திரைக்கதிர்

தனது நெடுந்தூர சினிமா பயணத்தில் தற்போது உருவாகி வரும் "உத்தம வில்லன்' படத்தை முக்கிய மைல் கல்லாக கருதுகிறார் கமல்ஹாசன். லிங்குசாமியின் "திருப்பதி பிரதர்ஸ்' - கமலின் "ராஜ்கமல் பிலிம்
Updated on
3 min read

தனது நெடுந்தூர சினிமா பயணத்தில் தற்போது உருவாகி வரும் "உத்தம வில்லன்' படத்தை முக்கிய மைல் கல்லாக கருதுகிறார் கமல்ஹாசன். லிங்குசாமியின் "திருப்பதி பிரதர்ஸ்' - கமலின் "ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படத்துக்கான பட்ஜெட் இதுவரை கமல் படங்களுக்கு செலவாகாத பட்ஜெட் என கூறப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள "ஹாலிவுட் ஸ்டுடியோ'வில் இசைக் கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் கமல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஒரு கமல் ஹீரோ. இன்னொரு கமல் வில்லன். "ஆளவந்தான்' படத்தில் இடம் பெற்ற வில்லன் கமல் கதாபாத்திரத்தை விட, பன் மடங்கு வில்லன் கமலின் கதாபாத்திரம் உருவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. படத்தின் பெயரிலேயே வில்லன் இருப்பதால், இசை வெளியீட்டு விழாவில் இதுவரை தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த வில்லன்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவ்விழா உருவாக்கம் பெறுகிறது. பி.எஸ்.வீரப்பா தொடங்கி நம்பியார், அசோகன், ரகுவரன் என அனைத்து வில்லன் நடிகர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் அவ்விழா நடக்க இருக்கிறது.  

••••

"ரீபூட்' பாணியில் தமிழில் உருவாகும் முதல் படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது மணிவண்ணனின் "நூறாவது நாள்'. மக்களின் பேராதரவைப் பெற்ற படங்கள் "ரீமேக்' என்ற பாணியில் அதே களத்துடன் வெவ்வேறு நடிகர்களின் பங்களிப்பில் உருவாவது வழக்கம். "ரீபூட்' என்பது அதே மையக் கருவை வைத்துக் கொண்டு கதையின் போக்கு, திரைக்கதை, காட்சிகள், நடிகர்கள், கதாபாத்திரங்கள் என எல்லாவற்றையும் காலத்துக்கு ஏற்ப மாற்றி உருவாக்குவது. "ஹல்க்', "சூப்பர் மேன்', "பேட் மேன்', "ஸ்பைடர் மேன்', "டெர்மினேட்டர்' உள்ளிட்ட பல படங்கள் "ரீபூட்' முறையில் மறு உருவாக்கம் பெற்று ஹாலிவுட்டில் வெற்றிப் பெற்று வருகின்றன. பரபரப்பான திரைக்கதை, அடுத்தடுத்து அவிழும் முடிச்சுகள் என காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம் கூட்டி பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தை இந்த முறை இயக்குவது மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன். "சதுரங்க வேட்டை' நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். மற்ற வேடங்களுக்கான நடிகர்களின் தேர்வு நடந்து வருகிறது. யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் மாணவர் நிரோ பிரபா இசையமைக்கிறார். ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

•••

ஏ.ஆர்.ரெஹனா, ஜி.வி.பிரகாஷ்குமாரைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்திலிருந்து மீண்டும்   இசைக்கலைஞன் உருவாகவிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹனா "கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். வெயில் படத்தின் மூலம் ஜி.வி. இசையமைப்பாளராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ரஹ்மானின் தங்கை மகனான இ.ஆர்.அசார் காஷிஃப் இசையுலகம் தொடுகிறார். இவரின் அறிமுகமாக "கண்ணாலே' என்ற மியூசிக் விடியோ மூலம் இசையுலகில் தனது பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இளமை பொங்கும் இந்த காதல் பாடல்களுக்கு காஷிஃப் இசையமைக்க பிரபல பாடகர் ஜாவேத் அலி மற்றும் பாடகர் ஸ்ரீநிவாஸின் மகள் சரண்யா ஸ்ரீநிவாஸ் பாடியுள்ளனர். அஷ்வின் இயக்கியுள்ளார் விஜய் கார்த்தி கண்ணன் ஒளிப்பதிவில், ஸ்ரீதரன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற "பிக் தமிழ் மெலோடி அவார்ட்ஸ்' விருது வழங்கும் விழாவில் இந்த மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

••••

கன்னடத்தில் வெளியாகி பரவலான பாராட்டுக்களைப் பெற்றதோடு, பெரும் வசூலையும் குவித்த படம் "பச்சன்.' ஆக்ஷன், காதல், காமெடி என முழு கமர்ஷியல் படமாக உருவான இப்படம்தான்,  சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடித்து வந்த சுதீப்புக்கு பெரும் நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கி தந்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பின்பே ராஜமௌலி "நான் ஈ' படத்துக்கான வாய்ப்பை சுதீப்புக்கு வழங்கினார். கதாநாயகியாக பாவனா நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் முன்னணி இடம் கிடைக்காத நிலையில், கன்னட சினிமாவில் நிலைத்து நிற்க பாவனாவுக்கு இப்படமே அடித்தளம் இட்டது.  மற்றொரு நாயகியாக பிரதீப ராவத் நடிக்க நாசர், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்கள் ஏற்றிருந்தனர். இப்படம் தமிழில் "முரட்டு கைதி' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. சாமானிய இளைஞன் ஒருவன் நம்பிக்கையை மட்டுமே துணையாக கொண்டு எட்டிப் பிடிக்கும் லட்சியம்தான் கதை. சின்ன சின்ன தவறுகள் மூலம் வாழப் பழகி கொண்ட இளைஞனை பெரிய தவறுக்குள்ளாக்க நினைக்கிறார்கள் சமூக விரோதிகள். அந்த சூட்சமம் புரியாத அவன், எந்த நிலைக்குச் சென்றான்? அந்தப் பாதையிலிருந்து எப்படித் திரும்பி வந்தான் என்பதே கிளைமாக்ஸ். வெங்கடேஸ்வரா கிருபா எண்டர்பிரைசஸ் தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாகிறது.

•••••

குறிப்பிட்ட எல்லைப் பகுதிகளுக்குள் நடந்து முடியும் கதைகளுக்கு இப்போது வரவேற்பு அதிகம். ஆவி மற்றும் பேய் படங்களுக்கான காலம் இது என்பதால், குறிப்பிட்ட வீடு, அறை பகுதிகளிலேயே படப்பிடிப்பு முழுவதையும் முடித்து விடுகின்றனர். கதையின் போக்கில் அவ்வப்போது எழும் த்ரில் சம்பவங்கள் ரசிகர்களுக்கு இவ்வித கதைக் களங்களை சுவாரஸ்யமாக்கி விடுகின்றன. இந்த பாணியில் ஒரே எல்லைப் பகுதியில் உருவாகும் படமாக உருவாகிறது "வைகை எக்ஸ்பிரஸ்.' சென்னையிலிருந்து மதுரைக்கு பயணிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் நடக்கும் சம்பவங்களே கதை. "என் வழி தனி வழி' படத்துக்குப் பின் ஆர்.கே. - ஷாஜி கைலாஷ் கூட்டணி இப்படத்தில் இணைகிறது. சிறிது இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு இப்படத்தின் மூலம் வருகிறார் நீது சந்திரா. இனியா, சுஜா வாரூணி, கோமல் ஷர்மா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து உள்ளிட்டோர் நடிக்கின்றனர். "போக்கிரி', "என் வழி தனி வழி' படங்களைத் தொடர்ந்து பிரபாகர் இப்படத்துக்கு வசனம் எழுதுகிறார். கடந்த 16-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னை, ஏவி.எம். ஸ்டூடியோவில் பிரத்யேகமாக பிரம்மாண்டமான ரயில் போன்ற செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. 

••••••

25 படங்கள் என்ற மைல் கல்லை அடைந்துள்ளார் ஷாம். 13 வருடங்களுக்கு முன்பு விஜய்யின் நண்பராக "குஷி' படத்தில் சிறு கதாபாத்திரம் ஏற்றது இவரது சினிமா அறிமுகம். ஜீவாவின் "12 பி' படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்த ஷாம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். ""இத்தனை வருடங்களில் இவ்வளவு படங்கள்தானா? என்று கேட்பவர்கள் அதிகம். அவர்களுக்கு என் பதில்... குறைவான படங்கள் என்றாலும் எல்லாவற்றிலும் மனம் நிறைந்துள்ளது. 25-வது படமாக எஸ்.பி.ஜனநாதனின் "புறம்போக்கு' அமைந்திருப்பது மகிழ்ச்சி. உலக தரத்திலான படமாக "புறம்போக்கு' வளர்ந்து வருகிறது. "6 மெழுகுவர்த்திகள்' படத்தை பார்த்து பாராட்டாத இயக்குநர்களே இல்லை. முக்கியத் திருப்பங்களில் என் கூடவே வந்த ஜீவா, இப்போது இருந்திருந்தால் அக மகிழ்ந்திருப்பார். என் அடுத்தடுத்த பயணங்கள் மிக உன்னதமாக அமையும் என எண்ணிப் பயணிக்கிறேன்'' என தெரிவித்தார் ஷாம்.

அட்டையில் : கதரினா தெரசா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com