திரைக்கதிர்

ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப், வைபர், இன்ஸ்டாகிராம் என பெருகி வரும் தொலை தொடர்புகளின்
திரைக்கதிர்
Updated on
4 min read

ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப், வைபர், இன்ஸ்டாகிராம் என பெருகி வரும் தொலை தொடர்புகளின் வளர்ச்சி விகிதம் சினிமா உலகினரை ஆட்டிப் படைக்கிறது. இந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கிறது டப்ஸ் மேஷ் என்கிற புதிய வசதி. இதன் மூலம் தற்கால நடிகர்களிலிருந்து தியாகராஜ பாகவதர் காலத்து நடிகர்கள் வரை பேசிய வசனங்களை தமது முக பாவங்களுடன் பேசி நடித்து வெளியிடலாம். இந்த முறை கோலிவுட் வட்டாரங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இளம் நடிகர், நடிகைகள் வசனங்களைப் பேசி அப்லோட் செய்து வருகின்றனர். ரஜினியின் ""அதிகமாக ஆசைப்படுற ஆம்பளயும், அதிகமா கோபப்படுற பொம்பளயும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை'' என்ற வசனத்தை சிம்பு தனது முகபாவத்தில் பேசி நடித்திருக்கிறார். அதே போல் "துப்பாக்கி' படத்தில் வரும் ""ஐ யம் வெயிட்டிங்...'' வசனத்தை அனிரூத்தும், ""நான் அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா...'' வசனத்தை பிரேம்ஜியும் பேசி பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோக்கள் பல தரப்பிலும் வரவேற்பைப் பெற்றுள்ளதால் இமான், விஷால், ராதிகா, சூரி ஆகியோரும் தங்களுக்கு பிடித்த வசனங்களைப் பேசி உணர்ச்சிப் பொங்க நடித்து வெளியிட்ட வண்ணம் உள்ளனர். தனக்குப் பிடிக்காதவர்களை மறைமுகமாக தாக்க சினிமாவில் அதற்கான வசனங்களை வைத்து சாடுவது வழக்கமாகி இருந்து வந்தது. இந்த வசதியால் தற்போது உடனுக்குடன் சக நடிகர்களைத் தாக்கிக் கொள்ளும் போக்கு உருவாகியுள்ளது.

நாகார்ஜுனா படத்திலிருந்து திடீரென்று விலகிய ஸ்ருதி மீது அப்பட நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பிறகு அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.  வழக்கு  வாபஸ் ஆனதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நாகார்ஜுனா படத்திலிருந்து ஸ்ருதி விலகியதன் காரணம், திடீரென்று எதிர்பார்க்காத நேரத்தில் வந்த ஹிந்தி பட வாய்ப்பே என சொல்லப்படுகிறது. பின்னர், வழக்கு தொடரப்பட்டதும் பேச்சுவார்த்தைக்கு வந்த ஸ்ருதியிடம் படத்துக்கு வாங்கிய முன் பணம் ரூ.10 லட்சமும், போட்டோ ஷூட்டுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.8 லட்சமும் சேர்த்து ரூ.18 லட்சம் கொடுத்தால் வழக்கு வாபஸ் வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஸ்ருதி ஏற்றுக் கொண்டதை அடுத்தே, வழக்கு வாபஸ் பெறப்பட்டதாம். ஆனால் இந்தத் தொகையை பணமாகத் தருவதற்கு பதிலாக, அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் அனுஷ்கா நடிக்கவுள்ள படத்தில் ஒரு பாடலுக்கு ஆடித் தருவதாக ஸ்ருதி கூறியுள்ளாராம். இதில் சமரசம் ஆன பின்பே வழக்கு வாபஸ் ஆகியுள்ளது. தொடர் கால்ஷீட் பிரச்னைகளில் சிக்கி வரும் ஸ்ருதி,  இது போன்ற பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக கோலிவுட்டின் நம்பகமான மேனஜர் ஒருவரை புதிதாக நியமிக்க உள்ளதாக தெரிகிறது.

அமானுஷ்ய சக்திகளைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் படங்களில் பயமூட்டும் பேய் போன்ற கதாபாத்திரங்கள் கற்பனையாக உருவாக்கப்பட்டு வந்தன. நாயகன், நாயகி இருவருக்கும் சம்பந்தமில்லாத ஒரு நபர், அந்த வேடத்தை ஏற்று நடிப்பதாக திரைக்கதைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த முறை தற்போது மாறியுள்ளது. கதையின் நாயகியே பேய் கதாபாத்திரங்களை தற்போது ஏற்று நடிக்கின்றனர். "டார்லிங்' படத்தில் பேயாக நடித்த நிக்கி கல்ராணியின் வேடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் "காஞ்சனா -2' படத்தில் பேய் வேடத்தை ஏற்று நடித்துள்ளார் டாப்ஸி. இதைத் தொடர்ந்து பேய்க் கதைகளைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் பல படங்களில் பேய் வேடங்களை கதாநாயகிகளே ஏற்கின்றனர். இந்த வேடங்களுக்கான மவுசு அதிகரித்து வருவதால் முன்னணி வரிசை கதாநாயகிகளும் இந்த வேடத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவிக்கின்றனர். தற்போது இந்த வரிசையில் இணைந்திருப்பவர் ராய்லஷ்மி. படத்துக்கு "சவுகார்பேட்டை' என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் இரட்டை வேடம் ஏற்கும் இப்படத்தை வடிவுடையான் எழுதி இயக்குகிறார்.

மலேசிய வானொலியில் பிரபல தொகுப்பாளராக இருந்து கவனம் பெற்றவர் கீதா. இவர் "புன்னகை பூ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதிலிருந்து அப்பட பெயரும் நிஜப் பெயருடன் ஓட்டிக் கொண்டது. இடையில் ஒரு சில படங்களைத் தயாரித்து வந்த இவர், தற்போது "காவல்' படத்தின் மூலம் கதாநாயகியாகி இருக்கிறார். விமல் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நாகேந்திரன் இயக்குகிறார். தமிழகத்தின் ஆண்டாண்டு காலமாக நிலவி வரும் கூலிப்படைகளின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு கதைக் களம் உருவாகியுள்ளது. கூலிப்படைகள் எப்படி உருவாகின்றன? அவர்களின் தேவை என்னவாக இருக்கிறது? எதற்காக கொலைகள் செய்யப்படுகின்றன? உள்ளிட்ட பல சம்பவங்களின் நேரடி பதிவுகள் இந்தப் படத்தின் மையமாக கையாளப்பட்டுள்ளன. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நடக்கும் கொலைகளின் காரணங்கள் வெவ்வேறாக உள்ளன. இந்த வேறுபாடுகளே இந்தக் கதையின் முக்கிய அம்சம். இயக்குநர் சமுத்திரக்கனி இப்படத்தின் முக்கிய வேடத்தை ஏற்று நடித்துள்ளார். படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் மே மாத இறுதியில் படம் வெளியாகிறது.

அவ்வப்போது காதல் கிசுகிசுக்களில் சிக்கும் த்ரிஷா, படத் தயாரிப்பாளர் வருண்மணியனுடன் கடந்த வருட இறுதி முதலே கிசுகிசுக்கப்பட்டார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த ஜனவரி 23ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக  த்ரிஷா - வருண்மணியன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஒப்புக் கொண்டுள்ள ஒரு சில படங்கள் முடிந்ததும் திருமணம் நடக்கும் என த்ரிஷா தரப்பு சொல்லி வந்தது. தற்போது புதிய செய்தியாக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளன எனவும், எனவே தான் வருண்மணியன், திரு, ஜெய் இணைந்துள்ள புதிய படத்தில் த்ரிஷா நடிக்க இருந்து பின் டாப்சி நடிப்பார் என அறிவிக்கப்பட்டது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. திருமணம் விரைவில் என அறிவித்தாலும் கூட த்ரிஷா தொடர்ச்சியாக பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு  நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் வருண்மணியன் வீட்டு இல்ல விழா ஒன்றிலும் த்ரிஷா கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. எனவே இவர்களது திருமணம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி திரையுலக வட்டாரங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அரசியல் சர்ச்சைகளுக்கு பெரும்பாலும் பதிலளிப்பதை தவிர்த்து விடுபவர் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான். ""தனக்கு அரசியல் ஆசை ஒரு போதும் இல்லை என்பதால் என்னிடம் கருத்துக்களை எதிர்பார்க்காதீர்கள்'' என வெளிப்படையாக பேசி விடுவார். இந்நிலையில், டெல்லியில் "ஆம் ஆத்மி' பேரணியில் விவசாயி தற்கொலை செய்து  கொண்ட விவகாரம் தொடர்பாக ஒருவருக்கு ஒருவர் பழி கூறிக்கொள்வதை நிறுத்திக் கொள்ளுமாறு நடிகர் ஷாருக்கான் ஆவேசத்துடன் கூறியுள்ளார். இது தொடர்பாக பாலிவுட் நாடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ள ட்விட் செய்தியில், ""எதற்கும் தற்கொலை தீர்வாகாது. யாரும் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வதற்காக தற்கொலை செய்வது கிடையாது. அவர்கள் தங்களது வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தற்கொலை செய்து கொள்கின்றனர். விவசாயத்தை தொழிலாக கொண்ட இந்த தேசத்தில் ஒரு விவசாயியின் தற்கொலை செய்தி என்ன சொல்ல வருகிறது என்பதை யோசியுங்கள். ஒரு நொடி எடுத்து, அவர்களது வேதனையை உணர்ந்து பாருங்கள். அதனை தவிர்த்து ஆதாயம் தேட முயற்சி செய்யாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com