

"பாடம் எதுவும் படித்துக்கொள்ள விரும்பாதவர்கள்கூட விலங்குப் பண்ணையைக் கதையாக அறிந்து கொள்ளலாம். இதில் வருகிற கதாபாத்திரங்களை யாரும் அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது. மோசஸ் முதல் பில்கிங்டன் வரையில் எல்லாரையுமே நமக்குப் பூரணமாக அறிமுகம் செய்து வைக்கிறார் ஆசிரியர். கலையையும் அழகையும் காணும் இடத்தில் அனுபவிக்க வேண்டியதுதானே ரசிகர் பொறுப்பு' - என்று ஜார்ஜ் ஆர்வெல் விலங்குப் பண்ணை நாவலின் மொழிபெயர்ப்பில் 1956-ஆம் ஆண்டில் எழுதினார் க.நா.சுப்பிரமணியம்.
விலங்குப் பண்ணை ஒரு நவீன நாவல். அதாவது அது கதை சொல்லும் நாவல் இல்லை. உலகத்தில் நடந்த - நடக்கிற - நடக்கப் போகிற அரசியல் அநீதிகளை, மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அடிமைகளாக ஆக்கப்பட்டதை - அதற்கு எதிராக ஒரு குரல் எழுவதை எள்ளலுடன் சொல்லும் நாவல். மகத்தான நாவல் என்றாலும் மிகவும் சிறிய நாவல். 1945-ஆம் ஆண்டில் ஆங்கில மொழியில் வெளிவந்தது. ஆரம்பக் காலத்து பெயர் விலங்குப் பண்ணை - நாடோடிக் கதை. ஆனால் அமெரிக்கப் பதிப்பில் நாடோடிக் கதை என்பதை நீக்கிவிட்டார்கள். எனவே விலங்குப் பண்ணை என்பது நிலைத்துவிட்டது.
மக்களுக்கு உகக்காததைச் சொல்வதுதான் சுதந்திரம் என்று சொல்லிய ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய விலங்குப் பண்ணை நாவலை சிறுவர்களுக்கான நீதி சொல்லும் கதை என்றுதான் நம்பினார்கள். எனவே நாவல் விற்பனை ஆகாது என்றும் கருதினார்கள். இம்மாதிரியான விலங்குகள் பற்றிய கதையை வெளியிட முடியாது என்று ஒரு பதிப்பகம் நாவலை நிராகரித்துவிட்டது. கடைசியாக "செக்கர் அண்டு வார்பர்க்' என்ற புத்தக வெளியீட்டு நிறுவனம் துணிச்சலுடன் வெளியிட்டது.
விலங்குப் பண்ணை நாவலைப் புத்தகமாகப் படித்தவர்கள் "புதுமையான படைப்பு; சொல்லப்பட்ட கதையும் - சொல்லப் பயன்படுத்தப்பட்ட மொழியும் புதுமையாக இருக்கிறது' என்று கொண்டாடினார்கள்.
ஜார்ஜ் ஆர்வெல் 1903-ஆம் ஆண்டில் மேற்கு வங்காளம் - பிகாருக்கு இடையில் உள்ள மோதிகிரி என்ற ஊரில் பிறந்தார். அவர் இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளையர். அவர் தந்தை பிரிட்டிஷ் அரசாங்கத்தில் சுங்கத்துறையில் உயர் அதிகாரியாக இருந்தார். தன் மகனுக்குத் தரமான கல்வி அளித்து பெரிய மனிதனாக்க வேண்டும் என்று கருதினார். எனவே இளம் வயதிலேயே லண்டனுக்குப் படிக்க அனுப்பி வைத்தார். படிப்பில் அவர் அதிகமான ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும் படித்துப் பட்டம் வாங்கிக் கொண்டு இந்தியா வந்தார். போலீஸ் வேலையில் ஓர் அதிகாரியாகச் சேர்ந்தார். மியான்மரில் (பர்மா) சில ஆண்டுகள் பணியாற்றினார். தன்னால் அரசாங்கத்தில் வேலை செய்ய முடியாது என்று பட்டது. எனவே வேலையை விட்டுவிட்டார்.
பூர்வீக நகரமான லண்டன் சென்றார். சிறிய பல வேலைகள் செய்தார். சிறிது காலம் சாதாரணமான பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். வாழ்க்கை வேகமாக மாறி வருவதும், அரசியல் சர்வாதிகாரத்திற்குப் போவதும் லேசாகத் தெரிந்தது. மனித உரிமைகள், சுதந்திரம் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்தார்.
பாரீஸ் சென்று மனம் ஒத்த கலைஞர்களோடு சேர்ந்து இருந்தார். பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதினார். அரசியல், சமூக நிகழ்வுகள் அவரைத் தனிப்பட்ட முறையில் பாதித்தன. பொது நிகழ்வுகளைத் தன்னுடையதைப் போலவே கருதினார்.
ஸ்பெயின் நாட்டின் சர்வாதிகாரியை எதிர்த்து சர்வதேச எழுத்தாளர்கள், ஓவியர்கள், சிற்பிகள், பத்திரிகையாளர்கள் நேரடியாக யுத்த களத்தில் இறங்கினார்கள். முப்பத்தைந்து வயது நிரம்பிய ஜார்ஜ் ஆர்வெல் ஒரு தொண்டராகக் கலந்து கொண்டார். காயம் ஏற்பட்டது. எனவே யுத்த களத்தில் இருக்க முடியவில்லை. ஊர் திரும்பினார். சில ஆண்டுகள் பாரீஸில் வாழ்ந்தார். உலகம் முழுவதிலும் ஏற்பட்டிருந்த அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, சித்தாந்த வேறுபாடுகள் அவரை வெகுவாகப் பாதித்தன. சுதந்திரம், சர்வாதிகாரம் பற்றி தன் கருத்துகளின் அடிப்படையில் எழுத ஆரம்பித்தார். அதன் விளைவுதான் விலங்குப் பண்ணை.
விலங்குப் பண்ணை முழுக்க முழுக்க மனிதர்கள் பற்றிய நாவல். நெடுங்காலமாகப் பூமியில் வாழ்ந்து வரும் மனிதர்கள் சுதந்திரம் இழந்து அடிமைகளாக எப்படி வாழ்ந்து வருகிறார்கள் என்பதைச் சொல்வதுதான் நாவல். நகரம் என்பது வனமாகிவிடுகிறது. மனிதர்கள் விலங்குகளாக இருக்கிறார்கள். வதை
படும் வாழ்வு என்பதில் எல்லோருடைய வாழ்க்கையும் இருக்கிறது.
ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணை முழுக்க முழுக்க ஒரு பிரச்சார நாவல். தீமை என்பது எவ்வாறு சமூகத்தைப் பாதிக்கிறது என்பதுதான் அதன் அடிநாதம். ஆனால் பிரச்சாரம் என்பதை அறிந்துகொள்ள முடியாத தொனியில் எழுதியிருக்கிறார். அதுதான் நாவலை நிரந்தரமாகப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
விலங்குப் பண்ணை எழுதப்பட்டு அறுபதாண்டுகள் ஆகப் போகின்றன. பல நாடுகளிலும் பழைய சம்பிரதாய சர்வாதிகார ஆட்சியோ, சர்வாதிகாரிகளோ இல்லை. ஆனால் பல நாடுகளிலும் சர்வாதிகாரம் இருக்கிறது. சர்வாதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்கள் பல முகமூடிகள் தரித்துக் கொண்டு இருக்கிறார்கள். நெருக்கடியான நேரத்தில்தான் முகமூடி அகற்றப்படுகிறது.
மக்களைப் போலவே கயவர்கள் இருக்கிறார்களே என்று திருவள்ளுவர் பதறிக் கேட்டதுதான். சர்வாதிகாரிகள் மக்களின் பெரும் கூட்டத்தில் மக்களாகவே இருக்கிறார்கள். அதாவது எங்கெல்லாம் எளிய மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் கொடுங்கோல் சர்வாதிகாரிகள் இருக்கிறார்கள். மக்கள் எப்பொழுதும் விழிப்போடு இருக்க வேண்டும். அதை அழுத்தமாகச் சொல்வதுதான் விலங்குப் பண்ணை. அது ஒற்றை இழை நாவல் இல்லை. ஜனநாயக ஆதரவு, மக்கள் சுதந்திரம், சர்வாதிகார எதிர்ப்பு - என்று பல இழைகள் கொண்டது. அதன் ஜனநாயகக் குரலுக்காகவே தொடர்ந்து படிக்கப்பட்டு வருகிறது.
டைம்ஸ் - பத்திரிகை நூறு சிறந்த ஆங்கில மொழி நாவல்களில் ஒன்றாக விலங்குப் பண்ணையைப் பட்டியல் இட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.