திரைக்கதிர்

மோகன்லால், மீனா நடிப்பில் வெளிவந்த "த்ரிஷயம்' மலையாளத் திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக இல்லாத
திரைக்கதிர்
Updated on
3 min read

மோகன்லால், மீனா நடிப்பில் வெளிவந்த "த்ரிஷயம்' மலையாளத் திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக இல்லாத வெற்றியைப் பெற்றது.  தமிழில் "பாபநாசம்' என்ற பெயரிலும், தெலுங்கில் "திருஷயம்' என்ற பெயரிலும் கன்னடத்தில் "த்ரிஷ்யா' என்ற பெயரிலும் ரீமேக் ஆனது. இதையடுத்து பாலிவுட்டிலும் தயாராகிறது இப்படம். நிஷிகாந்த் காமத் இயக்கும் இப்படத்தில் அஜய் தேவ்கான் ஹீரோவாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரி வேடத்தில் தபு நடிக்கவுள்ளார். மலையாளம், தமிழில் இவ்வேடத்தை ஆஷா சரத் ஏற்றுள்ளார். தெலுங்கு ரீமேக்கில் இதே கதாபாத்திரத்தை நதியா ஏற்று நடித்தார். ஏற்கெனவே மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த மீனா, தெலுங்கிலும் அதே வேடம் ஏற்று நடித்தார். ஹிந்தியில் இவ்வேடத்துக்கான தேர்வு நடந்து வருகிறது. நீண்ட நாள்களாக திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த தபு சமீபத்தில்தான் "ஹைதர்' என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். இதைத் தொடர்ந்து "த்ரிஷ்யம்' படத்தில் நடிக்கிறார்.

"வாகை சூட வா' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த இனியா, அடுத்தடுத்து சரியான வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறினார். தவறான திரைக்கதை தேர்வு, கூடுதல் கவர்ச்சி உள்ளிட்ட காரணங்களால்  வாய்ப்புகளை இழந்தார். இதையடுத்து மலையாள சினிமாக்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அங்கேயும் சரி வர வாய்ப்புகள் அமையாததால், மீண்டும் சென்னைக்கே வந்தார். "வாகை சூட வா' மாதிரியான கதாபாத்திர முக்கியத்துவம் உள்ள படங்களிலேயே நடிக்க வேண்டும் என முடிவெடுத்த இனியா, அதற்காக காத்திருக்கவும் செய்தார். தற்போது அந்த வாய்ப்பு  வந்திருக்கிறது. மலையாள திரையுலகில் பிரபல இயக்குநராக விளங்கும் துளசிதாஸ், முதன் முறையாக தமிழில் படம் இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்காக முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இனியா தேர்வாகியுள்ளார். எம்.ஜெ.டி.புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு "இனி வரும் நாள்கள்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பெண்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள, இந்த திரைக்கதையில் ஒரு காட்சியில் கூட ஆண்களுக்கு இடம் இல்லை. இனியாவுடன் ஆர்த்தி, சுபிக்ஷா, ஈடன் என 20-க்கும் மேற்பட்டோர் நடிக்கின்றனர். கல்லூரியில் நடக்கும் ஆவணப்பட போட்டிக்காக படமெடுக்கச் செல்லும் மாணவிகளின் பயணத்தில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே கதை.

அரசியல் சர்ச்சைகளுக்குப் பின் "தெனாலிராமன்' படத்தின் மூலம் மீண்டும் தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார் வடிவேலு. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத அப்படத்துக்குப் பின் அமைதியானார். இதையடுத்து இப்போது "எலி' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தையும் "தெனாலிராமன்' படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் எழுதி இயக்குகிறார். இப்படத்தின் திரைக்கதையும் ப்ரீயட் கால பின்னணியைக் கொண்டது. 70 கால கட்டங்களில் நடப்பது போல் படமாக்கப்படுகிறது. தமிழகத்தின் தென்பகுதிகளில் பிரபலமாக இருந்த கொள்ளைக் கூட்ட முகாம்களில் நடக்கும் சம்பவங்களே கதை. பிரபலமான ஒரு கொள்ளைக் கூட்ட முகாமில் வேலைக்கு அமரும் ஒருவர், அந்த கூட்டத்தை என்ன செய்கிறார் என்பதை நகைச்சுவையாக சொல்லி முடிப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

 தமிழில் "யுவன் யுவதி' உள்ளிட்ட படங்களில் நடித்த ரீமா கல்லிங்கல், மலையாள சினிமாவில் முன்னணி வரிசை ஹீரோயினாகத் திகழ்ந்தார். பட வாய்ப்புகள் குவிந்திருந்த போதே மலையாள இயக்குநர் ஆஷிக் அபுவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருந்தும், அவர் ஒப்புக் கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்பவர், பொது இடத்தில் போதை மருந்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து பரபரப்பான தகவல்கள் வெளியாகின. போதை மருந்து பதுக்கல் தொடர்பாக ரீமா கல்லிங்கல், ஆஷிக் அபு மற்றும் நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில் போன்றோரிடம் போலீஸ் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் பரவியது. இதையறிந்த பஹத் பாசில் கருத்து எதையும் சொல்லவில்லை. ரீமா கல்லிங்கல் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். ""சினிமா நடிகை என்றால், எந்த விவகாரத்திலும் தொடர்புபடுத்தி பேசலாம் என்றாகி விட்டது. எனக்குள் இப்போது என்ன வலி இருக்கிறது என்பதை அவர்கள் உணருவதில்லை. துளி கூட ஆதாரம் இல்லாத குற்றசாட்டுக்களை பார்த்தால் நகைச்சுவையாக இருக்கிறது. எந்த செய்திக்கும் கருத்து சொல்லுவது என் வழக்கம். அதைக் குறி வைத்தே என் மீது இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போதை மருந்து குற்றச்சாட்டு சாதாரண விஷயமல்ல என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார் ரீமா.

தமிழில் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றிப் பெற்ற "முதல்வன்' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தார் ஷங்கர். ஹிந்தி ரீமேக்கில் அனில் கபூர், ராணி முகர்ஜி ஜோடியாக நடித்தனர். இந்தப் படம் பெரும் தோல்வி அடைந்தது. இதையடுத்து ஹிந்தியில் படம் இயக்காமல் இருந்தார் ஷங்கர். பின்னர் "ரோபோ' படத்தை ஷாரூக்கான் நடிப்பில் இயக்க இருந்தார். இதில் இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகக் கூறப்பட்டது. அந்தக் கதையில் ரஜினி, ஐஸ்வர்யாராயை நடிக்க வைத்து தமிழில் "எந்திரன்' படத்தை உருவாக்கினார். இதையடுத்து பெரும் பொருட்செலவில் விக்ரம் நடிப்பில் "ஐ' படத்தை இயக்கினார். பெரும் ஹிட்டாகி உள்ள இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய ஷங்கர் திட்டமிட்டுள்ளார். கதையில் இருக்கும் பிரம்மாண்டத்தை இன்னும் பல மடங்கு நீட்டிக்க திட்டமிட்டுள்ள ஷங்கர், அதற்கான தயாரிப்பாளரை தற்போது தேடி வருகிறார். தயாரிப்பாளர் முடிவானதும் மற்ற விவரங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது. தற்போது வரை ஷங்கரின் முதல் தேர்வாக ஷாரூக்கான் - இலியானா இருக்கிறார்கள் என்கிறது தகவல் அறிந்த வட்டாரங்கள்.  

சிம்பு - நயன்தாரா நடிப்பில் "இது நம்ம ஆளு' படத்தை இயக்கி வருகிறார் பாண்டிராஜ். படப்பிடிப்பில் தாமதம், கை மாறிய தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட காரணங்களால் இப்படத்தின் வெளியீடு

தாமதமானது. இப்போது ஒரு வழியாக இப்படம் ரிலீஸூக்குத் தயாராகி விட்டது. இப்படத்தின் படப்பிடிப்புகளுக்கிடையே கிடைத்த இடைவெளிகளில் ஒரு படத்தை உருவாக்கத் தொடங்கினார் பாண்டிராஜ். முழுக்க முழுக்க சிறுவர்களை மையமாகக் கொண்டு உருவாகி வருகிற இப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2 டி பட நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் சூர்யாவும் நடித்து வருகிறார். சூர்யாவின் மனைவியாக நடிக்க நடிகைகள் தேர்வு நடந்து வந்தது. பல நடிகைகளில் பெயர்கள் பரீசிலிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது அந்த இடத்துக்கு அமலாபால் தேர்வாகியுள்ளார். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்ட பின்னர், தொடர்ந்து சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்த அமலாபாலுக்கு முதல் வாய்ப்பாக இப்படம் அமைந்துள்ளது. வரும் 20-ஆம் தேதியிலிருந்து சூர்யா - அமலாபால் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com