

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சிலை என்கிற கோரிக்கை வலுக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ் திரையிசைக் கலைஞர்கள் சங்கம் சார்பில் அவருக்கு நடைபெற்ற நினைவஞ்சலிக் கூட்டத்தில் பேசிய பலரும் இந்த கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார்கள். எம்.எஸ்.வி.இன் திரு உருவ படத்தை திறந்து வைத்த இளையராஜா... "" எம்.எஸ்.வி. இசையமைத்த படங்களின் பெயர் தெரியாவிட்டாலும் பாடல்கள் மட்டும் படத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும். ""நான் ஆணையிட்டால்...'' என்று பாட்டு ஒலித்தால் அந்த படத்தின் காட்சிகள் மறந்து போயிருக்கும். ஆனால் பாட்டு நினைவிலிருக்கும். ஒரு பாட்டு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று எம்.எஸ்.வி.தான் வடிவமைத்தார். தமிழர்கள் எல்லோரும் கர்வம் கொள்கிற மாதிரி எம்.எஸ்.வி. இருந்தார். அவருடைய இசை என்னைப் போன்ற மர மண்டைகளுக்கும் வந்து சேர்ந்தது. அப்படிப்பட்ட எம்.எஸ்.வி. அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை என்னிடம் வைத்தால், அதை நானே செய்து விடுவேன் என்பதாலேயோ என்னவோ பலரும் அதற்கு முன் கூட்டியே அதற்கான மாற்று ஏற்பாடுகளில் இறங்கியிருக்கின்றனர். எம்.எஸ்.வி. அவரது செயல்களாலும், சாதனைகளாலும் இந்த தமிழ் உலகத்தில் வாழ்ந்து கொண்டே இருப்பார்'' எனப் பேசி முடித்தார் இளையராஜா.
நடனக் கலைஞர், நடிகர், இயக்குநர் என தான் எடுத்த அடுத்தடுத்த அவதாரங்கள் அனைத்திலும் மிளிர்ந்த பிரபுதேவா, அடுத்து எடுக்கும் முயற்சி தயாரிப்பாளர். "பிரபுதேவா ஸ்டூடியோஸ்' என்ற பட நிறுவனத்தைத் தொடங்கியிருக்கும் அவர் ஒரே நேரத்தில் மூன்று தமிழ்ப் படங்களைத் தயாரிக்க உள்ளார். இயக்குநர் ஏ.எல். விஜய்யின் "திங் பிக் ஸ்டூடியோஸ்' சார்பில் அமலாபால் தயாரிப்பில் பிரியதர்ஷன் இயக்கும் படத்தை பிரபுதேவா இணைந்து தயாரிக்கிறார். பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி இருவரும் நடிக்கின்றனர். இதைத் தொடர்ந்து "ரோமியோ ஜூலியட்' லட்சுமணன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறார். "ஜெயம்' ரவி கதாநாயகனாக நடிக்கிறார். இதையடுத்து ஐசரி கணேஷின் மகன் வருண் நடிக்க விக்டர் இயக்கும் படத்தையும் பிரபுதேவா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இவ்விரு படங்களுக்கும் டி.இமான் இசையமைக்கிறார்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், நந்திதா, தம்பி ராமையா உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் "புலி.' வைரமுத்துவின் வரிகளில் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள பாடல்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. சரித்திர காலப் பின்னணி, நிகழ் காலப் பின்னணி என இரு வேறு காலகட்டங்களை இணைக்கும் திரைக்கதையாக உருவாகியுள்ள இப்படம், விஜய் நடித்த படங்களிலேயே அதிக அளவிலான பட்ஜெட் கொண்ட படம் எனக் கூறப்படுகிறது. இதனால் படம் வெளியான மூன்றே நாள்களில் படத்தின் பட்ஜெட்டை வசூல் செய்யும் விதத்தில், இதுவரை விஜய் படங்களுக்கு இல்லாத மார்க்கெட் குறி வைக்கப்பட்டுள்ளது. இந்த முறை தமிழ் மார்க்கெட்டுடன் பிற மொழி மார்க்கெட்டையும் படக்குழு கவனத்தில் கொண்டுள்ளது. இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு 3,500 திரையரங்குகளில் "புலி' வெளியாகிறது. மிகப் பெரிய மார்க்கெட் உள்ள பாலிவுட் சினிமாக்களிலேயே ஒரு சில நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே இவ்வளவு திரையரங்குகள் நிர்ணயிக்கப்படும். இந்த வகையில் தென்னிந்திய நடிகர் ஒருவருக்கு இத்தனை திரையரங்குகளில் படம் வெளியாவது இதுவே முதல் முறை.
மக்கள் பணம் மக்களுக்கே என்ற ரீதியில் தன் வருமானத்தில் இருந்து ஒரு பங்கை மக்கள் நலனுக்காக ஒதுக்கியுள்ளார் நடிகர் ராகவ லாரன்ஸ். "முனி', "காஞ்சனா', "காஞ்சனா 2' என அடுத்தடுத்து வெளியான படங்கள் லாரன்ஸூக்கு வணிகரீதியில் பெரும் லாபத்தைப் பெற்றுத் தந்தன. கடந்த சில ஆண்டுகளில் எந்த தமிழ் சினிமாவும் ஈட்டாத பெரும் தொகையை "காஞ்சனா 2' லாபமாக ஈட்டித் தந்தது. இதையடுத்து அந்த லாபப் பங்கில் இருந்து ரூ.1 கோடியை மக்கள் நல பணிகளுக்காக ஒதுக்கியுள்ளார். அடுத்து இயக்கி நடிக்கவுள்ள "கெட்ட சிவா மொட்ட சிவா', "நாகா' படங்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட லாரன்ஸ் இந்த அறிவிப்பையும் வெளியிட்டார். அப்துல்கலாமின் நினைவாக இந்த சேவை அமைப்புக்கு "கலாமின் காலச்சுவட்டில்...' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மூலம் ஆர்வமுள்ள 100 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் கவனத்தில் சமூக நலப் பணிகள் நடைபெறவுள்ளன. இந்த சேவையின் மூலம் கிராமங்களின் முன்னேற்றம் மற்றும் மாணவர்களின் கல்வி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவுள்ளது. நலப் பணிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறை பிரபலங்களையும் சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளார் லாரன்ஸ்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் படத்தில் ஹீரோயின் உண்டா? இல்லையா? என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. மலேசியா மற்றும் சென்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் தன் வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். இந்த படத்துக்கு முதலில் நயன்தாராவிடம் பேசப்பட்டது. இருந்தும், ரஜினிக்கு ஜோடி யார்? என்பதில் மிகுந்த குழப்பம் நிலவியது. இந்நிலையில் அந்த இடத்துக்கு ராதிகா ஆப்தே தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வட இந்திய படங்களில் சர்ச்சைக்குரிய பாத்திரங்களில் நடித்துப் பிரபலமான ராதிகா ஆப்தே தமிழில் "தோனி', "அழகுராஜா' ஆகிய படங்களில் நடித்தவர். ""ரஜினியைச் சந்தித்து பேசியது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறது இந்த வாய்ப்பு'' என ராதிகா ஆப்தே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ராதிகா ஆப்தே சமீபத்தில் வெளியான "ஹண்டர்' என்ற "அடல்ட்ஸ் ஒன்லி' படத்திலும், மேலும் ஹாலிவுட் குறும்படம் படமொன்றில் சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்திருந்தார். எனினும் பல சவாலான பாத்திரங்களை துணிந்து நடிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
"சீனிகம்', "பா', "ஷமிதாப்' என தன் அடுத்தடுத்த படங்களில் இந்தியாவைக் கவனிக்க வைத்தவர் பால்கி. இந்நிலையில் அவரின் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் உலவி வந்தன. மீண்டும் அமிதாப்பை இயக்குவதற்கான வேலைகளில் உள்ளார் எனக் கூறப்பட்டது. அமிதாப் - ரஜினி இருவரையும் இணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் எனவும் பேசப்பட்டது. அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்போது ஆண் , பெண் சமம் என்பதைக் குறித்த படமாக "கி அண்ட் கா' படத்தை இயக்க இருக்கிறார். கரீனா கபூர், அர்ஜுன் கபூர் முதல் முறையாக நடிக்க இருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம். பெரிய லட்சியத்துடன் இருக்கும் மனைவி, மனைவியின் லட்சியத்தை அடைய உதவும் அன்புக் கணவன். இவர்கள் இருவரின் அறிவு சார்ந்த விஷயங்கள் ஒன்று சேர்கையில் என்ன நடக்கிறது எனபதுதான் திரைக்கதை. இந்தப் படத்துக்காக அமிதாப்பச்சன் சிறப்புத் தோற்றம் ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2016-ஆம் ஆண்டு வெளியாக உள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. பால்கியின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த இளையராஜா இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.