திரைக்கதிர்

பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு அஜித், விக்ரம், கார்த்தி, விஷால் ஆகியோரது படங்கள் வெளியாக இருப்பதாக டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்தே
திரைக்கதிர்

பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு அஜித், விக்ரம், கார்த்தி, விஷால் ஆகியோரது படங்கள் வெளியாக இருப்பதாக டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்தே கோலிவுட்டில் ஓடிக் கொண்டிருந்த பேச்சு அடங்கி விட்டது. அஜித், கார்த்தி படங்கள் இந்த ரேஸில் இருந்து சில காரணங்களைச் சொல்லி விலகிக் கொள்ள, தற்போது விக்ரமின் "ஐ', விஷால் நடிப்பில் உருவாகியுள்ள "ஆம்பள' ஆகிய இரு படங்கள் மட்டுமே களத்தில் உள்ளன. திடீரென இந்த போட்டியில் சிம்புவின் "இது நம்ம ஆளு' படமும் சேர்ந்து கொண்டதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது. ஆனால் இந்தப் படம் இன்னும் முடியாத நிலையில், படத்தின் விளம்பரத்துக்காக இப்படியொரு வதந்தி பரப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. படப்பிடிப்பு எப்போது முடிவடையும்? எப்போது வெளிவரும்? என்பதை சிம்பு மற்றும் பட இயக்குநர் பாண்டிராஜ் என இரு தரப்புமே உறுதி செய்யவில்லை. இந்தப் படத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட சிம்புவின் "வாலு' படமும் தாமதத்தில்தான் உள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள "அநேகன்' பிப்ரவரியில் வெளியாகிறது. இந்தப் படத்துடன் சேர்த்து "வாலு' படம் வெளியானால் போட்டி சரியாக இருக்கும் என நினைத்த சிம்பு, இப்போது அப்படத்துக்கான வேலைகளில் இறங்கி இருக்கிறாராம்.

பெண்ணின் வலிமையை உணர்த்தும் விதமாகத் திரைக்கதை அமைத்து "வல்லமை தாராயோ' படத்தின் மூலம் அதிர்வலைகளை ஏற்படுத்தினார் இயக்குநர் மதுமிதா. அடுத்து, நகைச்சுவையை களமாகக் கொண்டு உருவாக்கிய "கொல கொலயா முந்திரிகா' படத்தின் மூலமும் கவனம் பெற்றார். தற்போது மூன்றாவது படமாக மதுமிதா எழுதி இயக்கும் படம் "மூணே மூணு வார்த்தை.' காதல் மற்றும் காமெடி கலந்த கதையாக இப்படம் உருவாகி வருகிறது. அருண் சிதம்பரம், வெங்கி, அதிதி செங்கப்பா நடிக்கின்றனர்.  கே.பாக்யராஜ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், லட்சுமி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்கள் ஏற்று நடிக்கின்றனர். கேப்பிட்டல் சினிமா நிறுவனம் சார்பில் எஸ்.பி.பி.சரண் தயாரிக்கிறார். புதுமுகம் கார்த்திகேய மூர்த்தி இசையமைக்கிறார். ஸ்ரீனிவாசன் வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இரண்டு இளைஞர்கள் தங்களது வேலையை ராஜிநாமா செய்து விட்டு புதிதாக சொந்தத் தொழில் தொடங்குகின்றனர். அதன் பின் நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள்தான் கதை. சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாத இறுதியில் படம் வெளியாக உள்ளது.

அபிஷேக் பச்சனை மணந்த பிறகு இல்லற வாழ்விலும், மகள் ஆராத்யாவை வளர்ப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார் ஐஸ்வர்யாராய். தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் தனது மாமியார் ஜெயப்பச்சனின் எதிர்ப்பை மீற முடியாமல், அப்பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறார். திருமணத்துக்குப் பின் "எந்திரன்' உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். மகள் ஆராத்யா பிறந்த பிறகு சுத்தமாக பட வாய்ப்புகளை ஏற்க முடியாத நிலை உருவானது. ஆனால், விளம்பர படங்களில் நடிப்பதை மட்டும் குறைத்துக் கொள்ளவில்லை. சமீபத்தில் கூந்தல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். ஏற்கெனவே இதே நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்தாலும் புதிய விளம்பரத்துக்காக தனது கூந்தலை தியாகம் செய்திருக்கிறார். நீண்டு வளர்ந்த கூந்தலை கட் செய்து விட்டு கிராப் மாடலில் ஹேர் கட் செய்திருக்கிறார். கிராப் மாடல் கூந்தலுக்காக ஐஸ்வர்யாராய்க்கு பல கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவர், மாமியாரின் ஆலோசனையை கேட்ட பின்னரே இந்த கிராப் மாடலுக்கு ஐஸ்வர்யாராய் மாறியிருக்கிறார்.

கோலிவுட் படங்களில் கடவுளைச் சித்திரித்து காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலோ அல்லது மத உணர்வுகளை எழுப்பும் வகையில் காட்சிகள் வடிமைக்கப்பட்டிருந்தாலோ உடனே, அதை எதிர்த்து சில அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதனால் அது போன்ற காட்சிகள் வைக்கும் போதே தமிழ்ப் பட இயக்குநர்கள் தீவிர ஆலோசனைகளுக்குப் பின் சரி வர முடிவுகளை எடுக்கின்றனர். இந்த போராட்ட பாணி தற்போது டோலிவுட்டிலும் பரவி விட்டது. ஹிந்தியில் வெளியாகி ஹிட்டான படம் "ஓ மை காட்.' அக்ஷய்குமார் நடித்த இப்படம் தெலுங்கில் "கோபாலா கோபாலா' பெயரில் ரீமேக் ஆகிறது. வெங்கடேஷ், பவன் கல்யாண், ஸ்ரேயா நடித்துள்ளனர். பூகம்பத்தால் கடை தரை மட்டமானதால் நஷ்ட ஈடு கேட்டு கடவுள் மீது வழக்கு தொடர்கிறார் ஹீரோ. அதை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கிறதா? அதன் பின் நடப்பது என்ன? என்பதை மையமாக கொண்டு இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இப்படத்தை எதிர்த்து சில இந்து அமைப்புகள் போராட்டம் தொடங்கி உள்ளன. இது யார் மனதையும் புண்படுத்தும் கதையல்ல. வேண்டும் என்றால் அமைப்புகளுக்கு படத்தை போட்டுக் காட்டத் தயார் என தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

"கூடா நட்பு கேடாய் முடியும்' என்ற வாசகத்தைத் தழுவி உருவாகி வரும் படம் "ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா.' நட்பை பாராட்டி வெளிவரும் படங்கள் சில நேரங்களில் சமூகத்துக்கு எதிராக கருத்து சொல்வதும், அதை அந்த நட்பின் அடிப்படை காரணங்களைக் கொண்டு சரியென சொல்வதும் அண்மைக் கால சினிமாக்களில் நடந்தேறி வருகிறது. ஆனால் அதற்கு எதிர்மறையான கருத்தைப் பதிவு செய்கிற விதத்தில் இக்கதை களம் அமைக்கப்பட்டுள்ளது. சமூகத்துக்கு எதிராக எந்த வழியைப் பின்பற்றினாலும் அது தவறே என்பது இந்தப் படத்தின் திரைக்கதை. படித்து முடித்தவர்களுக்கு வேலை கிடைக்காமல் போனாலும், காதலில் தோல்வி ஏற்பட்டாலும், குடும்ப சூழல்களால் பாதிக்கப்பட்டாலும் அதற்கு சமூகமே காரணம் என்ற கருத்து தவறானது. அதற்கு எதிரான சம்பவங்களைக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. தேவகலா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சஞ்சீவ்முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். மலையாள வரவு ஸ்ரீரக்ஷா, அஸ்வினி ஆகியோர் கதாநயாகிகளாக நடிக்கின்றனர். "தலைவாசல்' விஜய், பாலாசிங் உள்ளிட்டோர் முக்கிய வேடங்கள் ஏற்க, இப்படத்தை எழுதி இயக்குகிறார் சந்தோஷ் கோபால்.

சிம்புதேவன் - விஜய் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு "புலி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சரித்திரக் காலப் பின்னணியைக் களமாக கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டு விட்டது. இரட்டை வேடங்கள் ஏற்று விஜய் நடிக்க ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின் ஸ்ரீதேவி இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வருகிறார். சரித்திரக் கால கதை என்பதால் ஸ்ரீதேவி ராணி வேடம் ஏற்று நடிக்கிறார். 30 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், படத்துக்கு பெயர் வைப்பதில் தாமதம் ஏற்பட்டது. படத்தின் கதையை எந்த விதத்திலும் வெளிக்காட்டி விடாத தலைப்பை படக்குழு தேர்வு செய்து வந்தது. இந்நிலையில் "புலி' என்ற பெயர் படத்துக்கு தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. பாடல் காட்சிகளுக்காக அரங்குகள்  ஏவி.எம். ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் விஜய்யுடன் ஹன்சிகா பங்கேற்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com