

மாத்திரைகள் எப்போது, எப்படி? சாப்பிட வேண்டும் என்பது குறித்து ரஷ்ய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து ஒரு முடிவான கருத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.
மாத்திரைகளை பால் அல்லது பழச்சாறு, காப்பி , டீ, இவற்றுடன் சேர்த்து விழுங்கக் கூடாது. மாத்திரைகள் உடலில் கிரகிக்கப்படுவதை இவை தாமதப்படுத்துகின்றன.
சாதாரணமாகத் தண்ணீருடன் சேர்த்து மாத்திரைகளைச் சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும். சாப்பாட்டுக்குப் பின் உடனடியாக மாத்திரைகளை விழுங்க வேண்டாம். சாப்பாட்டுக்கு முன்னரோ அல்லது சாப்பாடு சாப்பிட்ட சிறிது நேரத்திற்குப் பின்னரோ மாத்திரைகளைச் சாப்பிடுங்கள். மதுவுடன் சேர்த்து மாத்திரைகளைச் சாப்பிடவே கூடாது.
வடிவம்
* வல்லாரைக் கீரை மூளை வடிவத்தைப் போலிருக்கும்.
* காலிஃபிளவர் - மூளையைப் போலிருக்கும்.
* அக்ரூட் பருப்பு வளைந்து நெளிந்து ஏறக்குறைய மூளை போலிருக்கும்.
- முக்கிமலை நஞ்சன்
பஞ்சினால் அஸ்திவாரம்
இங்கிலாந்தில் உள்ள லெய்ஸ்வோ என்ற இடத்தில் கலங்கரை விளக்கம் ஒன்று உள்ளது. இந்தக் கலங்கரை விளக்கம் எதை அஸ்திவாரமாகப் போட்டுக் கட்டப்பட்டிருக்கிறது தெரியுமா? பஞ்சை! ஆம். இந்தக் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டுள்ள இடம் முதலில் அதைக் கட்டக்கூடிய தகுதியுள்ள இடமாக இல்லை. அதற்காக எத்தனையோ விதமான சாதனங்களை போட்டுப் பார்த்தும் அஸ்திவாரம் பலமாக அமையாததால், அந்த இடத்தில் கலங்கரை விளக்கம் கட்ட முடியும் என்ற நம்பிக்கையையே இழந்துவிட்டனர். இந்நிலையில் ஒருநாள் யாருமே எதிர்பாராத முறையில் இந்த அஸ்திவாரப் பிரச்னை தீர்ந்தது. அமெரிக்க கப்பல் ஒன்று இந்தியாவிலிருந்து ஏராளமான பஞ்சுப் பொதிகளை ஏற்றிக்கொண்டு வந்தது. எதிர்பாராத விதமாக வீசிய புயல் கப்பலை கலங்கரை விளக்கம் கட்ட இருந்த இடத்துக்கருகே தரை தட்ட வைத்துவிட்டது. அதனால் ஆயிரக்கணக்கான பஞ்சுப் பொதிகள் கரையிலே ஒதுங்கின. நாள்கள் ஆக ஆக கடல் நீர், மணல் எல்லாமுமாகச் சேர்ந்து ஒவ்வொரு பஞ்சுப் பொதியையும் ஒரு பெரிய பாறாங்கல்லாக மாற்றிவிட்டன. இப்படி இறுகிப்போன பஞ்சு பொதிகளை அஸ்திவாரமாகப் போட்டே இந்தக் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.
"அதிசயம் ஆனால் உண்மை'
தகவல்: போளூர் சி.ரகுபதி
****
ராஜ வம்சங்கள்!
சரித்திரத்தில் பிரபலமாக இருந்த ராஜ வம்சங்கள் இன்று இருக்கிறதா?
கேரளா பந்தள மகராஜா ஸ்ரீ ஐயப்பனை வளர்த்த, வழிதோன்றல்கள் இன்றும் வழிவழியாக இருக்கிறார்கள். இவருடைய ஆசியைப் பெற மக்கள் இன்றும் வந்து போகிறார்கள்.
விஜய நகர சாம்ராஜ்யத்தின் மகோன்னத சக்கரவர்த்தி ஸ்ரீகிருஷ்ண தேவராயர் என்பது ஊரறிந்த விஷயம். அவருடைய 25-ஆவது தலைமுறையைச் சேர்ந்தவர் இன்றும் ஆந்திராவில் வாழ்ந்து வருகிறார். இவருடைய ஆசியை, வாழ்த்துகளைப் பெற மக்கள் யுகாதி போன்ற பண்டிகைகளின்போது ஆவலோடும், பக்தியோடும் வருகிறார்கள்.
இதேபோன்று, பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பெண் வயிற்றுத் தோன்றல்தான் கமலபதி திரிபாதி! இவர் உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சராக இருந்தவர்.
-தேனி பொன்கணேஷ்
****
பிறமொழிச் சொற்கள்
சாம்பார், தலித், ரவா கேசரி, கில்லாடி ஆகிய சொல் அனைத்தும் மராத்தி மொழிச்சொல்லாகும்.
கடுதாசி என்ற சொல் போர்ச்சுகீசியச் சொல்
கக்கூஸ் என்ற சொல் டச்சு மொழிச்சொல்.
வக்கீல், அமீனா, ஜப்தி, கிஸ்தி, ஜக்தி, சன்னல் உருது மொழிச்சொல்.
ஆயி என்ற தமிழ்ச்சொல் மராத்திக்குப் போயிருக்கிறது.
அஸால்ட் ASSAULT என்ற ஆங்கில வார்த்தை "அலட்சியம்' என்ற பொருளில் தமிழுக்கு வந்துள்ளது.
-த.நாகராஜன், சிவகாசி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.