தமிழ்நாட்டில் காணப்பெறும் பொதுக்காலம் ஆறாம் நூற்றாண்டு வரையிலான தமிழ் பிராமி கல்வெட்டுகளையும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளையும் ஆய்வுசெய்து. "பழந்தமிழ்க் கல்வெட்டுகள்' எனும் தலைப்பில் கல்வெட்டறிஞர் ஐராவதம் மகாதேவன் 2003- இல் வெளியிட்ட நூலின் மறுபதிப்பைச் சென்னையிலுள்ள செம்மொழி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிட்டது.
741 பக்கங்களைக் கொண்டிருக்கும் இப்புதிய வெளியீட்டில், முதற்பதிப்பில் இணைக்கப்பட்டிருந்த தொடக்கக் கால வட்டெழுத்துக் கல்வெட்டுகள் (பொ.கா. 4-6ஆம் நூற்றாண்டுகளுக்கு உரியவை) தவிர்க்கப்பட்டுள்ளன.
அதற்கு மாற்றாக முதற்பதிப்பு வெளியான 2003க்குப் பிறகு, தமிழ்நாட்டுக் குன்றுகளிலும் நடுகற்களிலும் கண்டறியப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகளும் தமிழ்நாட்டில் கிடைத்திருக்கும் கலத்துண்டுகள், காசுகள், மோதிரங்கள், முத்திரைகள் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள பிராகிருதப் பொறிப்புகளும், கலத்துண்டுகளிலுள்ள சிங்கள, பிராகிருதப் பொறிப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன.
ஓர் ஆய்வு நூல் எப்படி அமையவேண்டும் என்பதற்கு இந்த நூல் சிறந்த சான்றாகும். அழுத்தமான, ஆழமான செய்திகளின் தொகுப்பென்றாலும், படிக்கும் யாரையும் சேருமாறு இந்நூல் அமைய வேண்டும் என்று கருதி எழுதினாற் போன்ற மிக எளிய மொழி நடை.
ஆங்கிலம் கற்ற அனைவருக்கும் புரியுமாறு, அகராதித் தேடல் இல்லாமலேயே பக்கங்களை நகர்த்துமளவு எளிய மொழியில் தம் கருத்துக்களைப் புலப்படுத்தியிருக்கும் பாங்கு நூலாசிரியரின் தனித்தன்மையாக இந்நூலில் மிளிர்கிறது.
தொடர்ந்து படிக்கத் தூண்டும் மொழியில் ஆழ்ந்த பயிற்சியும் வெளிப்படுத்த நினைக்கும் கருத்துகள் பற்றிய தெளிவான திட்டமிடுதல்களும் இருந்தால்தான் அது கைகூடும். மகாதேவனின் சொல்வளமும் கருத்தாளுமையுமே இந்நூலைப் பரவசப் படிப்புக்குரிய நூலாக்கியுள்ளன.
மூன்று பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருக்கும் இந்த நூலின் முதற்பிரிவு, தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டறியப்பட்ட வரலாற்றைக் கால ஒழுங்குடனும் சுவை குன்றாமலும் நிறை, குறைகளை மறைக்காமலும் முன்வைக்கிறது.
பொ.கா.1882- இல் தொடங்கி 2012 வரை பதிவு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்டுபிடிப்பு வரலாற்றின் நிகழ்வுகள், இடையே தொய்ந்து, 1961-இல் புத்தாக்கம் பெற்றமை, தமிழ் பிராமி கல்வெட்டுகள் பற்றிய தேடலையும் ஆய்வுக் கண்ணோட்டத்தையும் எப்படியெல்லாம் சீரமைத்தது என்பதை நூலாசிரியர் நன்கு புலப்படுத்தியுள்ளார்.
கண்டறியப்பட்ட கல்வெட்டுகளை அரசுக் கல்வெட்டாய்வாளர்கள் வெங்கையா, கிருஷ்ண சாஸ்திரி முதலியோர் படித்தறிந்து பதிவு செய்தபோதும், சுப்பிரமணிய ஐயர் மேற்கொண்ட ஆய்வே தமிழக பிராமி கல்வெட்டுகளில் கையாளப்பட்டுள்ள மொழி தமிழ் என்பதை முதன் முறையாகச் சான்றுகளுடன் வெளிப்படுத்தியது.
இந்த ஆய்வுக் களத்தில் 1961-இல் நுழைந்த ஐராவதம் மகாதேவன் நான்காண்டுக் களப்பணிக்குப் பிறகு, தமிழ்நாட்டின் 21 இடங்களில் அதுநாள் வரை கண்டறியப்பட்டிருந்த 74 கல்வெட்டுகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டார்.
எழுத்தமைவு, எழுத்தியல், மொழிச் சான்றுகள் அடிப்படையில் அக்கல்வெட்டுகள் மூன்று காலக்கட்டப் பொறிப்புகளாக அடையாளம் பெற்றன. அவற்றில் சில திருத்தங்களைச் சேர்த்தவர்களாக இரா. நாகசாமி, ஆர். பன்னீர்செல்வம் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
1960க்கும் 1990க்கும் இடைப்பட்ட முப்பதாண்டுக் காலத்தில் பல இளம் ஆய்வாளர்கள் தமிழ் பிராமி கல்வெட்டாய்வில் ஆர்வம் காட்டினர். அதன் விளைவாகப் பல புதிய கல்வெட்டுகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கண்டறியப்பட்டதுடன், காசுகளின் பதிவுகளும் அகழ்வாய்வுகளில் பெருமளவிற்கு வெளிப்பட்ட கலத்துண்டுகளின் கீறல்களும் கவனத்தை ஈர்த்தன.
தமிழ் பிராமி ஆய்வு இக்காலகட்டத்தில் புதிய வெளிச்சம் பெற்றதை உணர்ந்த நிலையில், 1991- இல் தொடங்கிய மகாதேவனின் இரண்டாம் பருவக் களப்பணி இத்துறை சார்ந்த பிற ஆய்வாளர்களையும் உடன் இணைத்துக் கொண்ட நிலையில், 1996-இல் முடிவுற்றது. அதைத் தொடர்ந்த ஏழாண்டு கால உழைப்பே அவருடைய " பழந்தமிழ்க் கல்வெட்டுகள்' எனும் சிறப்பான நூலாக வடிவெடுத்து.
பழந்தமிழ்க் கல்வெட்டுகள் நூலின் முதற்பதிப்பிற்கும் இரண்டாம் பதிப்பிற்கும் இடையிலுள்ள முக்கியமான வேறுபாடு ஒளிப்படங்கள்தாம். செம்மொழி நிறுவனத்தார் பெரும்பொருட்செலவில் இதுநாள் வரையிலும் கண்டறியப்பட்டுள்ள அனைத்துப் பழந்தமிழ்க் கல்வெட்டுகளையும் அவற்றின் எழுத்துகளை வெண்பூச்சிட்ட நிலையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் விளம்பல் படங்களுடன் முதற்பதிப்பிலுள்ள மைப்படிப் படங்களும் கல்வெட்டுகளின் நேர்ப்பதிவுப் படங்களும் இந்நூலில் உள்ளன.
தமிழ் பிராமி கல்வெட்டுகளின் இந்த 194 பக்கத் தொகுப்பு கல்வெட்டாய்வாளர்களுக்கு மிகப்பெரிய கொடையாகும். ஒவ்வொரு கல்வெட்டும் இரண்டு பக்கங்களில், இடப்புறம் மூன்று விதமான படங்களாகவும் வலப்புறம் எழுத்துருக்களாகவும் தரப்பட்டுள்ளன.
எழுத்துருக்கள் கல்வெட்டில் உள்ளவாறே முதல் வரியாகவும் அவை சொற்களாக இணைந்து தொடராகும் அமைப்பு இரண்டாம் வரியாகவும் ஆங்கிலம், தமிழ் எனும் இருமொழிகளிலும் தரப்பட்டுள்ளன.
இவற்றை அடுத்து அக்கல்வெட்டின் பொருள் ஆங்கிலத் தொடராக அமைய, அதன்கீழ் ஒவ்வொரு கல்வெட்டும் எந்த இடத்தில் காணப்படுகிறது, அதன் காலம் என்ன, அக்கல்வெட்டின் அருஞ்சொற்களுக்கு எப்படிப் பொருள் காணலாம் எனும் குறிப்புகளுடன், பிற கல்வெட்டாய்வாளர்களின் வாசிப்புகள் தம் வாசிப்பிலிருந்து வேறுபடும் இடங்களையும் நூலாசிரியர் தந்துள்ளார்.
பிராமி கல்வெட்டுகளில் ஆய்வு மேற்கொள்ள விழையும் இளம் தலைமுறையினருக்கு இக்கல்வெட்டுகள் தொடர்பான பன்முகப் பார்வையை வழங்கும் விதமாகவே இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டுகள் பற்றிய நூலாசிரியரின் விரிவான உரை விளக்கப் பகுதி படிப்பவர்களுக்குப் பல கோணங்களில் துணையாகிறது. ஒவ்வொரு கல்வெட்டாக எடுத்துக் கொண்டு அவற்றிலுள்ள அருஞ்சொற்களுக்கான பொருள், இலக்கணக் குறிப்பு, அச்சொற்கள் இலக்கியங்களிலோ, பிற கல்வெட்டுகளிலோ ஆளப்பெற்றிருப்பின் அதுகுறித்த தகவல், அச்சொற்களுக்கு இணையான பிற திராவிட மொழிச் சொற்கள் ஆகியவற்றைத் தந்திருப்பதுடன், அவை பிராகிருத மொழியிலிருந்து பெறப்பட்டிருப்பின் அம்மொழிசார் கல்வெட்டுகளில் அச்சொற்கள் வழங்கும் விதமும் காட்டியிருக்கும் பாங்கு, படிப்போருக்கு பிராமி கல்வெட்டுச் சொற்கள் பற்றிய ஆழ்ந்த புரிதலைத் தருகிறது.
சங்க இலக்கியங்களுடன் இந்தப் பழந்தமிழ்க் கல்வெட்டுகளின் செய்திகளை இணைத்துப் பார்த்து, பொதுக் காலத்திற்கு முற்பட்ட இரண்டாம் நூற்றாண்டு தொட்டு பொதுக்காலம் நான்காம் நூற்றாண்டு வரையிலான நாடு, சமயம், சமூகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தரவுகளை மகாதேவன் பதிவு செய்துள்ள முறை தமிழர்களின் தொன்மை வரலாற்றை நன்கு வெளிப்படுத்துகிறது.
நாடு எனும் தலைப்பின் கீழ், பழந்தமிழ்க் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள சேர, சோழ, பாண்டிய மன்னர்களுடன் அதியமான் நெடுமானஞ்சி, பிட்டன் கொற்றன், கொற்றந்தை, கணிமான், பதுமான்கோதை முதலிய குறுநில மன்னர்களையும் இனம் கண்டிருக்கும் நூலாசிரியர், அவர்களைச் சங்கப் பாடல்களில் வெளிப்படும் அரசர்களுடனும் கலத்துண்டுகள், காசுகள் வழி அறியப்பட்டுள்ள பெயர்களுடனும் ஒப்புமை செய்து காட்டியுள்ள நேர்த்தி குறிப்பிடத்தக்கது.
கோ, இளங்கோ, அதிகன், காவிதி, மாராயன் முதலிய சொற்களின் துணையுடன் அரசு நிருவாகம் பற்றிய தரவுகளும், "தேனூர் கொண்ட', "ஆகோள்' ஆகிய பதிவுகள் வழிப் போர் பற்றிய செய்திகளும் முதலைக்குளம் கல்வெட்டிலிருந்து ஊரவை தொடர்பான பதிவுகளும் தொகுக்கப்பட்டுள்ளமையுடன் அவை சம கால, பிற்காலக் கல்வெட்டு வழக்குகளுடன் ஒப்பிடப்பட்டிருக்கும் பாங்கு பாராட்டிற்குரியது.
வேளாண்மை, வணிகம், தொழில்நுட்பம், சமூகக் கட்டமைப்புகள், தனியார், ஊர்பெயர்கள், மாவடை, மரவடை, இசை, ஆடல் உள்ளிட்ட கலைகள், எழுத்தறிவு என ஆறு நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு பரிமாணங்கள் இந்நூலில் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழரின் பரவலான எழுத்தறிவு பற்றிய மகாதேவனின் குறிப்புகளும் அதுதொடர்பான அவரது கருத்துகளும் இந்த மண்ணின் அறிவு வளம் காட்டும் கண்ணாடிகள்.
கல்வெட்டுகளில் தொனிக்கும் சமயம் பற்றிய ஆய்வில் புத்தம், ஆசீவகம், சமணம் எனும் மூன்றும் கருதப்பட்டாலும், சான்றுகளின் அடிப்படையில் இக்கல்வெட்டுகளில் ஊடாடியுள்ள சமயமாக சமணத்தையே மகாதேவன் முன்னிறுத்துகிறார்.
கணி, அமணன், உபசன், பதந்தன், அத்துவாயி ஆகிய சொற்களை துறவிகளின் பட்டப் பெயர்களாகவும் பமித்தி, கந்தி ஆகியவற்றை சமணப்பெண் துறவிகளின் பட்டங்களாகவும் கொள்ளும் நூலாசிரியர், இலக்கியச் சான்றுகளின் அடிப்படையிலும் கல்வெட்டுகள் கிடைத்திருக்கும் இடங்களின் நோக்கிலும் தம் கருத்தை உறுதிப்படுத்துகிறார்.
அவர் கூறுவது போல 87 தமிழ் பிராமி கல்வெட்டுகளில் 65, பாண்டியநாட்டில் கிடைத்திருப்பதையும் கருத வேண்டியுள்ளது. அதுபோலவே தமிழ் பிராமி கல்வெட்டுகள் கிடைக்கும் பதினொரு குன்றுகளில் பொ.கா. 8-11 -ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் சமணத் துறவிகளின் குடியிருப்பு நேர்ந்ததைப் பல கல்வெட்டுகளும் சிற்பச் சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன.
நூலின் பின்னிணைப்புகளாகக் கல்வெட்டுகளில் உள்ள அருஞ்சொற்களுக்கான பொருளடைவு, தனியர், ஊர்ப் பெயர்களின் அடைவு, திராவிட, இந்தோ ஆகிய மொழிகளின் வேர்ச்சொல் அடைவு ஆகியவற்றைத் தந்திருப்பதுடன், எந்த மொழிக் குடும்பம் சார்ந்தன என்றறிய முடியாத நிலையிலுள்ள பன்னிரண்டு வேர்ச் சொற்களையும் தனித்துத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளனவாக மகாதேவன் இனம் பிரித்துள்ள திராவிட வேர்ச்சொற்கள் 237 என்பதும் அவை 375 முறை கல்வெட்டுகளில் வழங்கப்பட்டுள்ளன என்பதும் அதேசமயம், இக்கல்வெட்டுகளில் பயின்று வந்துள்ள இந்தோ-ஆரிய மொழிகளின் வேர்ச்சொற்கள் 81 மட்டுமே என்ற உண்மையும் இக்கல்வெட்டுகளின் மொழி தமிழே என்பதை நிறுவப் போதுமான காட்டுகளாக அமையும். இந்த உண்மையை மிகநுட்பமாக இலக்கணக் கூறுகளின் மூலமும் நூலாசிரியர் ஐயத்திற்கிடமின்றி நிறுவியுள்ளமை பாராட்டுதலுக்குரியது.
கல்வெட்டுச் சொற்களை மகாதேவன் படித்திருக்கும் முறையிலும் அச்சொற்களுக்கு அவர் பொருள் கொண்டுள்ள வகையிலும் கல்வெட்டுத் தரவுகளிலிருந்து அவர் தொகுத்தளித்திருக்கும் வரலாற்றுச் செய்திகளிலும் ஆங்காங்கே கருத்து மாறுபடுபவர்கள் இருப்பினும், சார்பற்றுச் சொல்லியிருக்கும் முறை, தந்திருக்கும் சான்றுகள், விவாதித்திருக்கும் நேர்த்தி ஆகியவற்றை இத்துறைச் சார் அறிஞர்கள் அனைவரும் ஒரு முகமாகப் பாராட்டியுள்ளனர்.
இந்நூலைப் பார்க்கும் அளவிலேயே இதன் பின்னிருக்கும் உழைப்பை யாரும் உணரலாம். இதை ஒருமுறை படிப்பவர்கள் அந்த உழைப்பின் உறுதி, அதைப் பின்னிருந்து இயக்கிய மகாதேவனின் தேடல், எதையும் இயன்ற வரையில் முழுமையுறப் பதிவு செய்திடல் வேண்டும் என்ற அவருடைய அழுத்தமான குறிக்கோள், அதற்காக அவர் மேற்கொண்ட பல்துறைசார் முயற்சிகள், ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து நிகழ்த்திய கள ஆய்வுகள், சொல்லாடல்கள் ஆகியவற்றை உள்ளங்கைக் கனியாய் உணர முடியும்.
கல்வெட்டுகளோடு தொடர்புடைய ஒவ்வொருவரும், ஏன், வரலாற்றில் ஆர்வமுடைய யாரும் இந்த நூலை ஒரு முறையேனும் முழுமையாகப் படிக்க வேண்டும்.
அப்போதுதான் உழைப்பு, நன்றி, உண்மைத் தன்மை, எளிமை, கூட்டுறவு, ஆய்வு நேர்மை முதலிய வழக்கழிந்து வரும் பல சொற்களின் பொருள் விளங்கும். தமிழின் தொன்மையை அடர்த்தியான சான்றுகளின் பின்னணியில் உலக அரங்கில் நிலைநிறுத்தியிருக்கும் மகாதேவனின் இந்த நூல், தமிழன்னைக்கு அவர் வழங்கியிருக்கும் வரலாற்றுக் கொடை மட்டுமல்ல, அவரது வாழ்நாள் கொடையும் கூட.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.