
புகையிலையைத் தூளாக்கி மூக்கால் உறிஞ்சிச் சுகம் காண்கின்றனர் சிலர். புகையிலைத்தூள் உடலுக்குள் சென்றால் மூளை பாதிப்பும் மனநலபாதிப்பும் ஏற்படாதா? அதனைத் தவிர்ப்பது எப்படி?
-தி.ரங்கசாமி, கிழக்கு சித்திரை வீதி, ஸ்ரீரங்கம்.
புகையிலையில் உள்ள நிகோட்டின் என்ற ரசாயனம் அதைப் பயன்படுத்துபவர்களை அந்தப் பழக்கத்துக்கு அடிமையாக்கிவிடுகிறது. புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தும்போது அதில் உள்ள நிகோட்டின் மிக விரைவாக மூளைக்குச் சென்றதும் மிகவும் சுகமாக இருப்பது போன்றதொரு உணர்வை ஏற்படுத்துகிறது.
இந்த நிக்கோட்டின் எனப்படும் ரசாயனமானது கோகேயின் (cocaine) என்னும் பொருளுடன் சேர்ந்து கொக்கோ தாவரத்தின் இலைகளிலும் காணலாம். புகையிலையின் உலர் நிறையில் 0.6 - 3.0 நிக்கோட்டீன் உள்ளது. இது புகையிலைச் செடியின் வேரில் உருவாக்கப்பட்டு இலையில் சேமிக்கப்படுகிறது. இது ஒரு தாவர உண்ணி எதிர்ப்பு வேதிப்பொருள் ஆகும். இதனால் முன்னர் நிக்கோட்டின் பூச்சிக்கொல்லிகளில் பயன்படுத்தப்பட்டது.
புகையிலை சுவையில் காரம், கசப்பு, துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவையுடையது. உள்ளே சென்றவுடன் விரைவாக ஊடுருவும் தன்மையுடையது. சூடான வீரியம் கொண்ட புகையிலை மூளைப்பகுதியில் பொடி வடிவத்தில் வந்து சேரும்பொழுது நாடி நரம்புகளில் வேகமாகப் பரவி ஒருவிதமான இன்பத்தைத் தரும் மயக்கத்தைத் தோற்றுவிக்கிறது.
புகையிலையைக் காய வைத்து அதைச் சுண்ணாம்போடு போட்டு இடிப்பார்கள். நன்கு மைய இடிக்க இடிக்க அதில் கார நெடி கிளம்பும். அதை அப்படியே பயன்படுத்தினால் மூக்கினுள் அதிக எரிச்சலை ஏற்படுத்துமென்பதால் நெய்யும் சேர்த்து இடிப்பார்கள். இப்படி மைய இடித்த பொடிதான் மூக்குப்பொடி. அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்தப் புகையிலைப் பொடி மூக்கு வழியாகச் சென்று மூளைக்கு ஒரு மந்தமான பரவச நிலையைக் கொடுக்கும். இதைச் சுகமாயிருப்பதாய் எண்ணி அடிமையாகி விடுகின்றனர். மனிதனுடைய மூளையில் நுண்ணிய நரம்புகள் அணுக்களின் மூலமாக கோர்த்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அமைந்துள்ளன. நரம்புவழிச் செய்திகளை அவை ரசாயனிகள் மூலம் பகிர்ந்து கொள்கின்றன. நரம்பு அணுக்களின் மேல் பகுதிகளில் அமைந்துள்ள செய்தி ஏற்கும் பகுதிகளில் இந்த ரசாயனிகளின் செய்தித் தொகுப்பானது சரியான வகையில் பொருந்தும் நிலையில் அந்த நரம்பணுக் கூட்டமானது தூண்டிவிடப்படுகிறது. நிக்கோட்டினுடைய மூலக்கூறு மூளையிலுள்ள அசிட்டைல்காலின் எனும் ரசாயனியைப் போன்ற வடிவத்துடன் இருப்பதால் அதற்குத் தகுந்த செய்தி ஏற்கும் மூளை அணுக்களைத் தூண்டிவிடுகிறது. அதாவது நிக்கோட்டின் அசிட்டைல்காலின் செய்தி ஏற்கும் பகுதியைச் சென்றடைந்து அசிட்டைல்காலின் செய்யக்கூடிய தசைஅசைவுகள், மூச்சுவிடுதல், இதயத்துடிப்பு, படித்தறிதல், நினைவாற்றலைத் தூண்டுதல் போன்ற வேலைகளை உண்மையான அசிட்டைல்காலின் செய்வதுபோன்ற ஒரு மாயையை ஏற்படுத்துகிறது. மேலும் சமீபத்திய ஆராய்ச்சியாளர்கள் நிக்கோட்டின் மூளையில் உள்ள டோபோமைன் எனும் ஒரு ரசாயனியை அதிகமாக்குவதாகவும், அது இன்பம் மற்றும் வெகுமதியடைந்தது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துவதாகவும் கூறுகிறார்கள். இதன் காரணமாகவே கோகைன் மற்றும் ஹெராய்ன் போன்ற தீயநெறியை ஏற்படுத்தும் பொருட்களின் மீது சுகத்தைத் தூண்டும் இந்த டோபோமைன் எனும் ரசாயனி அடிமைப்பட்டுவிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
சிலர் பல்வலியைப் போக்குவதற்காக மூக்குப் பொடியை வலி உள்ள இடத்தில் அழுத்தி வைப்பார்கள். ஆனால் உண்மையில் அது ஒரு வலிநிவாரணி அல்ல. அப்பகுதியை அது மரத்துப்போகச் செய்வதால் வலிநிவாரணி என்று தவறாகக் கருதுகிறார்கள். உண்மையில் இது பல்லில் வைக்கும்பொழுது உமிழ்நீர் வழியாக மூளைக்கும், வயிற்றுக்கும் சென்று வாய், உதடு, தொண்டை, உணவுக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கல்லீரல், வயிறு, கணையம் என உடல் உள் உறுப்புக்களையும் பாதிக்கிறது. மூக்குப்பொடி பழக்கம் ஆரம்பத்தில் சுகமானதாக இருந்தாலும் எதிர்காலத்தில் மூளையை நேரடியாகப் பாதிப்பதோடு மட்டுமின்றி இரத்தக்குழாய்கள் வழியாகச் சென்று இதய ரத்தக் குழாய் அடைப்பு நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல்வேறு பிரச்னைகள் வருவதற்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தும்பொழுது பாதிப்பு எப்போது ஏற்படும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அவரவர் உடல் அமைப்பு, நோய் எதிர்ப்பு சக்தியைப் பொருத்து ஒரு சில வருடங்களில் இருந்து, 20-25 ஆண்டுகள் கழித்தும்கூட பாதிப்பு ஏற்படலாம். ஆனால், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்தும்போது ஒரு சில நிமிடங்களில் இருந்தே பாதிப்பு விலகத் தொடங்கிவிடுகிறது.
மூக்குப்பொடி, சிகரெட் போன்ற பழக்கங்கள் அதை அனுபவிப்பவரை மட்டுமின்றி அருகிலிருப்போரின் வாழ்நாட்களையும் அரித்துக் குறைக்கிறது. இப்பழக்கத்திலிருந்து எத்தனை விரைவாக விடுபடுகிறாரோ அத்தனைக்கத்தனை நல்ல பலன் விரைவில் கிட்டும். இப்பழக்கத்திலிருந்து விடுபட மூக்குப்பொடி, சிகரெட் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும் நினைவு வரும்பொழுதெல்லாம் ஆயுர்வேதமூலிகை சூர்ணமருந்தாகிய நாசிகா சூரணம் எனும் வாசனைச் சூரணத்தை ஒரு சிட்டிகை அளவு மூக்கினுள் செலுத்திக் கொள்வதால் நீர்க்கோர்வை, தலைவலி, தலைபாரம், வாசனையறியாதிருத்தல் போன்ற உபாதைகள் நன்றாகக் குறையும். மூக்கு வழியாக நீரைப் பெருக்கி அதை வெளியேற்றிவிடுவதால் தலைப்பகுதியைச் சார்ந்த பல உபாதைகளுக்கும் ஒரு நிவாரணமாகவும் அது அமையும்.
(தொடரும்)
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.