தமிழ்ச் சிறுகதைகள் உலகத் தரமானவை!

1953 ஆம் ஆண்டிலிருந்து எழுதிவரும் ஆ.மாதவன், நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தமிழ்ச் சிறுகதைகள் உலகத் தரமானவை!

1953 ஆம் ஆண்டிலிருந்து எழுதிவரும் ஆ.மாதவன், நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். வசிப்பதோ திருவனந்தபுரத்தில். அமைதியானவர். எந்த அமைப்பையும் சாராதவர். தனித்துவமான எழுத்துக்குச் சொந்தக்காரர்.

2013 இல் வெளிவந்த அவருடைய "இலக்கியச் சுவடுகள்' என்ற திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூலுக்கு தற்போது சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டிருக்கிறது.

பள்ளி இறுதிவரை மலையாளக் கல்வி பயின்ற தங்களுக்குத் தமிழ் இலக்கியத்தில் நாட்டம் ஏற்பட்டது எப்படி?

ஏழாவது, எட்டாவது படிக்கும் பள்ளி நாட்களிலேயே, தகழி கேசவதேவ் போன்றவர்களை பள்ளி நூலகம் வாயிலாக அறிய வாய்ப்பு ஏற்பட்டது. வீட்டில் அன்றைய தினங்களில் வாங்கும் விகடன் உள்ளிட்ட சஞ்சிகைகளின் வேடிக்கைத் துணுக்குகளைப் படித்தறிந்து தந்தையாரின் தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களைத் தொட்டுப் பார்க்க ஆர்வம் முனைந்தது.

அந்த ஆர்வத் துடிப்புதான் தமிழ் பாலர் கதைகளில் தொடங்கி தேவன், லக்ஷ்மி போன்றவர்களின் படைப்புகளின் தொடர் இலக்கியங்களைப் படிப்பதாக வளர்ந்தது. தேவனின் "துப்பறியும் சாம்பு'வெல்லாம் அந்த நாளில் புல்லரிப்பைத் தந்த அனுபவமாகவும், அந்தப் புல்லரிப்பே புதுமைப்பித்தன் வரை எட்டிப் பார்க்க உதவியாகவும் இருந்தது.

விகடன் வழி தேவனையும், லக்ஷ்மியையும் படித்த நீங்கள் புதுமைப்பித்தனை எப்படிக் கண்டுகொண்டீர்கள்?

அன்று புதுமைப்பித்தனையும் தொ.மு.சி.ரகுநாதனையும் வல்லிக்கண்ணனையும், அழகிரிசாமியையும் நண்பர்களாகக் கொண்ட எஸ்.சிதம்பரம் என்ற இலக்கிய ஆர்வலர் திருவனந்தபுரத்தில் இருந்தார். அவரும் ஒரு வணிகப் பெருமகனின் ஒரே மகன்தான். தமிழ் இலக்கியத்திலும், ஆங்கில இலக்கியத்திலும் பரந்த ஈடுபாடு கொண்ட அவர் தமிழில் "கவிக்குயில்' என்ற சஞ்சிகை நடத்தி வந்தார்.

அப்போதெல்லாம் அழகிய உயரிய முறையில் "தீபாவளி மலர்' வெளியிட்ட "ஆனந்த விகடன்' போன்ற இதழ்களுக்குப் போட்டியாக அதே மாதிரி வண்ணப் பொலிவுடன் "கவிக்குயில்' தீபாவளி மலர் ஒன்றினை வெளியிட்டார். அதில்தான் புதுமைப்பித்தனின் - "வேளூர் வே.கந்தசாமிக் கவிராயர்' என்னும் புனைபெயரில் - ""காளான் குடை நிழலில் கரப்பான் அரசிருக்க, வேளாண் கடியூரில் வெள்ளெருக்கு முட்டருகே'' எனத் தொடங்கும் "மாகாவியம்' என்ற கவிதை வெளிவந்தது. அதனைப் பல நூறு முறைகள் படித்த அனுபவம் இன்றும் மறந்து விடவில்லை.

புதுமைப்பித்தனின் துணைவியர் கமலா விருத்தாசலமும், சிதம்பரமும் திருவனந்தபுரத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள். அங்கு வரும் புதுமைப்பித்தன் அவர்களை ஒரு தரம் நண்பர் சிதம்பரம் எனக்கு இனங்காட்டினார். அந்தக் காலத்தில் "கலைமகளில்' புதுமைப்பித்தன் எழுதிய "காஞ்சனை' என்ற சிறுகதைதான் நான் படித்த முதல் கதை என்று ஞாபகம்.

தொடர்ந்து ரகுநாதன், அழகிரிசாமி, ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., குறிப்பாக, தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம் போன்றவரின் சிருஷ்டிகள் எனது இலக்கிய ஆர்வத்துக்குப் பெரிதும் தீனி போட்டன.

ஒரு படிப்பாளியாக இருந்த நீங்கள் ஒரு படைப்பாளியாக எப்போது மாறினீர்கள்?

மலையாளம், தமிழ் இரண்டு மொழி இலக்கியங்களையும் படித்த வேகத்தில் எழுத வேண்டுமென்ற ஆர்வம் அந்த நாளிலேயே எழுந்தது. அன்றைக்குத் தமிழில் அரு.இராமநாதன் நடத்தி வந்த "காதல்' என்ற மாத இதழ் இளைஞர் வட்டாரத்தில் ஒரு புதிய எழுச்சியை வளர்த்திருந்தது.

ஒரு வகையில் "காதல்' பத்திரிகையில் நான் ஏனோ தானோ என்று எழுதிய கேள்விதான் அச்சில் வந்த எனது முதல் எழுத்து என்று நினைக்கிறேன் (சிரிக்கிறார்). தொடர்ந்து, மலையாள, தமிழ் இலக்கியங்களைப் படித்த ஆர்வத்தில் பிரெஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியூகோ எழுதி மலையாளத்தில் வெளிவந்த ஒரு குறுநாவலைத் தமிழில் மொழி பெயர்த்தேன்.

1953 வாக்கில் "சிறுகதை' என்ற மாத ஏட்டில் அந்தக் குறுநாவல் தொடரோவியமாக வெளிவந்தது. இதுதான் முதன் முதலில் அச்சேறிய எனது படைப்பு. அன்று, என் சகோதரர்கள் உட்பட நண்பர்களெல்லாம் ""காப்பியடித்த கதை வந்திருக்கிறதே'' என்று "ஓஹோ'வெனப் பரிகாசம் செய்தனர்.

மலையாளத்திலும் தமிழிலும் புதிய எழுத்துக்களையே அணுகி வந்த நீங்கள் எவ்வாறு "திராவிடன்', "போர் வாள்', "முரசொலி', "முத்தாரம்', "தென்றல்', "கதிர்' போன்ற திராவிட இயக்கச் சஞ்சிகைகளில் எழுதப் புகுந்தீர்கள்?

தமிழகத்தில் அலை வீசத் திரண்டெழுந்த பகுத்தறிவு இயக்கத்தின் ஜுவாலையாக 1949-இல் அறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாயிற்று. தமிழ் மண்ணில் உதித்த அந்தச் சுடர்க் கிரணங்கள் மலையாளக் கரையோரம் இங்கே வாழ்ந்த தமிழரிடையேயும் வந்து தழுவிற்று.

அதன் பயனாக "பொன்னி', "முரசொலி', "திராவிடன்' போன்ற சஞ்சிகைகளும், தொடர்ந்து வந்த "ரோமபுரி ராணிகள்', "துளிவிஷம்', "கண்ணீர்க் கோட்டை' என்றெல்லாம் அவர்களது புத்தக வெளியீடுகளும் எனக்குள் வேறு பல ஒளிப் பொறிகளைச் சிதறவிட்டன. அதன் பயனாக என்.வி.நடராஜன் நடத்தி வந்த "திராவிட'னின் பொங்கல் மலர் ஒன்றில் "பூவும் காயுமான சில நினைவுகள்' என்ற ஓர் எழுத்தோவியம் வெளிவந்தது.

தொடர்ந்து "முரசொலி', "தென்றல்' பொங்கல் மலர்களிலும் "முல்லை', "முத்தாரம்' போன்ற இலக்கிய இதழ்களிலும் அந்த நாளில் நிறையவே கதைகள் எழுதினேன். அதனை ஓர் இலக்கியக் கட்டுரையில் வண்ணநிலவன், ""முத்தாரம் இதழ்களில் மாதவன்கூட எழுதியிருக்கிறார்'' என்று வியப்போடு குறிப்பிட்டிருந்தார்.

திராவிட இயக்கத் தொடர்புகளிலிருந்து இன்று தாங்கள் குறிப்பிடும் நவீனப் படைப்பிலக்கியத் துறைக்கு எப்படி வர முடிந்தது?

அந்த நாளில் கிடைத்த ரஷ்ய பிரெஞ்சு இலக்கியப் படைப்புகள் குறிப்பாக செக்கோவ், டால்ஸ்டாய், தாஸ்தோயேவ்ஸ்கி, மாக்சிம்கார்க்கி, ஷோலகோவ் போன்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் "போரும் சமாதானமும்', "எனது பல்கலைக்கழகங்கள்', "கன்னி நிலம்', "டான் அமைதியாக ஓடுகிறது', "வீழ்ச்சி', "அன்னகரீனினா' போன்ற ரஷ்ய இலக்கியங்களும், மாப்பசான், பால்சாக், விக்டர் ஹியூகோ, வால்டேர், பாஸ்பர் மெரிமே போன்றோரின் பிரெஞ்சுப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளும், க.நா.சு.வின் அரிய அயல்நாட்டு மொழிபெயர்ப்புகளுமாக நிறையப் படித்தறிய முடிந்தது.

தொடர்ந்து மலையாளத்தின் உருபு, தகழி, கேசவதேவ், பொற்றேகாட், ஏ.பாலகிருஷ்ணபிள்ளை போன்றோரின் படைப்புகள் எல்லாம் கூட எனக்குள் ஓர் அபரிமிதமான இலக்கிய ஆர்வத்தையும் தெளிவையும் ஏற்படுத்தின. அன்றெல்லாம் எழுதும் ஆர்வத்தைவிட நிறையப் படிக்கும் வாசகனாகவே இருந்தேன். நிறையப் புஸ்தகங்கள் வாங்கினேன். இன்றும் வாங்கிக் கொண்டே இருக்கிறேன்.

அந்த முனைப்புத் தந்த வேகத்தின் அடையாளமாக வெளிவந்ததுதான் நா.பா.வின் "தீபம்' (1966 ஏப்ரல்) இதழில் நான் எழுதிய "பாச்சி' என்ற சிறுகதை. கடைத் தெருக்கதைகளின் கண்ணி இதுதான்.

எப்படிக் "கடைத் தெருக்கதைகள்'?

சொல்கிறேன். தி.க.சி. பொறுப்பில் "தாமரை' வெளிவந்து கொண்டிருந்த காலம். நான் வாழ்ந்து கொண்டிருக்கும் சாலை வட்டாரத்தில் அகண்டாகாரமான கடைத்தெரு உலகம். தமிழும், மலையாளமும் கலந்த பிரம்மாண்ட வணிக உலகம்.

இதில் வியாபார நிமித்தமாக அழுத்தமாக ஸ்தாபிதமாகிப் போன எனக்குக் கடைத் தெருவில் ஒவ்வொரு மனிதர்களும் சலனங்களும் மனதில் படிந்து போயின. அந்தக் கடைத்தெருவில் ஏகபோக அடாவடி வாழ்க்கை வாழ்ந்த "பட்டாணி' என்பவனின் கதைதான் "எட்டாவது நாள்' என்ற எனது முதல் குறுநாவல்.

ஏறத்தாழ நாற்பது பக்கங்களுக்கு மேல் வந்த இந்தக் குறுநாவல் "தாமரை'யின் ஒரு சிறப்பிதழில் வெளிவந்தது. அதன்போது தி.க.சி. எழுதிய ஒரு கடிதம் இப்போதும் நன்றாக எனக்கு நினைவிருக்கிறது.

அதில் ஒரு வாசகம், ""தமிழும் மலையாளமும் கலந்த இந்த மணிப்பிரவாள இலக்கிய சிருஷ்டியை அச்சுக்கோத்த எங்கள் அச்சகப் பணியாளர்கள் அர்த்தம் தெரியாமல் திண்டாடினார்கள்; இருந்தாலும் இந்த எங்கள் சாலைக்கடை தமிழ் மொழி பாணிக்கு வாசகர்களிடையே நிரம்பவும் வரவேற்பு இருந்த''தென்று தி.க.சி. வாசகர் கடிதங்களையும் அனுப்பி வைத்திருந்தார். தொடர்ந்து "காளை' குறுநாவலும், மற்ற கதைகளும் "தீபம்', "கணையாழி', "தாமரை' போன்ற பத்திரிகைகளில் வெளி வந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே!

உங்கள் முதல் நாவல்கூட "சாலை' பரிபாஷையில்தானே இருந்தது?

ஆமாம். அது, "புனலும் மணலும்' கதைக்களம். சற்று மாறுபாடான மலையாளத் தமிழ் பேசும் சாலை வட்டாரத்திற்கு சுற்றுப்புறங்களான ஆற்றோர வட்டாரங்களையும், பசுமை வெளிகளையும் கொண்டிருந்தது.

இந்த வட்டார வழக்கு முறையில் உங்களுக்கு முன்னோடியாக யாரை நினைக்கிறீர்கள்?

வட்டார வழக்கு முறையில் நாவல் எழுதி வெற்றி கண்டிருந்த கொங்குச்சீமை இலக்கிய மேதை ஆர்.சண்முகசுந்தரம் எனக்கு முன்னோடியாக இருந்தாலும்கூட, உண்மையிலேயே நான் சாலைக் கடைத் தெரு மொழி வழக்கை என் எழுத்துக்களில் கையாள்வதற்கு அவை ஒரு தூண்டுகோலாக இருந்ததே இல்லை.

"புனலும் மணலும்' நாவல் உருப்பெற்ற பிறகுதான் "நாமும் இந்த வழியில் அல்லவா வந்து கொண்டிருக்கிறோம்' என்ற தெளிவு ஏற்பட்டது. இந்த மலையாளத் தமிழ்ச் சீமை வழக்கை என் மனதில் தொட்டு வைத்தது - ஒருவேளை ஹெப்சிபா ஜேசுதாசனின் "புத்தம் வீடு' ஆக இருக்கலாம் என்று இப்போது நினைக்கிறேன்.

நீங்கள் 1953-ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறீர்கள். இதுவரை எத்தனை சிறுகதைகள் படைத்திருப்பீர்கள்?

ஆரம்ப நாட்களில் சகட்டுமேனியாக நிறையச் சிறுகதைகள்தான் எழுதினேன். ஐந்நூறு என்றெல்லாம் எண்ணிக்கையில் சொல்லலாம். இந்த அளவில் நாற்பதுக்கு மேற்பட்ட சஞ்சிகைகளில் எழுதியிருக்கிறேன்.

உங்கள் கைவந்த கலை - நாவலா? சிறுகதையா?

சிறுகதை என்றுதான் சொல்வேன். ஆரம்ப நாட்களில் "சிறுகதைச் செல்வர்', "சின்ன ஜானகிராமன்' என்றெல்லாம் கூடப் பட்டம் சூட்டி மதிப்பு மகுடமிட்டே குறிப்பிட்டார்கள். அதெல்லாம் ஒருவித நையாண்டி என்றுகூட நினைக்கிறேன்.

மலையாளத்திலும் இலக்கிய அறிவும் தமிழுக்குச் சமமாகப் பெற்ற நீங்கள் தமிழ்ச் சிறுகதையைப் பொறுத்தமட்டில் படைப்புலகம் எங்கே இருக்கிறது, சொல்லுங்களேன்?

நிச்சயமாக. நான் பரிச்சயம் கொண்ட இந்தியாவின் இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளோடு ஒப்பிடும்போது தமிழ்ச் சிறுகதை - இலக்கியத்தில், உலகத்தர வரிசையிலேயே முன் நிற்கத் தகுதி கொண்டது. நாற்பதுகளின் நடுநாயகமான புதுமைப்பித்தன் போல சிறுகதை நுட்பம் படைத்தவர் இன்றைய அளவிலும் மற்ற மொழிகளிலும்கூட வேறு யாருமில்லை.

தமிழில் லா.ச.ரா., தி.ஜானகிராமன், பி.எஸ்.ராமையா, ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா.ரகுநாதன், அகிலன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, சுஜாதா, வல்லிக்கண்ணன், கி.ராஜநாராயணன், பா.செயப்பிரகாசம், விட்டல்ராவ், பூமணி, வண்ணநிலவன், வண்ணதாசன், பொன்னீலன், ஆதவன், அசோகமித்ரன், நாஞ்சில்நாடன், நீல.பத்மநாபன், சா.கந்தசாமி, பாவண்ணன், சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் என்றெல்லாம் தனி ஆளுமை கொண்டவர்கள் இருக்கிறார்கள். சட்டென்று நினைவு வராத அளவிற்கு இன்னும் கூடச் சொல்லலாம். இந்த அளவு தனித்தன்மை கொண்ட ஒரு பட்டியலை மலையாளச் சிறுகதை இலக்கியத்திலிருந்து சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்.

நெல்லை சு.முத்துவுக்கு அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com