ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: புளியின் மருத்துவ குணங்கள்!

நாக்கில் உள்ள சுவை கோளங்களின் அயர்வை நீக்கி சுறுசுறுப்பூட்டி உணவிற்கு சுவை கூட்டுதல் - வாயில் குழகுழப்பும்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: புளியின் மருத்துவ குணங்கள்!
Updated on
2 min read

உணவில் புளி சேர்ப்பதன் முக்கிய நோக்கமென்ன?

-கே.கீதா, ஒண்டிப்புதூர் - கோவை.

1. நாக்கில் உள்ள சுவை கோளங்களின் அயர்வை நீக்கி சுறுசுறுப்பூட்டி உணவிற்கு சுவை கூட்டுதல் - வாயில் குழகுழப்பும் நாக்கில் தடிப்புமாகப் போர்வையிடுதலும் இருக்கும்போது சற்று புளி தூக்கலான உணவு இதமாயிருக்கும். நாக்கில் உமிழ்நீர் ஊறுவது கபத்தாலோ அஜீரணத்தாலோ அடைபட்டு நாவறட்சி ஏற்படும்போது வாயில் உமிழ்நீர்க் கசிவை அதிகப்படுத்தி வறட்சியைப் போக்கும். வயிற்றில் பித்தப் புளிப்பு மிகுந்தோ, புண் ஏற்பட்டோ, வாயில் பொது வேக்காளம் அல்லது நாக்கு எகிறு உதடு கன்னம் கடைவாய் இவைகளில் குழிப்புண் ஏற்பட்டுள்ளபோதும், நாக்கில் எப்போதும் உமிழ்நீர்க் கசிவு மிகுந்துள்ள நிலையிலும் புளி மிகவும் குறைந்துள்ள அல்லது புளி நீக்கிய உணவே ஏற்றது. துவர்ப்பும் கசப்பும் மிக்க உணவு இந்நிலையில் உதவலாம்.

2. இரைப்பையிலுள்ள ஜீரணத் திரவங்களுக்கு சக்தி ஊட்டல்  வாயில் இனிப்பு மிக்க உமிழ்நீரும், இரைப்பையில் புளிப்பு மிக்க ஜீரணத் திரவமும் சிறுகுடலில் கசப்பு மிக்க ஜீரணத் திரவமும் ஜீரணத்தின் பல்வேறு நிலைகளில் உதவுகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்று அளவில் தற்காலிகமாகக் குறைந்தாலோ கூடினாலோ பாதகம் ஏற்படுவதில்லை. ஆனால் தொடர்ந்து குறைந்தோ கூடியோ இருந்தால் ஜீரணம் பாதிக்கப்படுகின்றது. புளிப்புத் திரவங்களில் சக்தி குறைந்த நிலையில் அதற்குச் சக்தி கூட்ட புளிப்பு தூக்கலாக உள்ள புளிவற்றல் குழம்பு, புளி இஞ்சிப்பச்சடி, புளிமிளகாய்ப் பச்சடி போன்றவை அதிகம் உதவுகின்றன. புளிவற்றல் குழம்பும் புளிமிளகு குழம்பும் உணவு எளிதில் ஜீரணமாக உதவுகின்றது. ஆனால் இதில் ஒருவகையான புளியஞ்சாதம் தயாரிக்க உதவும் புளிக்காய் வற்றல் குழம்பு அதில் சேரும் நல்லெண்ணெய்யின் அளவு அதிகம் காரணமாக சில சமயம் சீக்கிரம் ஜீரணமாவதற்கு இடையூறு விளைவிக்கிறது. இந்த புளித்திரவத்தில் நன்கு ஊறிய சாதம் விதை விதையாக திமிர்த்து விடுவதும் மற்றோர் காரணம். வயிற்றில் புளிப்பு மிகுதி அதிகமிருந்தாலோ எண்ணெய்யை ஜீரணிக்கும் சக்தி குறைந்திருந்தாலோ புளியஞ்சாதம் வெகுநேரம் வயிற்றில் சங்கடம் விளைவிக்கிறது. உடனுக்குடன் சூடான சாதத்தில் கலந்து உடன் சாப்பிடுவதாலும் நல்லெண்ணெய்யையும் புளிக்குழம்பையும் அளவில் குறைத்துச் சேர்ப்பதாலும் இந்த சங்கடத்தை ஓரளவு குறைக்கலாம். வயிற்றில் புளிப்பு அதிகமுள்ளபோது இவை தவிர்க்கத் தக்கவையே.

3. பெருங்குடலில் மலமும் வாய்வும் தங்காமல் வெளியேறச் செய்தல்  சிறுகுடலிலும், பெருங்குடலிலும் நடைபெற வேண்டிய ஜீரணப் பணியின் இறுதிநிலைகள், சுறுசுறுப்புடன் நிறைவேற புளி உதவுகின்றது. இந்நிலையில் வாயு வயிற்றில் பொருமி தங்காமலும் பழைய மலம் தங்காமலும் வெளியேற லேசான மலமிளக்கியாகவும் வாயு அகற்றியாகவும் புளி உதவுகின்றது.

பழைய புளி 10 கிராம், சூரத்து நிலாவரை 3 கிராம், கொத்துமல்லி விதை 3 கிராம், 240 மில்லி லிட்டர் கொதிக்கும் வெந்நீரில் இரண்டு மணிநேரம் ஊற வைத்து காய்ச்சி வடிகட்டி அதில் சர்க்கரை மூன்று ஸ்பூன் சேர்த்துச் சாப்பிட வேதனையில்லாமல் மலமிளகிப் போகும். புளியை கொதிக்கும் வெந்நீரிலிட்டு கரைத்து வடிகட்டி அதில் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட சீதபேதி, இரத்தக்கடுப்பு நிற்கும். புளியையும் உப்பையும் சம அளவில் கலந்து பிசைந்து சிறிது தேன் சேர்த்து இளக்கி பஞ்சில் தோய்த்து உள் நாக்கில் தடவிக் கொள்ள அதன் வளர்ச்சி குறையும். புளியை நீரில் கரைத்து அதில் மிளகு, கிராம்பு, ஏலம் இம்மூன்றையும் சிறிது தூளாக்கி கலந்து சர்க்கரை, பச்சைக் கற்பூரம் சேர்த்துச் சாப்பிட சூட்டினால் ஏற்படும் தலைவலி, கண் எரிச்சல் நீங்கும், பசி உண்டாகும், ருசியின்மையை மாற்றும். புளியையும் கரிசலாங்கண்ணியையும் சமஅளவு சேர்த்து அரைத்து 1  2 கொட்டைப்பாக்கு அளவு சாப்பிட குத உறுப்பு வெளித்தள்ளல்

(Rectal Prolapse) நின்றுவிடும். புளியைத் தண்ணீரில் கரைத்து உப்பும், சுக்குத் தூளும் சேர்த்து கொதிக்க வைத்து சூடாக பற்றுபோட ஊமைக்காயமாக ஏற்பட்ட இரத்தக்கட்டு வலி நீங்கும்.

புளியிலையையும், வேப்பிலையையும் சேர்த்துக் கொதிக்கவைத்த வெந்நீர் விட்டு கழுவி வர ஆறாதபுண்ணும் ஆறும். புளியிலையை இடித்து கொதிக்கவைத்த தண்ணீரைக் கொண்டு ஒத்தடம் கொடுப்பதும், புளியிலையை அரைத்துப் பற்றிடுவதும் கீல்வாயு (குதிகால்) வீக்கத்தைக் குறைக்கும். புளியம் பூவை நெய் விட்டு வதக்கி துவையல் செய்து உண்ண நல்ல பித்த சமனமாகும். பூவை நசுக்கித் தண்ணீர் விட்டு அரைத்து கண்ணைச் சுற்றி பூசி வர கண் சிகப்பு மாறும். பழத்தின்மேல் ஓட்டை சுட்டு சாம்பலாக்கி தண்ணீரில் கெட்டியாக கரைத்து வயிற்றின் மேல்புறத்தில் தடவ கல்லீரல் வீக்கம் தணியும். பட்டை சாம்பலை நிறைய தண்ணீர்விட்டு கலக்கி வடிகட்டி அதைக்கொண்டு வாய்க்கொப்பளிக்க தொண்டை வேக்காளம் நீங்கும். பழத்தின் மேல்ஓட்டை பொடித்துத் தூளாக்கி பல்துலக்கி வர பற்களின் ஈறுகள் வலுப்பட்டு பல் இறுகும். மேல் ஓடு ஒருபங்கு, ஜீரகம் மூன்றுபங்கு பனங்கற்கண்டு நான்கு பங்கு சேர்த்து தூளாக்கி வைத்துக் கொண்டு அதில் அரை ஒரு ஸ்பூன் அளவு காலை மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட சீதபேதியும், கிராணியும் நீங்கும்.

(தொடரும்)

எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com