மனோ திடம்

வேகும் வெயிலில் தன் பையனுடன் ஓடி ஓடி வந்து முகத்தில் வேர்வை துளிகள் சொட்ட சொட்ட செகண்ட் ஏ.சி.கோச்சில்  தன் இருக்கையில் அமர்ந்தாள் முனைவர்
மனோ திடம்

வேகும் வெயிலில் தன் பையனுடன் ஓடி ஓடி வந்து முகத்தில் வேர்வை துளிகள் சொட்ட சொட்ட செகண்ட் ஏ.சி.கோச்சில்  தன் இருக்கையில் அமர்ந்தாள் முனைவர் கமலா.  ரிசர்வேஷன் ஆபீசர் மீனாவின் கிருபையால் எமர்ஜென்சி கோட்டாவில் டிக்கெட் கன்பாஃர்ம்  ஆனது. வண்டி கிளம்பியது. பேப்பர் படிக்காலமென தினசரி பேப்பரை பேக்கிலிருந்து எடுத்தாள். அதற்குள் செல் அடித்தது.

""மேடம்  நேத்து ராத்திரி நம்ப எம்.பி.ஏ சதீஷ் ஹாஸ்டல்ல  மூணாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செஞ்சுகிட்டான்.'' எம்.ஏ., இந்தி அனில் குரல்.

""என்னாச்சுடா ...நேத்திக்கு தானே கண்ணா நான் கிளாஸ் லேர்ந்து வரும்போது நீயும் அவனும் சிரிச்சுண்டே வந்தீங்க?''ஆதங்கத்துடன் உரக்க கத்தி பேசினாள், கமலா தான் ரயிலில் இருப்பதையும் மறந்து.

""தெரியல மேடம் தான் பெயிலாகி விட்டதால், வீட்டின் வறுமை நிலைமையால் வாழ விருப்பமில்லை என எழுதி வெச்சி போயிட்டான் மேடம்''

""என்னது? லாஸ்ட் செமஸ்டர் பெயிலாயிட்டான்னு செத்துட்டானா? தாய்,தகப்பன் வயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டிட்டு போயிட்டானா? பெயிலான திரும்பி எழுதிக்கலாம். உயிர் போனால்  திரும்பி வருமா?''கோபமும் வேதனையும் நிறைந்த குரலில் கேட்டாள். ""சரி மேடம்... நான் அப்புறமா பேசறேன்''போனை வைத்து விட்டான்.                      எந்த மாநிலமாய் இருந்தால் என்ன? காலேஜ், யுனிவெர்சிட்டி மாணவ மாணவிகளின் மென்டாலிட்டி ஒன்றுதான். இந்த காலத்து பசங்களுக்கு வேகம் அதிகம். விவேகம் கம்மி. அறிவு அதிகம். ஆத்திரம் அதிகம். தோல்வியை தாங்க மாட்டாங்க. அது பரீட்சையாய் இருந்தாலென்ன, காதலாய் இருந்தால் என்ன? எதையும் யோசிச்சு தொலையாதுங்க. ""ஏன்டா ..

இவ்வளவு அரியர்ஸ் வெச்சிருக்கே, படிக்கவே மாட்டாயா ஒரு நாளைக்கு பேஸ்புக், வாட்ஸ்அப்க்காக செலவழிக்கிற நேரத்தில் உட்கார்ந்து பொறுப்பா படித்தா நல்ல மார்க் வராதா? என்று கேட்டால்,

""அட நீங்க வேற மேடம். அரியர்ஸ் இல்லாதவன் அரை மனிதன் தான் மேடம்'' என்று ஜோக்கடிச்சு சிரிப்பாங்க.

நேற்று வரை உயிருடன் இருந்த  20 வயது பையன்,  இன்று உயிருடன்  இல்லை.  வேதனையால் மனம் வலித்தது .

பனாரஸ் ஸ்டேஷனில் பையனுடன் வண்டியை விட்டு இறங்கும்போது மணி மதியம் இரண்டு. எப்பவும் போல் வண்டி தாமதம். வெயில் காய்த்து கொண்டிருந்தது. வேகாத வெய்யிலில் பிளாட்ஃபார்மிலிருந்து ஏறி இறங்கி வெளியே வருவது  அம்மா வயிற்றில் இன்னொரு முறை போயிட்டு வந்தது போல் இருந்தது. ஆனாலும் பாவம் வயதானவர்கள். எப்படி ஏறி இறங்க முடியும்? எல்லா ரயில் நிலையங்களில் எஸ்கிலேட்டர்ஸ் வெச்சு தொலைக்கக் கூடாதா? எரிச்சலுடன் நினைத்தாள். ஃப்ரீ பெய்டு ஆட்டோ ஸ்டாண்டில் பெரிய க்யூ. கவுண்டரில் ஆள் இல்லை. ""உ.பி.  என்றாலே உல்டா புல்டா (தலை-கீழ்)தான் மேடம்'' என்று கமென்ட் அடித்த மாணவன் நினைவிற்கு வந்தான். அது நிஜம் தான் என்று தோன்றியது. ஒரு மணி கழித்து  வேகாத வெயிலில் எப்படியோ பையனுடன் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தாள். ஆட்டோவிலிருந்தபடி அங்கும் இங்கும் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள் கமலா. இருபது வருஷத்தில் காசியில் எந்த மாற்றமும் இல்லை. அதே ஊழல், சாலைகளின் மேல் ஓடும் சாக்கடைகள், சாலையின் துர்ந்நாற்றத்தை வீசிக்கொண்டு இருபுறமும் கடைகளின் பக்கத்தில் நிரம்பி வழியும் கழிவறை சாக்கடைகள். சாலைகளின் மேல் மலை போல் நின்றுகொண்டு காட்சி அளிக்கும் குப்பை மேடுகள். அவற்றை மேய்ந்து கொண்டிருக்கும் பசுக்கள்.  நுழைய இடமில்லாத சிறு,சிறு வீதிகள்... பான் எச்சில்கள், துப்பல்கள்... அங்கேயே விற்கப்படும் சாப்பிடும்  பதார்த்தங்கள்...

 கெஸ்ட் ஹவுஸ் வந்து விட்டது. ஆட்டோவிற்குப் பணம் குடுத்து,ரூமுக்கு போய் பிரெஷ் ஆகி மாலையில் மகனுடன் கங்கா ஆரத்தி பார்ப்பதற்கும், அடுத்த கரை வரை செல்வதற்கும் படகை புக் செய்து கொண்டு புறப்பட்டாள் கமலா. தூய்மையான கங்கையில்  மிதந்து கொண்டிருக்கும் பிணத்தை இழுத்துக் கொண்டு அக்கறைக்கு செல்லும் நாய்கள், குப்பைதொட்டியில் போடவேண்டிய குப்பையெல்லாம் மிதந்து கொண்டிருந்தது. அது மட்டுமா? எத்தனை கழிவு நீர்? பெரிய பெரிய பைப்புகளின் வழியாக கங்கையில் கலந்து கொண்டு காட்சி அளித்தன. காசியில் உள்ள எல்லா கழிவுப் பொருள்களும் குப்பைகளும் பாதி எறிய விட்ட பிணங்களும் எல்லாம் கங்கைக்கு சமர்ப்பணம் செய்யறாங்க போலும் மக்கள். அந்தப் பகுதியிலுள்ள எந்த  வீட்டுக்கு போகணும் என்றாலும், கட்டாயம் மூக்கை மூடிக்கொண்டு தான் செல்ல வேண்டும். எந்த வீடானாலும் இதே நிலைமை தான். எத்தனை மொழி பேசும் எத்தனை பேர் இங்கு வருகிறார்கள்? என நினைத்தாள் கமலா.

 தாய்க்கு ஆறாவது மாத திவசத்தை தனது பையன் கையால் செய்து முடித்துவிட்டு அவள் வரும் போது அவள் சந்தித்த சமையல்கார மாமி வெங்கட ரமணம்மா, சுமார் ஐம்பது வயது இருக்கும். குள்ளமாக, சிவப்பாக, புன்சிரிப்புடன் ஒரு கருப்பு ஸ்டிக்கர் பொட்டுடன், இரண்டு ரோல்ட் கோல்ட் வளையல்கள், ஒரு சிவப்பு பாசிமணி மாலையுடன் தெலுங்கு, தமிழ், இந்தி, மராட்டி, பெங்காலி என பல மொழிகள் பேசும் அவரை வியப்புடன் ஏறிட்டாள் கமலா.

""அதேன்டி மாமி,இன்னி பாஷலு இந்த பாகா மாட்லாடுதுன்னாறு.......எலா (என்ன மாமி ...இத்தனை மொழிகளை இவ்வளவு நல்லா பேசறீங்க எப்படி?) அந்தம்மாவின் தாய் மொழி தெலுங்கில் கேட்டாள் கமலா. மாமி சிரித்தபடி, ""ஆமாண்டா.. இங்க வந்து முப்பது வருஷங்கள் தாண்டி விட்டன, நான் கிழக்கு கோதாவரி மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவள். இங்கு வந்து எல்லா சமையல்களுடன் எல்லா மொழியும் தானாக என் கூட ஒட்டிக்கொண்டு  விட்டது'' என அன்போடு  தூய தமிழில்  பதிலளித்தாள்.

""அப்ப உங்க குடும்பம்? '' கேள்விக்குறியுடன் பார்த்தாள் மாமியை. நானும், இந்த காசி விஸ்வநாதனும் தான். ஒரு வாடகை வீட்டில் நாலு பேரு வீட்டில் இப்படி சமைத்தபடி  காலத்தை ஓட்டறேன்'' என்றாள் திடமாக மாமி.

""நீ கேட்பேன்... என்றால் என்னை பற்றி சொல்வேன்'' என்றாள் மாமி.

""சொல்லுங்கள் மாமி'' என்றாள் ஆவலுடன் கமலா.

""அப்ப  எங்க அம்மாவுக்கு எழுத ஒரு கதை ப்ரீயா கிடைக்குது'' என்று சொல்லிக் கொண்டு கண்ணடித்துச் சிரித்தான் கமலாவின் பையன் கண்ணன்.

 மாமி தன் பழைய நினைவுகளைச்  சொல்லத் தொடங்கினாள்.

***

""எனக்கு அப்போது பதின்மூன்று வயதிருக்கும். திருமணம் என்றால் என்ன? என்றுகூட தெரியாத வயதில் என் தாயை எதிர்த்து பிடிவாதமாய் என் அத்தை பையனுக்கு என்னை கல்யாணம் பண்ணி அவங்க ஊருக்கு அனுப்பி வைத்தார் எங்க அப்பா. என் கணவன் ஒரு குடிகாரன்,சோம்பேறி. தினமும் குடித்து விட்டு வந்து என்னை அடிப்பான், உதைப்பான். ஊரில் எவளையோ வைத்திருக்கிறானாம். நான் அத்தையிடம் இது பற்றி கேட்டதற்கு கல்யாணம். ஆனால் திருந்துவான் என நினைத்தேன் என்றாள் சர்வ சாதாரணமாய். கல்யாணம் ஆன கையுடன் குண்டூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீட்டிற்கு கூட்டி சென்றாள் அத்தை. அந்த வீட்டிற்கு அருகில்  வீடுகள் கூட கிடையாது. என் அத்தை கோயில், குளம் என்றோ உறவுக்கார வீட்டில் விசேஷம் என்றோ எப்போதும் வெளியே சென்று விடுவாள். எனக்கு தெலுங்கு மொழியும், ஒரு தென்னை மரம், ஒரு கிணறும் தான் நண்பர்கள். காலையில் போனால் எப்போதோ இரவு நேரத்தில் போதையில் வீடு திரும்புவான் கணவன். வீட்டில் அரிசி பருப்பு கூட சரியாக வாங்கி போட மாட்டான் .

தான் ஓட்டலில் சாப்பிட்டு வந்து விடுவான். பலநாள் நான் பசியுடன் தூங்கி இருக்கிறேன். எனக்கு நேரேயே ஹோட்டலில் வாங்கி வந்ததை எனக்கு  தராமல் சாப்பிடுவான். இப்படி மூன்று வருஷங்கள் ஓடி விட்டது. ஒரு நாள் நான் மயங்கிவிழுந்தேன். கண் திறந்து பார்த்தபோது, ""உன் பெண்டாட்டி முழுகாம இருக்கா... ஜாக்கிரதையாய் பார்த்து கொள்'' என்று யாரோ ஒரு கிழவி சொல்லிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது. மாதங்கள் செல்லச் செல்ல எனக்குப் பலவீனம் அதிகமாயிற்று. சாப்பாடு வேற சரியாய் கிடைக்காதா. அடிக்கடி தலை சுற்றி மயங்கி விழுவேன். கல்யாணத்திற்கு அப்புறம் எங்க அப்பா,அம்மா எட்டி கூட பாக்கல. ஆனா அம்மா மட்டும் வாரத்திற்கு ஒரூ கடுதாசு போடுவாங்க. நான் எழுதற பதிலை அவன் படித்து விட்டுத்தான் போஸ்ட் செய்வான். நான் உண்டான விஷயத்தை  சொல்லி கட்டாயம் அம்மாவை வரச்சொல்லி எழுதி இருந்தேன். அதை என் முன்னாலேயே கிழித்து எறிந்து விட்டான் அந்த பாவி... என்னை வீட்டில் வைத்து பூட்டி செல்வான். தண்ணி தவிர எதுவும் இருக்காது. காசைக் கண்ணால் பார்த்தது கூட கிடையாது. ஒரு நாள் எதேச்சயாக என் அக்கா அத்திம்பேருடன் பாக்க தேடி வந்தாள். அக்காவை ஜன்னல் வழியாக பார்த்து கதறினேன்.

""என்னடீ. இது நீ உள்ளே இருக்கே,வெளியே பூட்டு போட்டு இருக்கு'' என்றாள் பதட்டத்துடன். ஒரு கைதியை போல் ஜன்னல் கம்பியை பிடித்துக்கொண்டு என்னை பற்றி எல்லாத்தையும் அழுதுகொண்டே சொன்னேன் நான்.

""அக்கா ...எனக்கு பசிக்குது சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு'' என்றேன்.

 ""தண்ணீர் மட்டும்தான் தருவான்''என்றேன் கண்களில் கண்ணீர் மல்க. உடனே  அக்கா தான் வாங்கி வந்திருந்த பழங்களை குடுத்து பசியைத் தீர்த்தாள். ராத்திரி எப்பவும் போல் குடித்துவிட்டு தள்ளாடிண்டு வந்தான் என் கணவன். அவனைப் பார்த்தவுடன் கோபம் தாங்காமல் அவன் கன்னத்தில் "பளார்' என ஓர் அறை குடுத்து சாவியைப் பிடுங்கி கதவை திறந்தார், என் அத்திம்பேர். மறுநாளே அக்கா அத்திம்பேருடன் அனந்தப்பூர் சென்றுவிட்டேன். எனக்கு அம்மா, அப்பா, தெய்வம் அப்போது அவர்கள் தான். அவர்களின் 2 குழந்தைகள், எனக்குப் பிறந்த ஒரு பெண் குழந்தையுடன் அவர்கள் வீட்டில் இருந்தேன். நாலு வருஷங்கள் ஓடின.  அப்பா  இறந்தவுடன் மன்னி படுத்தல் தாங்க முடியாமல் அம்மாவும் அக்காவிடம் வந்துவிட்டாங்க. அத்திம்பேரின் ஒரு சம்பளம், நாங்களோ ஏழு பேர். சின்ன வாடகை வீடு . வீட்டு  செலவுகளைச் சமாளிக்க நானும் அம்மாவும் மெதுவாக அக்கம் பக்கத்துக்கு சமையல் பண்ணி தருவது, ஊறுகாய்கள், ரக ரகமான பொடிகள், பருப்புபொடி, மிளகாய்பொடி என ஆரம்பித்து, கடைகளில் தந்து விற்க ஆரம்பித்தோம். பண வரவும் அமோகம். இரண்டு வருடம் நன்றாகதான் ஓடின. ஆனால் விதி என்னைத் திருப்பி திருப்பி துரத்தி கொண்டேதான் இருந்தது. தங்கமான எங்க அத்திம்பேர் பேரில் எவனோ பாவி பொய்க் கணக்கு காண்பித்து அவரை வேலையை விட்டு விலக்கச் செய்தான். நாங்களோ ஏழு பேர்... என்ன செய்வது? என்று தெரியாமல் வீடு காலி செய்து விட்டு இருக்கற சாமான்களை வித்து ஐந்தே மூட்டையுடன் ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு விரக்தியுடன் காசி வந்து சேர்ந்தோம்.

காசி வந்தவுடன் மனதில் அச்சம். ஊர் புதிது. மொழி வேறு. நமக்கென யாரும் கிடையாது விஸ்வநாதனைத் தவிர. யாரோ ரயில் நிலையத்தில் சொன்னாங்க. ""ஹரிச்சந்திரா  க்ஹாட்டில் (எட்ஹற்) போய் விசாரியுங்கள், அங்கே ராம பிரம்மா கனபாடிகள் என்று ஒருவர் இருக்கிறார். அவர் நல்லவர். பாருங்கள்... அந்த பெரியவர் நேற்று உன் தாய் காரியங்களை செய்து குடுத்தாரே அவர் தான்'' என மாமி தொடர்ந்தாள்.

நாங்களும் அங்கு சென்று அவரை விசாரித்து கொண்டிருக்கும்போதே,ஒரு பெரியவர் ""உங்களில் யாருக்கானு நல்லா சமைக்க தெரியுமா? எங்களுக்கொரு சமையல்காரம்மா வேணும்'' என தூய தெலுங்கில் கேட்டார். அதற்கு நான் ""நேனு வண்ட சேஸ்தானண்டி.. முந்து மாகு உண்டே தானிக்கி காஸ்த சோடு இப்பிஞ்சண்டி (நான் சமையல் செய்வேன், முதல்ல எங்களுக்கு தங்க ஒரு இடம் தாங்கள்)'' என்று சொல்லி கண்ணீருடன் கை கூப்பினேன்.

அதற்கு அவர், ""அதற்கு ஏம்மா வருத்தபடறே? என் வீட்டு மாடியில் ஒரு சின்ன போர்ஷன் காலியாத்தான் இருக்கு, முடிந்தால் மெஸ் வைத்து ஒட்டுங்கள்,மத்ததை அந்த விஸ்வநாதன் பாத்துப்பான்'' என்றார் அன்பாக.

தன் மனைவி சீதாலட்சுமியை அழைத்து எங்களைப் பற்றி சொன்னார். அவரும் புன்முறுவலுடன் சம்மதித்தார். எங்களுக்குள் ஓர் இனம் புரியாத ஆனந்தம். அவரும், அவர் மனைவியையும் அந்த ஆதி தம்பதிகளாய் நினைத்து குடி ஏறினோம். அவர்கள் வீட்டு மேலே எங்கள் குழந்தைகள், கீழே அவர்களின் குழந்தைகள் ஒரே குடும்பம் போல் படித்து வளர்ந்தாங்க. பண வரவு அதிகரித்தது. எங்க அக்காவுடைய ரெண்டு பையன்களும்  பெரிய படிப்பு முடிச்சிட்டு, ஹைதராபாதில் நல்ல வேலையில் செட்டில் ஆயிட்டாங்க. என் மகளுக்கு அக்காவே ஒரு நல்ல பையனை பார்த்து கல்யாணத்தை முடித்து ஹைதராபாத்லேயே தங்க வைத்து விட்டாள். அக்கா அங்கே வரச் சொல்லி  ரொம்ப கேட்டாள். நான் தான் மறுத்து விட்டேன்,இனியும் அவளுக்கு பாரமாய் இருக்க வேண்டாம் என்று.

காசியில் நானும்,என் வயதான தாயும் தங்கி விட்டோம். இப்ப ஒரு வேளை சமைத்தால் ஐநூறு  ரூபாய், அப்ப முன்னூறு, மூன்று வேளை சமைப்பேன். எங்க ரெண்டு பேருக்கும் அதே அதிகம். இரண்டு வருடம் முன்னாலே தான் அம்மா என்பது வயதில் இறந்தாள். அக்கா பையன்தான் இந்த கங்கைக்கரையில் எல்லா காரியமும் செய்தான். இப்போது மிஞ்சியது நானும் விஸ்வநாதனும் தான். எல்லா மக்களோட பழகி அந்தந்த மாநில சமையல்களை கற்றுக்கொண்டேன். சமையல்களுடன் மொழிகளும் சேர்ந்து என்கூட ஒட்டிகொண்டன'' என தன் கதையைச் சொல்லி முடித்தாள் மாமி சிரித்தபடி.

""அப்ப உங்க கணவர்?'' ... கமலா   கேட்டாள் ஆர்வத்துடன்.

""எட்டு வருஷம் முன்னாலே இறந்துட்டார்ன்னு  செய்தி வந்தது. அக்காவும்,அத்திம்பேரும் போயிட்டு வந்தாங்க,சொந்தமாச்சே'' ...என்றாள் மாமி.

""அப்ப  நீங்க?''  கேட்டாள் கமலா.

""இல்லை, நான் போகலை. என் மகள், தன்  முகம்கூட பாக்க வராத அப்பாவை பார்க்க இஷ்டமில்லை'' என்று பிடிவாதமாய் சொல்லிவிட்டாள். எந்த உறவானாலும் நாம் பழகும் அன்பினால் மென்மைபட்டு கொடியை போல் படரும். அதைத் தூக்கி எறிந்துவிட்டால் மன கசப்பினால் ஒட்டாது'' என்றாள் மாமி. கமலா யோசித்தாள் மனைவியை பட்டினி போட்டவன் இன்று உயிருடன் இல்லை. அந்த மனைவியோ இன்று தன் கையால் பத்து பேருக்குச் சமைத்து,சாப்பாடு போட்டு பசியை தீர்க்கிறாள். என்ன இறைவனின் லீலைகள். மாமி கையில் ஓர் புது புடவையையும், நூறு ரூபாயையும் தந்து வணங்கி விடை பெற்றாள் கமலா.

ஐம்பது வயது ரமணம்மா மாமி தன் வாழ்க்கையின் வருத்தங்கள் சொல்லும்போது ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தவில்லை. எவ்வளவு தன்னம்பிக்கை, மனோதிடம். அவங்களுக்கு  இருக்கும் தைரியம், வாழ்க்கையின் மீதுள்ள தளராத நம்பிக்கை, உழைப்பு ஆர்வம், தன்னம்பிக்கை, மனோதிடம், சுறுசுறுப்பு, சிரித்த முகம்... இந்த காலத்தின் படித்த இளைய தலைமுறைக்கு ஏன் இல்லாமல் போய் விட்டது? உயிர் இருந்தால் உப்பு விற்று பிழைக்கலாம் என்பார்களே  தேர்வுகளில் பெயிலானால், காதலில் தோல்வி அடைந்தால் உடனே  கோழைகளாய் தற்கொலை பண்ணிக்கொண்டு தாய் தந்தையின் வயிற்றில் நெருப்பை ஏன் அள்ளி கொட்டுகிறார்கள்? வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கே என்று நினைத்து தானும் சந்தோஷமாய் இருந்து மற்றவர்களையும் ஏன் சந்தோஷப்படுத்த மாட்டேன் என்கிறார்கள். வேதைனையுடன் கமலாவின் மனதில் பல கேள்விகள் எழுந்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com