சாரும் அவரது இல்லத்தைச் சுற்றி நடந்து கொண்டிருந்தோம். பிறகு நான் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறினேன். டிரைவர் வீர்பகதூர் "இது முன்னாள் ராஷ்டிரபதிதானே?' என்று கேட்டார்.

 "ஆமாம், உனக்கு அவரைத் தெரியுமா?'

 "அப்துல் கலாம் சாரைத் தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்க முடியுமா? நீங்கள் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி இருக்கக் கூடாதா?'

 எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. காரிலிருந்து இறங்கி கலாம் சாரின் இல்லத்திற்குள் விரைந்தேன். அவர் தனது அறைக்குச் சென்று கொண்டிருந்தார். நான் வந்திருக்கும் விவரம் சொன்னவுடன் திரும்பி வந்தார். "டாக்சி டிரைவர் உங்களைப் பார்க்க விரும்புகிறார்' என்று தயக்கத்துடன் சொன்னேன்.

 "அதற்கென்ன சார், வாங்க அவரைப் பார்ப்போம்' என்றபடி வெளியில் வந்து விட்டார். வீர்பகதூர் எதிர்பார்க்கவே இல்லை. அந்த இளைஞரிடம் அவரைப் பற்றி விசாரித்தது மட்டுமல்ல, வீர்பகதூரின் செல்லிடப் பேசியில் அவர்கள் இருவரையும் என்னைப் படமெடுக்கவும் சொன்னார். இப்படியொரு மனிதாபிமானம் வேறு யாருக்கு வரும்?

 சொந்தமாக அவருக்கென்று வீடு கிடையாது. சொத்து சுகம், வங்கி சேமிப்பு என்று எதுவும் கிடையாது. குடும்பம், குழந்தைகள் என்று யாரும் இல்லை. ஆனாலும், அவருக்கு எல்லாமே இருந்தது. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை அவரை நேசிக்கப் பலகோடி இதயங்கள் இருந்தன. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு வீடும் அவரது வீடாக இருந்தது.

கலாம் சாரிடம் எனக்கு மிகவும் பிடித்த குணம் என்னவென்றால், எதிர்மறைச் சிந்தனை இல்லாத நம்பிக்கையுடனான அணுகுமுறை. அவர் யாரைப் பற்றியும் தவறாகப் பேசியதே இல்லை. தன்னைப் பற்றி உயர்வாகப் பேசிக்கொண்டதும் இல்லை. அவரால் குழந்தைகளிடமும் பழக முடியும்; இலக்கியவாதிகளிடமும் விவாதிக்க முடியும்; அரசியல் தலைவர்களிடமும் அளவளாவ முடியும்; விஞ்ஞானிகளிடம் கலந்துரையாட முடியும். ஆன்மிகவாதிகளிடம் கருத்துப் பரிமாறிக் கொள்ளவும் முடியும்.

 ராமேஸ்வரத்தில் சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் என்கிற சிறுவன் இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்த வரலாறு, ராமகாதையைப் போலக் காலத்தைக் கடந்து தலைமுறை தலைமுறையாகப் பேசப்படப் போகும், வழிகாட்டப் போகும் இதிகாசம்.

கலாம் சார் இல்லை. கலாம் சார் மறைந்துவிட்டார். இதை எப்படி நான் தாங்கிக் கொள்ளப் போகிறேன் என்று தெரியவில்லை. கலாம் சாரிடமே மானசீகமாக விடை கேட்டேன். அசரீரியாக அவரது குரல் ஒலித்தது:

"நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு!''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com