1947 ஆகஸ்டு 15: ஒரு சிற்றூரில் முதல் சுதந்திரதின விழாக் கொண்டாட்டம்!

முந்தைய தஞ்சை மாவட்டத்தின் வடகோடியிலுள்ளது சிய்யாழி. மாயவரம் மாயூரம் என்றும் மயிலாடுதுறை என்றும் பெயர் மாற்றம் பெற்றதைப்போல சிய்யாழி இன்றைய சீர்காழி ஆயிற்று.
Published on
Updated on
4 min read

முந்தைய தஞ்சை மாவட்டத்தின் வடகோடியிலுள்ளது சிய்யாழி. மாயவரம் மாயூரம் என்றும் மயிலாடுதுறை என்றும் பெயர் மாற்றம் பெற்றதைப்போல சிய்யாழி இன்றைய சீர்காழி ஆயிற்று.

காவிரிப்பாசனம் பெறும் நன்செய் நிலங்கள் பசுமையாகக் காட்சியளிக்கும். ஊரின் நடுவில் பெரிய சிவன் கோயில் உள்ளது. பாடல் பெற்ற இந்த தலத்தில்தான் ஞானசம்பந்தருக்கு பார்வதி பாலூட்டிய அற்புதம் நிகழ்ந்தது. ஏறத்தாழ 100 கிராமங்கள் உள்ளடக்கியது சீர்காழி தாலுகா. ஒரு தாலுகா கச்சேரி, ஒரு முன்சீப்கோர்ட், ஒரு பஞ்சாயத்து போர்டு அலுவலகம், ஒரு சிறிய மருத்துவமனை, இரண்டு உயர்நிலைப்பள்ளிகள் ஒரு பசுமடம் (கோசாலா) ஒரு தபாலாபீஸ், ஒரு போலீஸ் ஸ்டேஷன், ஒரு ரயில்வே ஸ்டேஷன், இந்த ஊரின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றன.

1947 ஆகஸ்டு 14-அம் தேதி ஊர் பரபரப்படைந்தது. கடைவீதியிலுள்ள பஜனைமடத்திற்கு முன்னால் உயரமான கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.

அவ்வூரிலிருக்கும் சபாநாயக முதலியார் இந்து உயர்நிலைப் பள்ளியைப் பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும். தொண்டை மண்டல முதலியார் பரம்பரையில் தோன்றியவர் சபாநாயக முதலியார் (1859-1900) தானதர்மங்கள் நிறையச் செய்த அவர் வள்ளல் என்று சிறப்புப் பெற்றவர். தமது ஊரில் போதுமான கல்விக்கூடங்கள் இல்லை என்ற குறை அவர் கவனத்தை ஈர்த்தது. விளைவு : ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி தொடக்கப்பள்ளிகள் துவக்கப்பட்டன. அவ்வாறு 1896-இல் தொடங்கப்பட்ட நடுநிலைப்பள்ளி நாளடைவில் உயர்நிலைப் பள்ளியாக வளர்ச்சியடைந்தது (தற்போது அது மேல்நிலைப்பள்ளியாகத் திகழ்கிறது)

அவர் தோற்றுவித்த இந்தப் பள்ளிகள் சாதி சமயவேறுபாடின்றி அனைத்து மாணவர்களுக்கும் இடமளித்து கல்வித் தொண்டாற்றி வந்தன. அந்த உயர்நிலைப் பள்ளியில் சீர்காழி தவிர, வைத்தீஸ்வரன் கோயில், ஆனை தாண்டவபுரம், நீடூர், திருமுல்லைவாசல், அரசூர், திருமயிலாடி, கொள்ளிடம், வல்லம்படுகை, திருவெண்காடு, காவிரிப்பூம்பட்டினம், ஆக்கூர், நாங்கூர் ஆகிய சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் கால்நடையாகவும், சிலர் சைக்கிளிலும் சாப்பாடு கட்டிக் கொண்டு வந்து படித்துவிட்டுச் சென்றார்கள். இந்நாள்போல அப்போது பஸ் வசதி அதிகம் கிடையாது. தூர ஊர்களுக்கு ஒன்றிரண்டு கரியில் தீ மூட்டி ஓடக் கூடிய நீராவி எஞ்சின் பஸ்கள் தான் ஓடின. பெட்ரோல், டீசல் வண்டிகள் பிற்காலத்தில் வந்தவைதான். மேலும், கொள்ளிடம் ஆற்றுக்கு ரோடு பாலம் கிடையாது. அதனால் பல ஆண்டுகள் இப்பகுதி மக்கள் ரயிலை நம்பியே வாழ்ந்தனர். ரயில் கட்டணம் மிகவும் குறைவே.

ஆசிரியர்கள் கண்டித்துச் சொன்னபடி சுதந்திர தினத்தன்று. காலை 7.00 மணிக்கே மாணவர்கள் பள்ளி மைதானத்தில் கூடிவிட்டனர். ஏறத்தாழ மூவாயிரம் மாணவர்கள் இருப்பார்கள். இந்த விழாவுக்காக ஆசிரியர்கள் ஒரு வாரமாக மாணவர்களைத் தயார்ப்படுத்தி வந்தனர். இந்நாளைய பள்ளிகளைப்போல அப்போது மாணவர்களுக்குச் சீருடை கிடையாது. ஆசிரியர்கள் நன்றாகத் துவைக்கப்பட்ட ஆடைகளை மாணவர்கள் அணிந்து வருமாறு மிகவும் நயந்து கேட்டுக் கொண்டார்கள். அந்த அளவு பெரும்பாலான மாணவர்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஏதோ அவர்களும் ஓரளவு வெளுப்பான உடையுடன் வந்து நின்றார்கள். அவர்களை வரிசையாக நிற்க வைத்து கொடி வணக்கம் செய்வது எப்படி? என்று விளக்கினார்கள். சரியாக 8 மணிக்கு முதல் மணி அடிக்கப்பட்டது. அங்கு நிசப்தம் நிலவியது. ஒன்றிரண்டு வால் பசங்க, பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பி.டி. மாஸ்டர் தலையில் குட்டி சரியாக நிற்க வைத்தார். இரண்டாவது மணி அடித்ததும் தலைமை ஆசிரியர் மைதானத்தில் தயாராக இருந்த தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அடுத்த நிமிடம் ""வந்தே மாதரம், பாரதமாவுக்கு ஜே'' என்ற கோஷம் வானைப் பிளந்தது. அடுத்து இரண்டு மாணவிகள் "தாயின் மணிக்கொடி பாரீர்' என்ற பாரதியின் பாடலைப் பாடினர்.

அது முடிந்ததும், மாணவர் ஒவ்வொருவர் கையிலும் சூடான சர்க்கரைப் பொங்கல் தொன்னையில் வைத்துக் கொடுக்கப்பட்டது. அது கடைவீதியிலிருந்த இரண்டு ஐயர் காபி கிளப் உரிமையாளர்கள் தாமே முன்வந்து அளித்தது என்று சொன்னார்கள். வேகமாக அதை சாப்பிட்டு முடித்தவுடன் மாணவர்கள் வரிசை கலையாமல் ஊர்வலமாகப் புறப்பட்டனர்.

அந்த ஊரில் இருந்த ஓர் அச்சுக் கூடம். அதன் உரிமையாளர் ஒரு காந்தியவாதி. அவர் அச்சகத்தில் தயார் செய்து கொடுத்த பேப்பர் மூவணர்க் கொடியை உயர்த்திப் பிடித்தவாறு மாணவர்கள் உற்சாகமாக "வந்தேமாதரம்', "அல்லாகு அக்பர்', "ஜெய்ஹிந்த்', "பாரதமாதாவுக்கு ஜே', "மகாத்மாகாந்திக்கு ஜே', "ஜவஹர்லால் நேருவுக்கு ஜே', "நேதாஜி போசுக்கு ஜே', "ராஜாஜிக்கு ஜே' என்று முழக்கமிட்டவாறு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் கடைவீதி பஜனை மடத்தின் முன் வந்து நின்றது. அதற்குள் ஊர் மக்களும் பெருவாரியாக அங்கே வந்து சேர்ந்து கொண்டனர். காங்கிரஸ் தொண்டர்கள் ஊர்வலமும் அங்கு வந்து சேர்ந்தது. அதனை முன்னின்று நடத்தி வந்தவர். தியாகி எத்திராஜுலு நாயுடு என்பவர். அவர் சுதந்திர போராட்ட காலத்தில் பலமுறை சிறை வாசம் அனுபவித்தவர். காந்தியவாதி. அவரைக் கொடி ஏற்றி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். சரியாக 9.00 மணிக்கு அவர் கொடி ஏற்றவும் அங்கு கரகோஷம் அடங்க வெகுநேரம் ஆனது. பள்ளியில் பாடிய அந்த இரண்டு மாணவிகள் இங்கும் தாயின் மணிக்கொடி பாடலை மைக்முன் நின்று பாடினார்கள். அது அந்த வீதி இருகோடியிலும் எதிரொலித்தது. அங்கு ஏற்றி வைக்கப்பட்ட அந்தக் கொடி தேசியக் கொடி அல்ல, மாறாக ராட்டைச் சின்னமுள்ள காங்கிரஸ் கொடியாகும் .

அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடியை ஜவஹர்லால்நேரு அரசியல் நிர்ணய சபையில் 1947ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியாக அறிமுகப்படுத்தினார். அது 1947 ஆகஸ்டு 15-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரவேண்டியது. அந்த நிலையில் தேசியக் கொடி மக்களிடையே பிரபலமாகவில்லை. அந்தப் பகுதிகளில் சுதந்திர தினத்தன்று (கல்வி நிலையங்கள் அரசு அலுவலகங்கள் தவிர) ஏற்றப்பட்ட கொடிகள் அனைத்தும் ராட்டைச் சின்னமுள்ள காங்கிரஸ் கொடியே ஆகும் .

அந்நிய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்துப் போராட்டங்களிலும் முதன்மையாக நின்றது ராட்டைச் சின்னமுள்ள காங்கிரஸ் கொடிதான். ஆகவே, சுதந்திரம் அடைந்த பின் அதுவே வெற்றிக் கொடியாகக் கருதப்பட்டு அனைவராலும் போற்றப்பட்டது என்பதே உண்மை. ஊரில் தென்கோடியில் ஓட்டுக் கட்டிடத்தில் இயங்கும் ஒரு மருத்துவமனை இருந்தது. அதன் முகப்பில் லோக்கல் பண்டு ஆஸ்பத்திரி Local Fund Hospital. சிய்யாழி என்ற பெயர்ப் பலகை இருந்தது. தொண்டர்கள் சிலர் அதன்மேல் மூவர்ணக் கொடியை கட்டிவிட்டு, அங்கிருந்த நோயாளிகளுக்கு இனிப்பு வழங்கினர். அங்கு ஒரு பிரசவவார்டும் இருந்தது. அதற்கென ஒரு நர்ஸ், இரண்டு ஆயாக்கள் இருந்தனர். வீட்டில் கிராம மருத்துவச்சியால் முடியாத பிரசவகேஸ்கள் நர்ஸ் உதவியுடன் இந்த டாக்டரே கவனித்து நல்லபடியாக அனுப்பிவிடுவார்.

தொண்டர்கள் வண்டி வாகனங்கள், ரயில் வண்டி, மாமரக்கிளைகள் மாடி கட்டடங்கள், கோயில் கோபுரங்கள் என உயரமான இடங்களிலெல்லாம் மூவர்ணக் கொடியைக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஊரில் எங்கு திரும்பினாலும் மூவர்ணக் கொடியே காட்சியளித்தது. கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அன்னதானம் செய்யப்பட்டது.

மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடந்தது. கிறிஸ்தவ தேவாலயங்களில் நாடு சுதந்திரம் பெற்றதற்காக நன்றி பூஜைகள் செய்யப்பட்டன.

கடைவீதி மெயின்ரோடு சந்திப்பில் ஒரு மிட்டாய்க்கடை இருந்தது. அதன் உரிமையாளர் ஒரு செட்டியார். அன்று அவர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கினார்

இப்படி ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப சுதந்திர தின விழாவுக்குத் தங்கள் பங்காக ஏதேனும் செய்து மகிழ்ந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

முதல் நாளிலிருந்தே கடைகளிலும் வீடுகளிலும் உள்ள வானொலிப் பெட்டிகள் இயங்கிக் கொண்டு இருந்தன. மெட்ராஸ் மற்றும் திருச்சி வானொலி நிலையங்கள் தலைவர்கள் பேச்சை ஒலிபரப்பிக் கொண்டு இருந்தன. இந்த ஊரில் திருச்சி நிலைய நிகழ்ச்சிகள் தான் தெளிவாகக் கேட்கும். இடையிடையே "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று' என்ற பாரதியாரின் பாடலை அது ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. "நாம் இருவர்' என்ற திரைப்படத்தில் டி.கே. பட்டம்மாள் பாடிய இந்தப் பாடலுக்கு பேபி கமலா அழகாக அபிநயம் பிடித்து ஆடினார். (பின்னாளில் அவர் பரத நாட்டியத்தில் பெரும் புகழ்பெற்று, குமாரி கமலா என்று திரைப்பட நடிகையாகவும் சிறப்புற்றார்)

ரயில்வே ரோட்டில் கொடி ஏற்றம் நடந்தது. அதில் கலைக்கப்பட்ட நேதாஜியின் ஐ என் ஏ (ஐசஅ) படையிலிருந்து வந்திருந்த மூர்த்தி என்ற வீரர் கொடி ஏற்றி வைத்தார். அடுத்த சில நொடிகளில் அங்கே மறைந்திருந்த ரகசியப் போலீசார் அவரைப் பிடித்துச் சென்றனர். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக படையெடுத்து வந்த ஜ என் ஏ தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டிருந்த நேரம் அது. அதனால் போலீஸ் ஐ என் ஏ வீரர்களை வேட்டையாடி வந்தது. (பின்னர் நேரு போன்றவர்கள் டில்லி நீதி மன்றத்தில் வாதாடி அந்தச் சட்டத்தை உடைத்தார்கள்) மூர்த்தியை போலீஸ் பிடித்துச் சென்றது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது ஒன்று தான் அன்று நடந்த அசம்பாவித நிகழ்ச்சி எனலாம்.

கூரை வீடெல்லாம் மூவர்ணக் கொடியால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மக்கள் தங்கள் வறுமையையும் மறந்தவர்களாய் அன்று மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர் என்றே சொல்லவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com