திரைக்கதிர்

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா தனக்கென தனி முத்திரை பதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். "பட்டத்து யானை' படத்தின் மூலம் விஷால்
திரைக்கதிர்
Updated on
3 min read

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா தனக்கென தனி முத்திரை பதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். "பட்டத்து யானை' படத்தின் மூலம் விஷால் ஜோடியாக அறிமுகம் கிடைத்தும் எதிர்பார்த்த திருப்பு முனை கிடைக்கவில்லை. இதையடுத்து புதிய படங்களில் நடிப்பதைத் தள்ளி வைத்தார். அவரின் அடுத்த திட்டம் என்ன என்பது குறித்த தகவல்களும் பெரியஅளவில் இல்லை. இந்நிலையில் அவருடைய தந்தை அர்ஜுன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தில் கதக் நடனம் ஆடும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் ஐஸ்வர்யா. கதக் நடனத்துக்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததன் காரணமாகவே மற்ற வாய்ப்புகள் குறித்து அவர் யோசிக்கவில்லை என கூறப்படுகிறது. நடிகராக மட்டுமின்றி ஓர் இயக்குநராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட அர்ஜுன், தற்போது தனது மகளின் வளர்ச்சியில் பங்கெடுக்கும் விதமாக இப்படத்தை இயக்குகிறார்.

30 வயதைக் கடந்தாலும் தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கான மார்க்கெட் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. இது நம்ம ஆளு,  நண்பேன்டா, தனி ஒருவன்,  மாஸ்,  நானும் ரவுடிதான் என ஓய்வு இல்லாமல் நடித்துக் கொண்டிருப்பதுடன் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம், அஜித் நடிக்கவுள்ள புதிய படம் என அடுத்தடுத்து காத்திருக்கிறது படங்கள். இதைத் தவிர தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடிக்கிறார். இதனால் நயன்தாராவின் சம்பளமும் படத்துக்கு படம் உயர்ந்து வருகிறது. ரூ.5 லட்சத்தை தனது முதல் சம்பளமாகப் பெற்ற நயன்தாரா, தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக இப்போது உள்ளார். குறைந்த பட்ஜெட்டில் படங்களை உருவாக்கும் மலையாள சினிமாவில் நடிப்பதற்கு கூட அதிகச் சம்பளம் கேட்டுள்ளார். மற்ற மொழிகளில் ரீமேக் ஆனால் அதிலும் என்னைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் போட்டுள்ளாராம்.

அமானுஷ்யங்களின் பின்னணி, முன் ஜென்மத்தின் தொடர்தல்கள், பேய் என  த்ரில்லர் பாணியில் உருவாகும் கதைகளுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் அடுத்து உருவாகி வரும் படம் "ஸ்வர்ண மகால்.' அடுக்கு மாடி குடியிருப்பில் தனியாக வசித்து வரும் பெண் தவறி விழுந்து ரத்த வெள்ளத்தில் இறக்கிறாள். சட்டென நிகழ்ந்து விடும் இந்த விபத்து அங்கிருக்கும் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் நடக்கிறது. இனி காப்பாற்ற முடியாது என அனைவரும் முடிவுக்கு வந்த நிலையில், சிறிது நேரத்தில் அவள் உயிருடன் வருவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். அப்பெண் தவறி விழுந்ததன் காரணம்?  ரத்த வெள்ளத்தில் மிதந்தவள் உயிருடன் திரும்பியது எப்படி? அவளுக்குள் இருக்கும் மாய சக்திகளின் பின்னணி? ஆகியவற்றை நோக்கிப் பயணிப்பதாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அமானுஷ்ய பின்னணியில் உருவாகும் படத்தில் ஒரு குடும்பமோ அல்லது ஒரு சில உறுப்பினர்களோ அச்சம் கொள்வது போல்தான் கதை அமைக்கப்படும். ஆனால் இதில் 100-க்கும் மேற்பட்டோர் அச்சம் கொள்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுமுகம் சாதன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். மனோஜ், ஆயிஷா, சுமன் ஷெட்டி, ரத்தினகுமாரி நடிக்கின்றனர்.

ஆஸ்கர், கிராமி விருதுகள் கொடுத்த வெளிச்சத்தின் காரணமாக வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளில் அதிகமாகப் பங்கு கொள்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். சினிமா மற்றும் ஆல்ப பணிகளைத் துறந்து இதற்காக மாதக் கணக்கில் பயணங்களை மேற்கொள்கிறார். வருடத்துக்கு ஒரு முறை இந்த பயணங்களை மேற்கொள்ளும் ரஹ்மான், இந்த ஆண்டு 3 மாத கால பயணமாக வட அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த 21-ஆம் தேதி மும்பையிலிருந்து தனது இசைக் குழுவினருடன் பயணமான ரஹ்மான், ஜூன் 14-ஆம் தேதி வரை இப்பயணத்தை மேற்கொண்டு பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கடந்த 20 வருட இசைப் பயணத்தில் உருவான அவரது பாடல்கள் தேர்வு செய்யப்பட்டு இதில் அரங்கேற உள்ளன. ""அமெரிக்காவின் வசந்த காலத்தில் இப்படியொரு பயணம் அமைந்திருப்பது பரவசத்தை அளித்துள்ளது. இதுவரை நிகழ்ந்த பயணங்களில் இது வித்தியாசமான அனுபவங்களை கொடுக்கவுள்ளது. இதை பகிர்ந்து கொள்வதில் சந்தோஷமும், பெருமையும் அடைகிறேன்'' என மகிழ்ந்திருக்கிறார் ரஹ்மான். பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பீலேயின் வாழ்க்கை சரித்திர படத்துக்கு தற்போது இசையமைத்து வரும் ரஹ்மான், "ஜெய் ஹோ' பற்றிய செய்தி படம் ஒன்றையும் உருவாக்கி வருகிறார்.

தமிழ் ஹீரோக்களின் படங்களுக்கென தெலுங்கு சினிமாவில் தனி மார்க்கெட் உருவாகியிருப்பதை போல், தெலுங்கு நடிகர்களுக்கென தமிழ் சினிமாவிலும் தனி மார்க்கெட் உண்டு. சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோரது படங்கள் தெலுங்கு மார்க்கெட்டை குறி வைத்து உருவாக்கப்படுவதுண்டு. "சிங்கம் 2', "சகுனி', "பாண்டிய நாடு' உள்ளிட்ட படங்கள் தெலுங்கில் மாபெரும் வெற்றியைப் பெற்றன. தற்போது கார்த்தி, விஷால் ஆகியோரை தெலுங்கு நேரடி படங்களில் நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதே போல் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் படங்கள் இங்கு தனித்துவத்தைப் பெற்று வருகின்றன. இதனால் அவரது படங்கள் இங்கே அதிக அளவில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. சமீபத்தில் அவரது நடிப்பில் உருவான "தெலுங்கில் நம்பர் 1' என்ற படம் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. த்ரில்லர், ஆக்ஷன், காதல் என கமர்ஷியல் படமாக உருவான இப்படம் தற்போது "மகேஷ்பாபுவின் இன் நம்பர் 1' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. மகேஷ்பாபு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். ஸ்ரீலெஷ்மி ஜோதி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.என்.பாலாஜி இப்படத்தை தயாரித்து வருகிறார்.

மலிவாகி விட்ட பொழுதுபோக்குச் சாதனங்களால் திரைப்படங்களின் மூலம் வருகிற வருவாய் இப்போது பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தோல்வியைப் பகிர்ந்து கொள்ளும் ஹீரோக்கள் இல்லாமல் போனதே, திரைப்படத் தொழிலின் சரிவுக்கு காரணமாகக் கருதப்படுகிறது. என்ன நடந்தாலும் இதுதான் என் சம்பளம் என்பதால், பல தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க முன் வருவதில்லை. இந்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக தனது கருத்தை வெளியீட்டு இருக்கிறார் இயக்குநர் தாசரி நாராயணராவ். சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்ற அவர், ""ஒரு படத்தை தயாரிக்க ரூ.3 கோடி மூதலிடு செய்தால், ரூ.4 கோடி இழப்பு ஏற்படுகிறது. திரையுலகினரிடையே நிறைய பணம் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதில் உண்மையில்லை. ரெய்டு என்ற பெயரால் அவர்களுக்கு பின்னால் ஓடுகிறார்கள். அரசும், அதிகாரிகளும் வரி செலுத்துபவர்களுக்கு வரிச் சலுகை தர வேண்டும். மொத்தம் 2,340 பிரபலங்கள் மட்டுமே வரி கட்டும் மண்டலத்தில் அடங்குகிறார்கள். இவர்களில் 1,000 பேர் வரி கட்டுகிறார்கள். லாபம் ஈட்டுபவர்கள் மட்டுமே வரி கட்டுகிறார்கள். எல்லோரும் அப்படி லாபம் ஈட்டுவதில்லை. தயாரிப்பாளர்கள் அந்த பட்டியலில் வர வேண்டியவர்கள்'' எனப் பேசியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com