

நீங்கள் ஒரு புத்தகப் புழுவா? புத்தகம் படிக்காமல் உங்களால் இருக்க முடியாதா? உங்களுக்கு மிகவும் படித்த புத்தகம் எது? என்று வாசகர்களிடம் கேட்டிருந்தோம். அதற்கு வந்து குவிந்தவை நிறைய. அவற்றில் சிலவற்றை வாசகர்களுக்கு இங்கே அளிக்கிறோம்.
என் சரித்திரம் - உ.வே.சாமிநாதையர்
அறுபது ஆண்டுகளுக்கு மேல் என் எண்ணச் சுழலில் அசை போட்டுக் கொண்டிருந்த எண்ணங்களை வயதான காலத்தில் வடித்திருக்கிறேன். இன்றைய இளைஞர்கள் நிறைய படிக்கிறார்கள்; மறுக்கவில்லை. அவர்கள் படிக்கும் நூல்களுடன் "என் சரித்திரம்' என்ற நூலையும் படிக்க வேண்டும் என்பது என் அவா! என் சரித்திரம் சொல்லும் செய்திகள் நம் தமிழ் இளைஞர்களுக்குப் போய்ச் சேர வேண்டும்.
அப்படி என்ன சொல்கிறது அந்நூல்? நூற்றுஐம்பது ஆண்டுகளுக்கு முன் நம் தமிழகம் எப்படி இருந்தது? நமது சமயம், மரபு, மொழி, கலாசாரம், பண்பாடு, நாகரிகம் இவை எல்லாம் எப்படி இருந்தன? என்பனவற்றை தெள்ளத்தெளிவாய் தன் எழுத்து நடைத்திறத்தால் ஆவணமாகப் பதிவு செய்திருக்கிறார் உ.வே.சாமிநாதயைர்.
பல காலமாக மங்கி மறைந்து கிடந்த தமிழ் அன்னையின் அணிகலன்களை மீட்டு, துலக்கி மெருகிட்டு அணிவித்து அவளுக்கு அழகு பார்த்தவரின் கதைதான் "என் சரித்திரம்'. செல்லரித்த ஏடுகளாக இருந்த தமிழ் இலக்கியங்களை நாடு பூராவும் பயணம் செய்து தேடிக் கண்டுபிடித்து நம் மொழியின் சிறப்பை உலகத்துக்கு அளித்தவரின் கதைதான் "என் சரித்திரம்'.
அவர் இல்லாவிட்டால் சங்க இலக்கியம் இல்லை! சீவகசிந்தாமணி, மணிமேகலை, சிலம்பு போன்ற காப்பியங்களையெல்லாம் எப்படிப் பதிப்பித்தார்? அதற்காக அவர் பட்ட இடர்பாடுகள், துன்பங்கள், அவமானங்கள் எல்லாவற்றையும் பற்றி "என் சரித்திர'த்தில் கூறியிருக்கார்.
அய்யரின் ஒப்பற்ற உழைப்பின் பயனைப் பறைசாற்றுவது "என் சரித்திரம்' என்னும் நூல். நீங்களும் படியுங்கள். நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!
-ஆர்.கோபாலகிருஷ்ணன், திருச்சி.
வாடாமல்லி - சு.சமுத்திரம்
சு.சமுத்திரம் எழுதிய "வாடாமல்லி' என்ற நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும். எடுத்துக்கொண்ட கருவை மேலோட்டமாக எழுதாமல், கதைக்காக கருத்தைப் படைக்காமல், கருத்திற்காக கதையைப் படைத்திருக்கிறார்.
திருநங்கையரின் வாழ்க்கை முறையினையும், அவர்கள் சமுதாயத்தில் சந்திக்கும் போராட்டங்களையும் பற்றிய கதை இது. சுயம்புவாக வரும் கல்லூரி மாணவரின் உடலில் திடீரென்று ஏற்படும் மாற்றங்களால் அவன் திருநங்கையாக மாறுவதில் கதையை ஆரம்பித்து இறுதிவரை உயிரோட்டத்தைக் கொடுத்துள்ளார். திருநங்கையரை (அலி) பார்த்து ஏளனம் செய்பவர்கள் இந்நூலினைப் படித்தால் நிச்சயம் இரக்கமாவது கொள்வார்கள். சுயம்பு, தமக்கையின் சேலை, வளையல்களை அணியும்பொழுதும், காதலனுக்குக் கடிதம் எழுதும்பொழுதும், இந்திரா காந்தியின் பெருமைகளைக் கூறும்பொழுதும், கூத்தாண்டவர் நிகழ்ச்சியின் பொழுதும் நம் மனதில் என்றும் நீங்காமல் நிற்கிறார். கதையைப் படித்து முடித்த பிறகும் அதன் தாக்கம் நம் மனதில் நிற்கின்றது. இது எழுத்தாளரின் வெற்றியாகும். இந்த "வாடாமல்லி' என்றும் மணம் வீசும்.
-தனுஜா ராஜன், தேனி.
பெண்ணின் பெருமை (அல்லது)
வாழ்க்கைத் துணை- திரு.வி.க.
பெண்ணின் பெருமை (அல்லது) வாழ்க்கைத் துணை என்ற தலைப்பில் தமிழ்த்தென்றல் திரு.வி.க. உரையான இந்நூல் என்னை மிகவும் கவர்ந்து கொண்டிருக்கிறது. எனது அலுவலக மேசையை அலங்கரிக்கும் இந்நூலில் திரு.வி.க. ""ஆண்-பெண், பெண்ணின் முதன்மை, பெண்ணுரிமை, பெண் வளர்ப்பு, இறைவழி, இயற்கை அறம், திருமணம், இன்ப வாழ்வு, பிள்ளைப்பேறு, பெண்ணலன், மதியிலர், கைம்மை, பெண்மை - தாய்மை - இறைமை'' எனும் தலைப்புகளின்கீழ் வாழ்க்கையின் சாரம்சங்களை முத்து முத்தாக வழிகாட்டுகிறார். ஆண்-பெண் சக்தி-சிவம் குறித்த கருத்துகள் இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு எளிதில் புரியும் வகையில் எளிய உரைநடையில் இந்நூலில் இருப்பது கண்டு நான் வியக்கிறேன்.
மணம் முடிக்கும் ஒவ்வொருவரும் இந்நூலை வாசித்தால் பெண்மையின் அறம், புனிதம், இறைமை கண்டுணர்வர். பெண் பற்றிய சமுதாயப் பார்வை மாறுபடும். ஒழுக்க சீடராகவும், நல்வாழ்வு பெற்ற சான்றோராகவும் இருப்பர் என்பது திண்ணம்.
-நா.சக்திவேல், திருப்பத்தூர்.
சோளகர் தொட்டி - ச.பாலமுருகன்
இந்நூலாசிரியர், ச.பாலமுருகன் வழக்குரைஞர் மட்டுமல்லாது பழங்குடி மக்களின் பண்பாடு, வாழ்க்கை, தொன்மங்கள் மற்றும் வனம் போன்றவற்றுடன் தனக்குள்ள பிணைப்பை இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நூல் கர்நாடக மாநில மலை அடிவாரத்திலுள்ள "சோளகர் தொட்டி' என்ற கிராமத்து மக்களைப் பற்றியது. ஆசிரியர் அந்தக் கிராமத்தில் தான் கண்டவற்றையும் சேகரித்த செய்திகளையும் நாவலாக்கித் தந்திருக்கிறார்.
கர்நாடகக் காவல் துறையினர் சந்தன வீரப்பன் தேடு வேட்டையில் இந்தக் கிராமத்து மக்கள் பட்ட பாடு காவல்துறைக் கஸ்டடியில் நிர்வாணமாக்கப்பட்டு அவர்கள் அனுபவித்த கொடுமை, (பெண்கள் உள்பட) அந்தக் கிராமத்து வாலிபன் ஒருவன் வனத்திற்குள் சென்றபோது ஒரு கரடியுடன் போரிட்டு அதைக் கொன்று தோளில் தூக்கி வந்த வீரம், இந்நூலைத் தொட்டவர்கள் முழுவதையும் படிக்காமல் கீழே வைக்க முடியாது என்ற அளவிற்கு உண்மைச் செய்திகள் விரவிக் கிடக்கின்றன.
-அருவியூர்க் கம்பன், திருச்சி.
பொன்னியின் செல்வன் - கல்கி
எனது பத்தாவது வயதில் இந்த சரித்திர நாவலைப் படிக்க நேர்ந்தது. (தற்போது என் வயது 64) எனது பத்தொன்பது வயதில் கல்லூரியில் படிக்கும்போது, சொந்தமாக மலிவு விலையில் (1970-இல்) (ரூ.40) மணியத்தின் வண்ணப் படங்களுடன் ஐந்து பாகங்களையும் வாங்கி பொக்கிஷமாக இன்றுவரை பாதுகாத்து வருகிறேன்.
கதையின் நாயகன் அருண்மொழிவர்மன், பிற்காலத்தில் ராஜராஜ சோழன் என்றாலும் வந்தியத்தேவனின் சாகசம், வீரம், காதல், நட்பு போன்றவையே கதையின் அடிநாதமாய் விளங்கும். குந்தவையுடன் அவன் சந்திப்பு மிகவும் இதமானவை. மனதை வருடி, மீண்டும் எப்போது சந்திப்பார்கள் என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. நந்தினியின் சாகச காதல் வலையில் விழாமல் தப்பிக்கும் அருமையான ஒரே கதாபாத்திரம். வானதி, பூங்குழலி, மணிமேகலை, ஆதித்த கரிகாலன், பழுவேட்டரையர், சேந்தன் அமுதன், கந்தன் மாறன், மதுராந்தகன் - என்ற எண்ணற்ற எத்தனை கதாபாத்திரங்கள். ஐந்து பாகங்களுக்கும் அருமையான தனித் தலைப்புக்கள். எளிமையான நடை, கண்ணுக்கு இதமான வண்ண வண்ணப் படங்கள், ஏராளமான சரித்திரக் குறிப்புச் சான்றுகள் என அள்ள அள்ளக் குறையாத தங்கச் சுரங்கமே கல்கியின் பொன்னியின் செல்வன்.
-ஆர்.சுந்தரம், கும்பகோணம்.
பாண்டிமாதேவி - நா.பார்த்தசாரதி
நா.பார்த்தசாரதியின் "பொன்விலங்கு', "குறிஞ்சி மலர்', "ஆத்மாவின் ராகங்கள்', "மணிபல்லவம்', "சமுதாய வீதி' போன்ற நாவல்கள் அக்கால வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தன. அதற்கு முன்னரே அவர் கல்கியில் எழுதிய நாவல்தான் "பாண்டிமாதேவி'.
கி.பி.900 முதல் 1190 வரையில் தமிழ்நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களில் மூன்றாம் இராசசிம்ம பாண்டியனைப் பற்றி சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்புகளை வைத்து இந்த சரித்திர நாவலைப் படைத்திருக்கிறார், நா.பா.
1960-இல் வெளியான (மங்கள நூலகம் - சென்னை - 34) இந்த "பாண்டிமாதேவி'யின் கதையும், உள்ளடக்கமும் மனதை உருக்குவதாக உள்ளது. சோழ மன்னன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வர, போரில் சடையவர்ம பராந்தக பாண்டியன் இறந்துபட, அவருடைய குமாரன் இராசசிம்ம பாண்டியன் இலங்கைத் தீவுக்கு ஓடி விடுகிறான். கணவனை இழந்த கோப்பெருந்தேவியான வானவன் மாதேவியார் ஆட்சிக்கட்டில் ஏற வேண்டியதாகிறது. இப்படிப் போகிறது கதை.
கவிதை கலந்த உரைநடையும், உரைநடை கலந்த கவிதையும்தான் நாபாவின் அடையாளங்கள்.
-அவினாசி முருகேசன்,
காரமடை.
தி.க.சி.யின் நாட்குறிப்புகள் - தி.க.சி.
கடந்த மார்ச் 25, 2014 அன்று காலஞ்சென்ற மூத்த இலக்கிய கர்த்தா தி.க.சி.யினுடைய "தி.க.சி.யின் நாட்குறிப்புகள்' நூலினை மிகச் சமீபத்தில் வாசித்தேன். 1948-ஆம் ஆண்டு அவருடைய 23-ஆம் வயதில் சுமார் 304 நாட்கள் எழுதப்பட்ட நாட்குறிப்புகளின் தொகுப்பே இந்நூல். "1948ஆம் ஆண்டில் நானெழுதிய நாட்குறிப்புகள் ஒரு முதிரா இளைஞனின் இலட்சியத் தேடல்களையும், பல்வேறு உளநிலைகளையும், பலவீனங்களையும் ஓரளவுக்கு பிரதிபலிக்கிறது' என இந்நூலுக்கான முன்னுரையில் தனக்கே உரித்தான சுயவிமர்சனத் தொனியோடு தி.க.சி. குறிப்பிட்டிருக்கிறார்.
"காலையில் வல்லிக்கண்ணன் சகோதரர்கள் 9.30 மணிக்கு வந்தனர். ஆபீஸ் ஜோலியை முடித்துவிட்டு பொன்னு கடைக்குச் சென்றோம். அதிர்ஷ்டம், விதி, தர்மம், கடவுள் - இவைகளில் அசோகனுக்கு அதிக நம்பிக்கை வந்துவிட்டதென்றும், அவைகளைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்னவென்றும் வ.க. கேட்டார். முயற்சி, திட்டமிட்ட உழைப்பு, தன்னம்பிக்கை, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில்தான் எனக்கு நம்பிக்கை என்றேன்..' என நாட்குறிப்பேட்டின் ஓர் இடத்தில் தி.க.சி. குறிப்பிட்டிருப்பதை வாசிக்கின்றபோது, அவர் எந்த வர்க்கத்தைச் சார்ந்தவர் என நம்மால் கிரகிக்க முடிகிறது.
இந்நூலானது வளர்ந்து வருகின்ற ஓர் இளம் எழுத்தாளனின் தன் விவரக் குறிப்புகளாக மட்டுமல்லாமல், புதுமைப்பித்தன் இயற்கை எய்தியது, காந்தி சுட்டுக் கொல்லப்பட்டது, பொதுவுடைமை இயக்கத்துக்கும் அதனுடைய ஏடான ஜனசக்தி தடை விதிக்கப்பட்டது. கவிக்குயில் மலருக்கான லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது என 1948ஆம் ஆண்டில் நிகழ்ந்த பல்வேறு சமூக, அரசியல், கலை, இலக்கிய நிகழ்வுகளைப் பிரதிபலிக்கின்றது. அந்த வகையில், இந்நூல் ஓர் வரலாற்றுப் பெட்டகம்.
-ரா.காந்திமதி ராஜேந்திரன், திருநெல்வேலி.
குடும்ப விளக்கு - பாரதிதாசன்
ஒரு குடும்பம் இருண்ட வீடாய் இருக்கக் கூடாது என்பதையும், நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்பதையும், ஒரு தலைவன் தலைவியிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைமைகளையும் தமிழ்ப் பண்பாட்டோடு விளக்குகின்றார் புரட்சிக்கவி.
பொழுது புலர்ந்தது முதல் இரவு வரை தலைவியின் பல்வேறு கடமைகளையும் அவள் தம் தலைவனுக்குச் செய்யும் பணிவிடைகளையும் பிள்ளைகளுக்கு ஆற்றும் செயல்பாடுகளையும் குடும்பவிளக்கு பகுதி ஒன்றில் "ஒரு நாள் நிகழ்ச்சி' என்ற தலைப்பின் கீழ் தெள்ளத் தெளிவாய் விளக்குகிறார். விருந்தோம்பலை இரண்டாம் பகுதியிலும், தமிழ்முறையில் திருமணம் நடத்துவதை மூன்றாம் பகுதியிலும், தன் மகனின் மக்கட்பேற்றை நான்காம் பகுதியிலும், பேரன் பேத்தியைக் கண்ணாரக் காண்பதை ஐந்தாம் பகுதியிலும் விளக்குகிறார்.
இவ்வாறாகத் தமிழ்நாட்டில் தமிழ்ப் பண்பாட்டுடன் தமிழர்களின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டியுள்ள பான்மை புரட்சிக் கவிஞர் ஒருவருக்கே உண்டு என்பதை அவரின் குடும்ப விளக்கு ஒன்றே ஒளியூட்டிக் காட்டுகிறது.
இரா.வேதநாயம், வடபாதிமங்கலம்.
நானும்... இந்த நூற்றாண்டும்... - கவிஞர் வாலி
"வாலிபக் கவிஞர் வாலியின் "நானும்... இந்த நூற்றாண்டும்...' என்ற புத்தகம் எனக்குப் பிடித்த புத்தகம் ஆகும்.
இச் சுயசரிதை நூலில், அவர் சுய தம்பட்டம் அடிக்கவில்லை; ""ஒரு நதிபோல விழுந்தும் எழுந்தும் ஓடி'' வாழ்வின் உயர்ந்த இடத்தை அடையும் முயற்சியில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கூறுகிறார்; பாட்டுக் கோட்டையாம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், கவியரசு கண்ணதாசனும் திரையுலகில் கோலோச்சிய காலகட்டத்தில், தாமும் கோடம்பாக்கத்தில் கடை விரித்து வென்ற வரலாற்றைக் கூறுகிறார். "கப்பல்களுக்கு நடுவே கட்டுமரத்தோடு கடலில் இறங்கி'' (ப.4.) வென்ற அவரது சரிதை நமக்கெல்லாம் உத்வேகத்தைத் தரும். திரையுலகம் மட்டுமல்லாது அரசியல், ஆன்மிகம், இசை, இலக்கியம் எனப் பல துறை சார்ந்த விஷயங்களை வகுத்தும், தொகுத்தும் வழங்கிய அவரது அனுபவங்கள் கற்போருக்குப் பாடம் கற்றுத் தரும் ஆசான்கள்.
வாலி, நூலின் தொடக்கத்தில் "என்னுரை' என்ற தலைப்பில் கூறுவதுபோன்று இந்நூல் ""சோர்ந்த உள்ளங்களுக்கெல்லாம் சுறுசுறுப்பு ஊசியை'' ஏற்றுகிறது. (ப.ண்ஸ்) வள்ளலாரையும், பாரதியாரையும், காண்டேகரையும் மற்றும் பல சான்றோரையும் தேவையான இடங்களில் மேற்கோள் காட்டும் நேர்த்தி நம் நெஞ்சை அள்ளுகிறது. தமக்குத் துணை நின்ற பல்துறை வல்லுநர்களை நன்றியோடு குறிப்பிடும் அவரது செய்ந்நன்றியறியும் செம்மைக்குணம் நம்மை வியக்க வைக்கிறது. போகிற போக்கில் இசைஞானி இளையராஜா, எழுத்தாளர் கல்கி, பெருந்தலைவர் காமராஜர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவியரசு கண்ணதாசன், பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ், படத்தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் முதலான பலருடைய அரிய குணங்களைப் பிட்டு வைக்கும் பேரழகு நம் இதயங்களை விட்டு நீங்காது நம்மைச் சொக்க வைக்கிறது. துப்பறியும் நாவலில் இருப்பது போன்ற விறுவிறுப்பு அவரது நூல் மாட்டு நம்மை விருப்பம் கொள்ள வைக்கிறது.
கவிஞர் வாலி தம் நூலில் ஓரிடத்தில் ""வாசிக்க வைக்கவும் மனிதனை யோசிக்க வைக்கவும் எத்தனையோ அறநூல்கள் இருக்கின்றன'' (ப.221) எனக் குறிப்பிடுவார். அவருடைய இந்நூலே இக்கூற்றுக்குத் தக்க எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை.
-முனைவர் பா.நாகலக்ஷ்மி, விருதுநகர்.
வெல்லிங்டன் - சுகுமாரன்
எழுத்தாளர் சுகுமாரனின் "வெல்லிங்டன்' நாவலினை அண்மையில் வாசிக்க நேர்ந்தது.
நீலகிரியில் படகர் குடியேற்றம், வெலிங்டன் உருவான விதம் இந்த நாவலின் பின்புலமாக உள்ளன. அத்தகைய பின்புலத்தை உருவாக்க, நாவலாசிரியர் சுகுமாரன் எடுத்துள்ள முயற்சியும், ஆதாரத் திரட்டல்களும் வாசகர்களை வியப்பில் ஆழ்த்தக் கூடியவை.
நீலகிரியை ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்து, அதன் வளத்தைச் சுரண்டி, பூர்வகுடிகளின் நிலங்களை, வெலிங்டன் ராணுவப் பிரதேசமாக ஸ்தாபிப்பதில் தொடங்கும் கதை, அப்பகுதியில் வாழ்ந்த எளிய மனிதர்களுக்கு இடையேயான குடும்ப உறவுகள், நிலவும் காதல், நம்பிக்கைகள், கசப்புணர்வு, பகைமை, நெகிழ்ச்சி, மரணங்கள், மதச் சடங்குகள் முதலான உணர்வுகளை நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் சுகுமாரன். பிரிட்டிஷ் காலத்திலிருந்து சமகாலம் வரைக்குமான சமூக அரசியல் நடப்புகளை நுட்பமாகச் சித்திரம் போல் தீட்டியுள்ள விதம் பிரமிப்பினை ஏற்படுத்துகின்றது. 343 பக்கங்களைக் கொண்ட இந்நாவல் ஒரு வரலாற்று ஆவணப் பதிவு எனச் சொல்லலாம்.
கு.இரவிச்சந்திரன், ஈரோடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.