பட்டாசுக் கூளங்கள்

ஞாயிற்றுக் கிழமை, காலைநேரம். பாலவாக்கம் கடற்கரையை ஒட்டியிருந்த அந்த மைதானத்தின் விளிம்பில், வாதுமை
பட்டாசுக் கூளங்கள்

ஞாயிற்றுக் கிழமை, காலைநேரம். பாலவாக்கம் கடற்கரையை ஒட்டியிருந்த அந்த மைதானத்தின் விளிம்பில், வாதுமை மர நிழலிலுள்ள சிமெண்ட் பெஞ்சில், ரொம்ப நேரமாய் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறேன். வங்காள விரிகுடாவின் உப்புக் காற்று தலையை கலைத்துக் கொண்டிருக்கிறது.

 எதிரே பலதரப்பட்ட மனிதர்கள் ஏறக்குறைய பெரும்பாலும் என்னைப் போல குறிக்கோள்களோ, பொறுப்புகளோ இல்லாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் வயோதிகர்கள்.     நிறைய பேர் கிரிவலம் போல மைதானத்தைச் சுற்றிச் சுற்றி நடைப் பயிற்சியில் இருந்தார்கள். இளைஞர்களில் கொஞ்சம் பேர் ஜாக்கிங் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தென் மூலை கிரவுண்டில் கிரிக்கெட். லோக்கல் மேட்ச் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு     சிக்சருக்கும், டைவ் கேட்ச்களுக்கும், விசில் பறக்கிறது. இளைஞர்கள் பட்டாளம் ஒன்று கிசுகிசுவென்று எதையோபேசி சிரித்துக் கொண்டிருக்கிறது. அவ்வளவு சுவாரஸ்யமாக அவர்களின் பேசுபொருள் என்னவாக இருக்கும். வேறென்ன இந்த வயசில் அவர்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் விஷயம் பெண்களும், சினிமாவுந்தான். நானிருந்த இடத்திற்கு எதிரில் சற்று தள்ளி நடைப் பயிற்சி முடித்துவிட்ட பெண்கள் கூட்டமொன்று உட்கார்ந்து அடிக்குரலில் காரசாரமாய் விவாதித்துக் கொண்டிருந்தது. பேச்சில் மாமியார்கள் நன்றாய் உதை வாங்கிக் கொண்டிருப்பார்கள். இன்னும் பத்து வருடங்களுக்குள் அவர்கள் பேச்சுகள் உடல் உபாதைகள் பற்றியதாகவும், மருமகளை நிந்திக்கும் புராணமாகவும் மாறிப் போயிருக்கும்.

   சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டேன்.  நான் இங்கே வந்திருக்கக் கூடாது. நேற்று காலைதான் வந்தேன். இந்த தீபாவளிக்காவது இங்கே வரக்கூடாதா என்று என் பொண்ணு பாமாவும், மாப்பிள்ளையும் வருந்தி கூப்பிட்டதால் தானே வந்தேன்? அவள் கணவன், பிள்ளைகள், மாமனார், மாமியார் என்று ஏக குடும்பமாக திருவான்மியூரை அடுத்த பாலவாக்கத்தில் சொந்த வீட்டில் இருக்கிறாள். மாப்பிள்ளை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர். நான் இருப்பது சென்னை அசோக் நகரில். நானே பொங்கி சாப்பிட்டு, சற்று வெறுமையாக இருந்தாலும், ஈஸ்வரன் கோயிலும், லைப்ரரியும், இலக்கிய வட்ட நண்பர்களும், டீக்கடை பெஞ்ச் அரசியலும், என்று பொழுது நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. மதியம் மகளுடன் ஏற்பட்டவாக்குவாதத்தின் தாக்கம் இன்னும் அடங்க வில்லை.

""அதான வந்தவுடனே ஆரம்பிச்சிட்டீங்களா. ஆமாம்பா எங்களுக்கு புத்தி கம்மிதாம்பா.. எங்க புள்ளைய எப்படி வளர்க்கிறதுன்னு நாங்க பார்த்துக்கறோம்பா. நீங்க வாயை மூடிட்டு இருங்க.''

""உங்கப்பாவும் எங்கப்பாவும் ஒண்ணுதான். சும்மாவே இருக்கமாட்டாங்க. எல்லாத்திலியும் மூக்கை நுழைச்சிக்கிட்டு. நாம என்னவோ பிள்ளைகளை கொடுமைப் படுத்தறாப்பல''

மாப்பிள்ளை முணுமுணுக்கிறார். குரலில் சலிப்பும், கோபமும் தெறிக்கிறது. உடனே சட்டென்று அந்த இடத்தை விட்டு வெளியே வந்து விட்டேன். இருந்தால் என் கண்ணீர் அவர்களுக்குத் தெரிந்து போகும். எனக்கிருக்கிற ஒரே பிடிமானம் இவர்கள்தானே? இவர்கள் சந்தோஷமும், இவர்கள் துக்கமும் என்னுடையதும்தான் என்றுதானே இருக்கிறேன். என் வீட்டை விற்றுத்தானே இவர்கள் வீடுகட்ட பணம் கொடுத்தேன். என் வாழ்நாள் சம்பாத்தியங்கள் அத்தனையையும் இவர்களுக்குத் தானே எழுதி வைத்திருக்கிறேன். மிச்சமிருப்பது என் பென்ஷன் மட்டுந்தானே? நிமிஷத்தில் என்னை அந்நியாமாக்கி பேசுகிறாளே.. ஹும் எல்லாமே நமது நமது என்று பாவித்து, ஓடிஓடி சேர்த்து, பின்னாளில் எதுவுமே நமதில்லை என்ற தெளிவை நமக்குத் தருகிற பருவம் இதுதான். மாரடைப்பில் சடக்கென்று ஒரு நொடியில் என்னை தனியனாய் விட்டுவிட்டு போய்  சேர்ந்துவிட்ட வள்ளியம்மை வந்து போனாள். அன்றைக்கு எனக்கு அழுகை கூட வரவில்லை. அதிர்ச்சி, சுதாரிக்க முடியவில்லை.

தாயோடு அறுசுவை

உணவு போம்

தந்தையோடு

கல்வி போம்.

சேயோடு தான் பெற்ற

செல்வம் போம்

உறவோடு வாழ்வு உற்றார்

உடன் போம்

உடன் பிறப்பால் தோள்

வலி போம்

மனைவியோடு

எவையும் போம் -

என்ன செய்வது? ஆணோ பெண்ணோ வயோதிகத்தில் ஒவ்வொருத்தரும் வேதனை தரும் இந்த காலகட்டத்தை கடந்தே தீர வேண்டியிருக்கிறது. ஹும்... அவர்களுடைய படிப்பறிவை விட என்னுடைய பட்டறிவு சிறந்தது என்று அவர்களுக்குப் புரிய வில்லையே. இதுபோன்ற சிக்கலான நேரங்களில் தனித்து வந்து உட்கார்ந்து விடுவேன். அப்படித்தான் இன்றைக்கும் வந்து  விட்டேன் அமைதியாய் இருப்பேன். மெதுவாய் மனம் சமனப்படும். அப்புறமாய் ஒரு மூன்றாம் மனிதப் பார்வையாய், விருப்பு வெறுப்பு இல்லாமல் நடு

நிலையுடன் பிரச்னையை அலசிப் பார்ப்பேன். பல சமயங்களில் என் தவறுகள் பிடிபட்டிருக்கின்றன.

  பிரச்னை எங்கே ஆரம்பித்தது இன்று அதிகாலைதான். ஒரு சின்ன தர்க்கம். என் பேரன்களுக்கு இவங்க குடுக்கிற டார்ச்சரை ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியனாக  என்னால் பொறுக்க முடியாமல்தான் பேரன்களுக்காக உரிமையோடு திட்ட ஆரம்பித்தேன். ஆனால் அந்த உரிமை உனக்கில்லை என்று அவர்கள் பேச்சில் சொல்லியதில் மனசு வலிக்கிறது. ரெண்டு பேரன்களுமே சூட்டிகையானவர்கள். பெரியவன் கைலாஷ் எய்த் படிக்கிறான். சின்னவன் கவுதம் சிக்ஸ்த் ஸ்டேண்டர்ட். ரெண்டு பேரும் எங்கிட்ட ஒட்டிக் கொள்வார்கள். வந்தால் விடமாட்டானுங்க. இங்கே வரும்போதெல்லாம் அவங்களுக்கு கொடுப்பதற்காக பார்த்துப் பார்த்து வாங்கி வைப்பேன். என் உலகத்தின் கடைசி கால சுவாரஸ்யங்கள் இந்த  வி.ஐ.பி.க்கள் தான். ரெண்டுபேரும் கிளாஸில் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கணும்னு பாமாவும், மாப்பிளையும் சாட்டையைக் கையில வெச்சிக்கிட்டு அவர்களை துரத்தற கொடுமை இருக்கே. ஹும்... காலையில் ஆறு டூ ஏழு கராத்தே கிளாஸ். ஏழு டூ எட்டு தேவாரம் மனனம் கிளாஸ். அப்புறம் ஸ்கூல். சாயந்திரம் ஆறிலிருந்து எட்டு வரைக்கும் ட்யூஷன். அப்புறம் வீட்டுக்கு வந்து ராத்திரி பத்து மணி வரைக்கும் ஹோம் ஒர்க். இது ரொட்டீன். இதற்கிடையில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் ஒரு மணிநேரம் ஹிந்தி ட்யூஷன், ஒரு மணி நேரம் கர்நாடக சங்கீதம் ட்யூஷன். ஒருமணிநேரம் ஸ்கேட்டிங் கிளாஸ், இத்தனைக்கும் இடையிலதான் பிள்ளைங்களுடைய விளையாட்டு, தூக்கம், ரெக்ரியேஷன் எல்லாம்.

 ஒருத்தன் இத்தனைகளிலும் பாண்டித்தியம் பெறணும்னா அவன் நிச்சயம் தேவபுருஷனாகத்தான் இருக்க வேண்டும்.. இன்னைக்கு நான் காலையில் எழும்போது புள்ளைங்க ரெண்டும் விட்டிலதான் இருந்ததுங்க. இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. பத்து மணிக்குத்தான் டியூஷன். பாமா சமையல் கட்டில் இருந்தாள். அதிரசத்துக்கு வெல்லப் பாகு எடுக்கும் மணம் வீடு முழுக்க விரவியிருந்தது. நாளை மறுநாள் தானே நோன்பு. நோன்பு சட்டியில் வெச்சி படைக்கிறதுக்கான அதிரசங்களை நோன்பு அன்னைக்குத்தானே குளிச்சிட்டு, சுத்தபத்தமா விரதமிருந்து செய்யணும். பண்டிகை கழிந்து சுற்றங்களுக்கும், நட்புகளுக்கும் கொடுப்பதற்காக செய்கிறாள் போல.

பேரன்கள் என்கிட்டே வந்து ரகசியமாக,  "" தாத்தா இன்னைக்கு டியூஷன் வேணாம்னு அம்மாகிட்ட சொல்லுங்க தாத்தா. எங்களை கிரவுண்டுக்கு கூட்டிப் போறீங்களா. எங்க ஃப்ரண்ட்ஸ்லாம் ஹாப்பியா கிரிக்கெட் ஆடிக்கிட்டிருக்காங்க. ப்ளீஸ் ப்ளீஸ்'' மாற்றி மாற்றி கெஞ்சுகிறார்கள்.

""சரிடா''ன்னு வாக்கு குடுத்திட்டேன். அதுக்கு பாமாகிட்ட சொல்லிக்கிட்டிருந்தப்ப மாப்பிள்ளையும் வந்துவிட்டார். பிள்ளைங்க என்னமோ கேம்பிரிட்ஜ்ல பார் அட்லா படிக்கிறாப்பல ரெண்டுபேரும் ஆடின ருத்திர தாண்டவம் இருக்கே.... அப்பப்பா... என்னா முரட்டுத்தனம். மாப்பிள்ளை புடிச்ச முயலுக்கு மூணு காலுதான்னு சாதிக்கிற ஆளு. போதாதா. அவங்க அந்த வயசில விட்டதையெல்லாம் பிள்ளைங்க இப்ப பிடிச்சாவணும். அதுக்குத்தான் சண்டை போட்டேன்.

 ""மாமா நீங்க இன்னும் அந்த காலத்திலேயே இருக்கீங்க. இன்னைக்கு பத்து போஸ்ட் காலியாயிருக்குன்னா அதுக்கு ஆயிரம் பேர் வந்து நிக்கிறான். அவ்வளவு போட்டி இருக்கு. இதில நாம ஜெயிக்கணும்னா எம் புள்ளைங்களை இப்படித்தான் தயார் பண்ணியாவணும். அப்பத்தான் ஜெயிக்க முடியும். இங்க எல்லா பிள்ளைகளும் இப்படித்தான் ஓடிக்கிட்டு இருக்காங்க...''

""சொல்லிட்டேன். நீங்க பண்ற கெடுபிடில அதுங்க கோழையாத்தான் வளரும். ஒரு ஆசிரியனா சொல்றேன், இவ்வளவு நெருக்கடியில.. படிப்பின் மேல ஒரு வெறுப்போட அவங்க வளர்றது சரியில்லை.. இப்பல்லாம் அவங்களுக்கு எந்த சந்தோஷங்களும் கிடைக்கலன்னு தெரியுது. நான் கிளாஸ்ல முதல் மார்க் எடுக்கிறப்ப எல்லாரும் கைத்தட்டி மார்க் ஷீட்டை எனக்குக் குடுங்க சார்னு பசங்க படத்தில ஒரு பையன் ஆசிரியர் கிட்ட சொல்றாப்பல டயலாக் வருதே ஏன் பூஸ்ட்டிங். அப்படிப் பட்ட  பூஸ்ட்டிங்தான் பிள்ளைகளுக்கு வேணும். பிறந்த நாள் கொண்டாட்டம், பண்டிகைகளுக்கு புதுத் துணி, தீபாவளிக்கு பட்டாசு இதெல்லாம் அதுபோன்ற பூஸ்ட்டிங் ஆசைகள்தாம். மனம் சார்ந்த விஷயம். அதை நசுக்காதீங்க''

 ""அப்படியில்லை  மாமா. எல்லாருக்கும் பொங்கலுக்கு மட்டும்தான் புது டிரஸ்னு முடிவு பண்ணியிருக்கிறோம். ஆடம்பரத்துக்காக செலவு பண்றதில என்ன இருக்கு. அந்த பணத்தை எல்லாம் சேர்த்து வெச்சி, கூட நாங்களும் எங்க பங்குக்குன்னு பணம் போட்டு வருஷத்துக்கு ஒருக்கா அனாதை விடுதிக்கு இவர்களையே கூட்டிப் போயி சிறுவர்களுக்கு சாப்பாடு போட வைக்கிறோம். சின்ன வயசிலிருந்தே இவங்களுக்கு மத்தவங்களுக்கு உதவுறதில இருக்கிற சந்தோஷங்கள் தெரியணும் மாமா. அதுக்காகத்தான். இது நல்லதுதானே. எங்க ஏரியாவில   நிறைய பேரு எங்களைப் பார்த்துட்டு அவங்களும் இதுபோல மாறிக்கிட்டு வர்றாங்க தெரிஞ்சிக்கோங்க''

"" இதனால பிள்ளைங்களுக்கு என்ன சந்தோஷம் கிடைக்கும்னு நெனைச்சிப் பார்த்தீங்களா? நீங்க சொல்ற கான்செப்ட்டை உணருகிற வயசில்லை அவங்களுடையது. விளையாட்டுப் பருவம். ஊரு பூராவும் பட்டாசுகளும், மத்தாப்புகளும், புது டிரஸ்களுமாய் பிள்ளைங்க ஜொலிக்கும்போது, நம்ம புள்ளைங்க பழைய டிரஸ்ல இருப்பாங்க. நேத்து சாயங்காலம் தெரு பிள்ளைங்களோட. இவங்க பேசிக்கிட்டிருந்தாங்க. ஒருத்தன் சொல்றான். டேய் இவங்க வீட்டில எல்லாருக்கும் தீபாவளி டிரஸ் என்னாது தெரியுமா? சுடர்மணி ஜட்டின்றான். இன்னொருத்தன் டேய் கைலாஷும், கவுதம்மும் பாவம்டா அவங்களுக்கு. நாமளாவது ஆளுக்கு நாலு ஓசி பட்டாசு தரலாம்டான்றான். மத்த பிள்ளைங்க கெக்கெகேன்னு சிரிக்கிறாங்க. நம்ம பிள்ளைங்க உள்ளே ஓடி வந்துட்டாங்க. உங்களுக்கு தொண்டுள்ளம் ஜாஸ்தி, ஒத்துக்கறேன். அப்பப்ப நிறைய டொனேஷன் கொடுக்கறீங்க. ஏழை பசங்களுக்கு செய்யணும்னா உங்க செலவை குறைச்சிக்கிட்டு செய்யுங்க வேணாங்கல. காலையில காபி சாப்பிட்றதை விட்ருங்க. அஞ்சி வருஷத்துக்கு புது ஆடை வாங்காதீங்க. ஓட்டலுக்கு போறதை அவாய்ட் பண்ணிடுங்க. அதை விட்டுட்டு பிள்ளைங்க சந்தோஷத்தில ஏன் கை வைக்கிறீங்க. இது சரியில்லை. மனவளம் குறையும். அவங்க முகத்தில் எந்நேரமும் ஒரு சோர்வு தெரியுது. இந்த கர்மத்துக்குத்தான் நான் இங்க வர்றதில்லை''

- கேட்டுவிட்டு மாப்பிள்ளை கோபமாய் உள்ளே போய்விட்டார்.  ""விட்ருங்க அப்பா எங்க பசங்க இப்படித்தான் வளரணும்னு நாங்க நெனைக்கிறோம்'' பாமா கோபமாய் கத்துகிறாள். அவள் புருஷனை மனம் நோக பண்ணிட்டேனாம்..

 ""பாவிங்களே என் பேரன்களை இப்படி சாவடிக்காதீங்க'' கத்திவிட்டேன். பதிலுக்கு சீறினாள்.

""அப்பா இந்த பேச்சு உங்களுக்கே தப்பா தெரியல. எதுக்கு இம்மாம் ஆத்திரம். பாவிங்களாம் பாவிங்க. எதையும் நிதானிச்சிப் பேசுங்க. நாலு ஏழைப் பசங்களுக்கு உதவணும்னு அவர் நெனைக்கிறது தப்பா. எல்லாரும் விபத்தில்லா தீபாவளி, புகையில்லாத தீபாவளி கொண்டாடுங்கன்னு சொல்றாங்களே. நீங்க என்னடான்னா பட்டாசுக்கு சப்போர்ட் பண்றீங்க.''

""அட போம்மா. நம்ம பசங்க அணுகுண்டா வெடிக்கப் போறாங்க. அப்புறம் கவர்மெண்ட்டு ஏன் பட்டாசு தயாரிப்புக்கு அனுமதி குடுக்குதாம். அட நான் வாங்கிக் குடுத்துடுவேன். ஆனா கூடாதுன்னு என்னையும் தடுத்துட்டீங்களே. சே''

இப்படித்தான் எங்களுக்குள் சண்டை வளர்ந்தது. சண்டையின் முத்தாய்ப்பில் என் நாக்கிலே சனி. உங்களுக்கு அறிவே கிடையாதா?ன்னு கேட்டிருக்கக் கூடாதுதான். தப்புதான், பெரிய தப்பு. மாப்பிள்ளையையும் கேட்டதாகத்தான் அர்த்தமாகிறது. பேரன்கள் படுகிற இம்சை தாளவில்லை. யார் மேலும் ஆதிக்கம் செலுத்தாத அன்புதான் உண்மையான அன்புன்னு படிச்சிருந்தும் உறைக்கல. கைத்தொழில்களும், விவசாயமும், பிரதான தொழிலாக இருந்த காலத்தில அறிவுன்றது அனுபவம் சார்ந்ததாக இருந்துச்சி. உலகம் பல பல அறிவுத் துறைகளிலே ஒவ்வொரு நிமிஷமும் வளர்ந்து, விரிந்துக் கொண்டேயிருக்கிற இன்றைக்கு அப்பனை விட பிள்ளைகளுக்கு அறிவு விசாலமாய் இருக்கிறது. பட்டறிவை விட படிப்பறிவு உயர்ந்ததாக இருக்கிறதென்பது உண்மையே.  பார்வைகள் மாறுகின்றன. úஸô அவங்க வாழ்க்கை முடிவுகளை அவங்களே தீர்மானிக்கட்டும்னு விட்றதுதான் சரியானது. மகள் என்பதற்காக என் கருத்தை திணிப்பது தப்பு. இது அறிவுக்குத் தெரிகிறது. ஆனால் பாழும் இந்த மனசுக்குத் தெரியலையே.

  நான் போனபோது வீட்டிற்கு வெளியே உட்கார்ந்திருந்த சம்பந்தி என் கையை பிடித்துக் கொண்டார்.

""சம்பந்தி தப்பா எடுத்துக்காதீங்க. இந்த வயசில நாம தாமரை இலை தண்ணி மாதிரி இருந்திடறதுதான் நல்லது. இல்லேன்னா நமக்குத்தான் மனக்கஷ்டம்''

 அனுபவங்கள் சித்தாந்தங்களை உருவாக்குகின்றன. அவருக்குத் தலை வணங்கி ஆமோதித்து விட்டு உள்ளே நுழைந்தேன். வீடு நிசப்தமாக இருந்தது. பார்த்துவிட்டு பேரன்கள், ""அம்மா தாத்தா வந்துட்டாரு'' என்று கத்தினார்கள்.

""ஏம்பா எங்க போயிட்டீங்க. அவரு உங்களை தேடிக்கிட்டு போயிருக்கிறாரு. சரி சரி வாங்க டிபன் ரெடியாயிடுச்சி, சாப்பிட்ருங்க''

எங்களுக்குள் எதுவுமே நடக்கவில்லைபோல பேசுகிறாள். மறப்பதற்கு இதுவும் ஒரு நல்ல உத்திதான் கிளறாமல் ரெண்டு நாள் விட்டால் சரியாகிவிடும். அதேசமயம் நான் இங்கே இருக்கப் போறது இன்னும் ரெண்டு நாளைக்கு அதற்குள் எதுக்கு இந்த எதிர் வாதம். என்ற அனுசரிப்புக்கு வந்துவிட்டேன். கைகால்களை அலம்பிக் கொண்டு வந்து டைனிங் அறைக்குள் அமர்ந்தேன். பாமா இலையை எடுத்துக் கொண்டு வந்தாள்.                          ""அப்பா தீபாவளிக்கு புது டிரஸ்ஸூம், பட்டாசும் உன் பேரன்களுக்கு வாங்கித் தரலேன்னு அப்படி சண்டை போட்டீங்களே. அவனுங்க என்ன சொல்றாங்கன்னு கேளுங்க. டேய் கைலாஷ், கவுதம், தாத்தா கூப்பிட்றார் பாருங்க''

ரெண்டு பேரும் ஓடி வந்து நின்றார்கள். நான் எதுவும் கேட்கவில்லை.  ""தாத்தா அம்மா கிட்ட சண்டை போட்டீங்களாமே. எங்களுக்கு புது டிரஸ், பட்டாசு எதுவும் புடிக்கல தாத்தா வாணாம் அதெல்லாம் வேஸ்ட் தாத்தா.'' எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பாமா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.                                   ""ஏன்டா கண்ணுங்களா அப்பிடி சொல்றீங்க?''

""நெறைய டிரஸ் இருக்கு. ஐந்நூறு ஆயிரத்துக்கு பட்டாசு வாங்கி புகையா போக்கிடுறதுக்கு பதிலா. அத வெச்சி என்னை மாதிரி படிக்கிற ஏழைப் பசங்களுக்கு சாப்பாடு போட்டா அது நல்லதுதானே தாத்தா?'' ஆஹா எங்கியோ உதைக்குதே. தன் வயசை மீறி என்னா விவரமா பேசுதுங்க. எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

""அப்ப உங்களுக்கு அதனால மனசுக்குக் கஷ்டம் இல்லையாடா?'' ""ஊஹும்... வுடுங்க தாத்தா, எங்களுக்கு நேரமில்ல. நிறைய ஹோம் ஒர்க் இருக்கு இன்னிக்கு முடிச்சாவணும்'' ஆச்சரியமாக பாமாவைப் பார்த்தேன்.

அவள் சிரித்தபடியே, ""இதாம்பா என் புள்ளைங்க, உங்க பேரனுங்க''

அவர்களைத் தட்டிக் கொடுத்து அனுப்பினேன்.    

  விடிந்தால் தீபாவளி. இரவெல்லாம் நகரம்   தூங்கவில்லை. விட்டுவிட்டு வெடி சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.  என் பேரன்களுந்தான் ராத்திரி பத்தரை வரைக்கும் ஹோம் ஒர்க் பண்ணிக்கிட்டிருந்தானுங்க. அதுங்க மனசை யோசிக்க யோசிக்க எனக்குத்தான் ஆறவில்லை. ஆனால் பிள்ளைங்க கவலையில்லாமல் அதைச் சாதாரணமாய்தான் எடுத்துக்கிட்டிருக்காங்க. இன்றைய வளரும் சமுதாயத்தின் சிந்தனைகள்தான் எவ்வளவு மாறி வருகின்றன, ஆனால் இது இயற்கையான வளர்ச்சியில்லை என்று மட்டும் தெரிகிறது. அதிகாலை மூணு மணியிலிருந்தே அதிகளவில் ஊர் முழுக்க  பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் பொரிந்துக் கொண்டிருக்கிறது. நான்கு மணிக்கெல்லாம் எங்கள் வீடு முழித்துக் கொண்டது. பேரன்களுக்கு தலைக்கு எண்ணெய் தேய்ச்சி விட்டேன். எனக்கு சீயக்காய் அலர்ஜின்றதால ஷாம்பு போட்டு குளிச்சாச்சி.

 அதற்கு மேல் நானும் மாப்பிள்ளையும் சேர்ந்து பேரன்களுக்கு சீயக்காய் தேச்சி குளிக்க வெச்சி முடித்தபோது விடியற்காலை ஐந்து மணியாகியது. பாமா சமயற்கட்டில் பிஸியாக இருந்தாள். வெளியே அக்கம்பக்கம் வீடுகளின் வாசல்களில் படபடவென்று பட்டாசுகள் வெடிக்கின்றன. காது கிழிகிறது. விதவிதமான மத்தாப்பு, பூ வானத்தின் பிரகாசமான வெளிச்சம் வீட்டின் உள் அறை வரைக்கும் வந்து போகிறது. பாமா அதற்குள் காபி கொண்டு வந்தாள். பில்டர்காபி. நான் விரும்பி சாப்பிடும் ஹாட்சிப்ஸ் காபி போல ஸ்ட்ராங்காய் சுவையாய் இருந்தது. ருசித்து குடித்தேன். அப்பாடா இப்போது வெடி சத்தம் சற்று ஓய்ந்திருந்தது. நான் எழுந்து வந்து ஜன்னலோரம் போட்டிருந்த சேரில் உட்கார்ந்தேன். வெளியே என்னது நம்ம வீட்டு வாசலில் ஏதோ ஆள் நடமாட்டம் தெரியுதே. யாரது இருட்டில் நிழலுருவாய் காட்சிகள். ஓ புரிஞ்சிடுச்சி.

சடுதியில் ஓடிப்போய் பாமாவையும், மாப்பிள்ளையையும் சன்னல் பக்கமாய் இழுத்துக் கொண்டு வந்து, அடிக்குரலில் கிசுகிசுப்பாய் சொன்னேன்.

""ரெண்டு பேரும் சத்தம் போடாம வெளிவாசல்ல என்ன நடக்குதுன்னு பாருங்க''

அவர்கள் எதுவும் புரியாமல் பார்த்தார்கள்.

 வெளியே என் பேரன்கள் ரெண்டு பேரும் அக்கம் பக்கத்து வீட்டு வாசல்களில்  வெளியே கிடந்த பட்டாசுக் கூளங்களை ரகசியமாய் ஒரு பிளாஸ்டிக் பையில வாரிக் கொண்டு வந்து, இங்க வெடிச்சாப்பல அவசர அவசரமாக எங்க வீட்டு வாசலில் கொட்டி இறைச்சிக்கிட்டு இருக்காங்க.

""இதுதான் என் பேரன்களுடைய அசலான மனசும்மா.. அப்புறம் நீங்க லட்சம் லட்சமாய் சம்பாரிச்சி என்ன பிரயோசனம். சொல்லுங்க?''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com