திரைக்கதிர்

கமல் - மணிரத்னம் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கின்றன. கமல் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள "உத்தம வில்லன்' படம் ஏப்ரல் 10-ஆம் தேதி
திரைக்கதிர்
Updated on
3 min read

கமல் - மணிரத்னம் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கின்றன. கமல் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள "உத்தம வில்லன்' படம் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் மணிரத்னம் இயக்கியுள்ள "ஓ காதல் கண்மணி' படமும் முடிந்து இறுதிக் கட்டப் பணிகளை எட்டியுள்ளது. இப்படமும் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாக இருப்பதாகத்  தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிரத்னத்தின் "தளபதி', கமலின் "குணா' ஆகிய இரண்டு படங்களும் 1991-ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று ஒரே நாளில் வெளியானது. "விஸ்வரூபம்' தமிழ்நாட்டு ரிலீசுக்குப் பின் வெளிமாநிலங்களில் 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியானது. அதே நாளில் மணிரத்னத்தின் "கடல்' படமும் வெளியானது. இப்போது 2 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஒரே நாளில் கமல், மணிரத்னம் படங்கள் களம் காண இருக்கின்றன.

காதல், காமெடி, ஆக்ஷன் என மாறி மாறி வலம் வந்துக் கொண்டிருந்த கோலிவுட்டின் டிரெண்ட், இப்போது பேய் படங்களின் கையில் உள்ளது. அடுத்து அந்த வரிசையில் வரவுள்ள படம் "ஒரு நொடியில்.' 500 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவத்தால் இறந்த இளம் பெண் ஆவியாக வந்து கிராமத்தில் உள்ளவர்களை பழி வாங்குகிறாள்.

அதற்கு காரணம் என்ன? அந்த சம்பவத்தின் பின்னணி என்ன? என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லுவதே திரைக்கதை. தமிழகத்தின் வட மாவட்டம் ஒன்றில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. ஒரு நொடியில் யாரோ சிலர் செய்த சம்பவத்தால், 500 ஆண்டுகளுக்குப் பின் அந்த கிராமத்தினர் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் எப்படி காப்பாற்றப்பட்டார்கள்? என்பதற்கு நிஜ சம்பவத்தின் பின்னணியைக் கொண்டு கிளைமாக்ஸ் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.  சிருஷ்டி டாங்கே பேய் பெண்ணாக நடிக்கிறார். மற்றொரு ஹீரோயினாக தபஸ்ரீ நடிக்கிறார். ஆனந்த்ராஜ், சிஸர் மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கவுள்ளனர். எம்.ஏ.சவுத்ரி இயக்குகிறார்.

தமிழ் மற்றும் மலையாள நடிகர்கள் அரசின் வேண்டுகோளை ஏற்று அரசு விளம்பரங்களில் நடிக்கின்றனர். நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டோர் பல அரசு விளம்பரங்களில் நடித்துள்ளனர். கேரள மாநிலத்தில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் திரைப்பட விநியோகம், ஆடியோ, வீடியோ காப்பி உரிமம், சேனல்களுக்கான காப்பி உரிமை போன்றவற்றுக்கு 5 சதவீதம் வாட் வரி விதிக்கப்பட்டது. ஏற்கெனவே 14 சதவீதம் வாட் வரி அமலில் உள்ளது. இதையடுத்து 19 சதவீதமாக வாட் வரி விதித்து இருப்பதற்கு மலையாள திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரள அரசு விளம்பரங்களில் மோகன்லால், மம்மூட்டி, பிருத்விராஜ், திலீப், ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட  நடிகர், நடிகைகள் அவ்வப்போது நடித்து வருகின்றனர்.  5 சதவீதம் கூடுதல் வாட் வரிக்கு  தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கேரள மாநிலத்தின் அரசு விளம்பரங்களில் நடிப்பதில்லை எனவும் நட்சத்திரங்கள் முடிவு செய்துள்ளனர்.

தன் தீவிர முயற்சியால் சி 2 எச் என்ற தனது நிறுவனத்தின் மூலம் தனது "ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தை இயக்குநர் சேரன் நேரடியாக டி.வி.டி.யில் வெளியிட்டார். திரையரங்குகளில் வெளியாகாத இப்படம் தமிழ்நாடு முழுவதும் டி.வி.டி.யாக விநியோகிக்கப்பட்டது. சி 2 எச் நிறுவனத்தின் மாவட்ட முகவர்களை அணுகினால், சில மணி நேரங்களில் டி.வி.டி. வீட்டிற்கு வந்து சேரும். தனது படம் தவிர மற்ற படங்களையும் டி.வி.டி.யில் வெளியிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த "என்னை அறிந்தால்' படம் முறைப்படியாக ஆன்லைனில் வெளியாகி இருக்கிறது. எச்டி தரத்துடன் ஆங்கில சப் டைட்டிலுடன் இப்படம் வெளியாகியுள்ளது. ஆனால், இதை வெளிநாட்டு ரசிகர்கள் மட்டுமே பார்க்கும் வண்ணம் தொழில்நுட்பம் செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகளுக்கான வரவேற்பு குறைந்து வரும் இவ்வேளையில் டி.வி.டி., ஆன்லைன் என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி இருப்பது திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்த பாணியில் இன்னும் பல படங்கள் வெளியாகும் என்பதால் திரையரங்க உரிமையாளர்கள் இது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.

பிரபலங்களின் பெயர்களை படத்தின் டைட்டிலுக்குப் பயன்படுத்துவதால் அப்படங்களுக்கு கூடுதல் வெளிச்சம் கிடைக்கிறது. இதனால் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியோடு பெயர்கள் வைக்கப்படுகின்றன. சில பெயர்களுக்கு அனுமதி வாங்கப்படுவதில்லை. ரஜினி, ஸ்ரீதேவி போன்றவர்கள் தங்களது பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தன் பெயரை பயன்படுத்திய "மை ஹூன் ரஜினிகாந்த்' என்ற ஹிந்தி படத்துக்கு தடை கேட்டார் ரஜினி. இந்நிலையில் தெலுங்கு படமொன்றிக்கு "வேர் இஸ் வித்யாபாலன்' என பெயரிடப்பட்டுள்ளது. பிரின்ஸ், ஜோதி சேத் நடிக்கின்றனர். ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். வித்யாபாலன் பெயரை பயன்படுத்துவதற்கான அனுமதியை அவரிடம் பெறவில்லை என கூறப்படுகிறது. ஆனாலும், இப்பட டைட்டிலுக்கு வித்யாபாலன் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்து வருகிறார். வித்யாபாலனைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் எந்தக் காட்சியும் இல்லாததால், அவரிடம் அனுமதி வாங்கத் தேவையில்லை. ஆனால் இந்த பெயரால் நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது என படக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ""இந்தப் படம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், முழுக் கதையும் தெரியாது. தெரிந்தால் சந்தோஷப்படுவேன். என் பெயரை பயன்படுத்துவதால் எனக்கு எந்த இழப்பும் இல்லை'' என பதிலளித்துள்ளார் வித்யாபாலன்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பகம் அமைக்க இருக்கிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. மன அழுத்தம் காரணமாக தற்கொலை போன்ற உச்சக்கட்ட முடிவுகளுக்கு நடிகர், நடிகைகள் செல்கின்றனர். நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் சாதாரண மனிதர்களும் இத்தகையை சூழலுக்கு ஆளாகின்றனர். சினிமா பிரவேசத்தில் துவக்க காலத்தில் மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட தீபிகா, அதிலிருந்து மீண்டுதான் தற்போதுள்ள நிலைக்கு வந்தாராம். இதைக் கவனத்தில் கொண்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவக்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கு உதவும் அமைப்பு ஒன்றை நிறுவுகிறார் தீபிகா. லிவ் லாஃப் லவ் என அந்த அமைப்புக்குப் பெயரிட்டு இருக்கிறார். ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து இவ்வமைப்பு செயல்பட தொடங்குகிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தவறான முடிவு எடுப்பதற்கு முன் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான உதவியை ஏற்படுத்தி தரும் பணியை இந்த அமைப்பு மேற்கொள்ள இருக்கிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com